ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - பகுதி 72

மேகலா : குருக்ஷேத்திரத்தில் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர் தரப்பில் பெரும் அழிவை உண்டாக்கிய துரோணரை, பீமனும், அர்ஜுனனும் எதிர்த்தார்கள். சாத்யகி, சோமதத்தனை எதிர்த்து கொன்றான். துரோணர், தருமனை யுத்த களத்தை விட்டுத் துரத்தி அடித்தார். அப்போது, மாலை நேரம் மங்கி, யுத்த பூமியை இருள் கவ்வியது.

அந்த இருளில் வீரர்களால் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூட முடியவில்லை. அப்போது, பாண்டவர்களும், கௌரவர்களும் விளக்குகளை எரிய வைத்தார்கள். யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றின் மீதெல்லாம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. அந்த விளக்குகளின் வெளிச்சத்தில் இரண்டு படைகளின் ஆயுதங்கள் மின்னல் போல பளிச்சிட்டன. அந்த மாதிரி இருளில், அது வரை யுத்தம் நடந்ததேயில்லை.

அந்த இருளில் தொடர்ந்த யுத்தத்தில், அஸ்வத்தாமாவினால் வீழ்த்தப்பட்ட கடோத்கஜன் தெளிவடைந்து, மீண்டும் அஸ்வத்தாமாவை எதிர்த்தான். அஸ்வத்தாமா, கடோத்கஜனால் அடிக்கப்பட்டு வீழ்ந்து மூர்ச்சையானான். அதன் பிறகு, தெளிவடைந்த அஸ்வத்தாமா, கடோத்கஜனை மயக்கமுறச் செய்தான்.

துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்தது. பீமன் எறிந்த கதையினால் துரியோதனனின் தேர், குதிரை, தேரோட்டி அனைத்தும் நாசமானது. துரியோதனன் இறந்து விட்டான் என்று செய்தி பரவியது. பாண்டவர் தரப்பில் மகிழ்ச்சியும், கௌரவர் தரப்பில் பெரும் கூச்சலும் ஏற்பட்டன.

இந்தத் தவறான செய்தி தெளிந்த பிறகு, கர்ணனை, சகாதேவன் எதிர்த்து, பின்வாங்கச் செய்தான். நகுலனுக்கும், சகுனிக்கும் இடையே நடந்த போரில், சகுனி தோற்றான். துரோணரை எதிர்த்த சிகண்டியை கிருபர் வென்று விரட்டினார்.

தன்னை எதிர்த்து வந்த சகுனியையும், அவன் மகன் உலூகனையும் அர்ஜுனன் தோற்கடித்தான்.

இந்த நிலையில் துரோணரும், கர்ணனும் முழுத் திறமையையும் காட்டவில்லை என்று துரியோதனன் ஆதங்கப்பட்டான். துரியோதனனால் தூண்டப்பட்ட துரோணர், கர்ணன் இருவரும் பாம்பு போல சீறி எழுந்தார்கள். அவர்கள் இருவரும் காட்டிய வீரத்தைத் தாங்க முடியாமல் பாண்டவ சேனை, தீப்பந்தங்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடத் தொடங்கினர். அப்படி ஓடுகிற வீரர்களை, துரோணரும், கர்ணனும் மேலும் துரத்தி அடித்தார்கள்.

இதையெல்லாம் பார்த்த கிருஷ்ணரே கூட மனம் தளர்ந்து போனார். அவர், அர்ஜுனனைப் பார்த்து, ‘மிகப் பெரிய வீரர்களான துரோணரும், கர்ணனும் நமது படையை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த இரவுக்குள்ளாகவே, நமது படை அழிந்து விடும்’ என்று எச்சரித்தார். அதன் பிறகு இருவரும், தங்கள் தரப்பு வீரர்களைப் பார்த்து, ‘பயந்து ஓடாதீர்கள்; நாங்கள் அவ்விருவரையும் அடக்குகிறோம்’ என்று கேட்டுக் கொண்டார்கள். பாண்டவர் படை மீண்டும் யுத்தத்தில் முனைந்தது.

ஆனால், அந்த இரவு வேளையில், கர்ணன் செய்த யுத்தத்தைக் கண்டு, பாண்டவர்கள் படை நடுங்கியது. தர்மன் கூட, கர்ணனின் பாய்ச்சலைப் பார்த்து, ‘ஓடி விடுவதே நல்லது’ என்ற நினைப்புக்கு வந்து விட்டார். அப்படி ஒரு பயங்கரமான போரை நடத்திக் கொண்டிருந்தான், கர்ணன்.

மேகலா : போர்....போர்.... போர்.... யப்பா...., இரவில் கூட போரா....? Tired ஆகாதா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : கொஞ்சம் loose ஆனாலும், வெற்றி பறி போய் விடுமே.... போர் நடக்கும் பொழுது, ஆவேசம், வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் தான் மேலோங்கி இருக்கும் மேகலா....

மேகலா : ஓ..... அடுத்து கடோத்கஜனை வதம் செய்யப் போகிறார்கள் போலயே. ஏற்கனவே இரண்டு முறை மயங்கி விட்டான்.

கிருஷ்ணர் : போரில் இதெல்லாம் சகஜம் தானே. இரவு யுத்தம் தொடர்கிறது. நாம் சற்று வேடிக்கை பார்ப்போம். நீ கதையை மேலே சொல்லு.....

