மனிதர்கள் பலவிதம் - பகுதி 2

மேகலா : எனது அடுத்த சுவாரஸ்யமான விஷயம் பற்றி இந்த வாரம் சொல்லுவதாகக் கூறியிருந்தேனல்லவா....? இந்திய பாதுகாப்புத் துறையின் ஆலோசகர்.....

கிருஷ்ணர் : யாரு..., நம் அஜித் தோவலா....? இவரைப் பற்றி நானே உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன், மேகலா..... ஏதோ, கதை சொல்கிறாயே கேட்போம் என்றிருந்தேன். சொல்லு..... அஜித் தோவலைப் பற்றி நீ என்ன அறிந்து கொண்டாய்; அதைச் சொல்லு முதலில்.....

மேகலா : கிருஷ்ணா! முதலில் இந்த மாதிரியான ஒரு ஆலோசகரைத் தேடிப் பிடித்து, நம் ராணுவத்தை உன்னதமான நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்; தீவிரவாதத்தைக் கட்டோடு ஒழிக்க வேண்டும்; அதற்குப் பயமறியாத, தேசப்பற்றுள்ள ஒருவரைத்தான், இந்தத் துறைக்கு ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்று நினைத்து, அஜித் தோவல் என்ற இந்த பாதுகாப்பாளரிடம், தைரியமாக, நம் ராணுவத்தைக் காப்பதற்கான பொறுப்பைக் கொடுத்திருக்கிறாரே நம் பாரதப் பிரதமர்; அவருக்கு ஒரு 'salute'.

கிருஷ்ணர் : ’இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
                          அதனை அவன் கண் விடல்’   -   என்ற குறளுக்கு விளக்கமே பிரதமரின் இந்த செயல் தான். சரி, அவரைப் பற்றி நீ தெரிந்து கொண்டதைச் சொல்லு, மேகலா!

மேகலா : கிருஷ்ணா! இவருடைய தேசப் பற்றுக்கு முன்பு, நம்முடைய தேசப்பற்றெல்லாம் ஒண்ணுமேயில்லை என்றுதான் தோணுது, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : நம்முடையது என்ன நம்முடையது....! உன்னுடையது என்று சொல்லு.....

மேகலா : சரி.... சரி.... சரீ..இ...இ.... இவர் 1980-களிலேயே, தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கே சென்று, ஊடுருவி, ஒற்றறிந்து, அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கி, நமது ராணுவத்திற்குத் தகவல் அனுப்பி, ஆவன செய்யுமாறு செய்த மிகப் பெரிய ‘ஒற்றர்’ போல, கிருஷ்ணா..... இப்போ, இந்த காஷ்மீர் விவகாரத்தில் கூட, அரசாங்கம், சட்டப் பிரிவு 370 என்ற காஷ்மீருக்கான special அந்தஸ்தைக் கை விடும் முடிவை எடுப்பதற்குக் கூட, அஜித் தோவலின் ஆலோசனை முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு, காஷ்மீருக்குச் சென்று அங்குள்ள நிலவரங்களைக் கண்டறிந்து, கேட்டறிந்து, இப்படி ஒரு முடிவை பிரதமர் எடுக்க, அவரும் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறார்.

இப்போ, சமீபத்தில், பார்லிமெண்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் முதலானவர்களை வீட்டுச் சிறையில் வைத்ததைக் கண்டித்தும், காஷ்மீருக்கான special அந்தஸ்தை ரத்து பண்ணி, ‘காஷ்மீர், லடாக்’ என்ற இரு Union பிரதேசமாக மாற்றி அமைத்ததையும் கண்டித்து, ‘இது ஜனநாயகப் படுகொலை’ என்று எதிர்க்கட்சிகள், அதிலும் முக்கியமாக தமிழகத்தில் இருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வீராவேசமான பேச்சுக்களைப் பதிவு பண்ணினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ‘லடாக்’ M.P. அதிலும் இளைஞன், என்ன சொன்னார் தெரியுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : ’நாங்கள் இருக்கும் இந்த ‘லடாக்’ பகுதியை, Union பிரதேசமாக மாற்றித் தாருங்கள் என்றுதான் கேட்டோம். பிரதமர் மோடி, அதைத்தான் செய்து கொடுத்திருக்கிறார். இந்தியாவில், ‘லடாக்’ என்ற பகுதி எங்கிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்டதைத்தானே சொல்லுகிறாய்....!

