ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 75

மேகலா : வெறும் உடலாக இருந்த துரோணரை, திருஷ்டத்யும்னன், கத்தியை வீசி தலையை அறுத்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.
திருஷ்டத்யும்னனின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய போது, பீமன் மட்டும், உற்சாகத்தில் மூழ்கினான்.

கௌரவர் தரப்போ நிலைகுலைந்தது. துரியோதனன் யுத்த களத்தை விட்டு விலகினான். சகுனி அந்த இடத்தை விட்டே ஓடினான். கர்ணனும், அதிர்ச்சி அடைந்து, செயலற்றுப் போய், போர்க்களத்தை விட்டு விலகினான். சல்யனும் அவனைப் பின் தொடர்ந்து வெளியேறினான்.
மற்றொரு புறத்தில், அஸ்வத்தாமா, கௌரவர் படை நான்கு பக்கங்களிலும் சிதறி ஓடுவதைக் கண்டான். துரியோதனனிடம் சென்று, அதன் காரணத்தைக் கேட்க, துரியோதனனும் பதில் சொல்லத் தெரியாமல், வேதனையை வெளிப்படுத்தினான்.

அஸ்வத்தாமாவின் தந்தை துரோணர் கொல்லப்பட்டார் என்ற விஷயத்தை, அஸ்வத்தாமாவிடம் எப்படிச் சொல்வது என்பது துரியோதனனுக்கு விளங்கவில்லை. சோகம் தாங்காமல், கிருபாச்சாரியாரைக் கூறுமாறு கேட்க, கிருபரும், ‘அஸ்வத்தாமா என்ற யானை இறந்ததாக, தருமன் சொன்னதைக் கேட்ட துரோணர், அஸ்வத்தாமா தான் இறந்தான் என நினைத்து, ஆயுதங்களைத் துறந்து, நிஷ்டையில் ஆழ்ந்த நேரத்தில், திருஷ்டத்யும்னன், துரோணரின் தலையை அறுத்து வீழ்த்தினான்’ என்ற விஷயத்தை, விவரமாக எடுத்துச் சொன்னார்.

நடந்ததை அறிந்த அஸ்வத்தாமா கோபம் கொண்டு நெருப்பு போல ஜொலித்தான். அடிபட்ட நாகம் போல சீறினான். இருந்தும், அவன் கண்கள் அவனை அறியாமலேயே, நீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
அஸ்வத்தாமா, கண்களில் சொரிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, ‘துரியோதன ராஜனே! என்னுடைய தந்தை ஆயுதங்களை வீசி எறிந்து, நிஷ்டையில் அமர்ந்த போது, இந்த அற்பர்கள் அவர் தலையை வெட்டிச் சாய்த்தார்கள் அல்லவா..... இருக்கட்டும். என் தந்தை ஆயுதங்களைக் கீழே வீசுவதற்கு தருமபுத்திரன் கூறிய பொய்தானே காரணம் - இருக்கட்டும்! என் தந்தை யுத்த களத்தில் உயிர் நீத்ததற்காக நான் வருந்தவில்லை. அது எனக்குப் பெருமைதான். ஆனால், எல்லா வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவருடைய தலைமுடியை ஒருவன் பிடிக்கும் நிலைக்கு அவர் வந்து விட்டார் என்பதை என் நெஞ்சம் ஏற்கவில்லை. நான் இருக்கும் போதே அவருக்கு இந்தக் கதி நேர்ந்தது என்ற நினைப்பு என்னை கூர்வாள் போல் அறுக்கிறது. இந்தச் செயலுக்கான பலனை திருஷ்டத்யும்னன் அனுபவிக்கப் போகிறான்.

பொய் சொன்ன தருமபுத்திரனின் இரத்தத்தை இந்தப் பூமி குடிக்கப் போகிறது’.
- என்று பொருமிய அஸ்வத்தாமா, ‘இனி நான் நியாயம், அநியாயம் பார்க்கப் போவதில்லை. எது முறை, முறை அல்ல என்று பார்க்கப் போவதில்லை. பாஞ்சாலர்கள் அனைவரையும் கொன்று குவிக்கப் போகிறேன். சத்தியத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்; பாஞ்சாலர்களைக் கொன்று குவிப்பேன்’ என்று கடுமையான சபதம் செய்தான்.

