ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 59

சென்ற பகுதியின் இறுதியில், ஒன்பதாவது நாள் போர் முடிந்ததோடு நிறுத்தியிருந்தோம்.

மேகலா : ஐயோ கிருஷ்ணா! அர்ஜுனன் உன் காலைப் பிடிப்பதாகட்டும், பீஷ்மர் உன் கையால் தான் வீழ்த்தப்பட வேண்டும் என்று கேட்பதாகட்டும், திரும்பத் திரும்ப ரசித்து, வேண்டுமென்றே நடந்தது போல இருக்கிறது, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : சரி! பீஷ்மர், துரியோதனனுக்கு ‘விஷ்வோபாக்யானம்’ சொல்லும் நிகழ்ச்சியில், நீ உனக்குப் பிடித்த காட்சியை வர்ணிக்கிறாயே.....

மேகலா : கிருஷ்ணரின் மேன்மையை விளக்க எந்த நிகழ்ச்சியைச் சொன்னாலும், அது அவரின் மேன்மையைப் பல மடங்கு உயர்த்தத்தான் செய்யும்; அது என் வாழ்வின் நிகழ்வாக இருந்தால் கூட.... நான் எல்லோருக்கும் தெரிந்த நிகழ்ச்சி இரண்டைக் கூறினேன். பிறருக்காகவே வாழ்ந்த சரித்திரம் தான், ஸ்ரீ கிருஷ்ணரின் சரித்திரம். அதில் சுவாரஸ்யம் அதிகம் உள்ளதால், கண்ணனை விளையாட்டுப் பிள்ளையாகப் பார்ப்பவர்கள் அதிகம்.

கிருஷ்ணர் : சரி! பாகவதம் பிறகு படிக்கலாம்.... பத்தாம் நாள் யுத்தத்தில், பீஷ்மர் என்ன செய்யப் போகிறார், பார்க்கலாம்.....

பீஷ்மரின் விரக்தி

ஒன்பதாவது நாள் யுத்தம் முடிந்த பிறகு, தருமபுத்திரர், பீஷ்மர், பாண்டவ சேனைக்கு விளைவித்துக் கொண்டிருந்த நாசத்தை நினைத்து பெரும் கவலையுற்றார். கவலை என்பதைக் காட்டிலும் பயந்து போயிருந்தார் என்றே சொல்ல வேண்டும். பீஷ்மரை வீழ்த்தாத வரையிலும், போர் ஒரு முடிவுக்கு வராது போலவே தோன்றியது. அன்று இரவு தனது பாசறையில், தனது சகோதரர்களுடனும், தனக்காகப் போராடும் அரசர்களுடனும், கிருஷ்ணருடனும் ஆலோசனை நடத்தினார்.

அங்கே, ஸ்ரீ கிருஷ்ணரிடம், 'இந்திரன் எதிர்த்தாலும், குபேரன் எதிர்த்தாலும், ஏன் எமனே எதிர்த்தாலும், அவர்களை ஜெயித்து வீழ்த்தி விடலாம்; ஆனால், பீஷ்மர், நம்மால் வெல்ல முடியாதவராகக் காட்சி அளிக்கிறார். எனக்காகப் போரிடும் அரசர்களும், என் சகோதரர்களும் என் பொருட்டு பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பீஷ்மரோ, பெரும் நாசத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறார். நம் உயிரைக் காப்பாற்றுவதே கடினம் என்ற நிலை வந்தாலும் வந்து விடும். எனக்கு உயிர் வாழ விருப்பமில்லை. இந்த வாழ்வை வெறுத்து, கானகம் செல்லப் போகிறேன்’ என்று விரக்தியாகப் பேசுகிறார்.

கிருஷ்ணர், தருமபுத்திரருக்குத் தைரியம் கூற முனைந்தார். ‘தருமபுத்திரரே, நீர் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. உன்னுடைய சகோதரர்கள் தேவர்களாலும், இந்திரனாலும் கூட வெல்ல முடியாதவர்களே. உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் சொல்லுங்கள், நானே யுத்த களத்தில் இறங்கி பீஷ்மரை வீழ்த்துவேன்’ என்று தைரியம் கூறுகிறார். மேலும், ’பீஷ்மரின் ஆயுட்காலம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவரும் விரக்தியான மனநிலையில் இருக்கிறார்’ என்று கூறியவுடன், தருமபுத்திரர் ஆறுதல் அடைந்தார்.

’போரில், கிருஷ்ணர் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற சபதத்தை மீறி விட்டார் என்ற அவச் சொல் வந்து விடக் கூடாது. ஆகையால், எங்களுக்காக யுத்தத்தில் நீங்கள் இறங்க வேண்டாம். பீஷ்மரை வீழ்த்தக் கூடிய சூட்சுமத்தை, பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்’ என்று தருமபுத்திரர் யோசனை கூறியதும், அனைவரும் சம்மதித்தார்கள். ‘நமது குலத்திற்கே மூத்தவரான பீஷ்மரைக் கொல்வதற்கு நான் விரும்புகிறேன்’ என்ற புலம்பலுடன், பாண்டவர்கள் பீஷ்மரின் பாசறையை அடைந்தார்கள்.

அங்கு பீஷ்மர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். பாண்டவர்களும், கிருஷ்ணரும், பீஷ்மரை, அவர் காலடியில் தலையை வைத்து, வணங்கி நின்றார்கள். அவர்களை வரவேற்ற பீஷ்மர், ‘உங்களுக்கு நன்மை செய்யக் கூடிய எந்தக் காரியத்தை நான் இப்பொழுது செய்ய வேண்டும். யுத்தத்தில் உங்களுக்கு நன்மை செய்வது என்பதைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்: நான் அதை நிறைவேற்றுகிறேன்’ என்று கூறினார்.