மேகலா : இந்த லடாக் பகுதிதான் ‘கார்கில்’ போரில் தங்கள் பங்களிப்பை வழங்கிய பகுதி. அவர் சொன்னாரே, எங்களிடம், ‘உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்ட போது, எங்கள் பிரதேசத்தை Union பிரதேசமாக மாற்றித் தாருங்கள்” என்று மட்டும் தான் கேட்டோம் என்றாரல்லவா.... அதையும், அஜித் தோவல், காஷ்மீருக்குச் சென்று, அங்குள்ள நிலவரங்களைக் கண்டும், கேட்டும் அறிந்தார்’ - என்ற இதையும் பொருத்திப் பார், கிருஷ்ணா! ‘லடாக்’ Union பிரதேசமாக மாறியதற்குக் கூட, அஜித் தோவலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : அப்பா....., உன்னைத்தான் detective agent ஆகப் போட வேண்டும், மேகலா. நீ போடும் route-ஏ தனி தான்! ம்... எங்கேயோ இருக்க வேண்டியவள்!

மேகலா : நம்ம நாட்டிற்கும், தீவிரவாதத்திற்கும் தான், அண்ணன் தம்பி, பங்காளிச் சண்டை வருஷக்கணக்கா நடந்துக்கிட்டிருக்கில்ல.... ஆனா, தீவிரவாதம், நம்ம நாட்டையே பிரிச்சு மேயத் தயாராக இருக்கும் போதெல்லாம், காந்தி மாதிரி, படேல் மாதிரி, மோடி மாதிரி, இப்ப அஜித் தோவல் மாதிரி, ஆளுகள கனகச்சிதமா அனுப்பி வச்சு, நாட்டின் தனித்தன்மையை, கிருஷ்ணா..., நீதான் காப்பாற்றுகிறாய். ‘Mizoram' என்ற பகுதி உனக்குத் தெரியுமா, கிருஷ்ணா? அங்கு ‘Mizo National Front' என்ற அமைப்பின் கீழ் தீவிரவாதிகள் பிரச்னை பண்ணிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம், நம்முடைய பாதுகாப்பு ஆலோசகர், அவர்கள் இயக்கத்தில் சேர்ந்து, தன்னையும் ஒரு தீவிரவாதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘கமாண்டோக்களோடு’ நட்புறவாடினார்.

கிருஷ்ணர் : பெரிய, பெரிய ‘களப்பணி’யெல்லாம் செய்திருக்கிறார் போல...

மேகலா : கிருஷ்ணா! இவர் ‘பிராமண்’ குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், தன் மனைவியைக் கொண்டே தீவிரவாதிகளுக்கு பன்றிக்கறியைச் சமைத்துத் தரச் சொல்லியிருக்கிறார். அந்த அம்மா, ‘இவர்கள் யார்’ என்று கேட்க, ‘தன் தேசத்திற்காக தீவிரவாதிகளிடம் உறவாடி, அவர்கள் plan-ஐத் தெரிந்து கொள்ள நடிக்கிறேன்’ என்ற விவரத்தைச் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.

கிருஷ்ணர் : பிறகு, கதை எப்படிப் போச்சு...?

மேகலா : தீவிரவாதிகளிடையே கலகத்தை உண்டுபண்ணி, அந்த மாதிரியான அமைப்பையே காலி பண்ணும்படிச் செய்து விட்டார்.

கிருஷ்ணர் : அதுவரைக்கும், அவர் தீவிரவாதிகளுடனேயேவா இருந்தார்....?

