பேச்சுத்தமிழ் - பாகம் 14

கிருஷ்ணர் : கடைகளில், எல்லாப் பொருட்களுமே, மொத்தமாய் குவிக்கப்பட்டுத்தானே இருக்கும்… ’மொத்தக்கடை’னா என்ன….?

மேகலா : சாதாரண பலசரக்குக் கடைகளில், 1 கிலோ அரிசி, 2 கிலோ அரிசி அப்படீன்னு ‘loose’-ல நாம வாங்குறோம்… இதுக்குத் தனி rate… மொத்தக்கடைங்கிறது, wholesale’ வியாபாரம். அதில் குறைந்தபட்சம் 10 kg bag அரிசியாவது வாங்கணும்… இது கட்டாயம் rate கம்மியாக இருக்கும்…. நிறையப் பேரு, அரிசி, உளுந்து, துவரம்பருப்பு முதலான அன்றாடத் தேவைப் பொருட்களை மொத்தக்கடையில்தான் வாங்குவாங்க.., சேமிப்புக்காக. ‘அரிசிமண்டி’யில, பல ஊரு, பல brand அரிசி பார்த்து வாங்கலாம். இப்படி, ‘மண்டி’ அப்படீங்கிற மொத்தக்கடைகள் எல்லா ஊருலயும், குறிப்பிட்ட இடங்களில் இருக்கும். இதுக்கு எப்பவும் நம்பிக்கையான வாடிக்கையாளர்கள்…, முக்கியமா, சில்லறை வியாபாரிகள் கூட, customers ஆக உண்டு… எண்ணெய், வெள்ளைப்பூண்டு, இப்படி regular ஆக பயன்படும் பொருட்கள், மலிவு விலை brand-லிருந்து, first quality brand வரைக்கும், இந்த மண்டியில் கிடைக்கும்… சந்தைகளில் இருக்கும் கடைகளில் நடப்பது, ‘சில்லறை வியாபாரம்’… Wholesale-க்கும் சில்லறைக்கும் rate-ல் வித்தியாசம் உண்டு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! வியாபாரம் என்பதே, மக்களை எளிதாக அணுகி, அவர்கள் நம்பிக்கையைப் பெறுவதுதானே. அதற்கு இந்தப் பழகின மொழியும் கை குடுக்குது பாத்தியா…

மேகலா : கிருஷ்ணா…, மொத்தக்கடை, சில்லறைக்கடைகளில், மக்களின் நம்பிக்கையைக் கவருவதற்காக…, வாங்கிய பொருட்களை, வீடு கொண்டு வந்து சேர்க்கும் கடைக்காரர்களும் உண்டு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஆமாம்…, செய்யணுமில்ல… எங்கள மாதிரி ஆடு மாடு மேய்ப்பவர்கள், மாட்டை மேய விட்டு, தண்ணி காட்டி, காலாற நடக்க வைத்து, பசியாறச் செய்து கூட்டி வருகிறோமே…, அது மாதிரி, கடை வைத்திருப்பவர்களும், பொருட்களை புடைத்து, சுத்தம் பண்ணுவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக, home delivery பண்ணுவதும் நல்ல பழக்கம் தானே….

மேகலா : கிருஷ்ணா…, இந்தக் கடைகளைச் சுத்தி, நம்ம தமிழ் வலம் வரும் அழகு இருக்கே கிருஷ்ணா… காய்கறிக் கடையில் சாமான் வாங்கும் போது…, காய்கறிகளை நாமே ‘பெறக்கி’ வாங்குவோம். அப்போ, நம் கைக்கு எட்டாத தூரத்துல வெண்டைக்காய் இருந்தால், ‘அண்ணே, ஒண்ணு போல பிஞ்சா பாத்து பெறக்கி போடுங்க…, முத்துனது இருந்துதுனா, அது வதங்கவே வதங்காது’ – என்று சொல்லுவோம். எடையை correct-ஆ நிறுத்தால், கையில் இருக்குமே, அதையும் சேத்துப் போடுங்கண்ணேன்னு சொல்லாத customer இருக்க முடியாது… அதிலும், கடைக்காரர் கவனிக்காத போது, வெண்டைக்காயை ஒடிச்சி பாக்குறது, பீர்க்கங்காயை கிள்ளிப் பாத்து, taste பாக்குறதுங்கிற எல்லா ;நொரநாட்டியமும்’ செய்வோம்…. எல்லாம் பாத்து வாங்கி முடிச்சதும், ஞாபகமாக, ‘கொசுறு’ கறிவேப்பிலை, மல்லித்தழை தாங்கன்னு சொல்லலண்ணா…, வியாபாரமும் பூர்த்தி அடையாது…, நம்ம மனசும் திருப்தி அடையாது…

கிருஷ்ணர் : Oh! உங்க வியாபார பாஷையே புது மாதிரி இருக்கு மேகலா….

