ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 78
கர்ண பர்வம்
கர்ணன் படைத் தலைமை ஏற்றான்
அஸ்வத்தாமா, ‘அரசனே! மனிதர்கள் முழு முயற்சியோடு ஒரு காரியத்தில் இறங்கும் பொழுது, தெய்வமும் அவர்களுக்குக் கருணை புரிகிறது. இந்த நேரத்தில், நம்மிடையே சிறந்து விளங்குபவனை படைத் தலைவனாக நாம் ஏற்க வேண்டும். மனிதர்களுள் சிறந்தவனாகிய கர்ணனை, நமது படைத் தலைவனாக நியமிப்போம். கர்ணன் பலம் படைத்தவன். அவனைச் சேனாதிபதியாக அபிஷேகம் செய்வதே முறை’ என்று தன் கருத்தைக் கூறினான்.
அஸ்வத்தாமாவின் யோசனையைக் கேட்ட துரியோதனன், பெரும் மகிழ்ச்சியோடு, கர்ணனைப் பார்த்துப் பேசினான், ’கர்ணா! தேவர்களின் படைகளுக்கு முருகன் தளபதியாக இருந்தது போல், நமது படைக்கு நீ தளபதியாக இருந்து நடத்திச் செல்ல வேண்டும். இருளைச் சூரியன் அழிப்பது போல, எதிரிகளின் படைகளை நீ நாசம் செய்வாயாக’.
இவ்வாறு துரியோதனன் கூறியவுடன், கர்ணன், படைத் தலைமை ஏற்பதற்குச் சம்மதித்தான்.
‘துரியோதனா! பாண்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று மனதில் நினைத்துக் கொள். அதை நான் செய்து காட்டுகிறேன்’ என்று கூறி, கர்ணன் துரியோதனனுக்குத் தைரியமூட்டினான்.
துரியோதனன், கர்ணனுக்குத் தளபதியாக அபிஷேகம் செய்து, அறிவித்தான். கர்ணன், இந்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டு, சூரியன் உதயமானவுடன், துரியோதனன் படையை போருக்குத் தயாராகும்படிக் கட்டளையிட்டான்.
கர்ணனால் ‘மகர வியூகம்’ வகுக்கப்பட்டது. அந்த வியூகத்தின் வாயிலில் கர்ணன் நின்றான். அஸ்வத்தாமாவை அந்த வியூகத்தின் தலையில் நிறுத்தினான். சகுனியும், உலூகனும் அதன் கண்களில் நிறுத்தப்பட்டார்கள். கிருபர், மகரத்தின் வலக்காலிலும், கிருதவர்மா, இடக்காலிலும் நின்றார்கள். சல்யன், இடக்காலுக்குப் பின்புறம் நின்றான்.
இதனைப் பார்த்த தருமன், அர்ஜுனனைப் பார்த்து, ‘மிகப் பெரிய வீரனான கர்ணனை நீ வெல்வாயாக. அவனை நீ வென்று விட்டால், பன்னிரண்டு வருடங்களாக என் மனதில் குத்திக் கொண்டிருக்கும் முள் அகற்றப்பட்டது என்று நான் நினைப்பேன். அவனை வெல்வதற்குரிய வியூகத்தை வகுப்பாயாக’ என்று கூறினார்.
அர்ஜுனன், ‘அர்த்த சந்திரம்’ எனப்படும் வியூகத்தை அமைத்து, மற்றுள்ளோர்களை, முக்கியமான இடங்களில் நிறுத்தினான்.
கௌரவர் தரப்பு, ’கர்ணன் தலைமையில் வெற்றி பெறப் போகிறோம்’ என்று உற்சாகம் மிகுந்திருந்தது.
கர்ணன் ஒருவனை வென்றால், யுத்தத்தை வென்றதாக நினைத்த பாண்டவர் தரப்பு, ஊக்கத்துடன் தயாரானார்கள்.
