ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 85

மேகலா : தருமபுத்திரனைச் சமாதானம் அடையச் செய்ய, ஸ்ரீ கிருஷ்ணர் பெரும் முயற்சி எடுக்கிறார். தருமபுத்திரனிடம் அவர் மேலும் கூறுகிறார், ‘யுதிஷ்டிரா! காண்டீபத்தை வேறு ஒருவரிடம் கொடுக்கச் சொல்லி யாராவது அர்ஜுனனிடம் பேசினால், அவர்களைக் கொல்ல வேண்டும் என்பது அர்ஜுனனுடைய சபதம். அதனால் தான் நீர் அப்படிப் பேசியவுடன், உம்மைக் கொல்லவும் அர்ஜுனன் துணிந்தான். அதே சமயத்தில், நீர் உயிர் துறந்தால், அர்ஜுனன் உயிர் வாழ மாட்டான். ஆகையால், நான் தான் இந்த உபாயத்தை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நான் சொல்லிக் கொடுத்துத்தான், அவன் உம்மைப் பார்த்து, சுடுசொற்களைப் பேசி, உமக்கு அவமானம் இழைத்தான். பெரியோருக்கு, அவமானமே உயிர் இழப்பு என்று சொல்லப்படுகிறது. அதனால், அர்ஜுனனின் சபதம் காப்பாற்றப்படுகிறது.

உங்களை இழிவாகப் பேசியதால் உயிரிழக்க விரும்பிய அர்ஜுனனுக்கு, தற்புகழ்ச்சியே உயிரிழப்புக்குச் சமானம் என்று சொல்லிக் கொடுத்தவனும் நான் தான். அதனால், அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டான். நாங்கள் செய்த இந்தக் காரியத்தைப் பொறுத்துக் கொண்டு, எங்களை மன்னிக்க வேண்டும். நாம் யுத்தத்தில் மீண்டும் முனைவோம். கர்ணனின் ரத்தத்தால், யுத்த பூமி நனையப் போகிறது’.

இப்படிக் கிருஷ்ணர் கூறிய போது, யுதிஷ்டிரன் சமாதானமடைந்தான். ‘ஆபத்திலிருந்து என்னைக் கரையேற்றியிருக்கிறீர்கள். எங்களுடைய துக்கம் என்ற கடலை, உங்களுடைய அறிவு என்கிற ஓடத்தினால் நாங்கள் கடக்கிறோம்’ என்று கூறி தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான்.
இதன் பிறகும் கூட, அர்ஜுனன் சோகமாகக் காட்சியளித்தான். அவனைப் பார்த்து, கிருஷ்ணர், ‘அவரைக் கடுமையாகப் பேசியதற்கே இவ்வளவு துன்பப்படுகிறாயே, அவரைக் கொன்றிருந்தாயானால், என்ன கதியை அடைந்திருப்பாய்? தருமனிடம் மீண்டும் வேண்டி, அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள். அதன் பிறகு, கர்ணனை அழிப்பதில் முனைவாயாக’ என்று கூறினார்.

அர்ஜுனனும், தருமனின் பாதங்களில் விழுந்து வணங்கினான். தருமனும் அவனைத் தூக்கி நிறுத்தி, அவனை இறுகத் தழுவிக் கொண்டான்.
அர்ஜுனன், ‘உம் மீது ஆணை; என் சகோதரர்களின் மீது ஆணை; இந்த ஆயுதங்களின் மீது ஆணை - நான் கர்ணனைக் கொல்வேன். அல்லது அவனால் கொல்லப்பட்டு, யுத்த களத்தில் வீழ்வேன்’ என்று சபதமிட்டான்.
தருமன், ‘ஈடு இணையற்ற வீரனே! அர்ஜுனா! பெரும் வெற்றிகளைப் பெறுவாயாக’ என்று வாழ்த்தினார்.

