ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 69
ஜயத்ரதன் வதம்
குதிரைகளைச் செலுத்துவதில் நிபுணராகிய கிருஷ்ணர், மிக விரைவாக ஜயத்ரதன் இருக்குமிடம் நோக்கித் தேரைச் செலுத்தினார். துரியோதனன், கர்ணன், அஸ்வத்தாமா, கிருபர் போன்ற பல வீரர்கள் அர்ஜுனனை எதிர்த்து வந்தார்கள். கர்ணன், சாத்யகியை எதிர்ப்பதில் முனைந்தான். அதைக் கண்ட அர்ஜுனன், ‘கிருஷ்ணா! கர்ணன் சாத்யகியுடன் போர் புரிய நினைக்கிறான். பூரிசிரவஸ் சென்ற இடத்திற்கு சாத்யகியும் சென்று விடக் கூடாது. நான் இப்பொழுது, ஜயத்ரதனை எதிர்ப்பதற்கு முன்பாக, கர்ணனை எதிர்ப்பது அவசியமாகிறது’ என்று கிருஷ்ணரிடம் கூறினான்.
ஆனால், கிருஷ்ணர், ‘இந்த நேரத்தில் நீ கர்ணனை எதிர்த்துப் போரிடுவது நல்லதல்ல. கர்ணனுக்கு எப்பொழுது முடிவு நெருங்கப் போகிறது என்று எனக்குத் தெரியும். இப்பொழுது அந்த நேரம் வரவில்லை. ஆகையால் நீ முதலில் ஜயத்ரதனைக் கொன்று வீழ்த்திய பிறகு, கர்ணனை எதிர்த்துப் போர் செய்யலாம். இப்பொழுது சாத்யகியே கர்ணனை எதிர்க்கட்டும்’ என்று கூறி தன் தேரோட்டி தாருகனை அழைத்து, சாத்யகிக்கு சாரதியாகப் பணித்தார்.
கர்ணனுக்கும் சாத்யகிக்கும் உக்கிரமான போர் நடைபெற்றது. பீமன், அர்ஜுனனிடம், ‘அர்ஜுனா, கர்ணன், நான் போர் புரிவதற்கே அருகதை அற்றவன் என்று கீழ்த்தரமாக ஏசினான். அப்படிப்பட்டவனைக் கொல்ல வேண்டும்’ என்று கூறினான்.
அர்ஜுனன், கர்ணனிடம், ‘கர்ணா, யுத்தத்தில் வீரர்களுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி, மாறி வருவது இயல்பு. நீ பீமனிடம் தோற்று விலகிய நேரங்களும் உண்டு. அந்நேரங்களில், பீமன் உன்னைப் பரிகசித்துப் பேசியதில்லை. ஒரு முறை, ரதத்தை இழந்ததால் தோற்றதாக ஆகி விடாது. இதோ, இப்போதும் நீ உன் ரதத்தை இழந்திருக்கிறாய். சாத்யகி உன்னைக் கொல்லாமல் விட்டிருக்கிறான். வீரத்தைப் பற்றி யார் பேசுவது? நீங்கள் பலர் சேர்ந்து அபிமன்யுவைக் கொன்றீர்களே; அது எந்த வீரத்தில் சேர்த்தி? உன்னுடைய மகனாகிய வருஷசேனனை நான் இப்பொழுது, நீயும் உன்னைச் சார்ந்தவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வீழ்த்திக் கொல்லப் போகிறேன்’ என்று சபதம் செய்தான். மீண்டும் பெரும் போர் நடந்தது.
துரியோதனன், கர்ணனை அணுகி, ‘உன்னுடைய பலத்தை எல்லாம் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. ஜயத்ரதன், அர்ஜுனனுக்குப் பலியாகிவிடக் கூடாது. நாம் ஜயத்ரதனை இப்போது காப்பாற்றி விட்டால், இந்த யுத்தத்திலேயே நாம் ஜெயித்தவர்களாகி விடுவோம். அர்ஜுனன் தீயில் வீழ்வான்’ என்று கூறினான்.
கர்ணன், ‘துரியோதனா! நான் உயிர் வாழ்வதே உனக்காகத்தான். பீமனோடு போரிட்டு நான் களைப்பெய்தினாலும், போரை விட்டு விலகாமல் இருப்பது உனக்காகத்தான். உண்மையான நண்பனுக்காக நன்மையைச் செய்ய விரும்புகிறவன் எதைச் செய்வானோ, அதை இப்பொழுது நான் செய்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதே! வெற்றி என்பது நம்முடைய திறமையை மட்டும் பொறுத்தது அல்ல. உனக்காக அர்ஜுனனோடு நான் புரியும் யுத்தம், இதுவரை யாரும் காணாத யுத்தமாக இருக்கப் போகிறது. அதன் பிறகு நடப்பது தெய்வத்தின் இஷ்டத்தைப் பொறுத்தது’ என்று கூறி விட்டு யுத்தத்தைத் தொடர்ந்தான்.
அர்ஜுனனும், கர்ணனும் ஒருவரையொருவர் அப்போதே கொன்று விடுவது என்ற முனைப்போடு யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனாலும், கர்ணனாலும் மற்றவர்களாலும் காப்பாற்றப்பட்ட ஜயத்ரதனைக் கொல்வதற்கு ஏற்ற தருணம் அர்ஜுனனுக்குக் கிட்டாமலேயே இருந்தது.
