ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 67

துரோணர் பூட்டிய கவசம்

மேகலா : யுத்தக் காட்சிகளை திருதராஷ்டிரனுக்கு, சஞ்சயன் வர்ணித்துக் கொண்டிருந்தான். திருதராஷ்டிரன், அபிமன்யு கொல்லப்பட்ட விதம் குறித்து, மனம் குமுறினான். ’நம் தரப்பு வீரர்கள், அபிமன்யுவை அநியாயமாகக் கொன்றதன் காரணமாக, அர்ஜுனன் எமனைப் போல கோபம் கொண்டுள்ளானே. துரியோதனன் என்னுடைய அறிவுரைகளைக் கேட்டிருந்தால், இந்த நிலமை ஏற்பட்டிருக்காதே’ என்று புலம்பினான்.

அதைக் கேட்ட சஞ்சயன், ‘சூதாட்டம் நடக்காமல் நீங்கள் தடுத்திருந்தால், அல்லது துரியோதனனை நீங்கள் சிறையில் அடைத்திருந்தால், இன்று உம்முடைய மக்களுக்கு இந்த நிலமை ஏற்பட்டிருக்காது’ என்று திருதராஷ்டிரனிடம் பதில் கூறி விட்டு, மேலும் யுத்தக் காட்சிகளை வர்ணிக்க ஆரம்பித்தான்.

ஜயத்ரதனும், கர்ணனும், சல்லியனும், கிருபரும், அஸ்வத்தாமாவும் குதிரைகளோடு துரோணரிடமிருந்து வெகுதூரம் விலகி இருந்தார்கள். துரோணர், தான் வகுத்த வியூகம் பிளவு படாமல் இருக்க, அதைப் பாதுகாக்கத் தொடங்கினார்..

அதே சமயம், அபிமன்யுவின் வதத்தினால் பெரும் கோபமுற்ற அர்ஜுனன், ருத்ரன் போலவும், எமன் போலவும், யுக முடிவை ஏற்படுத்த வந்து விட்ட நெருப்பு போலவும் ஜொலித்துக் கொண்டிருந்தான். துரோணர் வகுத்த வியூகத்தைப் பிளக்க அர்ஜுனன் முனைந்த போது, பெரும் யுத்தம் உண்டாயிற்று. அப்போது துரோணரை நெருங்கிய அர்ஜுனன், அவரைப் பணிந்து வணங்கி, ‘பிளக்க முடியாத வியூகத்தை உடைத்து அதனுள்ளே நான் நுழையப் போகிறேன். என்னுடைய விருப்பத்தை நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான்.

துரோணர், ‘அர்ஜுனா! ஒன்றை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்வாயாக! என்னை ஜெயிக்கா விட்டால், உன்னால் ஜெயத்ரதனை நெருங்கவே முடியாது’ என்று கூறி, அவன் மீது ஆயுதங்களைத் தொடுக்க ஆரம்பித்தார்.
அர்ஜுனனும் பதிலுக்கு ஆயுதப் பிரயோகம் செய்தான். ஆச்சாரியர் என்று அர்ஜுனனும் தயங்கவில்லை; தன் பிரதம மாணவன் என்று துரோணரும் கருணை காட்டவில்லை.

அந்தச் சமயத்தில் அர்ஜுனன் துரோணரை விட்டு விலகி விடுவது தான் நல்லது என்று கிருஷ்ணர் கூறியதை ஏற்று, துரோணரைப் பணிந்து அர்ஜுனன் அவரை விட்டு விலகி, ஜயத்ரதனை அடைவது என்று தீர்மானித்து விலகினான்.

அப்படி விலகும் பொழுது, துரோணர் தொடர்ந்து தாக்கினார். அங்கிருந்து விலகிச் செல்லும் பொழுது, கிருதவர்மா அவனை எதிர்த்து யுத்தம் செய்தான். கிருதவர்மனை வென்று, ஜயத்ரதனைப் பார்த்து முன்னேறிக் கொண்டிருந்தான், அர்ஜுனன்.

துரியோதனன், அர்ஜுனன் துரோணரை விட்டு விலகி, ஜயத்ரதனை நோக்கிச் செல்வதைக் குறித்து துரோணரிடம், ‘அர்ஜுனன் எப்படி உங்களைக் கடந்து செல்லலாம்’ என்று கேட்டான்.

அதற்கு துரோணர், ‘இங்கே நான் வியூகத்தின் முகத்தை விட்டு விலகினால், வியூகம் உடைபட்டு விடும். அர்ஜுனனை எதிர்த்து நீயே யுத்தம் செய்வாயாக. உன்னுடைய வீரத்தைப் பற்றி, உனக்குச் சந்தேகம் தேவையில்லை. அர்ஜுனன் இருக்கும் இடத்திற்கு நீயும் விரைந்து செல். அப்படி அர்ஜுனனை எதிர்க்கப் போகிற உனக்கு, யாராலும் வீழ்த்த முடியாதபடி ஒரு கவசத்தை நான் உனக்கு அணிவிக்கிறேன். அர்ஜுனனாலும், கிருஷ்ணராலும் கூட இந்தக் கவசத்தைப் பிளக்க முடியாது’ என்று சில மந்திரங்களை உச்சரித்து, துரியோதனனுக்கு யாராலும் பிளக்க முடியாத ஒரு கவசத்தைப் பூட்டினார்.

இப்படிக் கவசம் பூட்டப்பட்ட துரியோதனன், ஜயத்ரதனைக் காப்பாற்றுவதற்காக, அர்ஜுனனை எதிர்க்கும் எண்ணம் கொண்டு, அந்த திசையை நோக்கிச் சென்றான்.

