கதை கதையாம், காரணமாம் - பகுதி 9

மேகலா : சென்ற பகுதியில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.... மழை வேண்டி யாகம் செய்யும் இடத்திற்கு ஒரு சிறுவன் கொண்டு வந்திருந்த பொருளைப் பார்த்து, பண்டிதர் திருப்தியுடன் சிரித்தார் என்று பார்த்தோம். அது என்ன பொருள் என்று உன்னை guess பண்ணச் சொல்லியிருந்தேனே, கிருஷ்ணா. சரியாக அனுமானித்திருப்பாய் என்று நினைக்கிறேன்.....

கிருஷ்ணர் : பாலா..... இல்லையில்லை...... மலர்களா...... No....no..... வஸ்திரமா...... சாம்பிராணி.....? ஆங்..... கண்டுபிடிச்சுட்டேன். மழை பெய்தால், பண்டிதருக்குக் குடை பிடிக்கக் குடை கொண்டு வந்தானா.... பண்டிதர் மீது அத்தனை நம்பிக்கை; இவர் நிச்சயம் மழையைக் கொண்டு வருவார் என்று.... அப்படித்தானே......

மேகலா : Answer-ஐ நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பதில் தெரியாமல் முழிப்பவன் போல...., நாடகம் வேறு போட்டாயாக்கும்....! கதை எப்படி, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : கதை super, மேகலா....

மேகலா : யாகம் செய்தால், மழை வருமா என்று ஊரே வேடிக்கை பார்க்கத் திரண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் மட்டும், ’மழை வந்தால் நனைந்து விடுவோமே’ என்று குடை எடுத்து வந்த அவன் நம்பிக்கை, பண்டிதரை உற்சாகமாக யாகம் செய்யத் தூண்டியது.

கிருஷ்ணர் : ஆமாம்; உண்மைதானே. மழை வேண்டும் என்று ஆசை இருக்கிறது. யாகம் நடத்திக் கொடுப்பவர் வந்தவுடன், மழையே வந்ததாக நம்பிக்கை கொள்ளாமல், வேடிக்கை மட்டும் பார்க்கத் திரண்டால், என்ன அர்த்தம்....?

மேகலா : கிருஷ்ணா! இந்த ‘நம்பிக்கையை’ மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று பாரேன்.

கிருஷ்ணர் : இதற்கும் கதை இருக்கிறதா....?

மேகலா : இந்தக் கதை நாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான், கிருஷ்ணா! கங்கை எவ்வளவு புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரியும். கங்கை நதியில், தினந்தோறும் எத்தனையோ பேர் குளிக்கிறார்கள். குளிப்பவர்கள் பாவம் தொலைப்பதற்காகவே, கங்கையில் குளிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நாட்டிலோ, பாவச் செயல்களும் குறையவில்லை. இந்தச் சந்தேகம் எனக்கு மட்டுமில்லை, கிருஷ்ணா; சாட்சாத், அன்னை பராசக்திக்கே வந்து விட்டது.

கிருஷ்ணர் : போச்சுடா....! அன்னைக்கே சந்தேகம் வந்து விட்டதா? அப்ப, அதைத் தீர்த்து வச்சுத்தானே ஆகணும். என்ன idea பண்ணி, அன்னையை சமாதானப்படுத்தினார், நம்முடைய பரமசிவனார்...

மேகலா : அம்மா, ஐயாகிட்ட இப்படித்தான் கேட்டாங்க. ‘கங்கை பாவத்தைத் தொலைத்து விடும் என்று நம்பித்தானே, இத்தனை பேர் கங்கையில் குளிக்கிறார்கள். ஆனாலும், பாவ நடவடிக்கைகள் குறையவே இல்லையே! மறுபடியும் மனிதன் தப்புத்தானே செய்கிறான்! ஒருவேளை, கங்கைக்கு power குறைந்து விட்டதோ? அல்லது, மனிதன் தான், பாவத்தைக் கழுவுவதற்குக் கங்கை இருக்கும் போது, நாம் எத்தனை பாவம் வேணுமானாலும் செய்யலாம் என்றிருக்கிறானோ, எனக்குப் புரியவில்லை. சர்வமும் அறிந்த சர்வேஸ்வரன் தான் இதற்கான விளக்கத்தையும் கொடுக்க வேண்டும்’ என்கிறார்.

