கதை கதையாம், காரணமாம் - பகுதி 1

மேகலா : கிருஷ்ணா! யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலத் தெரிகிறதே....! யார் வரப் போறாங்க, கிருஷ்ணா.....?

கிருஷ்ணர் : நல்ல வேளை.... ‘நான் தான் கிருஷ்ணன்’ என்று என்னை அறிமுகப்படுத்திக்கணுமோ என்று நினைத்தேன்.... யாரும் வரவில்லை. உனக்காகத்தான் நான் காத்திருக்கிறேன். ஒரு வாரமாச்சே..., எங்கடா ஆளைக் காணோமே..... பெரிய tour (அமெரிக்கப் பயணம்) கதையைச் சொல்லி முடிச்சிட்டு, குற்றாலம், கொடைக்கானல் என்று rest எடுக்கப் போனாளோ.... ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி யார்’ என்ற சரித்திர உண்மையை அறிந்தாளோ, இல்லையோ என்று தவித்துக் கிடக்கிறேன். நீ மெதுவாக வந்து யாரை எதிர்பார்க்கிறேன் என்று கேள்வியா கேட்கிறாய்....?

மேகலா : எனக்காகத் தவித்துக் கிடக்கிறாயா..... நெசம்மாவா.... நீ இப்படியெல்லாம் என்னிடம் பேசினால்..... நான் அப்படியே ice cream மாதிரி கரைந்து போய் விடுவேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அப்படியெல்லாம் கரைஞ்சு போயிராதம்மா.... எனக்கு அரட்டை அடிக்க, உன்னை விட்டால் வேறு யாருமில்லை....

மேகலா : கிருஷ்ணா, நீ என்னோடு சேர்ந்து கெட்டுப் போய் விட்டாய், கிருஷ்ணா! சரியான ’புரணி’ (gossip) பேசும் ஆளாகி விட்டாய். சரித்திர உண்மையை எல்லாம் கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டாய்....! ‘கணக்கெடுக்க’ என்று ஆரம்பித்து விட்டாயல்லவா, அப்படியே ராஜ ராஜ சோழன், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்தானாமே! அதையும் கணக்கெடுத்துச் சொல் கிருஷ்ணா! நீ கணக்கெடுத்தால் தான் சரித்திர உண்மைகள் என்று பிதற்றுபவர்களை, ‘ஒரு வழி’ செய்ய முடியும்....

கிருஷ்ணர் : சரி! இதை நாம அப்புறம் பார்ப்போம். இப்போ, என்ன topic-ல் பேசப் போகிறாய்...?

மேகலா : ‘கச்சா முச்சா’ன்னு, எதையாவது பேசலாம், கிருஷ்ணா...

கிருஷ்ணர் : உதை விழும்..... உருப்படியாகப் பேசு.... ஏன், இப்படிப் பேசலாமே.... ம்....ம்.... உனக்குக் கதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமா, மேகலா...?

மேகலா : கதை போல சுவாரஸ்யமாக எது பேசினாலும் பிடிக்கும், கிருஷ்ணா...

கிருஷ்ணர் : அப்படீன்னா....

மேகலா : ஒரு ஊரில் ஒரு நாள், அடைமழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. அந்த ஊரில், நதியும் பெருக்கெடுத்து வெள்ளமாய் ஓடியது. வெள்ளத்தில் ஆடு, மாடு, மரக்கன்று கூட அடித்துச் செல்லப்பட்டது. நேரம் செல்லச் செல்ல, குடிசைகள் கூட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த வெள்ளத்தில், ஒரு ஏழையும் மாட்டிக் கொண்டான். பாதுகாப்பிற்காக, அங்கிருந்த மரத்தில் ஏறி, ஒரு கிளையில் அமர்ந்து கொண்டான். அவன் கடவுள் பக்தி கொண்டவன். வெள்ளத்தைப் பார்த்து பயந்து போய், இறைவனிடம் வேண்டிக் கொண்டான், தன்னைக் காப்பாற்றுமாறு; மனமுருகிப் பிரார்த்தனை செய்தான். அப்பொழுது, மிதந்து வந்த ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு, வெள்ளத்தின் ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த இருவர், அந்த ஏழையையும் தங்களோடு வரச் சொல்லி அழைத்தனர். ‘தப்பித்துக் கொள்ளலாம்’ என்று சொன்னார்கள். அவன், ‘வர முடியாது’ என்று சொல்லி, ‘கடவுள் என்னைக் காப்பாற்றுவார்’ என்று அவர்களுடன் செல்லாமல், மரக் கிளையிலேயே ஒடுங்கிக் கொண்டான். அந்த மரக் கிளை கூட எப்ப வேணுமானாலும் விழுந்து விடுமோ என்று பயம் காட்டியது. அதைப் பார்த்துப் பயந்த அந்த ஏழையும், ‘கடவுளே, உனக்கு இரக்கமே இல்லையா’ என்று அரற்றினான். அப்பொழுது, வானத்தில் ஒரு helicopter பறந்து வந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் பணியில் இருந்தவர்கள், மரக் கிளையைப் பற்றிக் கொண்டு தவித்துக் கொண்டிருந்த அந்த ஏழையைப் பார்த்து, ஒரு நூலேணியைத் தொங்க விட்டு, அவனை வரச் சொல்லி அழைத்தார்கள். அவன், ‘வர முடியாது’ என்று கையை அசைத்துக் கூறி விட்டு, ’கடவுள் காப்பாத்துவார்’ என்று சொல்லி, மறுத்து விட்டான். நேரம் செல்லச் செல்ல, நீரின் மட்டம் உயர்ந்தது. வெள்ளத்தில் அந்த ஏழையும் அடித்துச் செல்லப்பட்டான்.

