கதை கதையாம், காரணமாம் - பகுதி 3

மேகலா : சென்ற பகுதியில், காகா, பாட்டியிடமிருந்து வடை திருடிய கதை உனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, தந்திரமாய், புத்திசாலித்தனமாய் குழந்தைகள் வளரச் சொல்லிக் கொடுக்கும் கதைகள் எத்தனையோ இருக்கிறது என்றும் கூறியிருந்தாய் அல்லவா...? எதையும் குறிப்பிட்டுச் சொல்லாமல், தன் செயல்களால், சில கருத்துக்களைக் கூறும் ‘முல்லா கதைகளை’ நீ படித்திருக்கிறாயா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : ஒரு கதையை நீதான் சொல்லேன்.....

மேகலா : கிருஷ்ணா! முல்லாவின் பெருமையை அறிந்த அரசர், முல்லாவைக் கூப்பிட்டனுப்பினார். முல்லா சிறந்த அறிவாளி என்றும், தத்துவ ஞானி என்றும் மக்கள் புகழ்ந்தார்கள். அரசர், முல்லாவைச் சோதிக்க விரும்பினார்.

அரசர், ‘முல்லா, நீர் இப்போது நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். பதில் உண்மையானால், உமக்கு விஷம் கொடுத்துக் கொன்று விடுவேன். பொய்யாகுமானால், உம்மை வாளால் வெட்டிக் கொன்று விடுவேன்’ என்று முல்லாவிடம் கூறினார். அதைக் கேட்ட முல்லா பயந்து விட்டார். எதைச் சொன்னாலும், சாவு நிச்சயம். இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்தார். பின்னர் முல்லா, ‘அரசே, நீங்கள் என்னை வாளால் வெட்டிக் கொல்லப் போகிறீர்கள்’ என்று கூறினார். அரசர் யோசித்தார்; ’முல்லாவை வாளால் வெட்டிக் கொன்றால், அவர் கூறியது உண்மையாகி விடும். உண்மையைச் சொன்னதற்கு அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்வது எப்படி? அவர்தான் கொல்லப்பட்டு விட்டாரே’ எனக் குழம்பிய அரசர், ’முல்லா, நீர் உண்மையிலேயே புத்திசாலிதான்’ என்று கூறினார். கதை எப்படி, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : Super.....Super மேகலா..... தான் உயிர் பிழைக்க வேண்டும். உண்மையைச் சொன்னால், விஷம்; பொய் சொன்னாலோ, வாளால் வெட்டு. ‘நீ வாளால் வெட்டப் போகிறாய் என்று குத்துமதிப்பாகச் சொல்லப் போக, இதை உண்மையாக்குவதா, பொய் என்று சொல்லி, விஷம் கொடுப்பதா என்ற ஒரு தடுமாற்றத்தைக் கொடுத்து தப்பித்தாரே...., இது..... இதுதான் மனிதனுக்கு வேண்டிய  புத்திசாலித்தனம். ஆமாம்...., முல்லா புத்திசாலியா.....?

மேகலா : கிருஷ்ணா..... அதுதான் மர்மம்..... முல்லாவுக்கு, ‘கோழி சாப்ஸ்’ என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் அவரோட மனைவி மணக்க மணக்க ‘சாப்ஸ்’ சமைத்தாள். சமைக்கும் போது வாசனை மூக்கைத் துளைக்க, கோழியின் ஒரு காலை எடுத்துச் சாப்பிட்டு விட்டாள். முல்லா சாப்பிட உட்கார்ந்தார். அவரோட மனைவி பரிமாறினாள். அப்பொழுது, ‘கோழி சாப்ஸில்’ ஒரு கால் மட்டும் இருப்பதைப் பார்த்து, முல்லாவுக்குச் சந்தேகம் வந்தது. தன் மனைவியிடம், ‘கோழிக்கு எத்தனை கால்’ என்று கேட்டார். மனைவி அலட்சியமாக, ‘கோழிக்கு ஒரு கால் தான்; சாப்பிடுங்கள்’ என்றாள். சாப்பிட்டு விட்டுத் தோட்டத்துப் பக்கம் வந்தார். அங்கு வேற கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு கோழி, ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தது. அவர் ஒரு கல்லை எறிந்து கோழியைத் துரத்தும் போது, அது தன் இரண்டு கால்களால் ஓடியது. உடனே, அவருக்குச் சந்தேகம் வந்தது. தன் மனைவியைக் கூப்பிட்டு, ‘கோழி இரண்டு கால்களாலும் ஓடுகிறதே’ என்றார். ‘சாப்ஸில்’ இருக்கும் கோழியை யாரும் கல்லால் அடிக்கவில்லை. அதனால் அதற்கு ஒற்றைக்கால் தான்” என்றாள்.....

