ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 83

தருமனின் பொறுமையின்மையும், அர்ஜுனனின் கோபமும்

மேகலா : கர்ணன் மாண்டான் என்று நினைத்து, அர்ஜுனனைப் போற்றிப் பேசிய தருமன், அர்ஜுனனிடம், ‘கர்ணனை சகித்துக் கொள்ளும் சக்தி எனக்கில்லை. யுத்தத்தில் இந்திரனை நிகர்த்தவன்; உக்கிரத்தில் எமனுக்கு நிகரானவன்; அஸ்திர வித்தையில் பரசுராமருக்கு ஒப்பானவன் என்று எல்லோராலும் போற்றப்படுகிற அந்தக் கர்ணனை நீ எவ்வாறு நாசம் செய்தாய்? அதை எனக்கு விவரித்துச் சொல்’

பொறுமையின்றி தருமன் வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்த பிறகு, அர்ஜுனன், ‘போர்க்களத்தில் நமது சேனை வீரர்கள், கர்ணனின் வீரத்தைக் கண்டு அச்சமடைந்திருக்கிறார்கள். அவர்கள் அச்சத்தைக் கண்டு, உமக்கு ஏதோ ஆபத்து நேரிட்டு விட்டது என்று நான் கவலையுற்றேன். ஆனால், இப்போது நீங்கள் நலமுடன் இருப்பதை இங்கே பார்த்து விட்டேன். மீண்டும் யுத்தத்தில் முனைவேன். இப்போது நடக்கப் போகும் யுத்தத்தில் நான் கர்ணனைக் கொல்வேன்’ என்று சபதம் செய்தான்.

இப்படி அர்ஜுனன் கூறியவுடன், கர்ணன் இறக்கவில்லை என்பதை அறிந்து, தருமபுத்திரர், அர்ஜுனன் மீது பெரும் கோபம் கொண்டார். ‘அர்ஜுனா! கர்ணனை எதிர்த்துப் போர் புரிய உனக்கு சாமர்த்தியம் கிடையாது என்று நீ முன்பே ஒப்புக் கொண்டிருந்தாயானால், நாங்கள் அதற்கேற்றவாறு காரியங்களைச் செய்திருப்போம். நீ பிறந்த ஏழாவது நாளில், ஆகாயத்தில் ஒரு அசரீரி தோன்றியது. ’இந்திரனுக்குக் குந்தியிடம் பிறந்த இந்த அர்ஜுனன், எல்லா யுத்தங்களிலும் வெற்றி அடையப் போகிறான்’ என்று கூறியது. அந்த அசரீரியின் வாக்கை நீ இப்போது வீணாகச் செய்து விட்டாய்.

’கர்ணனை யுத்தத்தில் எதிர்க்கும் வல்லமை அர்ஜுனனுக்குக் கிடையாது என்று துரியோதனன் பல முறை கூறிய போது, அதை நான் ஏற்க மறுத்தேன். அது என் மடமை.

‘எந்த பீமனால் நான் யுத்தத்தில் காப்பாற்றப்பட்டேனோ, அவன் ஒருவனே இப்போது எனக்குத் துணை.

‘உனக்குத் தங்கத்தாலான பிடியைக் கொண்ட கத்தி எதற்காக? ‘காண்டீபம்’ என்ற வில் உனக்கு ஏன்? பேசாமல் காண்டீபத்தை கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு, அவருக்கு நீ தேரோட்டுவாயாக..... அர்ஜுனா! நீ பிறக்காமலேயே இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்’.
இவ்வாறு தருமன் பேசியதைக் கேட்ட அர்ஜுனன், பெரும் கோபம் கொண்டு, தன் கத்தியை உறையிலிருந்து வெளியே எடுத்தான். அவன் எண்ணத்தை அறிந்து கொண்ட கிருஷ்ணர், அவனைத் தடுத்து, ‘அர்ஜுனா! எதற்காக இந்தக் கத்தியை எடுக்கிறாய்? நீ செய்ய விரும்பிய காரியம் என்ன......?’ என்று கேட்டார்.

பாம்பு போல சீறிக் கொண்டே அர்ஜுனன் சொன்னான், ‘எவன் ஒருவன் என்னைப் பார்த்து, காண்டீபத்தை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறானோ, அவன் தலையை நான் பிளப்பேன் என்பது எனக்கு நானே செய்து கொண்டுள்ள சபதம். தருமன் காண்டீபத்தை வேறு ஒருவரிடம் கொடு என்று கூறியதால், அவரைக் கொன்று என்னுடைய விரதத்தை நான் காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன்’ என்ற அர்ஜுனனின் கோபத்தைக் கண்டு திகைத்த கிருஷ்ணர், உன்னுடைய அண்ணனாகிய தருமன் விஷயத்தில் செய்ய முனைந்த காரியத்தை, தர்மம் அறிந்த எவனும் செய்ய மாட்டான். யுத்தத்தில் கூட, யுத்தம் செய்யாதவனையும், புறங்காட்டி ஓடுகின்றவனையும், சரணடைந்து விட்டவனையும், அஜாக்கிரதையாக இருப்பவனையும் வீழ்த்தக் கூடாது என்று சாத்திரங்கள் சொல்கின்றன. எப்பொழுதோ நீ ஒரு சபதம் செய்ததாகக் கூறி, இப்பொழுது உன் அண்ணனையே கொல்ல முயல்கிறாயே; இந்த மூர்க்கத்தன்மையை நீ எங்கிருந்து பெற்றாய்?