மேகலா : அர்ஜுனனுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு, குழலூதும் உன் மந்திர வாயால், நீ இசைக்கும் இசையோ, மனதை மயக்கும் என்றால், கிருஷ்ணா, நீ பேசினால், அர்ஜுனன் வாலைச் சுருட்டிக் கொண்டு கட்டுப்படுவான் போலயே... அதை எழுதும் எனக்கே, இத்தனை குஷி வருகிறதே...., அன்று அர்ஜுனன் குஷி வந்து, நெசம்மா.... தருமனை சவட்டி எடுத்து விட்டான்.... இந்தத் தருமனைப் பார்த்தாயா, கிருஷ்ணா! அர்ஜுனனைத் தூண்டி விடுகிறேன் பேர்வழி என்று ரொம்ப அக்கிரமமாகப் பேசுகிறாரே.....

கிருஷ்ணர் : மெல்லத்தான் ஆரம்பிச்சார்...... கொஞ்சம் over dose ஆயிருச்சி. அது.... காண்டீபத்தைத் தூக்கி கிருஷ்ணர் கிட்ட கொடுத்து, ’நீ தேரோட்டு’ என்பது வரைக்கும் போயிருச்சா...... அர்ஜுனனுக்கு இதைக் கேட்டதும், ‘கன்னா பின்னா’வென்று கோபம் வந்து விட்டது....

மேகலா : இத்தனை கோபமும், அதன் வெளிப்பாடும் நடந்து கொண்டிருக்கும் போது, ஓர் உண்மையும் கிருஷ்ணரால் எடுத்து வைக்கப்படுகிறதே..... அவமானப்படுதலும், தற்புகழ்ச்சியாகப் பேசுதலும், ஒரு மனிதனுக்கு உயிரிழப்புக்குச் சமம் என்று கூறி, இந்தச் சம்பவத்தையே, உயிருள்ளதாக ஆக்கியிருக்கிறார். அர்ஜுனனை, உனக்குக் கீழ்படிபவனாய், சரணடைந்தவனாய், பெருந்தன்மை உடையவனாய், தர்மம் தெரிந்தவனாய், நல்ல மனிதனுக்கு அடையாளமாய்க் காட்டியிருக்கிறாய். எனக்கு இந்த அத்தியாயத்தை முடிக்கவே மனமில்லை, கிருஷ்ணா.....! நெருக்கடியான நேரம் கூட, கிருஷ்ணர் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால், அதைச் சந்திப்பது சுகமான நிகழ்வாகும் போலயே....

கிருஷ்ணர் : அப்படியா.... நெருக்கடியைக் கொடுக்கவா....? நெருக்கத்தைக் கொடுக்கவா....?

மேகலா : ஐயோ..... கிருஷ்ணா..... இது....இது....இது போதும், கிருஷ்ணா....
கிருஷ்ணர் : சரி..... மேலே கதையைச் சொல்லு.... யுத்த களத்திற்குப் போகலாம்...

பீமனின் கோரத் தாண்டவம்

மேகலா : யுதிஷ்டிரனின் வாழ்த்துக்களுடன், அர்ஜுனன் யுத்த களம் திரும்பினான். அப்பொழுது தோன்றிய சகுனங்கள், ‘அர்ஜுனனே வெற்றி பெறப் போகிறான்’ என்பதை உறுதி செய்தன. இருந்தாலும், அர்ஜுனன், ’கர்ணனை வீழ்த்துவது கடினமான காரியமாயிற்றே’ என்று யோசிக்கத் தொடங்கினான்.