கிருஷ்ணர் : ஹஹஹ்ஹா...... ஓஹோஹோ..... முல்லாவை இவ்வளவு easy-யாக ஏமாற்ற முடியுமா....? ’மனிதர்களை, சிந்திக்கவும் வைக்க வேண்டும், சிந்தனையில் புத்திசாலித்தனத்தைப் புகுத்தவும் வேண்டும். அதற்கு comedy தான் சிறந்த வழி’ என்று யோசித்திருக்கிறார்கள் பார்.....

மேகலா : ஒரே அறிவுரையாகச் சொல்லிக் கொண்டே போனாலும், கேட்பவர்களுக்கு bore அடிக்குமல்லவா, கிருஷ்ணா..... கடவுள் கதை கூட, கொஞ்சம் நம்மை சிரிக்க வைத்து சொல்லும் போது, கதை நச்சுனு புரியுதுல கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : வாஸ்தவம் தான். ஒரு புராணக் கதையைக் கொஞ்சம் இதமாகச் சொல்லு பார்க்கலாம். உனக்குத் திறமை இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

மேகலா : என்னது..... எனக்குத் திறமை இருக்கிறதா என்று பார்க்கிறாயா..... என்கிட்டேயா..... எங்கிட்டயேவா....? தயாராயிரு..... கதையை நான் சொல்லட்டுமா; இல்லை நீ சொல்கிறாயா....?

கிருஷ்ணர் : எங்கே....! கதையைக் கூறும்; கூறிப் பாரும்....

மேகலா : பஸ்மாசுரன் மிகச் சிறந்த சிவபக்தன். அவனுக்கு உள்ளூர ஒரு ஆசை. இந்த உலகமே அழிஞ்சு போனாலும், தான் மட்டும் அழியக் கூடாது என்ற பேராசை இருந்தது. அந்த வல்லமையைத் தனக்குக் கொடுக்கக் கூடியவர் சிவபெருமான் தான் என்று அவன் நம்பினான். அவனுக்கு, ‘சிவபெருமான் ஒரு ஏமாந்த சோணகிரி, வரத்தைக் கேட்டவுடன் கொடுத்து விடுவார்’ என்ற எண்ணம் இருந்தது. அதனால், ‘ஏகபாத ஹஸ்தாசனத்தில்’ நிலைத்து நின்று, சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். அவன் கணக்குப்படி, ‘சிவபெருமான் ஒரு அப்பாவி’.
பஸ்மாசுரன் தவத்தில் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான், பஸ்மாசுரன் எதிரே தோன்றி, வேண்டும் வரத்தைக் கேட்கச் சொன்னார். இதற்குத்தானே இத்தனை நாள் தவமிருந்தான். இதுதான் சமயம் என்று மகிழ்ந்த பஸ்மாசுரனும், இறைவனிடம், ‘நான் யார் தலையில் கை வைக்கிறேனோ, அவர்கள் தலை வெடித்து விட வேண்டும்’ என்று வரம் கேட்டான். இந்த வரம் மட்டும் கிடைத்து விட்டால், முழுமுதற்கடவுளான சிவபெருமானின் தலையிலேயே கையை வைத்து, ‘ஆட்டையைப் போட்டு விடலாம்’ என்று மனதுக்குள் கணக்குப் போட்டான். கடவுள் என்றால் சும்மாவா....? கடவுளுக்கு X-ray கண்ணு மட்டுமல்ல, உடம்பு, மனசு எல்லாவற்றையும் ‘scan' பார்த்துருவார், இல்ல.... அதனால், மனதில் ஒரு தீர்மானம் பண்ணிக் கொண்டு, ‘தந்தோம்’ என்றார்.