‘சத்யம், விரதம் என்றெல்லாம் பேசுகிறாயே, உயிர்களைக் கொல்வது எவ்வளவு பாவம் என்பதை நீ உணரவில்லையா? பொய் கூட சில சமயங்களில் சொல்லத்தக்கதாகலாம். எந்த இடத்தில், ஒரு பொய்யே கூட, உண்மையின் பயனைத் தருமோ, அப்பொழுது அந்த இடத்தில் பொய்யே மேலானது. எப்போது ஓர் சந்தர்ப்பத்தில், மெய்யானது, பொய்யின் விளைவைத் தந்து விடுமோ, அந்த இடத்தில் மெய் சொல்லத்தகாததே. இதை நீ சுலபமாக அறிந்து கொள்ள, ‘பலாகன்’ என்ற வேடனின் கதையையும், ‘கௌசிகன்’ என்ற தபஸ்வியின் சரித்திரத்தையும் என்னிடம் கேள்’ என்று அக்கதையை அர்ஜுனனுக்குக் கூறலானார்.

பலாகன் என்ற வேடன், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மிருகங்களைக் கொன்று கொண்டிருந்தான். ஒரு சமயம், இதற்கு முன் பார்த்திராத ஒரு மிருகத்தை அவன் கண்டான். உடனே அதைக் கொன்று விட்டான். கண்ணில்லாத அந்த மிருகம், பலாகனால் கொல்லப்பட்டவுடன், வானத்திலிருந்து பலாகன் மீது பூமாரி பொழிந்தது. கண்ணில்லாத மிருகத்தைக் கொல்வது பாவமான செயல் என்றாலும், பலாகன் திவ்ய போகங்களைப் பெற்றான். அதற்கு என்ன காரணம்? அந்த மிருகம் தன்னுடைய வலிமை காரணமாக, தான் பெற்ற சக்தியின் காரணமாக, எல்லா மிருகங்களையும் கொன்று தீர்த்துக் கொண்டிருந்தது. அந்தச் செய்கையால், பல மிருகங்களைக் காப்பாற்றியவனாகிறான். கண்ணில்லாத மிருகத்தைக் கொன்ற பாவம் அவனைச் சேரவில்லை.

கௌசிகன் என்ற  தபஸ்வி, எப்போதும் சத்தியத்தையே உரைக்க வேண்டும் என்று விரதம் பூண்டவர். ஒரு நாள், அவர் தவம் புரிந்து வந்த காட்டில், அப்பாவி மக்கள் சிலர், திருடர்களால் துரத்தப்பட்டு ஓடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்தக் காட்டில் புகுந்து ஒளிந்து கொண்ட பிறகு, அவர்களைத் துரத்தி வந்த திருடர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள், கௌசிகனைப் பார்த்து, ‘முனிவரே, இங்கே ஓடி வந்த மக்கள், இந்தக் காட்டில் நுழைந்தார்களா, இல்லையா?’ என்று கேட்டனர். உண்மையே பேசுவது என்று விரதம் மேற்கொண்ட கௌசிகனும், அந்த மக்கள் காட்டிற்குள் நுழைந்ததையும், ஒளிந்து கொண்டதையும் கூறி விட்டார். திருடர்கள், அந்த அப்பாவி மக்களைப் பிடித்துத் துன்புறுத்திக் கொன்றும் விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் காரணமாக, கௌசிகனுக்குப் பெரும் பாவம் சேர்ந்தது.

சிக்கல் நிறைந்த தர்மத்தின் பாதையை விளக்குவதற்காக இரு வேறு நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டிய கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார்.

மேகலா : ஏன் கிருஷ்ணா! தருமன் அவசரப்பட்டு, நிதானம் இல்லாமல், அர்ஜுனனை, ‘நீ குந்தியின் கர்ப்பத்திலேயே கலைந்து போயிருக்கலாம்’ என்று சொன்னானே....; அது தப்பு தானே. யாருக்கும் இதைக் கேட்டால், கோபம் வரத்தானே செய்யும்....?

கிருஷ்ணர் : கோபம் வரட்டும்...... அதற்காக, அண்ணனைக் கொல்வதற்காக கத்தியை உருவுவானா....? அண்ணன் தம்பிக்குள் பிரிவு வர வேண்டும் என்பதுதானே துரியோதனனின் விருப்பம். அதற்கு நாம் இடம் கொடுக்கலாமா....?

மேகலா : அர்ஜுனனும், நீ கதை சொல்ல ஆரம்பித்தவுடன், அடங்கி விடுகிறானே.....

கிருஷ்ணர் : அதனால் தான், அவனுடன் தொடர்ந்து நண்பனாக இருக்க முடிகிறது. சரி.... கதையை மேலே சொல்லு.....

(அடுத்து, ‘சண்டையும், சமாதானமும்’ என்ற தலைப்போடு அடுத்த பகுதி ஆரம்பமாகும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1