ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 74

மேகலா : இரவு நேரத்திலும் யுத்தம் தொடர்ந்தது என்று சென்ற பகுதியின் கடைசியில் பார்த்தோம். துரோணர், துருபதன், விராடன் இருவரையும் கொன்று குவித்தார். அதைக் கண்ட பீமனுக்கு பெரும் கோபம் உண்டாயிற்று. திருஷ்டத்யும்னனைத் தூண்டினான். பீமனால் தூண்டப்பட்ட திருஷ்டத்யும்னன் துரோணரை எதிர்த்தான். இருவருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்தது. அந்த நிலையில், பதினான்காவது நாள் யுத்தம் முடிவடைந்தது.

பதினைந்தாம் நாள் யுத்தத்தில், துரோணரும், அர்ஜுனனும் போரிட்டார்கள். குருவும், சிஷ்யனும் போரிட்ட போது, இருவரில் யார் உயர்ந்தவர் என்று ஒருவராலும் கூற முடியவில்லை. பிரளய காலத்தில் உலகை அழிக்கும் ஈஸ்வரன், இருகூறாகத் தன்னைப் பிளந்து கொண்டு போர் செய்த மாதிரி இருந்தது. துரோணரிடத்தில் அஸ்திர அறிவு இருந்தது. அர்ஜுனனிடம் அஸ்திர அறிவும், உடல் பலமும் சேர்ந்து இருந்தது.
ஒரு நிலையில், துரோணர், பிரம்மாஸ்திரத்தை ஏவினார்.
பூமியே நடுங்கியது....

கண் மூடிக் கண் திறக்கும் நேரத்திற்குள், எல்லா நதிகளும் எதிர்நோக்கிப் பாய்ந்தன.

பேய்க்காற்று வீசியது....

கடல் கொந்தளித்தது....

துரோணரின் பிரம்மாஸ்திரத்தை முறியடிக்க, அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தையே ஏவினான். அமைதி திரும்பியது.

துரோணரை எதிர்ப்பதில் திருஷ்டத்யும்னன் முனைந்தான். அவர்களைத் தடுக்க துரியோதனன் முற்பட்டான். அதைக் கண்ட சாத்யகி, துரியோதனனை எதிர்த்தான். அந்நேரத்தில், துரோணரோ பாஞ்சாலர்களில் பெரும்பாலானோர்களைக் கொன்று தீர்த்துக் கொண்டிருந்தார். அர்ஜுனனால் மட்டுமே துரோணரை எதிர்க்க முடியும் என்ற நிலையில், கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னார்.

‘துரோணர் கையில் ஆயுதம் ஏந்தி யுத்த களத்தில் உள்ள வரையில், நமக்கு வெற்றி என்பது கிடையாது. இவரைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ஏதாவது தந்திரத்தைத்தான் நாம் கையாள வேண்டும். அந்த தர்மம், தர்மத்தின் பாதையை விட்டு விலகியதாக இருந்தாலும் கூடப் பரவாயில்லை. தன்னுடைய மகன் அஸ்வத்தாமா கொல்லப்பட்டால், துரோணர் ஆயுதங்களைக் கீழே வீசி எறிவார் என்பது நிச்சயம். அஸ்வத்தாமாவைக் கொல்லாவிட்டாலும், அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்ற ஒரு செய்தியைத் துரோணரிடம் யாராவது கூறினால், அவருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு, ஆயுதங்களைக் கீழே போடுவார்’

கிருஷ்ணர் கூறிய யோசனையை ஏற்க அர்ஜுனன் மறுத்தான். ஆனால், மற்றுள்ளவர்கள் இது ஒன்றுதான் வழி என்று அதை உடனே ஏற்றார்கள். தருமன் முதலில் மறுத்தாலும், ஜெயிக்க வேண்டும் என்ற காரணத்தால் ஏற்றுக் கொண்டான்.

மாளவ தேசத்து அரசனின் யானையின் பெயர் ‘அஸ்வத்தாமா’. பீமன் தன்னுடைய கதையினால் அதைக் கொன்றான். பிறகு அவனே துரோணர் அருகில் சென்று, ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்று உரக்கக் கூறிச் சென்றான்.

பீமனின் வார்த்தையைக் கேட்டு, துரோணர் திகைத்தார். மனம் தளர்ச்சி அடைந்தாலும், பின்பு தன்னைத் தேற்றிக் கொண்டு, கோபம் கொண்டு பிரம்மாஸ்திரத்தை ஏவினார்; கோர யுத்தம் புரிந்தார். விசுவாமித்திரர், வசிஷ்டர் முதலிய மஹரிஷிகள், துரோணரை நெருங்கி, ‘சகல சாஸ்திரங்களையும் அறிந்த உமக்கு, இந்த உலக வாழ்க்கை முடிய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. உமது கொடிய செயலை நிறுத்துங்கள்’ என்றனர்.

அதைக் கேட்ட துரோணர், மனக்கலக்கமுற்று, தருமனிடம், ‘என் மகன் அஸ்வத்தாமா கொல்லப்பட்டானா, இல்லையா?” என்று கேட்டார். எந்த நேரத்திலும் தருமன் பொய் சொல்ல மாட்டான் என்பது துரோணரின் நம்பிக்கை.

கிருஷ்ணர், தன் குரலைத் தாழ்த்தி, தருமனிடம், ‘துரோணர் மேலும் யுத்தம் செய்தால், நாம் எல்லோரும் அழிவது நிச்சயம். தன்னைச் சார்ந்தவர்களுக்காக, ஒருவன் சொல்லும் பொய்யினால், அவனுக்குப் பாவம் வந்து சேராது’ என்று சொன்னார்.