கிருஷ்ணர் : கடவுளின் உலகத்தில் அவன் விசாரிக்கப்பட்டானா.....?

மேகலா : ஆம் கிருஷ்ணா! கடவுளிடம் சண்டை போட்டான். ‘நான் எவ்வளவு நம்பிக்கையோடு இருந்தேன். கடைசி வரை என்னைக் காப்பாற்றாமல் விட்டு விட்டாயே, கடவுளே.... இது ஞாயமா....?” என்று கேட்டான்.

கிருஷ்ணர் : கடவுள், ‘இரண்டு முறை உன்னைக் காப்பாற்ற ஆள் அனுப்பினேனே...., முட்டாள்! கடவுள் வாய்ப்பைத்தான் கொடுப்பார். பயன்படுத்த வேண்டியது நீதானேயப்பா.... முட்டாளுக்கு இந்த உலகம் கிடையாது’ என்றாரா....?

மேகலா : ஆம் கிருஷ்ணா! இப்படிப் பேசுறதுன்னா, எனக்கு ரொம்பப் பிடிக்கும், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : சரிதான்.... நான் உன்னை அவ்வைப்பாட்டி என்றுதான் கூப்பிடப் போகிறேன். உன் route என்ன என்று பார்க்கலாம். இந்தக் கதையின் மூலம் நீ என்ன சொல்ல வருகிறாய்....?

மேகலா : இந்த மாதிரி சில கதைகளைச் சொல்லி, புத்திசாலித்தனத்தையோ, முட்டாள்தனத்தையோ, தந்திரத்தையோ விளக்கும் கதைகள் இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, கடவுள் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், கேட்பவர்கள் கேட்க மாட்டார்கள். அதையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மனிதன் தவற விட்ட வாய்ப்பினைக் கூறி, கடவுள் வாய்ப்பு மூலமாகத்தான் நம் கதவைத் தட்டுவார் என்று சொன்னால், கேட்பவர்களுக்கும் ஏதோ புரிந்த மாதிரி இருக்கும் இல்லையா..... இப்படிப்பட்ட சுவையான சம்பவங்களையோ அல்லது அனுபவங்களையோ நாம் பேசினால் என்ன கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : பேசலாமே...., ஆனால், ஒரு condition! பேசப் போகும் subject, dry ஆக இருக்கிறதோ என்ற feeling வரக் கூடாது. Comedy-யாகக் கலகலப்பாகப் பேசலாம்....

மேகலா : கிருஷ்ணா! எனக்கு ஒரு கேள்வி....

கிருஷ்ணர் : என்ன கேள்வி கேட்கப் போகிறாய்....?

மேகலா : ஒரு மனிதன்..., தன் தொழிலில் மிகத் திறமையாக ஜொலிக்கிறான். அந்தத் தொழிலைத் தன் உயிராக மதிக்கிறான். அந்தத் திறமை அவனுக்கு உயர்ந்த விருதுகளைப் பெற்றுக் கொடுக்கிறது. உலகமெல்லாம் அவனைப் பாராட்டுகிறது. அவனது திறமை, அவனுக்கு செல்வத்தைக் கொடுக்கிறது; புகழைக் கொடுக்கிறது; நல்ல அனுபவத்தையும் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதன், அரசியலுக்குள் நுழைகிறான். தன்னை ரசித்த மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். இத்தனை புகழ் பெற்ற மனிதன், பொது மேடைகளில் எப்படிப் பேசுவான்; அல்லது பேசணும்....?

கிருஷ்ணர் : ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்று பேசக் கூடாது..... நீ, யாரைச் சொல்லுகிறாய்....? சரித்திர உண்மையைக் கூறுபவர்களைச் சொல்கிறாயா...? மேகலா...., நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன், அதற்கு நீ பதில் சொல். ஒரு குடும்பத் தலைவன், தனக்கு மட்டும் சம்பாதிப்பானா....? இல்லை, குடும்பத்தில் உள்ள அனைவருக்குமாக உழைப்பானா....?

மேகலா : எல்லோருக்குமாகத்தான் உழைப்பான், கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : சரி! என்னுடைய விரிவான விளக்கத்துடன் அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்......

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1