கதை கதையாம், காரணமாம் - பகுதி 12

மேகலா : கிருஷ்ணா! சிக்கலான சமயத்தில், புத்திசாலித்தனமாகத் தீர்ப்பு சொல்லும் கதை ஒன்று சொல்வதாகக் கூறியிருந்தேனல்லவா? சோழ மன்னர்களில் ‘கரிகால் சோழன்’ பற்றி உனக்குத் தெரியுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : கல்லணையைக் கட்டியவர் தானே..... நன்றாகத் தெரியும். என்ன அவரைப் பற்றி? ஏதாவது கதை விடப் போகிறாயா....?

மேகலா : இல்ல, கிருஷ்ணா..... கரிகால் சோழன் சிறு வயதிலேயே, அரசர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். சிறு வயதிலேயே, அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், கூர்த்த மதியிலும், புத்திசாலித்தனத்திலும், விவேகமாய் செயல்படுவதிலும், கொஞ்சமும் குறைந்தவரில்லை.
ஒரு முறை அவருடைய வழக்காடு மன்றத்திற்கு வழக்கு ஒன்று வந்தது. இரண்டு ஊரைச் சேர்ந்த பொதுமக்களுக்குள், நீர்ப்பங்கீடு பிரச்னை ஏற்பட்டு, கலவரமாகி, அது court வரைக்கும் வந்து விட்டது. இரண்டு ஊரைச் சேர்ந்த பெரிய மனிதர்கள், அரசவைக்கு வந்து, அரசனிடம் தங்கள் வழக்கை எடுத்துரைக்கக் காத்திருந்தார்கள். அரசனும் அரசவைக்கு வந்தார். இளஞ்சிரிப்பும், சிவந்த கரங்களும், முற்றாத தேகமும், முதிராத பால் வடியும் முகமுமாக அரசனைப் பார்த்தவுடன், மக்கள், ‘இத்தனை சிறுவயதுப் பையனா, நமது வழக்கை ஆராயப் போகிறான்? சரி, நம்முடைய வழக்கைப் பேசிப் பார்ப்போம்; தெய்வம் விட்ட வழியைப் பார்ப்போம்’ என்று கூறிக்கொண்டு, மிகுந்த துயரத்துடன், திரும்பிப் போக நினைத்தார்கள்.

மக்களின் முக வாட்டத்தைக் கண்ட சோழ மன்னனுக்குக் காரணம் புரிந்தது. அவர்களின் வழக்கின் தன்மையைக் கேட்டறிந்தவனுக்கு, அதனைத் தீர்க்கும் யுக்தியும் புரிந்தது.

என்ன செய்வதென்று யோசித்தான். அதன் பிறகு எழுந்து உள்ளே சென்றான். ஊர்ப்பெரியவர்கள் எல்லாம், ஊருக்குத் திரும்பிச் செல்லலாம் என்று நினைத்த வேளையில், அரசவைக்கு ஒரு முதியவர் வந்தார். ஊர்ப்பெரியவர்களைப் பார்த்து, இருகை கூப்பி வணங்கினார். பெரியவர்களைப் பார்த்து, ‘ஊரில் நன்கு மழை பெய்ததா..... ஏரி, குளமெல்லாம் நிரம்பி வழிந்ததா.... விவசாயிகள் மனமகிழ்ச்சியாக இருக்கிறார்களா? ஊர் மக்கள் இங்கு வந்ததன் காரணம் என்ன?’ என்று மனதுக்கு இதமாகப் பேசினார். வந்தவர்களுக்கு, அந்தப் பெரியவரின் அனுபவம் வாய்ந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. தங்கள் வழக்கினை எடுத்துரைத்தனர்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற பொன்மொழியினை நாம் யாரும் ஒதுக்கி விட முடியாது. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்....’ என்று தெய்வப் புலவர், விவசாயிகளே மக்களால் வணங்கத் தக்கவர்கள் என்று போற்றுகிறார். விவசாயிகளுக்குள் பிரச்னை வந்தால், அது நாட்டின் நலனையே பாதித்து விடும். இதனை மக்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோம்’ என்று கூறி, இரண்டு ஊர் மக்களும் ஒற்றுமையாக வாழும்படிக்கு, ஆலோசனையைச் சொல்லி, விவசாயிகளுக்குப் பரிசுப் பொருட்களையும் கொடுத்து, தகுந்த தீர்ப்பினைக் கூறினார். இரண்டு ஊர் மக்களும் தங்களுக்குள் இருந்த பகையை மறந்தனர். முதியவராய் வேடமிட்டு வந்த கரிகால் சோழனும் தன்னுடைய வேடத்தைக் கலைத்தாரோ இல்லையோ, மக்கள் தங்கள் மன்னனின் கூர்த்த மதியை நாம் சந்தேகப்பட்டோமே என்று தர்மசங்கடமாய் உணர்ந்து, மன்னனிடம் மன்னிப்புக் கேட்டனர்.

