ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 89

மேகலா : கர்ணன், பூமியில் அமிழ்ந்த தேர்ச் சக்கரத்தை பூமியிலிருந்து மேலே எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், கிருஷ்ணர், அர்ஜுனனிடம், ‘தயக்கமின்றி கர்ணனின் கவசத்தைப் பிளந்து அவன் உயிரை மாய்க்கச் சொல்லிக் கூறினார்’ என்பதை சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். கிருஷ்ணர் அவ்வாறு கூறியதும், அர்ஜுனன், பழைய நிகழ்ச்சிகளினால் பெரும் கோபம் கொண்டு, கர்ணனைப் பலமாகத் தாக்கினான். அந்த நேரத்தில் கூட, கர்ணன் தேர்ச் சக்கரத்தைத் தூக்குவதும், அர்ஜுனன் மீது பாணங்களைப் பொழிவதுமாக கடும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தான்.

அந்த நேரம் பார்த்து கிருஷ்ணர், அர்ஜுனனை நோக்கி, ‘இதுதான் தருணம். கர்ணனை அஸ்திரத்தினால் மாய்த்து விடு’ என்று கூற, அர்ஜுனன் ஒரு அம்பை ஏவ, அது அர்ஜுனனின் கொடியை அறுத்துக் கீழே தள்ளியது. கர்ணனின் கொடி பூமியில் சாய்ந்ததைப் பார்த்த கௌரவர் படையே கலங்கியது.

அப்போது அர்ஜுனன், ‘அஞ்சலிகம்’ என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தான். அது இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு ஒப்பானது. பெரும் வேகத்துடன் பாயக் கூடியது. விஷ்ணுவின் சக்கரத்துக்கு நிகரானது. அதை வில்லிலே பூட்டிய அர்ஜுனன், கர்ணன் மீது அதைப் பிரயோகித்தான்.
பாய்ந்து சென்ற அந்தப் பயங்கரமான அஸ்திரம், கர்ணனின் தலையைக் கொய்து, அதை அறுத்தது.

‘அஞ்சலிகம்’ என்ற அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட கர்ணன், பூமியில் சாய்ந்தான். அவனுடைய தலை மிகவும் தயங்கி விடுபட்டது. மாய்ந்து வீழ்ந்த கர்ணனின் உடலிலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு, விண்ணை நோக்கிப் பறந்து சென்று, சூரியனை அடைந்ததைப் பார்த்து, அனைவரும் வியந்தார்கள்.

பாண்டவர்கள் மிகவும் மகிழ்வு எய்தி, தங்களுடைய சங்குகளை ஒலித்தார்கள். அர்ஜுனனும், கிருஷ்ணரும், நகுல-சகாதேவர்களும், தங்கள் தங்கள் சங்குகளை ஒலித்தார்கள்.

பாண்டவர் தரப்பு வீரர்கள், ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு, மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்து கொண்டு கூத்தாடினார்கள்.
சல்யன், கர்ணன் தேரை அந்த இடத்திலிருந்து வேறு புறம் ஓட்டிச் சென்றான். இவ்வாறாக, கர்ணன் என்ற நெருப்பு, அர்ஜுனன் என்ற தண்ணீரால் அணைக்கப்பட்டது.

கிருஷ்ணரும், அர்ஜுனனும் சேர்ந்து சென்று, தருமபுத்திரருக்கு, கர்ணன் மாண்ட செய்தியைத் தெரிவித்தார்கள். தருமபுத்திரர், இந்தச் செய்தியை அறிந்து, பெரும் மகிழ்ச்சியடைந்து, ‘இன்று இரவில் நான் நிம்மதியாகத் தூங்குவேன்! என்னுடைய பயம் நீங்கியது! கிருஷ்ணரே, உங்களுடைய அருளினாலும், உங்கள் ஆசிர்வாதத்தினாலும் என்னுடைய பகைவன் அழிந்தான்’ என்று கூறி மேலும் மகிழ்ந்தார்.

சஞ்சயனிடமிருந்து யுத்தச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன், துக்கம் தாளாமல் மயங்கி விழுந்தான். அவ்வாறே காந்தாரியும் மூர்ச்சை அடைந்தாள். விதுரரும், சஞ்சயனும் அவர்களுக்கு மூர்ச்சை தெளிவித்து, ஆறுதல் கூறினர்.

(இத்துடன் ‘கர்ண பர்வம்’ முற்றிற்று. அடுத்தது, ‘சல்ய பர்வம்’)

மேகலா : ஏன் கிருஷ்ணா! கர்ண பர்வம் முழுமைக்கும், கர்ணனால் கௌரவர்கள் காக்கப்படுவர்; அவன் மாவீரன் என்றெல்லாம் பேசுகிறார்களே; அவன் விராட தேசத்தில் நடந்த யுத்தத்தில், அர்ஜுனனுடன் போர் செய்யும் போது, easy-யாக தோற்று ஓடினானே....!