‘ஆஹா, நினைத்தது நடந்தது. தலையில் கை வைத்தால், தலை வெடிக்குமா....? இதோ, உம்முடைய தலையிலேயே கை வைத்துப் பார்க்கிறேன்’ என்று சொல்லி, வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைக்க ஓடி வந்தான். அவர் கடவுள் அல்லவா.... கண்ணிமைக்கும் நேரத்தில், பஸ்மாசுரன் கையில் மாட்டாமல் மறைந்து போனார். சிவபெருமானைத் தேடிச் சென்ற பஸ்மாசுரனுக்கு, அழகிய பெண்கள் என்றால் ஒரு weakness உண்டு. எனவே, மறைந்த கடவுள், ‘மோகினி’ வடிவம் கொண்டு, பஸ்மாசுரன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். மோகினியைப் பார்த்ததும், அசுரன், பல்லை இளித்துக் கொண்டு, அவள் அழகில் மயங்கிப் போனான். இப்படித்தான் கடவுள் மனிதனுக்கு ‘பலம்’ என்ற ஒன்றைத் தந்தால், ‘பலவீனம்’ என்ற இன்னொன்றை இலவசமாகத் தந்து விடுவார். பெண்ணின் மீது அசுரனுக்கு மோகம் என்பதை அறிந்து கொண்ட மோகினி, அவள் பின்னாடியே அசுரனைச் சுற்ற விட்டாள். மதுவைக் குடித்த வண்டு போல கிறங்கிப் போயிருந்த அசுரனைத், ‘தான் செய்வது மாதிரியே செய்ய வேண்டும்’ என்று மோகினி கேட்க, அசுரனும் பல்லை இளித்துக் கொண்டே தயாரானான். முக்காலமும் உணர்ந்த மோகினி நடனமாடினாள். அசுரனும் ஆடினான். கைகளை அசைத்தாள்; அவனும் அசைத்தான். இடுப்பை ஆட்டினாள்; அவனும் தன் பெருத்த இடுப்பை ஆட்டினான். கைகளால் பாவனை காட்டி, பாதம் தொட்டாள். அவனும் அதையே திரும்பச் செய்தான். தன் இடுப்பைத் தொட்டு, உதட்டைத் தொட்டு, இறுதியில் தன் தலையைத் தொட்டுச் சிரித்தாள், மோகினியான கடவுள். வரம் கேட்டுப் பெற்றதைக் கூட மறந்து போன அசுரனும், பாதம் தொட்டு, இடுப்பைத் தொட்டு, உதட்டைத் தொட்டு...., தலையைத் தொட்.......டவுடனேயே, வெடித்துச் சிதறிப் போனான். இறைவனையே அழித்துத் தானே கடவுளாகும் பேராசையில், முதற்பலி அவனாகிப் போனான்.

கூப்பிட்டால், கடவுள் வருவார். நாம் கேட்டால், கேட்டதைத் தருவார். நாம் கேட்டது நம்மை வாழ வைக்குமா, அழிக்குமா; இது கடவுளின் தீர்மானம் மட்டுமல்ல; நம்முடைய பேராசையின் பிரதிபலிப்பும் கூடத்தான்.....

கிருஷ்ணர் : கதை நல்லா இருந்துச்சி, மேகலா..... இந்தக் கதையை நீ சொல்லியே, பல முறை நான் கேட்டிருக்கிறேன். இதமாகக் கதை சொல்ல முயற்சித்திருக்கிறாய். பரவாயில்லை...... சரி, மேலும் இது மாதிரிக் கதைகளுடன் அடுத்த பகுதியில் தொடரலாம்...

Comments

Post a Comment

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2