ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 61

குருக்ஷேத்திரத்தில் அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் ஆசியும், அனுமதியும் பெற்ற கர்ணன், மீண்டும் அவரை நமஸ்கரித்து விட்டு, துரியோதனன் இருப்பிடத்திற்குச் சென்றான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.

மேகலா : கிருஷ்ணா, யுத்த களத்தில், பீஷ்மரும், கர்ணனும் பேசும் இந்தப் பகுதி கண்ணீரை வரவழைக்கிறது; இல்லையா, கிருஷ்ணா? பலர் உயிர் துறந்த நிலையிலும், பீஷ்மர், துரியோதனனிடமும், கர்ணனிடமும், யுத்தத்தைக் கை விட்டு, சமாதானத்தை நாடச் சொல்வது, அவருடைய பக்குவத்தைக் காட்டுகிறது.

கிருஷ்ணர் : கண் முன்னே, தலை துண்டிக்கப்படுதலும், ரத்தம் ஆறாய் ஓடுவதும் காணச் சகிக்காதவர்; ஒரு கட்டத்தில், ’வாழ்நாள் முழுக்க யுத்தம் புரிந்து, உயிர்களைக் கொல்வதிலேயே கழித்து விட்டேன்’ என்று விரக்தியாய்ப் பேசுகிறார். அவருக்குத் தெரியும், இறுதியில் பாண்டவர்கள் வெல்லப் போகிறார்கள் என்று. முடிவு தெரிந்த யுத்தத்தில், உயிரிழப்பு அவருக்கு மன வருத்தத்தைக் கொடுக்கிறது. கடைசியாக ஒரு முயற்சி; தான் வீழ்ந்தால், சமாதானம் உண்டாகலாம் என்று நினைக்கிறார். அதனால்தான், தன்னிடம், தன்னைச் சாய்க்க வழி கேட்ட தருமனுக்கு, ‘சிகண்டியை முன்னிறுத்தினால், தன்னை வீழ்த்த முடியும்’ என்ற சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுக்கிறார். தன் பொறுப்பில் விடப்பட்ட திருதராஷ்டிரனுக்காக, இறுதி வரை போரிட்டார். பாண்டவர்கள், அதாவது தர்மம் ஜெயிக்க வேண்டும் என்று, தன்னையே வீழ்த்துவதற்கு இடம் கொடுத்தார்.

அவர் வாழ்க்கை முழுவதும், ‘தன் தந்தைக்காக பிரம்மச்சரிய வாழ்க்கை’, ‘திருதராஷ்டிரனுக்காகத் தன் உயிரையே பணயம் வைப்பது’ என்று தியாக வாழ்க்கை வாழ்ந்த ‘மகாத்மா, மேகலா! அவர் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதும், அவருடைய அரும் பெரும் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வதும், ‘அவசியமானதும்’, மற்றும் ‘வியப்புக்குரியதுமாகும்’. சரி, அடுத்து ‘துரோண பர்வத்தை’ ஆரம்பிக்கலாம்.

துரோண பர்வம் - துரோணர் சேனாதிபதியானார்

பீஷ்மர் வீழ்ந்த செய்தியைக் கேட்ட திருதராஷ்டிரன், மனக்கலக்கமுற்றான். பீஷ்மர் வீழ்ந்த பிறகு, கௌரவர் படையில் என்ன நேர்ந்தது என்று சஞ்சயனிடம் கேட்டான். சஞ்சயனின் வர்ணனை தொடர்ந்தது.
பீஷ்மரைப் பறி கொடுத்த கௌரவர் படை, ‘சமுத்திரத்தில், ஒரு பெரும் சூறைக் காற்றில் சிக்கிக் கொண்ட மரக்கலம் போலத் தத்தளிக்கத் தொடங்கியது.

இப்படிப்பட்ட சமயத்தில், கௌரவர் படையில் அனைவரும், கர்ணனையே மனதால் நினைத்தார்கள். அதுவரை தான் நேரடியாகப் போரில் கலந்து கொள்ளாமல், தனது படைகளை மட்டும் போரில் ஏவி இருந்த கர்ணன், பீஷ்மர் வீழ்ந்த பிறகு, விரைந்து யுத்த களம் வந்து சேர்ந்தான்.
யுத்த களம் வந்து சேர்ந்த கர்ணன், தைரியம், வீரம், மன உறுதி, சத்தியம் தவறாத பேச்சு என்ற லட்சணங்களுடன் கூடிய பீஷ்மரை நினைத்து, கௌரவர் படைகளிடம், ‘நமது படை பீஷ்மரால் எப்படிப் பாதுகாக்கப்பட்டதோ, அவ்வாறு இனி என்னால் பாதுகாக்கப்படும். பாண்டவர்களைக் கொன்று, பெரும் புகழ் பெற்று இவ்வுலகில் வாழ்வேன்; அல்லது அவர்களால் வீழ்த்தப்பட்டு மரணமடைவேன். கிருஷ்ணரின் உதவி பெற்ற பாண்டவர்களை, எமதர்மனே வந்து பாதுகாப்பதாக இருந்தாலும் கூட, அந்த அர்ஜுனனை எதிர்த்துக் கொன்று, துரியோதனனிடம் ராஜ்ஜியத்தை நிலைத்திருக்கச் செய்வது எனது கடமை’.

