ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 87
அர்ஜுனனைக் கிருஷ்ணர் காப்பாற்றினார்
அப்பொழுது, இந்திரன், பிரம்மதேவனிடம், ‘அர்ஜுனனே வெற்றி பெற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டான். பிரம்ம தேவனும், பரமசிவனாரும், அர்ஜுனனே வெற்றி பெற வாழ்த்தினர்.
படை வீரர்களால் அணிவகுக்கப்பட்ட கர்ணன், சல்யனைப் பார்த்து, ‘சல்ய மன்னனே! ஒருகால் நான் அர்ஜுனனிடம் தோல்வி அடைந்து, கொல்லப்பட்டு இந்தப் பூமியில் விழுந்தால், அந்த நிலையில் நீ என்ன செய்வாய்? நான் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று புன்சிரிப்புடன் கேட்டான்.
அதற்கு சல்யன், ‘கர்ணா! ஒரு வேளை அர்ஜுனன் உன்னைக் கொன்று வீழ்த்தி விட்டால், அந்த நிலையில், இந்த ரதத்தின் உதவியோடு இந்த யுத்த களத்தில், அர்ஜுனன், கிருஷ்ணர் இருவரையும் வீழ்த்திக் கொல்வேன். இதில் சந்தேகமில்லை’ என்று மன உறுதியோடு கூறினான்.
அதே சமயத்தில், அர்ஜுனனும், கிருஷ்ணரைப் பார்த்து, இதே போல கேள்வி கேட்க, அவர், ‘அர்ஜுனா! சூரியன் ஆகாயத்திலிருந்து கீழே விழுந்து விடலாம். பூமி, பல துண்டுகளாகச் சிதறிப் போகலாம். ஆனால், கர்ணன் உன்னை வீழ்த்தப் போகிறான் என்பது நடக்காது. ஒரு வேளை கர்ணனால் நீ கொல்லப்பட்டால், என்னுடைய வெறும் கைகளாலேயே, கர்ணன், சல்யன் இருவரையும் கொன்று போடுவேன்’ என்று கூறினார்.
கிருஷ்ணரின் இந்த உற்சாகமான வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், ‘கேசவனே! மத யானையினால் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரம் போல, கர்ணன் இந்தப் பூமியில் என்னால் வீழ்த்தப்படப் போகிறான்’ என்று கூறினான்.
தேவர்கள் அனைவரும், கர்ணன், அர்ஜுனன் யுத்தத்தைக் காண வானுலகில் நின்றார்கள். ஆகாயத்தில் இருந்து இறங்கி வந்த இரண்டு சூரியர்கள் போல தோற்றமளித்த அர்ஜுனனும், கர்ணனும், அஸ்திரங்களை ஏவத் தொடங்கினார்கள்.
பயங்கரமான யுத்தத்திற்கான எல்லா அறிகுறிகளும் தோன்றின. அந்த நிலையில், அஸ்வத்தாமா, துரியோதனனை அணுகி, ‘மன்னனே! உன்னுடைய கோபத்தைத் தணித்துக் கொள். இந்த நிலையிலாவது, மிச்சமிருக்கும் வீரர்களை உயிர் பிழைக்கச் செய்! யுத்தம் நிற்கட்டும். நான் கூறினால், அர்ஜுனன் யுத்தத்தை நிறுத்துவான். மற்ற சகோதரர்கள், தருமன் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். அர்ஜுனன், கர்ணனால் கொல்லப்படுவான் என்பது நடக்காத காரியம். அர்ஜுனனால், மாபெரும் வீரனான கர்ணன் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. யுத்தத்தை நிறுத்தி விடு; சமாதானம் செய்து கொள்’
-இவ்வாறு அஸ்வத்தாமா சொன்னதைக் கேட்ட துரியோதனன், ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தான். பின் பெருமூச்சு விட்டவாறே கூறினான். ‘கர்ணனால், அர்ஜுனனை ஜெயிக்க முடியாது என்று நீ சொன்னதை நான் ஏற்கவில்லை. கர்ணனால் அர்ஜுனன் கொல்லப்படுவான் என்பது நிச்சயம். இனி பாண்டவர்கள் நம்மிடம் சமாதானமாக இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. பீமன், துச்சாசனனைக் கொன்ற விதத்தையும், கூத்தாடியதையும் என்னால் மறக்க முடியவில்லை. யுத்தத்தில், கர்ணனை அர்ஜுனன் வீழ்த்துவான் என்பது நடக்கவே முடியாத காரியம். இனி சமாதானத்திற்கே வழியில்லை என்று கூறி, தன் படையினரைப் பார்த்து, யுத்தத்தில் மேலும் முனையுமாறு கட்டளையிட்டான்.
அர்ஜுனனும், கர்ணனும் நேரடியாக மோதிக் கொண்டார்கள். இரண்டு மலைகள் ஒன்றையொன்று எதிர்ப்பது போல; சமுத்திரங்கள் மோதிக் கொள்வது போல மோதிக் கொண்டார்கள்; பூமி நடுங்கியது. நெருப்பைப் பொழியும் ‘ஆக்னேயாஸ்திரத்தை’ அர்ஜுனன் ஏவினால், நீரைப் பொழியும் ‘வருணாஸ்திரத்தை’ கர்ணன் பிரயோகித்தான்.