கிருஷ்ணர் : ஓ.....! நான் கூட, இங்க எங்கடா ‘தர்மசங்கடம்’ வருகிறது என்று பார்த்தேன். மக்களுடைய ‘தர்மசங்கடம்’ கரிகால் சோழனுடைய அறிவைக் கண்டு வணங்கியது. அதுதானே கதை...!

மேகலா : ஆம் கிருஷ்ணா! நானும் ஒரு நாரதர் கதை சொல்லட்டுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : என்னம்மா...., நான் ‘நாரதர்’ கதை சொன்னதும், உனக்கும் ‘துருதுரு’வென்று ஆகி விட்டதா....? சரி, சொல்லு....

மேகலா : ஒரு சமயம், நாரதருக்கு, உலகிலேயே தான் தான் ‘நாராயணன் நாமத்தை’ அதிகமாகச் சொல்லுபவன்; தனக்குத்தான் பெருமாள் மீது அதிக பக்தி உள்ளது என்று மிகப் பெருமையாக இருந்தது. அந்தப் பெருமையான நினைப்பு, நாள் ஆக ஆக, அதிகமாகி, கர்வமும் வந்து சேர்ந்தது. எல்லோரிடமும் கர்வத்துடன் பீற்றிக் கொண்டே இருந்தார். ‘தன்னைப் போல நாராயண மந்திரத்தை, இசையுடன் இத்தனை முறை சொல்பவர் வேறு எவரும் இல்லை’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், வைகுண்டம் வந்து சேர்ந்தார். பெருமாளும், ‘வா நாரதா, சர்வ லோகமும் சென்று வருகிறாயே, எல்லா உலக இயக்கங்களும் சுகமாக நடைபெறுகிறதா?’ என்று கேட்கத்தானே செய்தார்; கிடைச்ச gap-ல நாரதர், தன்னுடைய அலட்டலை ஆரம்பித்து விட்டார். ‘ஓம் நாராயணாய நமஹ’ என்ற இந்த நாமத்தை எத்தனை முறை சொல்லுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் இத்தனை முறை ‘நாராயண மந்திரம்’ சொல்லும் போது, உலக இயக்கங்கள் குறைவில்லாமல் நடைபெறத்தானே செய்யும், பெருமாளே’ என்றவுடன், ஸ்ரீமன் நாராயணன், கூர்மையாக நாரதரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தார்.

நாரதர் கையில் ஒரு எண்ணெய்க் கிண்ணத்தைக் கொடுத்தார். நாரதரோ, ‘இது என்ன பெருமானே! ஏன் எண்ணெய்க் கிண்ணத்தை என் கையில் கொடுக்கிறீர்கள்?’ என்று புரியாமல் கேட்டார். பெருமாளோ. ‘இந்தக் கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வா....; முக்கியமான ஒன்று, இந்தக் கிண்ணத்தில் இருந்து ஒரு துளி எண்ணெய் கூட கீழே சிந்தக் கூடாது. இன்று மாலைக்குள் இங்கு திரும்பி வர வேண்டும்; நினைவில் வைத்துக் கொள். உன்னால் முடியுமா, முடியாதா?’ என்று கேட்டார். அதற்கு நாரதர், ‘எம்பெருமானே! நீங்கள் என் தலைவர், ‘தலைவா, நீ ஆணையிடு; என் உயிரைக் கூடத் தருவேன்’ என்று வடிவேலு range-க்கு film காட்டினார். கடவுளும், ‘உன் உயிரெல்லாம் தர வேண்டாம். இந்த எண்ணெய்க் கிண்ணத்தைச் சிந்தாமல் எடுத்துச் சென்று, திரும்பக் கொண்டு வா’ என்றதும், நாரதர், ‘இப்பப் பாருங்க! உங்க பக்தனின் பக்தியை; அப்பப் புரிஞ்சிக்குவீங்க’ என்று சொல்லி, கிண்ணத்தை வாங்கிக் கொண்டார். வாங்கும் போது, கிண்ணம் சற்றே தடுமாறியது. எண்ணெய் கீழே சிந்தப் பார்த்தது. பெருமான் சிரித்துக் கொண்டே, ‘கவனம் நாரதா! துளி எண்ணெய் கூடச் சிந்தக் கூடாது’ என்றார்.