இப்படிப் பேசிய கர்ணன், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்த இடம் நோக்கிச் சென்றான். அங்கு, ஆகாயத்திலிருந்து இடம் பெயர்ந்த சூரியன் தான் நழுவி வந்து படுத்திருக்கிறானோ என்னும்படியாக ஒளி வீசிக் கொண்டிருந்த பீஷ்மரைக் கண்டு வணங்கிய கர்ணன், ‘தர்மமான காரியங்களை மட்டுமே செய்து கொண்டிருந்த நீங்களே வீழ்த்தப்பட்டீர்கள் என்றால், இந்தப் பூவுலகில் புண்ணியங்களின் பலனை யாருமே அடைய மாட்டார்களோ என்று சந்தேகமே எனக்குத் தோன்றுகிறது. ராஜ்ய நிர்வாகத்திலும், வீரத்திலும் உங்களுக்கு நிகரானவர் யாரும் இல்லை. இனி, கௌரவர் படை அர்ஜுனனின் பாணங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பரமேஸ்வரனிடமிருந்து வரம் பெற்ற அர்ஜுனனை வெல்வது இயலாத காரியம். அந்த அர்ஜுனனுடன் போரிட்டு, துரியோதனனின் ராஜ்ஜியம் நிலைத்திருக்குமாறு செய்வதற்கு, உங்களுடைய ஆசி எனக்குத் தேவை’ என்று கூறி வணங்கி நின்றான்.

இவ்வாறு பேசிய கர்ணனைப் பார்த்து, பீஷ்மர், ‘கர்ணா! நீ எதிரிகளின் அகந்தையை அழிப்பவன். நண்பர்களுக்கு சந்தோஷத்தை வளர்ப்பவன். பல அரசர்களை நீ ஒருவனாகவே வென்று, துரியோதனனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியவன். துரியோதனனுக்கு நான் எப்படிப் பாட்டன் முறையோ, அதே போல உனக்கும் நான் பாட்டன் முறையாகிறேன். நீ இந்தக் கௌரவப் படையை, உனது படையாக நினைத்து, நடத்திச் செல்வாயாக. துரியோதனனுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவாயாக. உனக்கு மங்களம் உண்டாகட்டும்’.

இவ்வாறு பீஷ்மர் மனப்பூர்வமாக கர்ணனை ஆசீர்வாதம் செய்தார். கர்ணன் திருப்தியடைந்து, மீண்டும் பீஷ்மரை வணங்கி, யுத்த களம் விரைந்தான். அங்கே, துரியோதனன், கர்ணனைப் பார்த்து, ‘நமது படைக்குச் சிறந்த தலைவன் கிடைத்து விட்டான் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தச் சமயத்தில் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான்.

’மேலும், பீஷ்மர் இல்லாத படை, தேரோட்டி இல்லாத தேர் போலவும், மாலுமி இல்லாத கப்பல் போலவும், தலைவன் இல்லாத படை தறி கெட்டு ஓடி விடும். ஆகையால், இந்த நேரத்தில், நமக்குத் தலைமை தாங்கத் தகுதி படைத்தவர் என்று யாரை நீ அடையாளம் காட்டுகிறாயோ, அவரைத் தளபதியாக்க நான் விரும்புகிறேன்’ என்று கூறினான்.
அதற்குக் கர்ணன், ‘நமது படையில், வீரத்தில் சிறந்த பல அரசர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் தலைமை தாங்க அழைக்கலாம். இருப்பினும், வயது, சாஸ்திர அறிவு, யுத்த தர்மம் தெரிந்தவர், யாராலும் வெல்ல முடியாதவர் என்ற பல தகுதிகளினால், துரோணர் ஒருவரே நமது படைக்குத் தலைமை தாங்கத் தகுதியானவர் ஆகிறார். அவரைத் தலைவராக்குவோம்’ என்று கர்ணன் கூறினான்.

உடனே, துரியோதனன், துரோணரிடம் விரைந்து சென்று, ‘குருவே, நீர் மனிதர்களில் சிறந்தவர். வயது, அறிவு, வீரம், போர்த்திறன், சாமர்த்தியம், நீதி, சாஸ்திர அறிவு, தவம் என்று எல்லாக் குணங்களிலும் மேன்மை பெற்றவர். அப்படிப்பட்ட உங்களைத் தவிர, தலைமை தாங்கத் தகுதி படைத்தவர் வேறு யாரும் இல்லை. தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று துரியோதனன், துரோணரிடம் வேண்டிக் கொண்டான்.
துரியோதனனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகத் துரோணர் ஒப்புக் கொண்டார்.

’என்னிடம் எந்தக் குணங்கள் இருப்பதாக நீ சொன்னாயோ, அந்தக் குணங்களை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். என்னைக் கொல்வதற்காகவே, திருஷ்டத்யும்னன் பிறந்துள்ளான். அதைப் பொய்யாக்குவேன். பாண்டவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவேன்’ என்று உறுதிபடக் கூறியவுடன், துரியோதனன், துரோணருக்கு முறைப்படி அபிஷேகம் செய்து, சேனாதிபதியாக அமர்த்தினான்.

துரோணர் தலைமையும், கர்ணனின் உற்சாகமும் தங்களுக்குக் கிடைத்து விட்டதால், இனி பாண்டவர் தரப்பு வெற்றியடையப் போவதில்லை என்று கௌரவர் தரப்பில் பேசிக் கொண்டார்கள்.

மேலும் போர்க்களத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2