அதற்கு, தருமபுத்திரர் சொன்னார், ‘இந்த யுத்தத்தில் நாங்கள் எப்படி வெற்றியடையப் போகிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. உங்களை வெல்லும் திறமை எங்களுக்கு இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. உங்களை வெல்லாமல் துரியோதனனை ஜெயிப்பது என்பது முடியாத காரியம். ஆகையால், உங்களை வெல்வதற்கான வழியினை நீங்களே எங்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். தர்மம் நிலைத்திருப்பதற்கும், நாங்கள் வெல்வதற்கும், உங்கள் வீழ்ச்சி அவசியம் என்றாகி விட்டது. அதைத் தெரிந்து கொள்ளவே நான் வந்திருக்கிறேன்’.

பீஷ்மர், ‘தருமபுத்திரா, போர்க்களத்தில் ஆயுதம் இழந்தவன், சரணடைந்தவன், மற்றும் பெண்களையும் எதிர்த்து நான் போர் புரிய மாட்டேன். துருபதன் மகளாகிய சிகண்டி, ஆண்தன்மை அடைந்திருந்தாலும், என்னைப் பொறுத்த மட்டில், அவள் பெண்ணே. அவளை முன்னிறுத்தி நீங்கள் போர் செய்தால், சிகண்டிக்கு எதிராக நான் ஆயுதம் ஏந்த மாட்டேன். அந்த நிலையில் அர்ஜுனன் என்னை வீழ்த்தி விட முடியும். அப்படி நான் வீழ்ந்த பிறகு, கௌரவர்களை வெல்வது உனக்கு எளிதான காரியமாக இருக்கும்’.

இவ்வாறு தன்னை வீழ்த்தும் உபாயத்தை பீஷ்மர் கூறிய பிறகு, அர்ஜுனனுக்கு பீஷ்மரை வீழ்த்த வேண்டிய தருணம் வந்து விட்டதை நினைத்து மனம் வருந்தினான். கிருஷ்ணர், போர் புரிவது க்ஷத்திரிய தர்மம் என்று கூறி அவனை உற்சாகப்படுத்தினார்.

பத்தாவது நாள் யுத்தம் தொடங்கிய போது, பாண்டவர்கள் சிகண்டியை முன் நிறுத்தினார்கள். அன்றும் ஆச்சர்யமான யுத்தத்தை பீஷ்மர் நடத்தினார். சிகண்டியை அர்ஜுனன் முன் நிறுத்தியதால், பீஷ்மரைக் காப்பதற்கு, துச்சாசனன் அவருக்கு முன் நின்று போர் புரிந்தான். அன்று அவனுடைய போர்த் திறமை எல்லோராலும் பாராட்டப்பட்டது. அச்சமயம், சிகண்டியினால் தாக்கப்பட்ட பீஷ்மர், ‘உன்னை எதிர்த்து ஆயுதப் பிரயோகம் செய்ய மாட்டேன்’ என்று சொன்னார்.

தொடர்ந்து பத்தாவது நாளாக பாண்டவர்கள் படையை பொசுக்கிக் கொண்டிருந்த பீஷ்மர், அந்த நேரத்தில் வாழ்க்கையில் விரக்தியுற்றார். அச்சமயம், துரோணர், பல அபசகுனங்களைக் கண்டார். கழுகுகள் தாழ்ந்து பறக்கின்றன; நரிகள் ஊளையிடுவதையும் கண்டு, பீஷ்மருக்கு ஆபத்து நேரிடப் போவதை உணர்ந்தார்.

அச்சமயம், பீஷ்மர், ‘யுதிஷ்டிரா, வாழ்வில் பெரும்பகுதி நேரம் யுத்தத்தில் எல்லோரையும் கொன்று தீர்த்தேன். நீ எனக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால், என்னை வீழ்த்திக் கொல்லும் முயற்சியைச் செய்வாயாக’ என்று கேட்டுக் கொண்டார். இதன் பிறகு, பாண்டவர்கள், சிகண்டியையும், அர்ஜுனனையும் முன் நிறுத்தி, பீஷ்மரை வீழ்த்துவதில் முனைந்தார்கள்.
சிகண்டியின் தாக்குதலைத் தடுப்பது, தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று கருதி, பீஷ்மர், சிகண்டியை அலட்சியம் செய்தமையால், பீஷ்மருக்குப் பாதுகாப்பாக, கௌரவப்படைகள் நெருங்கின. துச்சாசனன் கடுமையாகப் போர் புரிந்தான். அவனை அடக்கிய அர்ஜுனன், பீஷ்மரை நெருங்கினான். அச்சமயம், பீஷ்மர், யுத்தத்தால் விளைந்து கொண்டிருந்த நாசத்தைக் கண்டு விரக்தியுற்று, ‘நான் விரும்பும் போது தவிர, வேறு எப்போதும் எனக்கு மரணம் சம்பவிக்காது’ என்று என் தந்தை எனக்கு வரமளித்தார். அந்த மரணத்தை நெருங்குவதற்கான நேரம் வந்து விட்டது என்று மனதில் எண்ணிக் கொண்டார்.

அச்சமயம், தேவர் மற்றும் ரிஷிகள் கூட்டம் வானத்தில் கூடியது. யுத்த களத்தில் நறுமணம் பொருந்திய காற்று வீசியது. தேவ வாத்தியங்கள் முழங்கின. அடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Comments

  1. Hi ma...congrats for the "Aval" magazine article...I told my mom to buy and send me pics of ur recipe pages...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1