ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 82

மேகலா : யுத்தத்தில் பாண்டியன் கொல்லப்பட்டவுடன், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ‘இந்த யுத்தம் சீக்கிரமாகவே முடிக்கத்தக்கது’ என்று கூறினார் என்று சென்ற பகுதியின் கடைசியில் பார்த்தோம்.
அந்த நேரத்தில், அஸ்வத்தாமா, திருஷ்டத்யும்னனைப் பார்த்து, ‘அநியாயமான முறையில் என் தந்தையைக் கொன்ற உனக்கு, அந்தப் பாவத்திற்கான தண்டனை வழங்கும் நேரம் வந்து விட்டது. வா! என்னை எதிர்த்துப் போர் செய். உன்னை எமனுடைய இல்லத்திற்கு அனுப்புகிறேன்’ என்று கோபத்துடன் கூறினான்.

அஸ்வத்தாமாவின் யுத்த முனைப்பையும், கோபத்தையும் கண்ட கிருஷ்ணர், அஸ்வத்தாமாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள திருஷ்டத்யும்னனால் முடியாது என்பதை உணர்ந்தார். ’திருஷ்டத்யும்னனைக் கொன்று விடுவது என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டு அவனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் அஸ்வத்தாமாவைப் பார். திருஷ்டத்யும்னனைக் காப்பற்றுவதே இப்போது உன் கடமை’ என்று கூறி, ரதத்தை அஸ்வத்தாமா இருக்கும் இடம் நோக்கிச் செலுத்தினார்.

அஸ்வத்தாமாவின் மீது அர்ஜுனன் அம்புமழை பொழிந்தான். அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, சகாதேவன், திருஷ்டத்யும்னனைத் தனது ரதத்தில் அழைத்துச் சென்றான். அஸ்வத்தாமா, அர்ஜுனனின் அஸ்திரங்களைத் தாங்க முடியாமல், தேர்த்தட்டில் அமர்ந்தான். அவன் தேரோட்டி, அங்கிருந்து தேரை நகர்த்திச் சென்றான்.

அர்ஜுனன் ஸம்சப்தர்களை எதிர்ப்பதில் முனைந்தான். வேறு ஒரு புறத்தில் கர்ணன், பாண்டவ சேனையைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். நகுல, சகாதேவர்கள், திரௌபதியின் புதல்வர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கர்ணனை எதிர்ப்பதில் முனைந்தார்கள்.

இந்த நிலையில், கிருஷ்ணர், ‘அர்ஜுனா! துரியோதனன், தருமபுத்திரன் மீதே கண் வைத்து அவரைத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறான். துரியோதனனாலும், கர்ணனாலும் குறி வைக்கப்பட்டிருக்கும் தருமனுடைய உயிர் சந்தேகத்திற்குரியதாகி விட்டது. பாண்டவ சேனையை சிதற அடிக்கும் கர்ணன், நீ எங்கிருக்கிறாய் என்று தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கிறான். இதோ, இப்போது உன் புறமே திரும்புகிறான். துரியோதனனும் அவனைப் பின் தொடர்கிறான். மறுபடியும் அஸ்வத்தாமாவும் உன் பக்கமே படையைத் திருப்புகிறான்’
- என்று கிருஷ்ணர் கூறிக் கொண்டிருந்த வேளையில், பீமனும் இதுவரை செய்த யுத்தத்தைக் காட்டிலும் வீராவேசமாகப் போர் புரிவதைக் கண்ட துரியோதனனே கூட, பீமனிடம் பெரும் அச்சம் கொண்டு தயங்கித் தயங்கிப் போர் புரிகிறான். அதைக் கண்ட கர்ணன், துரியோதனன் பக்கம் விரைகிறான்.

திருஷ்டத்யும்னன், கர்ணனை எதிர்த்தான். சிகண்டி, கர்ணனை எதிர்க்க முடியாமல் விலகினான். துச்சாசனன், திருஷ்டத்யும்னனை எதிர்த்தான். மீண்டும் பீமன் யுத்தத்தில் முனைந்து, பாண்டவர் தரப்புக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போக்கினான்.

துரியோதனன், மீண்டும் எதிர்க்க முனைந்தான். நகுலன், சகாதேவன், திருஷ்டத்யுமனன் ஆகியோர், தருமனைப் பாதுகாக்க, அவருக்கு உதவியாகச் சென்றார்கள். பீமனும், தருமனைப் பாதுகாக்க ஓடி வந்தான். ஆனால், கர்ணன், தனியாக நின்று பாண்டவர்கள் தரப்பு வீரர்கள் எல்லோரையும் தடுத்தான்.