பீமன், பெரும் யுத்தம் புரிந்து, கௌரவ சேனையில் நாசம் விளைவித்தான். கர்ணன், பாண்டவ சேனையை சிதறி ஓடச் செய்தான்.
அந்த சமயத்தில், பீமனுக்கும், அஸ்வத்தாமாவிற்கும் கடும் போர் மூண்டது. இரண்டு புலிகள் மோதிக் கொள்வது போன்ற தோற்றத்தை அது உருவாக்கியது.
யுத்த களத்தின் மற்றொரு பகுதியில், சல்யன், பாண்டவர் படையைப் பொசுக்கிக் கொண்டிருந்தான். துச்சாசனனுக்கும், சகாதேவனுக்கும் இடையே நடந்த போரில், துச்சாசனன் தோல்வியுற்றான். கர்ணன், யுத்த களத்தில் சக்கரம் போலச் சுழன்று யுத்தம் செய்தான். நகுலன், கர்ணனிடம் சிக்கித் தவித்தான். நகுலன் முழுமையாகத் தோற்ற போது, கர்ணன், ‘என்னிடம் தோற்றதற்காக நீ வெட்கமடைய வேண்டிய தேவையில்லை. கிருஷ்ணரும், அர்ஜுனனும் எங்கு இருக்கிறார்களோ, அங்கு சென்று பாதுகாப்பாக இரு’ என்று கூறி, அவனைக் கொல்லாமல் விட்டு விட்டான். குந்திக்குக் கொடுத்த வாக்குறுதியால் தான் அவன் நகுலனைக் கொல்லவில்லை.
யுத்த களத்தின் வேறொரு திசையில், அர்ஜுனன், கௌரவர் படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்தான். தருமனுக்கும், துரியோதனனுக்கும் நடந்த போரில், துரியோதனன் தோல்வியுற்று மூர்ச்சை அடைந்தான். அப்போது, வானில் ஒரு அசரீரி கேட்டது. ’இவன் பீமனால் கொல்லப்பட வேண்டியவன். நீ இவனைக் கொல்லக் கூடாது’ என்று கூறியது. அதனால், தருமன், துரியோதனனைக் கொல்லாமல் விட்டு, அந்த இடத்திலிருந்து விலகினான். கிருதவர்மா, துரியோதனனைக் காப்பாற்றி, அழைத்துச் சென்றான்.
அதன் பிறகு தொடர்ந்த போரில், பாண்டவர்கள் கை உயர்ந்தது; கௌரவர்கள் கை தாழ்ந்தது. அந்த நிலையில், பதினாறாவது நாள் யுத்தம் முடிவடைந்தது.
பதினேழாவது நாள் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, பதினாறவது நாள் இரவு பாசறையில் துரியோதனன் மீண்டும் ஆலோசனை நடத்தினான். அப்போது கர்ணன், ‘துரியோதனா! அர்ஜுனன் மிகச் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒவ்வொரு சமயத்திலும், கிருஷ்ணர் சொல்லித் தரும் யோசனைகளினால் தான், அர்ஜுனன் போரில் பல விந்தைகளைப் புரிந்து கொண்டிருக்கிறான். அப்படி இருந்தும் கூட, நாளைய தினம் நான் அர்ஜுனனை வெல்கிறேன்’ என்று கூறினான்.
யுத்த நிகழ்ச்சிகளை சஞ்சயன் மூலம் கேட்டறிந்த திருதராஷ்டிரன், ‘சூதாட்டத்தின் விளைவுகள் இப்போதுதான் நேரப் போகிறது. துரியோதனன், கர்ணனை நம்புகிறான். கர்ணன், அர்ஜுனனை வெல்ல முடியும் என்று நம்புகிறான். மனித பலத்தை விட, தெய்வ பலமே உயர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய குலம் அழிகிறது என்று நினைக்கிறேன்’ என்று கூறி வருத்தப்பட்டான்.
சஞ்சயன், ‘காலம் கடந்த சிந்தனை, கவலையைத்தான் தரும். இனி நடப்பதைப் பார்ப்போம்’ என்று கூறி வர்ணனையைத் தொடர்ந்தான்.