உடனே பரமசிவனார், ‘ரொம்ப நாளாச்சு, நாமும் நாடகத்தில் நடித்து; நம்முடைய நாடகத்தில், நான் கிழ வேடமிட்டு வருகிறேன். நீ அழகான இளம் பெண்ணாய், என் மனைவியாய் வர வேண்டும். மற்றப்படி வசனம், script எல்லாம் அங்கு spot-லேயே, நான் பேசப் பேச நீயும் பேசி விடு. ஒரு வசனம் மட்டும் உனக்குச் சொல்லித் தருகிறேன்; ‘பாவம் தொலைத்தவர்கள் மட்டுமே என் புருஷனைத் தொட வேண்டும்’ - இதுதான் அந்த வசனம். பின்பு நடப்பதை அங்கு வந்து பார்’ என்று சொல்லி விட்டு, நடக்க முடியாத கிழத்தோற்றத்தில் இறையனார் தோன்றி, அழகிய மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு, தளர்ந்த நடையுடன், காசியில் ஓடும் கங்கை நதிக் கரைக்கு வந்தார். அங்கு, நதி தீரத்தில், புண்ணிய நீராடி விட்டு வருவோரும், நீராடப் போவோருமாக மக்கள் பரபரப்புடன் காணப்பட்டார்கள். அங்கு ஒரு பள்ளத்தைப் பார்த்த இறையனார், அதனருகில் வந்ததும், தடுக்கி விழுபவரைப் போல, பள்ளத்திற்குள் விழுந்து விட்டார். அழகிய இளம் மனைவியானவள், ‘ஓ’வென்று குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். ‘ஐயய்யோ, யாராவது வந்து காப்பாத்துங்களேன். என் புருஷன் பள்ளத்திற்குள் விழுந்து, எழுவதற்குக் கூடச் சக்தியற்றவராகிப் போய் விட்டார். யாராவது, கைதூக்கி விடுங்களேன். என் ஒருவளால் அவரைத் தூக்க முடியவில்லை’ என்று கூறி அழுதாள்.

அப்பொழுது, அங்கு ஒரு சிறு கூட்டம் கூடி விட்டது. ‘காண்போரைக் கட்டி இழுக்கும் அழகுடைய இந்த இளம் பெண்ணுக்கு, இப்படியொரு கிழட்டுக் கணவனா’ என்று கூட்டத்திலுள்ளோர் ஆதங்கப்பட்டனர். அந்த இளம் பெண் மீது கொண்ட பரிதாபத்தால், கிழவனைக் கைதூக்கி விட முன் வந்தனர். அப்பொழுது அன்னையார், ‘ஐயா! ஒரு நிமிஷம்; என் கணவருக்குக் கை கொடுக்கும் முன், உங்களிடம் ஒரு கேள்வி! இந்தக் கூட்டத்தில் பாவம் செய்யாதவர் எவரோ! அல்லது பாவத்தைத் தொலைத்தவர் எவரோ! அவரே என் கணவனின் கையைப் பற்றத் தகுதியானவர்’ என்று சொல்லவும், இளம் பெண்ணின் அழகை ரசித்த அத்தனை பேரும், கிழவனைக் கை தூக்க வந்ததை விட்டு விட்டுப் பின் வாங்கி, அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

கிருஷ்ணர் : அவர்கள் எல்லோரும் எங்கிருந்து வருகிறார்கள்?

மேகலா : எல்லோரும் கங்கையில் குளித்து விட்டுத்தான் வருகிறார்கள், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : பேஷ்....! அடுத்த பாவம் செய்யத் தயாராகி விட்டார்கள்......

மேகலா : இளம் பெண், மறுபடியும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். அப்பொழுது ஒரு இளைஞன் அவ்வழியே வந்தான். அவளிடம், ‘எதற்காக அழுகிறாய்; நான் உனக்கு உதவலாமா?’ என்று கேட்டான். கிழவர் பள்ளத்துக்குள் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதறிப் போய், கை கொடுத்து தூக்கி விட முற்பட்டான். அதற்குள் அந்த இளம் பெண், மனப்பாடம் செய்திருந்த அந்த வசனத்தை ஒப்பித்தாள். ‘பாவம் செய்யாதவரோ, அல்லது பாவம் தொலைத்தவரோ......’ என்று வசனம் பேச...., இளைஞனோ, ‘இவ்வளவுதானே...., இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இதுவரையில், நானறிந்து ஒரு பாவமும் செய்யவில்லை. அறியாது தவறு செய்திருந்தால், இதோ கங்கை, என் அன்னை புனிதவதி ஓடுகிறாள். அதில் குளித்து, நான் அறியாது செய்த பாவத்தையும் தொலைத்து வருகிறேன்’ என்று சொல்லி, ஓடிச் சென்று, கங்கையில், ‘தொபுக்கடீர்’ என்று குதித்தான். கங்கையும் அவனை ஆசை தீர புனித நீராட்டினாள். திரும்பி வந்து, கிழவனைக் கை தூக்கி விட, இறையனார் திருக்கரத்தைத் தொட்டானோ இல்லையோ, பூமிக்கும் வானுக்குமாக உயர்ந்து நின்ற பேரொளியில், இறையனாரும், அன்னை பராசக்தியும், எந்தையும் தாயுமாக இணைந்து நிற்பதைக் கண்டு, சிலிர்த்துப் போனான். கங்கையின் புனிதத்தின் மீது அவன் கொண்ட நம்பிக்கை, அவன் வாழ்க்கைக்கு என்றும் துணை வரட்டும் என்று இறையனார் வாழ்த்துக் கூறினார்.

கிருஷ்ணர் : ஆஹா! ‘நம்பிக்கை’ என்பது எப்படி இருக்க வேண்டும்; அதை எப்படி உளப்பூர்வமாகக் கொள்ள வேண்டும் என்று நீ சொல்லிய கதையில், அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது, மேகலா.

மேகலா : சரி கிருஷ்ணா! இது மாதிரி மேலும் சில கதைகளோடு அடுத்த பகுதியில் சந்திப்போம்.....


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2