கடோத்கஜ வதம்

மேகலா : அந்த இரவு நேரத்தில் கூட, கர்ணன் உக்கிரமாக போர் செய்து கொண்டிருந்தான். அவன் பராக்கிரமத்தைத் தாங்காமல், திரும்பி ஓடி விடுவது என்று நினைத்து, தர்மன், அர்ஜுனனை நெருங்கி, ‘கர்ணனைப் பார்! உக்கிரமாகப் போர் செய்கிறான். நமது நண்பர்களையும், உறவினர்களையும் துன்புறுத்துகிறான். இந்தச் சமயத்தில் உன்னால் தான் அவனைத் தடுக்க முடியும். அவனை விட்டால், நம் எல்லோரையும் நாசம் செய்து விடுவான். அவனை வதம் செய்வதாக நீ செய்த சபதத்தை உனக்கு நினைவூட்டுகிறேன். அதில் உன் மனதைச் செலுத்துவாயாக’ என்று கூறினான்.

இவ்வாறு தர்மன் சொன்னதைக் கேட்ட அர்ஜுனன், கிருஷ்ணரிடம், ‘தர்மன், கர்ணனுடைய வீரத்தைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டார். நமது படையும் சிதறி ஓடுகிறது. இந்த யுத்த களத்தில் இப்படி நர்த்தனமாடும் கர்ணனை என்னால் சகிக்க முடியவில்லை. ஆகையால், உடனே கர்ணனை எதிர்ப்போம். ஒன்று அவன் மடிய வேண்டும்; அல்லது நான் மடிய வேண்டும்’.
-இவ்வாறு அர்ஜுனன் கோபமாகப் பேசியதைக் கேட்ட கிருஷ்ணர், ‘அர்ஜுனா! இன்று கர்ணன் இந்திரனைப் போல இயங்கிக் கொண்டிருக்கிறான். இன்று எல்லா மனிதர்களையும் விட அதிக சக்தி உடையவனாக எனக்குத் தெரிகிறான். நமது தரப்பில், உன்னையும் கடோத்கஜனையும் தவிர, இவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர்கள் வேறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நீ இந்த சமயத்தில் கர்ணனோடு போரிடுவது நல்லதல்ல. கர்ணனிடம், இந்திரனிடமிருந்து பெறப்பட்ட சக்தி ஆயுதம் இருக்கிறது. உன்னைக் கொல்வதற்காகவே, அந்த சக்தி ஆயுதத்தை வைத்திருக்கிறான். இப்பொழுது நீ அவனை எதிர்த்தால், அந்த சக்தி ஆயுதத்தை உன் மீது பிரயோகித்து விடுவான். அது அழிவில் முடியும். ஆகையால், இப்பொழுது நீ கர்ணனை எதிர்க்க வேண்டியதில்லை. கர்ணனை கடோத்கஜன் எதிர்க்கட்டும். இரவு நேரத்தில் அவன் வலிமை பெருகிக் கொண்டே வரும். பீமனின் மகனாகிய கடோத்கஜன் கர்ணனைத் தோற்கடிப்பான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை’.

கிருஷ்ணர் இப்படிக் கூறியவுடன், அர்ஜுனன் கடோத்கஜனைக் கூப்பிட, கிருஷ்ணர் அவனிடம் பேசினார். ‘கடோத்கஜா! பயத்தினால் தவிக்கும் நம்முடைய படைக்கு, இப்பொழுது நீயே பெரிய சக்தியாய் இருக்கிறாய். அதை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம்’ என்று கடோத்கஜனை உற்சாகப்படுத்தினார்.

பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த கடோத்கஜன், ராக்ஷச அம்சம் கொண்டவன். அவர்களுக்கு இரவு நேரத்தில் தான், பலமும், வீரமும் அதிகரிக்கிறது. அவனுடைய தேர் விசித்திரமானது. அதில் எல்லாவிதமான ஆயுதங்களும் குவிக்கப்பட்டிருந்தன. அவனுடைய தேரை நூறு குதிரைகள் இழுத்தன. மாயைகள் நிறைந்த யுத்தத்தைப் புரிபவன். அவன் விடக் கூடிய பாணங்கள், தேர்ச்சக்கரங்களின் அச்சு போலப் பெரிதானவை. இப்படிப்பட்ட கடோத்கஜன் கர்ணனை எதிர்த்துத் தன் திறமையையெல்லாம் காட்டி யுத்தம் செய்தான். ஆனாலும் கூட, அவனுடைய கை மீண்டும் தாழ்ந்தது. கடோத்கஜனை எதிர்த்த அலாயுதன் என்ற அரக்கனைக் கொன்றான்.
அச்சமயம், துரியோதனனைச் சார்ந்தவர்கள் கர்ணனை அணுகி, ‘கடோத்கஜன் நமது படையினரை விரட்டிக் கொண்டிருக்கிறான். பீமன், அர்ஜுனனை வீழ்த்துவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் கடோத்கஜனைக் கொன்றாக வேண்டும். ஆகையால், உன்னிடமிருக்கும் சக்தி ஆயுதத்தினால் இவனைக் கொன்று விடு. இல்லாவிடில், அவன் இன்று இரவே நமது படை முழுவதையும் அழித்து விடுவான்’ என்று கேட்டுக் கொண்டனர்.

சக்தி ஆயுதத்தை, அர்ஜுனன் மீது பிரயோகிப்பதற்காக கர்ணன் காப்பாற்றி வந்தான். இப்பொழுது எல்லோரும் வற்புறுத்தவே, அதை கடோத்கஜன் மீது பிரயோகித்தான். கடோத்கஜன் இறந்து வீழ்ந்தான். கௌரவர் சேனை மகிழ்ச்சியில் திளைத்தது.

இதை கிருஷ்ணர் எப்படிப் பார்த்தார் என்ற விளக்கத்தோடு அடுத்த பகுதி தொடங்கும்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2