அர்ஜுனனின் மனக்கவலையை உணர்ந்த கிருஷ்ணர், அவனுக்குத் தைரியமூட்டினார். ‘உன்னை வெல்பவன் இந்த உலகத்தில் கிடையாது. கர்ணன், உனக்கு நிகரான வீரனாகவும், ஏன் உன்னை விடச் சிறந்தவனாகவும் கூட இருக்கலாம். இருந்தாலும், அவனைக் கொல்லக் கூடியவன் நீ ஒருவனே. எவனுமே தனக்கு நிகரில்லை என்று கர்வம் கொண்ட கர்ணனை நீ இப்போது கொன்று விடு. எவனைத் தன் அரணாக துரியோதனனும், எவனுடைய வீரத்தால் உன்னுடைய வீரத்தையும் திருதராஷ்டிரன் குறைவாக மதிப்பிடுகிறானோ, அந்தக் கர்ணனை இப்போது கொன்று விடு. பிரம்மனால் படைக்கப்பட்ட ‘காண்டீபத்தைக்’ கையில் ஏந்திய உன்னை எதிர்க்க எவனுமில்லை. கர்ணனைக் கொன்று, தருமனுக்கு மனமகிழ்ச்சியைக் கொடு’.

இவ்வாறு அர்ஜுனனுக்கு ஊக்கமளித்த கிருஷ்ணர், கர்ணன் மீது அர்ஜுனனுக்குக் கோபம் வரக்கூடிய சில சம்பவங்களையும் அவனுக்கு நினைவூட்டினார்.

’அரக்கு மாளிகையில் உங்கள் அனைவரையும் எரித்து விட, துரியோதனன் செய்த முயற்சிக்கும், சூதாட்டத்தில் உங்களை ஈடுபடுத்தியதற்கும், இந்தக் கர்ணனே காரணம். உன் மகன் அபிமன்யுவைக் கொன்றவர்கள், கொன்ற விதத்தை எண்ணினால், என் உடல் பற்றி எரிகிறது. துரோணர் கூறிய உபாயத்தைக் கேட்டு, அபிமன்யுவின் வில்லை அறுத்தவன் கர்ணன் தான் என்பதை நினைவில் நிறுத்து. கௌரவர் சபையில், திரௌபதியைப் பார்த்து, கர்ணன் பேசிய வார்த்தைகளை நினைவில் நிறுத்து. ‘நீ வேலைக்காரி’ அடிமைகளின் மனைவி; அதனால் அவர்களை விட்டு வேறு ஒருவனை அடைவாயாக’ என்று பேசிய கொடூரமான வார்த்தைகளை உன் நினைவில் நிறுத்து. உன்னுடைய வீரத்தை இந்த யுத்த களம் இப்போது பார்க்கட்டும்’.

இவ்வாறு கிருஷ்ணர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அர்ஜுனன், மனக்கவலை நீங்கி, ஊக்கம் எய்தியவனாகப் பேசினான். ‘உம்முடைய துணை எனக்கிருக்கும் போது, மூவுலகங்களையும் வெல்வேன்; கர்ணன் எம்மாத்திரம்?” என்று கூறி, போரில் முனைந்தான்.

கர்ணனுடைய படைகளும், அர்ஜுனனின் படைகளும் மோதின. வேறொரு புறத்தில், பீமனிடம் சிக்கித் துரியோதனனுடைய படை அழிந்து கொண்டிருந்தது. பீமன் போரிட்ட திசையிலேயே, அர்ஜுனனுடைய தேரை கிருஷ்ணர் செலுத்தினார். அர்ஜுனனை எதிர்த்து வந்த கௌரவர் படையினரை, அர்ஜுனன் சிதறடித்தான்.

துரியோதனன், தன்னுடைய வீரர்களைப் பார்த்து, பீமனைக் கொல்வதிலேயே பணித்தான். அவனை எதிர்த்து வந்த படையையும், சகுனியையும் சிதற அடித்தான் பீமன்; சகுனி போரை விட்டு விலகினான். அர்ஜுனனும், பீமனும், கௌரவர் படையை இன்றே அழித்து விடுவது போல, உக்கிரமாகப் போர் புரிந்தார்கள்.

மேலும் யுத்த களத்தில் நடந்த நிகழ்வுகளோடு, அடுத்த பகுதியில் பார்ப்போம்....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2