ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 86

மேகலா : நாம் இப்போது யுத்த களத்தில் இருக்கிறோம். மேலும் அங்கு நடந்த நிகழ்வுகளைக் காணலாம்.

அர்ஜுனனும், பீமனும், கௌரவர் படையை இன்றே அழித்து விடுவது போல உக்கிரமாகப் போர் புரிந்ததைப் பார்த்த கர்ணன், பாண்டவர் படையை அழிக்கத் தொடங்கினான். பீமன், சிகண்டி, திருஷ்டத்யும்னன், நகுல-சகாதேவர்கள், கர்ணனைச் சூழ்ந்து கொண்டார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் திரௌபதியின் மகன்களை தேர்களை இழந்தவர்களாக்கி, பீமனையும் துன்புறுத்தினான்.

மிச்சமிருந்த வீரர்கள் பதறி ஓடினார்கள். கர்ணனின் வெற்றியைக் கண்ட துரியோதனன், மிக்க மகிழ்ச்சி அடைந்து, வாத்தியங்களை ஒலிக்கச் செய்தான். அதனால் உற்சாகமடைந்த கிருதவர்மா, கிருபர், சகுனி முதலானோர், ஆயிரக்கணக்கில் பாண்டவர்களைக் கொன்றார்கள்.
அச்சமயத்தில் வேறு ஒரு புறத்தில் யுத்தம் செய்து கொண்டிருந்த அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்து, ‘கர்ணனால் நமது படைவீரர்கள் பயந்து ஓடுகிறார்கள். சந்தோஷத்தில் துரியோதனன் முகம் ஒளி வீசுகிறது. இச்சமயத்தில், கர்ணன் இருக்கும் இடத்திற்கு என் தேரைச் செலுத்துங்கள். கர்ணனைக் கொல்லும் நேரம் வந்து விட்டது. இப்போது அவனைக் கொல்லாவிட்டால், நமது படையில் யாரும் மிஞ்ச மாட்டார்கள்’.

இவ்வாறு அர்ஜுனன் கூற, கிருஷ்ணரும், கர்ணன் இருக்கும் திசையில் தேரை ஓட்டினார். தேர் வருவதைக் கண்ட சல்யன், கர்ணனுக்கு உற்சாகமூட்டினான். ‘கர்ணா! யாரை எதிர்க்க வேண்டும் என்று நீ துடித்துக் கொண்டிருந்தாயோ, அந்த அர்ஜுனன் உன்னை நோக்கி வருகிறான். அர்ஜுனனின் கண்கள் கோபத்தினால் ஜொலிக்கின்றன. பெரும் கோபம் கொண்ட அர்ஜுனனை உன்னால் மட்டுமே தடுக்க முடியும். அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் எதிர்த்துப் போரிட்டு, அழியாத கீர்த்தியைப் பெறுவாயாக’.

சல்யனால் உற்சாகப்படுத்தப்பட்ட கர்ணன், ‘கிருஷ்ணரையும், அர்ஜுனனையும் எதிர்த்துப் போரிடும் வாய்ப்புப் பெற்றதால், என் பிறப்பு மேன்மையானது என்று அறிகிறேன். கர்ணன், ’கிருஷ்ணர், அர்ஜுனன்’ இருவரையும் கொன்றான் என்றோ, அல்லது, ’கிருஷ்ணர், அர்ஜுனன்’ இருவரும் சேர்ந்து, கர்ணனைக் கொன்றார்கள் என்றோ, வரும் காலம் அறியட்டும்’ என்று உறுதியுடன் கூறினான்.

கர்ணன், அர்ஜுனனை எதிர்த்துச் செல்வதைக் கண்ட துரியோதனன், ’அர்ஜுனனைத் தாக்கி, அவனைக் களைப்படையுமாறு செய்யுங்கள்’ என்று சகுனி, அஸ்வத்தாமா முதலியோருக்கு உத்தரவிட்டான். எதிர்த்து வந்த படைகளை அர்ஜுனன் கொன்று குவித்தான். அதே நேரத்தில் கர்ணன், பீமனைத் துன்புறுத்தினான். அதைப் பார்த்த அர்ஜுனன், கர்ணன் படையை சிதறடித்தான்.

அதனால் உற்சாகமடைந்த பீமன், பெரும் போர் தொடுத்தான். அப்போது, துச்சாசனன், பீமனை எதிர்ப்பதில் முனைந்தான். மதம் கொண்ட இரு யானைகள் மோதுவது போன்ற ஒரு தோற்றம் அங்கே ஏற்பட்டது. பீமன், துச்சாசனனைப் பார்த்து, கோபமுடன் சொன்னான், ‘திரௌபதிக்கு நீ இழைத்த அவமானத்திற்கு உரிய தண்டனையை இப்போது பெற்றுக் கொள்ளப் போகிறாய்’. இவ்வாறு கூறிய பீமனைப் பார்த்து, துச்சாசனன், சிறிதும் அச்சமில்லாமல், ‘பீமனே! இன்னும் சில விஷயங்களையும் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். அரக்கு மாளிகையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நானே காரணம். அங்கிருந்து தப்பி நீங்கள், காடுகளிலும், மலைகளிலும் வாழ நேர்ந்தது என்னால்தான்’ என்று பேசி, வேண்டுமென்றே பீமனுக்குக் கோபமூட்டினான்.