பதினேழாவது நாள் யுத்தம் தொடங்குவதற்கு முன், கர்ணன், துரியோதனனை அழைத்துப் பேசலானான். ‘வில்லைக் கையாள்வதிலும், வெகு தூரத்திலிருந்து குறி தவறாமல் அம்பு எய்வதிலும், அர்ஜுனன் எனக்கு நிகராக மாட்டான். இருப்பினும், அர்ஜுனனுடைய தேர் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. அவனுடைய காண்டீபத்தின் நாண் கயிறு தெய்வத்தன்மை கொண்டது. அவனுடைய அம்புறத்தூணிகள் என்றுமே குறையாதது. அவனுக்குத் தேரோட்டுபவரோ, வல்லமை மிக்க கிருஷ்ணர். நம் பக்கத்தில், கிருஷ்ணருக்கு நிகராகத் தேரோட்டும் திறம் படைத்த சல்யன், எனக்குத் தேரோட்டிட சம்மதித்தால், யுத்தத்தில் நமக்கு வெற்றி நிச்சயம்’.
இவ்வாறு கர்ணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட துரியோதனன், சல்யனை அணுகி, ‘மகா வீரனாகிய கர்ணன், அர்ஜுனனை எதிர்த்துப் போர் செய்ய விரும்புகிறான். அவனுக்கு உகந்த தேரோட்டி இல்லாததுதான் இப்போதைய பெரும் குறை. நீரோ, கிருஷ்ணருக்கு நிகராகவும், அதற்கு மேலாகவும் தேரோட்டும் வல்லமை படைத்தவர். போரில், கர்ணனும், தேரோட்டுவதில் நிகரில்லாத நீரும் ஒன்று சேர்ந்தால், எதிரிகளை நாம் நாசம் செய்து விடுவது நிச்சயம். கர்ணனுக்குத் தேரோட்ட நீங்கள் சம்மதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான்.
துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட சல்யனுக்குப் பெரும் கோபம் உண்டாகியது. ‘தாழ்ந்த குலத்தில் பிறந்தவனுக்கு, உயர்குலத்தில் பிறந்தவன் தேரோட்டியாக இருப்பது எவ்வாறு நடக்கும். கர்ணனால் வணங்கத் தக்கவன் நான். அவனுடைய ஏவலுக்கு அடங்கி, என்னால் தேரோட்ட முடியாது’ என்று கூறி, ‘நான் உன்னிடம் விடை பெற்று யுத்த களத்தை விட்டு விலகுகிறேன்’ என்று விலகுவதற்குத் தயாரானான்.
சல்யனின் கோபத்தைக் கண்ட துரியோதனன், அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி, உமக்கு நிகரானவன் கர்ணன் என்று நான் நினைக்கவில்லை. கிருஷ்ணரை விட நீர் மேலானவர் என்பதால், உமது உதவியை நான் நாடுகிறேன்’ என்று பணிவுடன் கேட்டுக் கொண்டவுடன், சல்யன், ‘கிருஷ்ணனைக் காட்டிலும் நான் மேலானவன் என்று நீ உணர்ந்ததால், உன்னுடைய விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று சம்மதித்தான். ‘ஆனால் ஒன்று, கர்ணனுக்கு நான் தேரோட்டினாலும், அவன் சம்பந்தமாக நான் கொடுத்த வாக்குறுதி ஒன்று இருக்கிறது. கர்ணன் எதிரில் அவனைப் பற்றி எனக்குத் தோன்றியதை எல்லாம் நான் பேசுவேன். இதற்குச் ‘சரி’ என்றால், தேரோட்ட நான் சம்மதிக்கிறேன்’ என்று கூறினான். துரியோதனனும் இதற்குச் சம்மதித்தான்.
இந்த விஷயத்தில் என்னுடைய எண்ணத்தையும், ஸ்ரீ கிருஷ்ணரின் விளக்கத்தையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
Comments
Post a Comment