மேகலா : கிருஷ்ணா! வியாபார பாஷை மட்டும் கிடையாது… வீட்டுல இருந்தாக் கூட, வெளியில போறவங்க கிட்ட, சில சாமானை வாங்கச் சொல்லி அனுப்புவோம்ல, அப்போ, ‘கடைச்சாவ போனா, அவசரமா கடலை மாவு வாங்க வேண்டியிருக்கு.., மறந்துட்டேன்…, செத்த வாங்கிட்டு வர்ரீங்களா’ என்று சொல்லி, அனுப்புறதுல கூட, நம்ம ‘செல்லத்தமிழ்’ அழகாக புகுந்து வரும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இரு…, இரு…, ‘கடைச்சாவ’ன்னா, கடைப் பக்கமா போனா…, அப்படித்தான… இரு, உன் பாஷைக்கு ஒரு encyclopedia போடுறேன்…

மேகலா : நீ மட்டும் வியாபாரம் சம்பந்தமான பாஷைகளை கேட்டியே… நீ மாடு மேய்ப்பவன் தானே… மாட்டைப் பற்றி நீங்கள் என்ன பேசுவீர்கள்…

கிருஷ்ணர் : Oh! அதைக் கேட்கிறாயா… நாங்கள் மாடுகளைத் தனித்தனியாக எல்லாம் மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வது கிடையாது… நாங்க ஒரு குழுவாக சேர்ந்து…, மாட்டை மந்தையாகத்தான் ஓட்டிச் செல்வோம்…, மேய்ச்சலுக்கு விடுவோம்… மர நிழலில் இளைப்பாறச் செய்வோம்… மாலையானதும், வீட்டுக்குத் திரும்புவோம்… வேற சொல்லிக்கிற மாதிரி என்ன இருக்கு….

மேகலா : ஏன் கிருஷ்ணா…, மாடுகள் புல்லை மேயும் போது, மேய்ப்பவர்களெல்லாம் என்ன செய்வீர்கள்…

கிருஷ்ணர் : பொதுவா, ஆற்று நீர் ஓடும் பக்கம் தான் மேய்ச்சலுக்குச் செல்வோம். சந்தடி சாக்குல, மாட்டைக் குளிப்பாட்டி, நாங்களும் குளிப்போம். குளிக்கும் போது, ஒருவருக்கொருவர், வேகமாய் நீஞ்சி, யார் முதலில் வருவது என்று பந்தயம் கட்டி, விளையாடுவோம்… நாவல் மரங்கள், ஆத்தோரம் நிறைய வளர்ந்திருக்கும். ஆளுக்கொரு மரத்தில் ஏறி, நாவல் பழங்களை பாதி தின்று, பாதி உதுத்தி விட்டு, விளையாடுவோம். மீதி நேரத்தில், ஒளிஞ்சி விளையாடுவோம். பச்சக்குதிரை விளையாட்டு என்று…, பசி எடுக்கும் வரை விளையாடுவோம்… பசி வந்ததும், கொண்டு வந்த சாப்பாட்டு மூட்டையைப் பிரிச்சி, ஆளாளுக்கு ஊட்டி விட்டு, சந்தோஷமாய் சாப்பிடுவோம். சாயந்திரம், மாலை மங்கும் நேரம் வரும் போது, மாடுகளை வீட்டிற்கு ஓட்டிச் செல்வோம்….

மேகலா : கிருஷ்ணா! ‘சந்தடி சாக்குல’ ‘நீஞ்சி விளையாடுதல்’, ‘உதுத்தி விட்டு’, ‘ஒளிஞ்சி’, ‘பச்சக்குதிரை விளையாட்டு’ என்று எத்தனை சந்தோஷ வார்த்தைகளை அள்ளி விட்ருக்க…

கிருஷ்ணர் : Oh! ஆமாம்ல… உன் கிட்ட இருந்து தொத்திக்கிச்சு…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

பக்குவம் - பாகம் 8

ஆளுமை - பாகம் 5