மேகலா : ஆமாங்கிறேன்.... நான் என் வாழ்க்கையில் இப்படியொரு சாகசத்தை, சினிமாவில் தவிர, சமுதாயத்தில், அதுவும் நம் அரசாங்கத்தின் சார்பாக பார்த்தது கூடக் கிடையாது கிருஷ்ணா! தன்னைத் தீவிரவாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களுடனேயே இருந்து கொண்டு, தேசத்துக்காக களப்பணி செய்யும் இந்த அற்புத மனிதரைப் பற்றி, இதோ உன்னிடம் சொல்லும் போதே புல்லரிக்குது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : Oh! இந்த வரலாறெல்லாம் இப்பத்தான் வெளி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தீவிரவாதத்தை இந்தியா ஒடுக்கி வருகிறது, இல்லையா....? மோடி period-ல், முற்றிலும் ஒழிந்து விடும் என்று நம்புவோம்....

மேகலா : வெறும் ‘நம்புவோம்’ மட்டும் தானா, கிருஷ்ணா...? ‘வரம் தந்தோம்’ என்று சொல்ல மாட்டாயா....?

கிருஷ்ணர் : நீ நிறுத்தாத.... அஜித் தோவலின் அடுத்த சாகசத்தைப் பற்றிச் சொல்லு, மேகலா...

மேகலா : இப்பொழுது ‘சிக்கிம்’ மாநிலம். அமைதியாக, இயற்கை வனப்புடன் கூடியதாக இருக்கும் இந்த மாநிலம், தனி நாடாக இருந்த போது, இந்தியாவுடன் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பியது. ஆனால், இந்த இணைப்பை சீனா எதிர்த்தது. அப்பொழுது, அஜித் தோவல், சிக்கிமுக்குள்ளும், சீனாவுக்குள்ளும் ஊடுருவி, சிக்கிம் மக்களின் மனநிலையைக் கண்டறிந்திருக்கிறார். சிக்கிம் இந்தியாவுடன் இணைய முக்கிய காரணியாக இருந்திருக்கிறார், கிருஷ்ணா. இதை விட, ‘காலிஸ்தான்’ தீவிரவாதிகளை அவர் ஒடுக்கியதுதான், இவர் சாகசத்திலேயே அதிஅற்புதமானதாகும்.

கிருஷ்ணர் : சிலருக்கு வாழ்க்கையே சாகசமாக இருக்கும். இவரோ, சாகசம் செய்வதையே வாழ்க்கை முறையாக வைத்திருக்கிறார் போலயே....! காலிஸ்தான் problem என்றால், BJP எல்லாம் உருவாவதற்கு முன்பே...., அதாவது 1980-களிலா....?

மேகலா : ஆம் கிருஷ்ணா! உண்மையான தேசப்பற்றாளர்கள் எல்லாம் சேர்ந்துதான், ‘ஜனதா’, ‘பாரதிய ஜனதா’ என்று காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்திருக்கிறார்கள். நம்முடைய கர்மவீரர் காமராஜர், ‘ஸ்தாபன காங்கிரஸ்’ என்று ஆரம்பித்தார். 1983-ல் காலிஸ்தான் தீவிரவாதிகள் பிரிவினை பேசிக் கொண்டு, பொற்கோவிலுக்குள் நுழைந்து விட்டார்கள். கோவில் என்பது புனிதம் இருக்கும் இடம். இங்கிருக்கும் தீவிரவாதிகளை, அதன் புனிதம் கெடாமல் கைது பண்ண வேண்டும். சும்மா ராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கினால், ரத்தக்களரி ஆகி விடும். ராணுவத்திற்கு, கண் முன்னே தெரிந்த ஒரே வல்லவர், அஜித் தோவல் தான். தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள, அவரைக் களமிறக்கினார்கள். ராணுவத்தினரின் கணக்கு, சுமார் 40 தீவிரவாதிகளாவது பொற்கோவிலுக்குள் இருப்பார்கள் என்பது. நம்ம ஆளு, கோவிலுக்குள் எப்படி நுழைந்தார் தெரியுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : பொருள் விற்பவர் மாதிரி சென்றாரா....?

மேகலா : இல்லை கிருஷ்ணா....! சரி, நீ யோசித்து வை, அடுத்த வாரம் சந்திக்கலாம்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2