பேச்சுத்தமிழ் - பாகம் 6

மேகலா : சும்மா…, விவரமான ஆளுக மட்டுமில்ல கிருஷ்ணா… அவங்களோட மொழிய, எப்படி ஆயுதமாகவும், மக்களை வளர்ச்சிக்குக் கொண்டு செல்வதற்காகவும்…, ஆலோசனை சொல்வதற்காகவும் பயன்படுத்தியிருக்கிறாங்க… சும்மா, ‘வளவளன்னு’ சொல்ற பேச்செல்லாம் கிடையாது… ‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுதான்’…. சும்மா மணியடிச்ச மாதிரி, டங்கு…, டங்குனு போட்டு ஒடச்சிருவாங்க. அர்த்தம் தேட, dictionary – யெல்லாம் தேவையில்ல… அத்தனையும் வெட்ட வெளிச்சமாகப் புரியும். எளிமையான வார்த்தைகளும்…, சொல்லும் ஒவ்வொரு சொல்லும், waste-ஏ ஆகுறது கிடையாது. அவ்வளவு sharp…. எப்பப் பார்த்தாலும், ஊர் சுத்திக்கிட்டே இருக்கிறவங்கள…, ‘கால்ல சக்கரம் மாட்டியிருக்கியா…, ஒரு இடத்தில இருக்க மாட்டேங்கிற’ என்று சொல்லும் போது…, ஊர் சுத்துறவரோட character, தெளிவா தெரிஞ்சிரும் கிருஷ்ணா… இந்தப் பாட்டை நீ கேளு…

‘குத்தடி குத்தடி சைனக்கா

குனிஞ்சி குத்தடி சைனக்கா

பந்தலிலே பாவக்கா…

தொங்குதடி லோலாக்கு’ –

மேலோட்டமா பார்த்தா, சின்னக்குழந்தைய விளையாட்டுக் காட்ட பாடும் பாடல்னு தெரியும்…

கிருஷ்ணர் : ஆம்மாம்…, அப்படித்தான் தெரியுது… ஆனா, ‘குனிஞ்சி குத்தடி’ – என்று சொல்லும் போது, தானியத்தை, உலக்கையால் குத்தும் போது, நல்லா குனிஞ்சி குத்தி வேலையப் பாரு’ன்னு சொல்லுதே… ஓஹ்ஹோ…, சின்னக் குழந்தையிலேயே உழைப்பைக் கற்றுக் கொடுக்கிறார்களா… வாவ்! நீ சொன்னது சரிதான் மேகலா…. ஒரு சின்னப் பாட்டைக் கூட waste பண்ணாம…, அதுலயும், குழந்தைக்கு உழைப்பைச் சொல்லிக் கொடுத்திருக்காங்க பாரு… நெசந்தான்… சாதாரணமானவங்க, எளிமையானவங்க…, எழுத்தாணி பிடிச்சி திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு நிகராக பொன்மொழிகளைச் சொல்லியிருக்காங்களே….

மேகலா : கிருஷ்ணா…, இது பெரிய இலக்கியம் கிடையாது…, காவியம் கிடையாது…. ஆனால், பழமொழிகள், பொன்மொழிகள் கிருஷ்ணா…. பழங்களை ஊறப்போட, ஊறப்போட…, இன்னும் பழமையாக, பழமையாக, அதன் சுவையும் வீரியமும் கூடுமாம் கிருஷ்ணா… அதே மாதிரிதான், இந்தப் பழைய சொற்களும்… காலம் கடந்து, பலர் வாயில் நுழைந்து வீரியம் மிக்கதாய், தன்னம்பிக்கை நிறைந்ததாய்…, நகைச்சுவையாய்…, காலத்தை வென்று நிற்கிறது கிருஷ்ணா… ‘நரிக்கு இடங்கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்’ – என்ற இந்தப் பழமொழில…, நரி மாதிரி மனுஷனுக்கு இடம் கொடுத்திராத என்று எவ்வளவு உள்ளர்த்தத்தோட சொல்லி வச்சிருக்காங்க….

கிருஷ்ணர் : Oh! இது, தன் தொழிலில் வில்லங்கம் பிடிச்சவங்களிடம் எச்சரிக்கையா இருப்பதற்காக சொல்றாங்க…

மேகலா : இது மட்டுமில்ல கிருஷ்ணா…. வேல செய்பவன் கூலிய அதிகமா கேட்டாலும், அதுக்கும் நக்கலா பேசுவாங்க… ‘சுண்டக்கா காத்துட்டு, சுமை கூலி, முக்காத்துட்டு’ – அப்படீன்னு சொல்லி. நீ கேக்குற கூலி ஜாஸ்தின்னு, பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிருவாங்க… அதே மாதிரி, தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைக்கும் போது, ‘உப்பைத் தின்னவன் தண்ணிய குடிச்சிதான் ஆகணும்’ – அப்படீன்னு பெரிய தத்துவஞானி சொல்லல கிருஷ்ணா…. நம்ம பக்கத்து வீட்டு ’பெரிய கருப்பு’தான் சொல்லியிருக்காரு…..

கிருஷ்ணர் : ஆமாம்… பழகிய மொழி… இந்த மொழியால் பேசும் போதும், அறிவுரை சொல்லும் போதும், நெத்தியடியாய் வார்த்தைகள் வந்து விழுது பாரு… உப்பைத் தின்னவன் தான் தண்ணிய குடிச்சி ஆகணும்… நீதியரசர் சொல்லும் தீர்ப்பு மாதிரி இருக்கு… ‘திருக்குறள்…’நன்னெறி’ன்னு நச்சுனு பாடும் பாடல்கள் கூட, இவ்வளவு நெத்தியடியாய் தீர்ப்பு சொல்லாது போல….

மேகலா : கிருஷ்ணா…., ‘ஏட்டுச் சுரக்காய், கறிக்கு உதவாது’ கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இந்த பாருடா…. எப்பேர்ப்பட்ட தத்துவம்… வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துத்தான் தெரிஞ்சிக்கணும்… குறள் சொல்லிச்சி…, அவ்வைப்பாட்டி சொன்னாங்கன்னு நம்ம பாடம் நடத்தினோம்னா…., ‘வாழ்க்கை அதன் பாடத்தை கத்துக்குடுத்துடும்….

மேகலா : அதனால்தான், அரம்படாம நம்ம வேலையை, நாமும் பாத்துக்கிட்டு போயிரணும்…

கிருஷ்ணர் : அது என்ன…, ‘அரம்படாம’….

மேகலா : ‘அரவம் போடாம’… அதாவது, சத்தங்காட்டாம…

கிருஷ்ணர் : ‘சத்தங்காட்டாம’ன்னா….

மேகலா நான் அப்படிப்பட்டவன்…, இப்படிப்பட்டவன்… என்னால மலைய பிடிக்க முடியும்…, நான் வீரன்…, சூரன் அப்படீன்னு வாயால வடை சுட்டுக்கிட்டு இருக்கக் கூடாது… எந்த build-up-ம் இல்லாம, நாம பாட்டுக்கு…, வேலயைச் செஞ்சோமா, சந்தோஷமா வந்தோமா…, வாழ்ந்தோமான்னு போயிரணும்….

கிருஷ்ணர் : ‘அரம்படாம’ன்னு ஒரு சொல்லுக்கு, இத்தனை நீ….ள… அர்த்தமா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5