ஆரம்பத்தில், பீமனின் கை தாழ்ந்தாலும், போகப் போக பீமன் உக்கிரமாகப் போர் புரிந்து, இறுதிக் கட்டத்தில் துச்சாசனனைக் கீழே தள்ளி, அவனது கழுத்தைக் காலால் மிதித்த வண்ணம், அவனைப் பார்த்து, ‘திரௌபதியினுடைய கூந்தலை உன்னுடைய எந்தக் கை இழுத்தது, சொல்! பீமன் கேட்கிறான், பதில் சொல்’ என்று கத்தினான்.

அந்த நிலையிலும், அச்சம் கொள்ளாத துச்சாசனன், தன் கையைத் தூக்கிக் காட்டி, ‘அந்தப் பெருமைக்குரிய கை இதுதான்’ என்றான். துச்சாசனனின் கர்வம் நிறைந்த சொற்களைக் கேட்ட பீமன், வெறி பிடித்துப் போய், அவன் கையை ஒடித்தான். பிறகு அவனை மிதித்தே கொன்றான். அதன் பின் பூமியில் வீழ்ந்து கிடந்த துச்சாசனனின் மார்பைப் பிளந்து, அவனுடைய ரத்தத்தைக் குடிக்கத் தொடங்கினான்.

‘தேனை விட, கருப்பஞ்சாறை விடச் சுவையானது, இந்தக் கொடியவனின் ரத்தம்’ என்று தோள்களைத் தட்டிக் கொண்டு, கூத்தாடினான். பீமனைப் பார்த்தவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். பல வீரர்கள் இந்தக் காட்சியைக் காண முடியாமல், கண்ணை மூடிக் கொண்டு ஓடினார்கள்; அலறினார்கள். ‘இவன் மனிதனே அல்ல’ என்று அந்த இடத்தை விட்டு விலகினார்கள்.

’துச்சாசனனின் ரத்தத்தைக் குடிப்பேன்’ என்ற சபதத்தை நிறைவேற்றிய மகிழ்ச்சியில், குரோதமே உருவாக நின்ற பீமனைப் பார்த்து, கர்ணனுக்கே அச்சம் தோன்றி விட்டது.

கர்ணனின் முகத்தைப் பார்த்த சல்யன், ‘யுத்த களத்தில் மனக் கவலை அடைவதும், அச்சம் கொள்வதும், உன்னைப் போன்ற வீரனுக்குப் பொருந்தாத செயல். அர்ஜுனனை வெல்லும் முழுப் பொறுப்பும் உன்னிடமே துரியோதனன் ஒப்படைத்திருக்கிறான். அர்ஜுனனை எதிர்த்து வென்றால், உனக்கு மிகப் பெரிய புகழ் உண்டாகும்’ என்ற சல்யனின் வார்த்தையைக் கேட்டு, உள்ளச் சோர்வு நீங்கிய கர்ணன், மீண்டும் மன உறுதி அடைந்தான். அப்போது, கர்ணனின் மகன் வ்ருஷசேனன், பீமனை எதிர்த்தான். அவனை நகுலன் தடுத்தான். நகுலன், கர்ணனின் மகனிடம் சிக்கித் துன்புற்றான். அங்கு அர்ஜுனன், வ்ருஷசேனனுடன் யுத்தம் புரிந்தான். வ்ருஷசேனன், இயற்கைக்கு அப்பாற்பட்டவனாக யுத்தம் புரிந்தான். அர்ஜுனனை எதிர்த்து அலட்சியமாகப் போர் புரிந்த வ்ருஷசேனனை இறுதியில் அர்ஜுனன் வீழ்த்திக் கொன்றான்.

தன்னுடைய மகன் அர்ஜுனனால் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், பெரும் கோபம் கொண்டான். அர்ஜுனனைக் கொன்று விடுவது என்ற உறுதியான எண்ணத்துடன், கர்ணன் போருக்கு ஆயத்தமானான். கௌரவர் படையினர் வாத்தியங்களை முழக்கினார்கள்; சங்குகளை ஒலித்தார்கள்.
அதே போல, பாண்டவர் தரப்பிலும், வாத்திய கோஷங்கள் எழுப்பப்பட்டன. கௌரவர் தரப்பில் முக்கியமானவர்கள் எல்லாம் கர்ணனுக்கு உதவியாக, அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அதே போல பாண்டவர் தரப்பில் முதன்மையானவர்கள், அர்ஜுனனுக்குப் பாதுகாப்பாக அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இரண்டு தரப்பு வீரர்களும், ஒருவரையொருவர் வீழ்த்தி விடும் மன உறுதியுடன் எதிர்த்து நிற்க, ‘இருவரில் சிறந்தவர் யார்’ என்ற விவாதம், யுத்தத்தைக் கண்டு கொண்டிருந்த தேவர்களிடையே கூட உண்டாயிற்று.

மேகலா : கிருஷ்ணா! பீமன், துச்சாசனனைக் கொன்ற விதம், கோரமாக இருந்தாலும், ‘நல்லாக் கொல்லணும்’ என்றுதான் தோன்றுகிறது.

கிருஷ்ணர் : அவன் செய்த அட்டூழியம் அப்படிப்பட்டது, மேகலா!

மேகலா : ஆனாலும், துச்சாசனனின் ரத்தத்தை பீமன் குடிக்கும் போது, ‘இவன் மனிதனே அல்ல’ என்று படை வீரர்கள் பயந்து ஓடும் போது, நமக்கும் பயமாக இருக்கிறது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : இதற்கே இப்படிப் பயப்படுகிறாயே...., துரியோதனனின் முடிவைப் பார். சரி...., கதையை மேலே சொல்லு....

’அர்ஜுனனைக் கிருஷ்ணர் காப்பாற்றினார்’ என்ற தலைப்போடு அடுத்த பகுதி ஆரம்பமாகும்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2