அர்ஜுனன் தவிப்பதைப் பார்த்த கிருஷ்ணர் சொன்னார், ‘அர்ஜுனா! ஏதாவது ஒரு உபாயம் செய்யாமல் இப்பொழுது ஜயத்ரதனை உன்னால் கொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், இப்பொழுது நான் ஒரு காரியம் செய்யத் தீர்மானித்து விட்டேன். சூரியன் அஸ்தமனமாகி விட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை நான் ஏற்படுத்தப் போகிறேன். சூரியன் மறைந்து விட்டான் என்று மகிழ்ந்து, ஜயத்ரதன் பாதுகாப்பை விட்டு வெளியே வருவான். அப்பொழுது, பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் அவனை நீ கொன்று விட வேண்டும். உன் சபதத்தை நிறைவேற்ற வேறு வழியில்லை.
இவ்வாறு சொன்ன கிருஷ்ணர், தன் மனதால் சுதர்சனம் என்ற தனது சக்கரத்தை நினைக்க, அது அவருடைய கையில் வந்து இணைந்தது. சூரியனை மறைத்து, இருள் கவ்வியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துமாறு அந்தச் சக்கரத்தைப் பணித்தார். சக்கரமும் சூரியனை மறைக்க, இருள் கவ்வியது.
கிருஷ்ணரின் செயலை அறியாத பாண்டவர் தரப்பினர், அர்ஜுனனின் சபதம் நிறைவேறாமல் போய் விட்டதே என்று மனம் இடிந்தனர். துரியோதனன் தரப்பினர் மகிழ்ந்தார்கள். அந்த நிலையில், எல்லா வீரர்களும், சூரியன் இருந்த திக்கை நோக்கி மேலே பார்த்தார்கள். ஜயத்ரதனும் மகிழ்ச்சியுடன் மேல் நோக்கிப் பார்த்தான்.
அதைக் கண்ட கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, ‘ஜயத்ரதனை வீழ்த்த இதுதான் சரியான சமயம். அம்பைச் செலுத்துவாயாக. அவனுடைய தலையை அறுத்து வீழ்த்துவாயாக’ என்று கூறினார்.
அர்ஜுனன் காண்டீபத்தில் அம்பைப் பொருத்தி, செலுத்தினான். விரைந்து சென்ற அந்த அம்பு, ஜயத்ரதனின் தலையைக் கொய்தது. அந்தத் தலை கீழே வீழ்வதற்குள் கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, அவசரத்துடன் பேசினார். அர்ஜுனா! ஜயத்ரதனின் தலையைக் கீழே விழாமல் நிறுத்து’ என்றார்.
ஏன் அவ்வாறு கிருஷ்ணர் சொல்கிறார் என்பதை அறியாத அர்ஜுனன், அந்தத் தலை பூமியில் விழாத படி மற்றொரு அம்பை எய்து, அதைத் தாங்கினான். ஜயத்ரதனின் தலை அர்ஜுனனின் அம்பினால் தாங்கப்பட்டு, பூமியை விட்டு மேலே நின்றது. இந்த அதிசயத்தை அங்கிருந்த வீரர்கள் அனைவரும் பார்த்து மெய் சிலிர்த்தார்கள்.
அப்பொழுது கிருஷ்ணர், ‘அர்ஜுனா! ஜயத்ரதனுடைய தலை, யாரால் பூமியில் விழுமாறு செய்யப்படுகிறதோ, அவனுடைய தலை நூறு துண்டுகளாக சிதற வேண்டும் என்ற வரத்தை ஜயத்ரதனின் தந்தை பெற்றிருக்கிறான். இப்பொழுது உன்னால் அறுத்துத் தள்ளப்பட்ட தலை கீழே விழுந்தால், உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறி விடும். ஜயத்ரதனின் தந்தை வ்ருத்தக்ஷத்ரன் இன்னும் கூட தியானத்தில்தான் இருக்கிறான். இந்தத் தலையை அவன் மடியில் விழுமாறு செய். அப்படிச் செய்தாயானால், வ்ருத்தக்ஷத்ரன் தியானம் முடிந்து எழுந்திருக்கும் பொழுது, ஜயத்ரதனின் தலை பூமியில் விழும். அப்படி நடந்தால், வ்ருத்தக்ஷத்ரன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியவனாவாய்’.
கிருஷ்ணர் சொல்லியவாறே அர்ஜுனன் செய்ய, ஜயத்ரதன் தலை, அவன் தந்தையின் மடியில் விழுந்தது. அவன் தியானம் கலைந்து எழுந்த போது, அந்தத் தலை பூமியில் விழுந்தது. வ்ருத்தக்ஷத்ரன் தலையும் வெடித்து நூறு துண்டுகளாகச் சிதறியது. ஜயத்ரதன் கொல்லப்பட்ட உடனேயே கிருஷ்ணர், தன்னால் உண்டாக்கப்பட்ட இருளை விலக்கினார். சூரியன் ஜொலித்தான்.
சூரியன் அஸ்தமனமாவதற்குள் ஜயத்ரதனைக் கொன்று, தன்னுடைய சபதத்தை அர்ஜுனன் நிறைவேற்றியதைக் கண்டு, கௌரவர் தரப்பு மனமிடிந்து போயிற்று. சூரியனை மறைத்தது, கிருஷ்ணரின் செயலே என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள். யுத்தம் மேலும் தொடர்ந்தது.
அடுத்து வரும் யுத்த நிகழ்ச்சிகள் அடுத்த பகுதியில் தொடரும்....
Comments
Post a Comment