கர்ணனின் பராக்கிரமத்தைத் தாங்க முடியாத தருமன், போர்க்களத்திலிருந்து விலகினார். நகுலன், சகாதேவன் ஆகியோரைக் கர்ணன் துன்புறுத்தத் தொடங்கினான். சல்யன், கர்ணனைப் பார்த்து, ‘கர்ணா! அர்ஜுனனை எதிர்ப்பதுதானே உன்னுடைய சபதம். அதை விடுத்து, தருமன், நகுலன் ஆகியோருடன் இவ்வளவு முனைந்து போர் செய்யக் காரணம் என்ன? உன் கவசங்களை இழந்து, உன் குதிரைகளையும் இழந்து, உன் பாணங்களும் குறைந்து, நீ பலவீனப்பட்டு விட்டால், அந்த நிலையில் அர்ஜுனனை எதிர்த்து, அவமானத்திற்கு உள்ளாகப் போகிறாயா?’ என்று சல்யனால் தூண்டப்பட்ட கர்ணன், நகுல, சகாதேவர்களையும், தருமனையும் தாக்குவதை நிறுத்தி, துரியோதனன் இருக்குமிடம் நோக்கித் தேரைச் செலுத்துமாறு சல்யனிடம் கூறினான். தருமன் அங்கிருந்து விலகி, பாசறையை நோக்கிச் சென்றான்.

துரியோதனன், கர்ணனை உற்சாகப்படுத்தி, மேலும் முனைப்புடன் போர் செய்ய தயார்ப்படுத்தினான். கர்ணன், ‘இந்த யுத்தத்தில் பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் அனைவரையும் அழித்து விடுகிறேன்’ என்று சொல்லி, பரசுராமரால் தனக்கு அளிக்கப்பட்ட ‘பார்க்கவ அஸ்திரத்தை’ ஏவினான்.
அந்த அஸ்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான அம்புகள் புறப்பட்டன. அந்த அம்புக் கூட்டத்தினால் பாண்டவர் படையே மூடப்பட்டு விட்டது. அதனால் துன்புறுத்தப்பட்ட பாண்டவர் படைகள் நாற்புறங்களிலும் சிதறி ஓடினார்கள்.
கர்ணனால் விளைவிக்கப்பட்ட நாசங்களைக் கண்ட அர்ஜுனன், ‘கர்ணன் ஏவியிருப்பது ‘பார்க்கவ அஸ்திரம்’. இதை எதிர்ப்பதும், மரணத்தை நாமே அழைப்பதும் ஒன்றுதான். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்று கிருஷ்ணரிடம் கேட்டான்.

கிருஷ்ணரோ, ‘கர்ணன் மேலும் களைப்படையட்டும்; அதன் பிறகு அவனை எதிர்க்கலாம். இப்போது, தருமன் மிகவும் காயப்பட்டு யுத்தத்திலிருந்து விலகியிருக்கிறான். அவனைச் சென்று பார்க்கலாம்’ என்று கூறினார்.
கர்ணனை எதிர்ப்பதில் பீமனை நிறுத்தி விட்டு, அர்ஜுனனும், கிருஷ்ணரும் தருமனைத் தேடி பாசறைக்கு வந்தனர். தருமனைப் பார்த்ததும், இருவரும் அவனை வணங்கினார்கள்.

இப்படி இவர்கள் நடந்து கொண்டதைப் பார்த்து, தருமன் மனதில், ‘அர்ஜுனன், கர்ணனைக் கொன்று விட்டான்’ என்ற எண்ணம் தோன்றியது. கர்ணன் மாண்டான் என்று நினைத்து, அவர்கள் இருவரையும் போற்றத் தொடங்கினான். ‘மாபெரும் வீரனாகிய கர்ணனை யுத்தத்தில் எதிர்த்து வீழ்த்திக் கொன்றும் கூட, உடலில் ஒரு காயமும் இல்லாமல் நல்ல நிலையில் நீங்கள் திரும்பியிருக்கிறீர்கள்’ என்று மனதாரப் பாராட்டினான்.

மேகலா : ஐயோ, கிருஷ்ணா.....! இவன் அவனைக் கொன்றான்; அவன் இவனை எதிர்த்தான்.... அடுத்தடுத்து, போரும் ஓயவில்லை; போர் வீரர்களும் ஓயவில்லை.... ரத்தம் பெருக்கெடுத்தது..... ரத்தம் வெள்ளமாய் ஓடியது.... ஐயோ... எப்படித்தான் இதை நீ சகித்தாயோ....?

கிருஷ்ணர் : யுத்தம் செய்துதான் உரிமையைப் பெற வேண்டும் என்று வந்து விட்டது. யுத்தத்தைப் பார்த்து, சகிக்க முடியவில்லை என்றால் முடியுமா....? அதற்குத்தான் சான்றோர்களும், பெரியோர்களும், தலைதலையாய் அடித்துக் கொண்டார்கள்....’வேண்டாமடா..... சொன்னால் கேளு.... இழப்பு யாருக்கென்றாலும், சாவு என்பது போர் புரியும் வீரனுக்குத்தான்’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லியும் கேட்கவில்லை. இன்னும் துரியோதனன் மரணத்தை எய்தும் போது பார்...., இன்னும் அலுத்துக் கொள்வாய். கடைசி வரை அவனும் மாற மாட்டான். கடைசி நாள் நெருங்கும் போது, இவர்களுக்குள்ளும் ‘வன்மம்’ பெருகி விடும். சரி...., கதையை மேலே சொல்லு....

(அடுத்து, ‘தருமனின் பொறுமையின்மையும், அர்ஜுனனின் கோபமும்’ என்ற தலைப்போடு, அடுத்த பகுதியை ஆரம்பிக்கிறேன்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1