அதன் பிறகு, மேகக் கூட்டத்தை உண்டாக்கி, இருளை ஏற்படுத்தக் கூடிய ‘பர்ஜன்யாஸ்திரத்தை’ கர்ணன் ஏவ, அதை விலக்குவதற்காக, அர்ஜுனன் காற்றை வீசக் கூடிய ‘வாய்வாஸ்திரத்தை’ ஏவினான். இந்திரனுக்கே உரிய ‘வஜ்ராயுதத்தை’ அர்ஜுனன் ஏவும் போது, அதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் நான்கு திசைகளிலும் பாய்ந்தன. கர்ணன் அந்த ஆயுதங்களை பலமிழக்கச் செய்தான். அர்ஜுனன் ஏவிய அம்புக் கூட்டங்களையெல்லாம் கர்ணன் நாசம் செய்து கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியைக் காணச் சகிக்காத பீமனும், கிருஷ்ணரும், ‘அர்ஜுனா! உன்னுடைய அஸ்திரங்களையெல்லாம் கர்ணன் அழித்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. உன்னுடைய திறமையால் பரமசிவனாரையே மகிழ்வித்தவன் நீ; கர்ணனிடம் தயங்குவது ஏன்? உன் முழுத் திறமையையும் காட்டி, கர்ணனை வீழ்த்திக் கொன்று, பெரும் கீர்த்தி பெறுவாயாக’
-இவ்வாறு பீமனாலும், கிருஷ்ணராலும் தூண்டப்பட்ட அர்ஜுனன், மேலும் உக்கிரமாகப் போர் புரியத் தொடங்கினான். அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும், கர்ணன் புரிந்த யுத்தத்தின் காரணமாக உடலெல்லாம் காயங்கள் ஏற்பட்டன.
இந்த மாதிரியான நிலையிலும் இரு தரப்பிலும், மனம் தளராமல் யுத்தம் புரிந்து கொண்டிருந்தார்கள். ஒரு நிலையில் கர்ணன் கை ஓங்கியது. மற்றொரு நிலையில், அர்ஜுனன் கை ஓங்கியது.
இப்படி இரு தரப்புகளும், மாறி மாறி உயர்வையும், தாழ்வையும் அடைந்து கொண்டிருந்த போது, கர்ணன், அர்ஜுனன் மீது ‘நாகாஸ்திரத்தை’ ஏவுவது என்று தீர்மானித்தான். வானுலகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரன் கூடக் கலக்கமடைந்தான்.
அர்ஜுனனால் காண்டவ வனம் எரிக்கப்பட்ட போது, உயிர் தப்பிய ‘அஸ்வசேனன்’ என்ற பாம்பு, அர்ஜுனனைப் பழிவாங்கத் தருணம் பார்த்து, கர்ணனின் நாகாஸ்திரத்தில் அடைக்கலம் புகுந்தது.
இதைப் பார்த்த இந்திரன், பிரம்ம தேவனிடம் முறையிட, அவர், அர்ஜுனனே வெற்றி பெறுவான் என்று வாழ்த்தினார்.
அச்சமயம் சல்யன், கர்ணனைப் பார்த்து, ‘கர்ணா! நாகாஸ்திரத்தை அர்ஜுனன் தலைக்குக் குறி வைக்காமல், கழுத்துக்குக் குறி வைக்குமாறு கூறினான். அதற்குக் கர்ணன், ‘சல்ய மன்னனே! கர்ணன் எப்போதும் தனது குறியை மாற்றி வைத்தது இல்லை. இரு முறை குறி வைத்து யுத்தம் செய்கிறவனல்ல, கர்ணன்’ என்று கூறி, அஸ்திரத்தை அர்ஜுனனின் தலைக்கே ஏவினான்.
கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் நாகாஸ்திரம் பாய்ந்து வந்ததைக் கிருஷ்ணர் கண்டார். உடனே தன் கால்களால் ரதத்தைக் கிருஷ்ணர், பூமியில் அழுத்தினார். ரதம் சில அங்குலங்கள் பூமியில் அழுந்தியது. பாய்ந்து வந்த அஸ்திரம், ரதம் பூமியில் அழுத்தப்பட்டதால், அர்ஜுனன் தலையில் படாமல், அவனுடைய கிரீடத்தை அடைந்து, அதைப் பறித்துச் சென்றது.
இந்திரனால் அர்ஜுனனுக்கு அளிக்கப்பட்ட கிரீடம், அவனுடைய தலையிலிருந்து பறிக்கப்பட்டு கீழே விழுந்தது. அவனுடைய கிரீடத்தைக் கவர்ந்து சென்ற போது, அஸ்திரத்தில் புகுந்து கொண்டிருந்த ‘அஸ்வசேனன்’ என்ற பாம்பு, அதிலிருந்து விடுபட்டு, ஆகாயத்தை நோக்கிச் சென்றது. அதைக் கிருஷ்ணர், அர்ஜுனனுக்குக் காட்ட, அவன் அதை இரு துண்டுகளாக்கிக் கீழே வீழ்த்தினான். இப்படியாகக் கர்ணன் எய்த ஒரு முக்கியமான அஸ்திரம் வீணானது.
மேலும் நடந்த யுத்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.
Comments
Post a Comment