பீமன், ‘நான் அஸ்வத்தாமா என்ற யானையைக் கொன்று விட்டேன். அதை வைத்து, ‘அஸ்வத்தாமா மாண்டான்’ என்று சொல்வதில் எந்தத் தவறும் கிடையாது’ என்று கூறவும், ‘யானை அஸ்வத்தாமா கொல்லப்பட்டாகி விட்டது’ என்ற சொற்றொடரில், ‘யானை’ என்ற பதத்தை மெதுவாகவும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்ற வார்த்தைகளை உரக்கவும் கூறினான், தருமன்.

தருமன் கூறியதைக் கேட்ட துரோணர் மனம் கலங்கினார். பயங்கரமான யுத்தம் செய்யும் சக்தியை அவர் இழந்தார்.....

மேகலா : தருமன் ஒரு சுயநலவாதி....., கிருஷ்ணா.....!

கிருஷ்ணர் : ஆமாம்.....! ஜெயிக்கவே முடியாமல் ஒருவர், கொடுமையான யுத்தத்தை நடத்திக் கொண்டே இருக்கிறார். பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும். அதுதான்..... ஒரு தந்திரத்தைப் பிரயோகித்தோம். அவர் மட்டும், விதியை மீறி பிரம்மாஸ்திரம் அறியாதவர்களிடம் எல்லாம் அந்த அஸ்திரத்தை பிரயோகிக்கவில்லையா...... ஒன்று தெரிந்து கொள். நேர்மையாக இருக்கும் வரைதான், தந்திரம் நுழையாது. அவர்கள் சிறிது நேர்மை தவறினாலும்...., நாங்கள் வேற மாதிரி யோசிக்க ஆரம்பிப்போம் இல்லையா.....? பீஷ்மர் போரிடும் போது, இப்படியா நடந்தது? நான் போர் புரியப் போகிறேன் என்று இறங்கினேனே தவிர, தந்திரத்தைப் பயன்படுத்தவில்லை. இப்போது, தந்திரம் புகுந்து விட்டது.

மேகலா : பின், அவர்கள் தரப்பும் இப்படித்தானே கிருஷ்ணா, போர் புரிய ஆரம்பிக்கும்....?

கிருஷ்ணர் : ஆரம்பிக்கட்டுமே..... அதுதானே எங்களுக்கு வேண்டும்! சட்டுபுட்டுனு யுத்தத்தை முடிக்கலாம்.....

துரோணர் மறைந்தார்

மேகலா : தன் மகன் அஸ்வத்தாமா இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு, துரோணர் மனமொடிந்து போனார். அவரை எதிர்க்க திருஷ்டத்யும்னன் வேகமாக ஓடி வந்தான். அந்த நிலையிலும் துரோணர், திருஷ்டத்யும்னனின் ஆயுதங்கள் எல்லாம் பறிபோகுமளவுக்கு போரிட்டார்.

இருப்பினும், யுத்தத்தில் துரோணரின் திறமை குறைய ஆரம்பித்தது. யுத்தத்திலிருந்து விலகுமாறு ரிஷிகள் செய்த உபதேசம், அவரைக் கலக்கமுறச் செய்தது. ‘அஸ்வத்தாமா இறந்தான்’ என்ற தருமனின் கூற்று, அவரை யுத்த களத்திலேயே உயிரை விடும் முடிவுக்கு வரச் செய்தது. அந்த நேரத்திலும் பிரம்மாஸ்திரத்தை ஏவி விடுவது என்ற முடிவுக்கு வந்தார்.
அந்த நேரத்தில் பீமன் அங்கு வந்து, ‘எந்த ஜீவராசிக்கும் துன்பம் நேரக் கூடாது என்ற அஹிம்சைத் தத்துவத்தைக் கொண்டவர்கள் பிராமணர்கள். எல்லாத் தர்மங்களுக்கும் எதிராகச் செயல்படும் நீர், பிராமணர் கிடையாது’ என்று கடுமையாகப் பேசினான்.

இப்படிக் கூறிய பீமனைப் பார்த்து, துரோணர் திகைத்து நின்றார். துரியோதனனை அழைத்து, ‘நான் ஆயுதங்களைக் கை விடப் போகிறேன். உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்’ என்று கூறி விட்டு, மனம் நொந்து தேர்த்தட்டில் அமர்ந்தார்.

அப்படி ஆயுதங்களை வீசி எறிந்து அமர்ந்து விட்ட துரோணர், ஆழ்ந்த நிஷ்டையை அடைந்தார்.

இதைக் கண்ட திருஷ்டத்யும்னன், கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு, துரோணரை நோக்கி ஓடினான். அவருடைய தலைமுடியைத் தனது கையில் பிடித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில், துரோணர், பரமாத்மாவான விஷ்ணுவை மனதில் தியானித்தார். அப்பொழுது மகாத்மாவான துரோணருடைய தலையைப் பிளந்து கொண்டு ஒரு ஜோதியானது அவருடைய சரீரத்தை விட்டு மேலுலகை அடைந்தது.

வெறும் உடலாக இருந்த துரோணரை, திருஷ்டத்யும்னன் கத்தியை வீசி, தலையை அறுத்தான். அவருடைய உடல் ரதத்திலிருந்து கீழே சாய்ந்தது.

மேலும் நடந்த போர் நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் காண்போமா.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2