நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 2

மேகலா : ஸ்ரீவி enter பண்ணியவுடன் நேரே..... என் ‘மாரியம்மனின்’ காலடியில் தான், போய் இறங்கினேன், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : யப்பா.... போய்ப் பார்த்துட்டியா.... ஆத்தாளும் உன்னைப் பார்க்கக் காத்திருப்பாள்...., இல்லையா, மேகலா?

மேகலா : கிருஷ்ணா....., பூக்குழி கொடியேறி 5 நாட்கள் ஆகி விட்டன. இதுவரையில், இப்படி பூக்குழி விரத காலத்தில், ஊருக்கு வெளியே இருந்ததே கிடையாது. என் குற்ற உணர்வு, பாசம், அன்னையைப் பிரிந்த பிள்ளையின் ஏக்கம், எல்லாம் கலந்த தவிப்பில் நான் நிற்க, என் அன்னை சிறிது நேரம் அங்கேயே என்னை நிறுத்தி விட்டாள். பூசாரி என்னைக் கவனிக்கும் நேரம் வரைக்கும், என் மௌன மொழிகள், என் அன்னையிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசின. அம்மாவும், ‘எங்க போன, நீ’ என்று கம்பீரமாய் கேட்டது போல சிலிர்த்துப் போனேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : கேட்டாளா....? ஆயிரம் பக்தர்கள் புடைசூழ இருந்தாலும், தன்னை விரும்பும் ஒரு பக்தனையாவது காணவில்லையென்றால், அன்னை தவித்துத்தான் போவாள்.

மேகலா : கிருஷ்ணா...., இந்த வார்த்தைகள்; இது போதும் எனக்கு....
வெக்கையான நேரத்தில், மழைநீரை, ‘ஹோலி’ நீராக என் மீது பாய்ச்சியிருக்கிறாய். அம்மாவைக் கண்குளிரப் பார்த்து விட்டு, அவளின் அருள் பிரசாதத்தைக் கை நிறைய வாங்கிக் கொண்டு, 5 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

அதுவரைக்கும், கொரோனா வைரஸைப் பற்றிப் பேசுகிறோம்; ஹோலியை வண்ணங்கள் பீய்ச்சாமல் கொண்டாடுகிறோம்; வீட்டிற்குள்ளேயே office-ஐக் கொண்டு வருகிறோம்; கோயிலுக்குப் போகிறோம்; வைரஸ் பரவி விட்டது என்று விழிப்புணர்வுப் பிரச்சாரமும் பண்ணுகிறோம். இத்தனையும், வைரஸின் பாதிப்பு எப்படி இருக்கும் என்ற பயமில்லாமலேயே நடக்கிறது.

மறுநாள் ஒருவித எதிர்பார்ப்போடவேதான் கோயிலுக்குச் சென்றோம். அன்றே, P.M. announce பண்ணி விட்டார், ‘March 22-ம் தேதியன்று, அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயெ இருங்கள்’ என்று. இன்னும் சொல்லப் போனால், ‘இதை ஊரடங்கு உத்தரவாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்ற ரீதியில் அறிவிப்பு வரவும், நாங்களும் இதை ஒரு ‘பந்த்’ மாதிரிதான் பார்த்தோம். அவசர அவசரமாக வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி, சேர்த்து வைப்பதில் ஈடுபட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக news வருவதைப் பார்த்து, இந்த ‘ஊரடங்கு’ சரியான result-ஐக் கொடுத்தால், அடுத்தடுத்து இது மாதிரி ’வீட்டுக்காவலில்’ இருக்க நேரிடலாம் என்று மெதுவாக அனுமானித்தோம். அதாவது, கொரோனா வைரஸின் ஆயுள் 14 மணி நேரம், அது அடுத்த மனிதரிடம் பரவுவதற்கு; ‘சங்கிலிச் சந்தர்ப்பம்’ இல்லாமல் போனால், வைரஸ் பரவுவது தடுக்கப்படலாம். தேவைப்பட்டால், வரும் நாட்களிலும், இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்த்து, காய்கறிகளும், அரிசி, பருப்பு முதலான சாமான்கள் சேகரிப்பதற்காகவும், நாங்கள் வெளியேறிய நாளில், கோயிலுக்குக் கூடச் செல்லவில்லை.

கிருஷ்ணர் : கோயிலில் ஏதும், police வருகை, நடவடிக்கை.... அப்படி ஏதாவது, இல்லையா, மேகலா....?

மேகலா : இருந்தது, கிருஷ்ணா..... பொது மக்கள், விஷயங்களை, அவரவர் நம்பிய வகையில் கிரகித்துக் கொண்டிருக்கும் போது, அரசாங்கம் 50 பேர், 100 பேர் கூடும் இடங்களை, ‘கூட்டம் சேர விடாதீர்கள்’, அதாவது, கோயில் திருவிழாக்களை ’ஒத்திப் போடவோ’, ’நிறுத்தவோ’ செய்யுங்கள் என்று கோயில்களுக்கு அறிவிப்பு ஒன்று அனுப்பியுள்ளது. செய்வதறியாது கோயில் நிர்வாகம் திகைத்துப் போனது. அன்று பூப்பல்லாக்கில், அன்னை நகர்வலம் வந்து கோயிலுக்குள் சென்றிருக்கிறாள். நான், அங்கு மாட்டியிருந்த அறிவிப்புப் பலகையில், அரசாங்கம் வேண்டுகொளாக எழுதியிருந்ததைப் படித்துக் கொண்டிருந்தேன். கோயிலின் office-க்கு எதிரில், ஒரு 50 பேர் அமர்ந்திருந்தனர்; பூ இறங்குபவர்கள்; கையில் காப்புக் கட்டியிருந்தனர். மஞ்சள் நீரில் நனைத்த வேஷ்டியுடன் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். 4 police காவலுக்கு இருந்தனர். பிறகுதான் தெரிந்தது, அது ‘உள்ளிருப்புப் போராட்டம்’ என்று.....