துரியோதனன் படைகளையெல்லாம் கடந்து வருவதைப் பார்த்த கிருஷ்ணர், அர்ஜுனனிடம், ‘இப்பொழுது உன்னுடைய திறமை முழுவதையும் காட்டி இவனுடன் போர் செய்ய வேண்டும். இவன் உங்களுக்குச் செய்துள்ள தீமைகளையெல்லாம் எண்ணிப்பார். உன் வல்லமை முழுவதையும் காட்டி, துரியோதனனை வீழ்த்துவாயாக’ என்று கூறினார்.

துரியோதனனும், அர்ஜுனனுடைய கோபாவேசத்தைக் கண்டு சற்றும் மனம் கலங்காதவனாகி அர்ஜுனனை எதிர்த்துப் பெரும் யுத்தம் புரிந்தான். அர்ஜுனனின் பாணங்களால் துரியோதனனின் கவசத்தைத் துளைக்க முடியாதது கண்டு கிருஷ்ணர், ‘உன்னுடைய அஸ்திரங்கள் துரியோதனனுக்கு எதிராக வீணாகிப் போவது ஏன்?’ என்று கேட்டார்.

அர்ஜுனன், ‘துரோணர், துரியோதனனுக்கு, எவராலும் பிளக்க முடியாத கவசத்தை அணிவித்திருக்க வேண்டும். இன்று உலகில் அத்தகைய கவசத்தை உருவாக்கத் தெரிந்தவர் துரோணர் ஒருவரே’ என்று கூறி, துரியோதனனை உற்றுப் பார்த்தான். அவன் உள்ளங்கைகளை கவசம் மூடவில்லை என்பதைக் கவனித்தான். ஆகையால், துரியோதனனின் உள்ளங்கைகளை நோக்கித் தனது அம்புகளைச் செலுத்தினான்.
இப்படி ஓர் பகுதியில் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது, சாத்யகி, துரோணரை எதிர்த்துக் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான். துரோணர், சாத்யகியைத் தகிக்கச் செய்து கொண்டிருந்தார். திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்க்கத் துவங்கியதும், சாத்யகி அவரிடமிருந்து மீண்டு, அர்ஜுனன் சென்ற திசை நோக்கிச் சென்றான். தருமனைக் காக்கும் பொறுப்பை பீமனும், திருஷ்டத்யும்னனும் ஏற்றுக் கொண்டனர். வழியில் எதிர்த்த கிருதவர்மாவிடம் போரிட்டு, அவனை வீழ்த்தி விட்டு, அர்ஜுனனை நோக்கி சாத்யகி சென்றான்.

தருமனைக் காக்கும் பொறுப்பை திருஷ்டத்யும்னனிடம் கொடுத்து விட்டு, பீமனும், அர்ஜுனன் இருக்கும் திசை நோக்கிச் செல்லும் பொழுது, துரோணர் அவனை எதிர்த்தார். ‘பீமசேனா! என்னை ஜெயித்து விட்டு, அதற்குப் பிறகு முன்னேறுவாயாக’ என்று கூறினார்.

பீமன், தன் கதாயுதத்தைச் சுழற்றி, துரோணர் மீது எறிந்தான். துரோணரின் ரதம் தூள் தூளகியது. துரோணர் வேறு ஒரு ரதத்தில் ஏறிக் கொண்டார். பீமன் அதையும் நாசம் செய்தான். அந்த நிலையில், பீமனுடைய தேரோட்டி, தேரை அர்ஜுனன் இருக்கும் திசையில் விரைவாக ஓட்டினான். அர்ஜுனன் இருக்கும் இடத்தைக் கண்ட பீமசேனன் உரக்கக் குரல் எழுப்பி, சிம்ம கர்ஜனை புரிய, அர்ஜுனனும் பதிலுக்கு உற்சாகத்தோடு குரல் எழுப்பினான். இந்த ஒலி யுத்த களம் எங்கும் கேட்டது. தருமபுத்திரர் காதிலும் இது விழ, அவர் மனக்கவலையை விட்டு மகிழ்வு கொண்டார்.

பதினான்காவது நாள் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

மேகலா : ஏன் கிருஷ்ணா? துரோணர் இப்படி மாறிட்டாரு....?

கிருஷ்ணர் : விசுவாசம்....! துருபதன் நாட்டில் அவமானப்பட்டதும், பீஷ்மர்தானே அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். ஏழ்மை நிலையில் இருந்தவருக்கு, இருப்பிடம் கொடுத்து, அவருடைய திறமைக்கு மதிப்பு கொடுத்து, அவரை உபசரித்தது, அஸ்தினாபுரம்தான். அந்த விசுவாசம், அவரை வேலை பார்க்க வைக்கிறது.

மேகலா : அப்படிப் பார்த்தால், துரோணருக்கு, அவர் கேட்ட ‘குரு மரியாதையை’ செலுத்தியது, அர்ஜுனன் தானே...!

கிருஷ்ணர் : குரு மரியாதை என்பதே, துருபதனை கைதியாக்குவதுதானே. அதைத்தான் துருபதன் மாற்றிக் கொண்டான். துருபதனின் ராஜதந்திரம், கைதியாக்கியவனையே, மருமகனாக்கி, அஸ்திரம் கற்றுக் கொடுத்தவருக்கு எதிராகத் திருப்பி விட்ட கணக்கு சரியாகி விட்டதா....? உலக மனிதர்கள் கணக்கு..., சரியாப் போச்சா....! சரி, அடுத்து என்ன நடக்குது பார்க்கலாம்....

அடுத்த பகுதி ‘சாத்யகியின் இழிசெயலோடு’ துவங்கும்...

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1