கிருஷ்ணர் : அப்படிப் பார்த்தால், பீஷ்மர், துரோணர் கூட, அந்த யுத்தத்தில் தோற்றுத்தான் போனார்கள். விராட தேசத்து யுத்தத்தில், கௌரவர்களுக்கு, ‘இன்னும் பதிமூன்று வருடங்கள் நிறைவடையவில்லை; அதற்குள் அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்தி விட்டான்; பாண்டவர்கள் இன்னும் பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசம் போகப் போகிறார்கள்’ என்ற நிச்சயமான மனதுடன் போர் புரிந்தார்கள். அர்ஜுனனுக்கோ, தன் உரிமை மீட்கப்பட வேண்டும் என்ற ஆவேசம். பீஷ்மருக்கும், துரோணருக்கும், ‘இன்று பாண்டவர்களைக் கொன்றே ஆக வேண்டும்’ என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அதனால், அன்று தோற்று ஓடியது மாதிரி ஆகி விட்டது.

பிறப்பால், கர்ணன், ‘சூர்யபுத்திரன்’. சூர்யனின் சகல அம்சங்களும் அவனிடம் இருந்தது. பத்தாததற்கு, ‘கவச குண்டலங்களுடன்’ வேறு பிறந்தவன். ‘தன் தாய் தன்னைத் தூக்கி எறிந்து விட்டாள்’ என்ற தாழ்வு மனப்பான்மையுடன், ஆதரித்த நண்பனுக்காக உயிரையும் கொடுக்கும் மனநிலையுடன் வளர்ந்தவன். அஸ்திரப் பயிற்சியைப் பரசுராமரிடம் கற்றுக் கொண்டவன். நிச்சயம் அவன் மாவீரன் தான். எதிர்ப்பதற்குக் கூட, அர்ஜுனன் மட்டுமே தனக்கு நிகரானவன் என்று நினைத்தவன். ‘கூடா நட்பு’ கேடாய் முடிந்தது. வேறு ஒன்றுமில்லை. சகவாச தோஷம், தர்மம் பிறழ்ந்து அவனை நினைக்கச் செய்தது; பேசச் செய்தது. ஏன், கர்வப்பட வைத்தது கூட, சகவாசம் தான் என்று நான் நம்புகிறேன்.

மேகலா : எனக்கு இன்னொரு சந்தேகம், கிருஷ்ணா! தேர்ச் சக்கரம் பூமியில் அழுந்தும் போது, தேரோட்டியான சல்யன் ஏன் உதவிக்கு வரவில்லை?

கிருஷ்ணர் : நான் ஒன்று கேட்கிறேன். ‘கார்’ நகராமல் உறுமும் போது, யாராவது வண்டியைத் தள்ளி விட வேண்டும் என்றால், யார் இறங்கி வந்து தள்ளுவார்கள்? car driver-ஆ?

மேகலா : இல்லையில்லை; Seat-ல் உட்கார்ந்திருப்பவர் தான் தள்ளுவார். அப்பத்தான், கார் start ஆனவுடன், driver வண்டியை ஓட்ட முடியும்....

கிருஷ்ணர் : ரதம் கூட அப்படித்தான் மேகலா! பூமியே சக்கரத்துடன் மேலெழுவது போல அழுந்தப் பிடித்திருந்தது, தேர்ச் சக்கரம். அந்தத் தேர்ச் சக்கரத்தை வெளியே எடுக்க வேண்டுமானால், தேரோட்டி, force-ஆக குதிரையை விரட்டி, முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதனால் தான் சல்யன், அந்த இடத்தில் இறங்கி வர முடியவில்லை. தேர்ச் சக்கரம் வெளியே வரும் போது, தேரோட்டி, தேரைச் செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும். திரைப்படத்தில் காட்டியது போல, அந்த நேரத்தில், கர்ணனுக்கும் சல்யனுக்கும் வாக்குவாதம் வந்து, சல்யன் வெளியேறிப் போகவில்லை. முதலில், சல்யன், கர்ணனை அவமானப்படுத்திப் பேசினாலும், அடுத்து, அவனுக்கு உற்சாகமூட்டியும், ஆலோசனை கூறியும், சிறந்த தேரோட்டியாக வழிநடத்திச் சென்றான்.

மேகலா : கர்ணனுக்கு, அர்ஜுனன் மீது கொஞ்சம் பொறாமை. அதைத் தவிர வேறொன்றுமில்லை. உயர்ந்த பண்பாளன், இல்லையா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : தன் திறமை மீது அசாத்தியமான கர்வம் அவனுக்கு உண்டு, மேகலா! அதனால் தான், சகிக்க முடியாத பேச்சுக்களைப் பேசி, வாங்கிக் கட்டிக் கொள்வான். அதற்கு, அவன் பிறப்பைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை கூட ஒரு காரணம் தான். சிறந்த மனிதன்; தர்மம் தெரிந்தவன்; நல்ல வீரன்; பரந்த எண்ணமுடையவன்; சிறந்த கொடையாளி. யுத்த களத்தில் உயிரை விட்டு சூரியனுடன் கலந்தான்.

(’சல்ய பர்வத்துடன்’ அடுத்த பகுதி ஆரம்பமாகும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2