கிருஷ்ணர் : oh! Collector உத்தரவு போட்டு விட்டார்.....

மேகலா : ஆமாம், கிருஷ்ணா....! மறுநாள் தான் நான் சாமான் வாங்குவதற்காக கடைகளுக்குச் சென்றிருந்தேன். வந்து விசாரித்தால், கோயிலுக்குள் மக்கள் கூடக் கூடாது என்று strict-ஆக உத்தரவு போட்டு விட்டனர். கோயில் நிர்வாகமும் ஆத்தாளுக்குப் பூப் போட்டுப் பார்த்து, ‘இந்த வருடம் பூக்குழி இறங்குபவர்கள், அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டு, விரதத்தை முடித்துக் கொள்ளலாம்’ என்று வந்திருக்கிறது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : உலகத்திற்கே அன்னை அவள்; அவள் வேறென்ன சொல்வாள்....? கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் அனைத்தையும் அறிந்தவள்; தன் மக்களுக்கு நல்லதைத்தான் சொல்லுவாள். இந்த பங்குனி அமாவாசையை ஒட்டி பல ஊர்களிலும், அம்மனின் ‘பிரம்மோற்சவம்’ நடப்பது வழக்கம் தானே. அதனால் தான் அரசாங்கமும், மக்களிடம் வேண்டுகோளாக அறிவிப்பை வைத்திருக்கிறார்கள். அரசாங்கம் நல்லது என்று நினைப்பதை, அன்னை ஆமோதித்து வரவேற்பதில் ஆச்சரியமே இல்லை. அப்புறம் என்ன ஆச்சு....?

மேகலா : ’மார்ச் 22-ம் தேதி, மாலை 5 மணிக்கு பொது மக்கள் அனைவரும், அதாவது all Indians 135 கோடி மக்களும், தங்கள் தங்கள் வீட்டின் முன்பாக வந்து, மக்களின் பாதுகாப்புக்காக தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல் உழைப்பவருக்காக, நன்றி சொல்லும் விதமாக, கை தட்டி, ஒலி எழுப்பி, உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.....’ என்ற பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றும் ஆர்வத்துடன் எங்களின் ‘ஊரடங்கும் அமைதியான தவத்தினை’ தொடங்கினோம், கிருஷ்ணா...

கிருஷ்ணர் : இதில் ஒரு அர்த்தம் இருக்கிறது; நீ புரிந்தாயா, மேகலா....?

மேகலா : என்ன அர்த்தம், கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : ‘மக்களின் பாதுகாப்புக்காக, தன் உயிரையும் பெரிதாக நினைக்காமல் உழைப்பவருக்காக’ என்ற வார்த்தையின் உண்மையை உணரச் செய்தாரா....? எல்லோரையும் மனசார ஒன்றுபடச் செய்தாரா....? நாமும், நமக்காகப் பாதுகாப்புக் கொடுப்பவருக்காகக் கை தட்டுவோம் என்று, கை தட்ட வைத்தாரா....? இது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றுபடுதல். ஊரடங்கு உத்தரவை மதித்து, வீட்டிற்குள்ளே பதுங்கி இருந்த மக்களால், கண்ணுக்குத் தெரியாத ‘வைரஸ்’, தாக்குவதற்கு யாரும் கிடைக்காததால், பலவீனம் ஆகி விட்டதா....?

மேகலா : எங்க, கிருஷ்ணா....? அதற்குப் பிறகுதானே வெளிநாட்டிலிருந்து நிறையப் பேர் வந்து இறங்கினார்கள். அரசாங்கம் அவர்களைத் தனிமைப்படுத்த முயற்சி செய்தால், வாக்குவாதம் செய்து, என்னென்னவோ நடந்து, ‘வைரஸ்’ பரவுவதை இரண்டாம் கட்ட நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். அதனால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர ஆரம்பிச்சிருச்சி. பார்த்தார் பிரதமர்; 24-ம் தேதி இரவு புதிய அறிவிப்பை அறிவித்தார், ‘21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு’ என்று. 144 தடை உத்தரவு. வெளியில் யாரும் நடமாடக் கூடாது. அத்தியாவசியம் என்றால் கூட வெளியில் வர வேண்டாம். தனித்திருங்கள்; வெளியில் எங்கும் செல்லாதீர்கள். அடிக்கடி கை கழுவுங்கள்; பாதுகாப்பாக இருங்கள்’ என்றெல்லாம் ஊரடங்கு உத்தரவையே வேண்டுகோளாக அறிவித்தார்.

அடுத்த 21 நாட்களை எப்படிக் கழித்தோம் என்ற விவரங்களுடன் அடுத்த பகுதிகளில் பார்க்கலாம், கிருஷ்ணா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2