நாரதரும், கவனத்துடன் எண்ணெய்க் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு, உலகம் முழுக்க சுற்றி வரத் தயாரானார். சுற்றி வரும் போது, எதிரில் யாரும் வந்து விடுவார்களோ, தன் மீது மோதி விடுவார்களோ என்று பயந்து கொண்டே சென்றார். அன்றைக்கென்று, நாரதர் ஒதுங்கிச் சென்றால் கூட, எல்லோரும் அவர் மீது மோதுவதற்கென்றே புறப்பட்டு வந்தாற்போலவே வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பி, எண்ணெயைச் சிந்தாமல் கொண்டு செல்வது பெரும்பாடாய்ப் போய் விட்டது. அதிலும் ஒரு முறை ஸ்ரீமன் நாராயணனே நாரதர் மீது இடிப்பது போல மோதப் பார்த்தார். நாரதர், எதிரில் வருவது யாரென்றே பார்க்கவில்லை. ‘ஓய்! என் மீது மோதுவதற்கென்றே எத்தனை பேர் கிளம்பி வந்திருக்கிறீர்கள்?  உமக்குக் கண் தெரியவில்லையா? இத்தனை அகலமாக பாதை இருக்கிறதே; அப்படிப் போகலாமே’ என்று படபடப்பாகச் சொல்லி விட்டு, ‘அப்பாடா! பாவி மனுஷன்! கொஞ்சம் மோதியிருந்தாலும், எண்ணெய் கொட்டியிருக்கும். நல்ல வேளை, தப்பித்தேன்’ என்று சொல்லி விட்டு, வைகுந்தம் வந்து சேர்ந்தார்.

பெருமானும், வாசலிலேயே நாரதரை வரவேற்று, ‘அட, பரவாயில்லையே! எண்ணெயைச் சிந்தாமல் கொண்டு வந்து விட்டாயே! நான் சொன்ன நேரத்துக்குள்ளும் வந்து சேர்ந்து விட்டாய்! பரவ்வயில்லை’ என்றதும், நாரதர், ‘பின்ன...., நாங்கெல்லாம் யாரு! தினந்தோறும் நாராயண மந்திரம் சொல்கிறோமே! நாரதரா..., கொக்கா....!’ என்று கேட்டுக் கொக்கரித்தார்.
பெருமாளும், ‘உன்னை என்னவோவென்று நினைத்தேன் நாரதா! சரி, அது இருக்கட்டும்; இன்று எத்தனை முறை நாராயண மந்திரம் சொன்னாய்?’ என்று கேட்டார். நாரதருக்கு அப்பத்தான் ஞாபகம் வந்தது.... அச்சச்சோ, இன்று ஒரு முறை கூட நாராயண மந்திரம் சொல்லவில்லையே’ என்று. உடனே, நாரதர், ‘எப்படி பெருமானே..., முக்கியமான வேலையைக் கொடுத்து விட்டு, நாராயண மந்திரம் சொல்ல வேண்டும் என்கிறாயே; இந்த எண்ணெயைச் சிந்தாமல் எடுத்து வர நான் பட்ட பாடு...., அப்பப்பா, எனக்குத்தான் தெரியும்!” என்றவுடன், பெருமாளோ, ‘அப்படியா! என்னுடன் வா என்று நாரதரை பூலோகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அப்புறம் என்ன நடந்தது என்று தெரிய ஆவலோடு காத்திருங்கள்,... அடுத்த பகுதியில் பார்க்கலாம்....

(அடுத்த பகுதியுடன் இந்தத் தொடர், ‘கதை கதையாம், காரணமாம்’ நிறைவு பெறும்)



Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2