’என்னுடைய வீரத்தை, கிருஷ்ணனும் பார்க்கட்டும்; பாண்டவர்களும் பார்க்கட்டும். நான் விடும் அம்புகள் இனி தனியாகப் போகப் போவதில்லை; மழையாகப் பொழியப் போகிறது. இனி திருஷ்டத்யும்னன் என்ன செய்யப் போகிறான் என்று பார்த்து விடுகிறேன். இதோ, இப்பொழுது ‘நாராயண அஸ்திரத்தை’ ஏவப் போகிறேன். திருஷ்டத்யும்னனும், மற்றவர்களும் இனி உயிர் வாழப் போவதில்லை. இதோ அவர்களை அழிக்கிறேன்’

- இவ்வாறு அஸ்வத்தாமா சபதமிட்டவுடன், துரியோதனன் படை வீரர்களுக்குப் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. மீண்டும் யுத்த களம் திரும்பினர்.

மேகலா : கிருஷ்ணா! அஸ்வத்தாமாவைப் பற்றிக் கூறுவாயா, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அஸ்வத்தாமா, துரோணாச்சாரியாரின் மகன். அவனை ஏழ்மையில் வளர்த்தாலும், கற்றுக் கொடுக்க வேண்டிய அஸ்திரங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். வில்வித்தை அறிந்த ஆச்சார்யர்களிடத்தில் பல ரகசிய அஸ்திரங்கள் இருக்கும். அந்த ரகசியமான அஸ்திரங்களை, தன் பிரியமான சிஷ்யனுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். அல்லது தன்னுடைய மகனுக்கு, அதைத் தெரிவிப்பார்கள். அஸ்வத்தாமா மகன் மட்டுமல்ல, சிஷ்யனும் கூட. அதனால் துரோணர் அறிந்திருந்த ரகசிய அஸ்திரங்கள் அனைத்தும் அஸ்வத்தாமா அறிந்திருக்கிறான். வில்வித்தையில் பரசுராமருக்கு இணையானவன். இந்திரனுக்கு நிகராக யுத்தம் செய்யக்கூடியவன். பிரகஸ்பதிக்கு சமமான அறிவு; கார்த்தவீர்யார்ஜுனனுக்கு நிகராக வீரம்; மலைக்கு நிகரான ஸ்திரபுத்தி; அக்னிக்கு நிகரான தேஜஸ்; சமுத்திரத்துக்கு நிகரான ஆழம்; பாம்பிற்கு நிகரான கோபம்; பூமியை விடப் பொறுமைசாலி; காற்றைப் போன்ற வேகம்; இவையெல்லாம் ஒருங்கே சேர்ந்து உருவானவன் தான் ‘அஸ்வத்தாமா’.

இன்னும் கேள்... துரோணர், பிராமண குலத்தில் பிறந்தாலும், க்ஷத்திரிய தர்மத்தை ஏன் கடைப்பிடித்தார்? தந்தையிடமிருந்தும், தவத்தின் மூலமாகவும், தெய்வ அனுக்ரஹத்தின் மூலமாகவும், பயிற்சியின் மூலமாகவும், அஸ்திரக்கலையில் துரோணர் சிறந்த தேர்ச்சி பெற்றார்.
இளைமைப் பருவத்தில் துருபதனுடைய நட்பு கிடைத்ததால், தன்னுடைய ஏழ்மை நிலையில் இருந்து விடுபடுவதற்காக, துருபதனிடம் உதவி கேட்டுச் சென்றார். அங்கு துருபதன், துரோணரை நண்பனாகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், கர்வபங்கப்பட்டார்.

அதன் பிறகு தான் துரோணர், கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஆச்சாரியரானார். அவர்களிடம் குருதட்சணையாக, துருபதனைச் சிறை பிடிக்கச் சொல்லிக் கேட்டார். அர்ஜுனன், துருபதனைச் சிறை பிடித்து, தன் குருதட்சணையைச் செலுத்தினான்.

துரோணர், துருபதனைப் பழி வாங்கியதால், துருபதன், துரோணரைக் கொல்வதற்காகவே, திருஷ்டத்யும்னனைத் தவமிருந்து பெற்றான்.
இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிறது...? ஒருவனுக்கு ஒரு தீங்கு செய்தால், அதற்குப் பதில் ஒன்று நிச்சயமாக நடந்தே தீரும்.
இப்பொழுது திருஷ்டத்யும்னன், துரோணரை அநியாயமாகக் கொன்றான். அதனால், பாரதப் போரில் மேலும் பல விளைவுகள் ஏற்பட்டன.
ஒரு தவறு நடக்கிற போது, அதை அத்துடன் நிறுத்தி விட - தவறுச் சங்கிலியை அறுத்து விட, யாராவது ஒரு விவேகி முன்வர வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்தச் சங்கிலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இது துரோணர் விஷயத்தில் மட்டுமல்ல, பீஷ்மர், கர்ணன், துரியோதனன் ஆகியோர் விஷயத்திலும் நடக்கிறது. சரி! ‘நாராயணாஸ்திரம்’ ஏவப்படப் போகிறது. என்ன விளைவுகள்....! அடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1