ராமரின் வில்லும், கிருஷ்ணரின் ஸ்ரீ சக்கரமும் - பகுதி 1

மேகலா : கிருஷ்ணா....... கிருஷ்ணா.......

கிருஷ்ணர் : அடாடா..... டா..... இந்த கொரோனா நேரத்துல..... என்ன இப்படி.... அலறியடிச்சிக்கிட்டு ஓடி வர்ற...... ஏதோ முக்கியமான விஷயம் போலிருக்கே.... உன் முகம் bright-ஆ இருக்குது.....

மேகலா : இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், என்ன விஷயம் என்று கண்டுபிடித்து விடுவாய்..... நானே சொல்கிறேன்...... நீ தெரிந்தாலும், சொல்லாத......

கிருஷ்ணர் : Oh! சரி..... நீயே சொல்லு..... என்ன விஷயம்....?

மேகலா : கிருஷ்ணா! சீனாவின் அத்துமீறலை நீ அறிவாயா....?

கிருஷ்ணர் : ‘லடாக்’ பகுதியில், ‘கால்வான்’ பள்ளத்தாக்கில் படைகளைக் குவித்து வைத்ததையா..... ஏதோ கொஞ்சம் தெரியும்.... அதற்கென்ன.....

மேகலா : நான் இந்த ‘பாலிடிக்ஸ்’ பற்றியெல்லாம் பேசப் போவதில்லை, கிருஷ்ணா..... ஏனென்றால், எங்கள் நாட்டிற்கு, தேச பக்தி கொண்ட பிரதம மந்திரியைத் தந்திருக்கிறாய். அவருக்கு புத்திக்கூர்மையையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்திருக்கிறாய். அதே சமயத்தில், உன்னுடைய அருளையும் அளித்திருக்கிறாய் என்று நான் நம்புகிறேன்.

கிருஷ்ணர் : நீ நம்பினால், சரியாகத்தான் இருக்கும்.... அதற்கென்ன....

மேகலா : அதனால்தான், அந்த ‘பாலிடிக்ஸ்’.... ‘என்ன பிரச்னை’ என்பது பற்றியெல்லாம் பேசப் போவதில்லை. இரண்டு விஷயங்கள்..... அதிலும் இந்தியர்களாகிய நாங்கள் மெய்சிலிர்த்துப் போன இரண்டு விஷயங்களை மட்டும் தான் உன்னிடம் சொல்லப் போகிறேன்.

கிருஷ்ணர் : இரு.... நான் கொஞ்சம் வசதியாக உட்கார்ந்து கொள்கிறேன். ஏனென்றால்.... உன் முகத்தில் ‘பரவசம்’ தெரிகிறது. பேச்சு.... சுவாரஸ்யமாய் நீண்டு கொண்டே போகும் போலிருக்கிறது..... எனக்கு கால் வலிக்கும்.... சரி, இப்பச் சொல்லு....

மேகலா : முதலில், சீனாவின் இந்த அத்துமீறல், ஏதோ இன்றுதான் திடீரென்று நடந்து விடவில்லை. காங்கிரஸ் ‘பீரியடிலிருந்தே’, சில கிலோ மீட்டர் ஆக்ரமிப்பார்கள். பேச்சு வார்த்தை என்று இந்தியா மிதமாய்ப் பேசும்.... சரி, பேச்சு வார்த்தைக்குக் கட்டுப்பட்டதாக நடித்து, சுமார் பத்து அடி தள்ளிப் போவார்கள். பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்தது என்று இந்திய அரசாங்கம் அறிக்கை விடும்....

கிருஷ்ணர் : என்ன.... இது சுத்த அயோக்கியத்தனமாக இருக்கிறது.

மேகலா : இன்னும் கேளு.... பிறகு கொஞ்ச நாளில், ‘எங்கள் பகுதியான அருணாச்சல பிரதேசத்தில்’..... என்று ஆரம்பித்து, சீனா குரல் கொடுக்கும். விவரம் தெரிந்த இந்திய அரசியல்வாதிகள் தவிர்த்து, மற்ற இந்தியர்கள் அதிர்ச்சியடைவார்கள். இது வேறு கதை. இப்போ அரசாங்கம் மாறுகிறது. சீனாவின் நாடகம், இன்றைய ராணுவத்திடம் எடுபடவில்லை. அத்துமீறல் நடக்கும் போதெல்லாம் விரட்டி அடிப்பது நடக்கிறது. போர்ச்சூழல் ஏற்படாத வகையில் ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதற்கிடையில், சென்ற அரசாங்கத்தின் வழியாக, சீன வர்த்தகம், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுக்குள் நுழைந்து, பங்குச் சந்தை மூலமாகவும், ஆழமாக கால் ஊன்றத் தொடங்கி, சீனப் பொருள் இல்லாமல் இந்தியர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கியது. சுற்றியிருக்கும் அண்டை நாடுகளான, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு, கடன்களை வழங்கி வளைத்துப் போட்ட தைரியத்தில், போர்ச்சூழலை உருவாக்கி இந்தியாவை மிரட்டத் தீர்மானித்தது தான், சீனாவின், ‘சொந்தச் செலவில் சூனியம் வைத்த கதை’ ஆரம்பமாயிற்று.

கிருஷ்ணர் : சீன அதிபரை, மோடி அவர்கள், தமிழ்நாட்டுக்கு, அதுவும் மகாபலிபுரத்திற்கு வரவழைத்ததே, இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பினைக் காட்டத்தானே.....

மேகலா : கிருஷ்ணா..... நீயெல்லாம் மிகச் சிறந்த ராஜதந்திரி. உனக்குத் தெரியாதது ஒண்ணுமில்லை. நீ சொல்லும் வியூகத்தைக் கேட்கவே பயம்மாக இருக்கிறது. இருந்தாலும், இது ஒரு முக்கியமான ‘பாயிண்ட்தான்’.

கிருஷ்ணர் : சரி....., நீ ‘சூனியம் வச்ச கதை’யைச் சொல்லு.....

மேகலா : கால்வான் பள்ளத்தாக்கில், அத்துமீறி நுழைந்த சீனப்படைகளை (ஆயுதம் இல்லாத) இந்திய ராணுவமும், ஆயுதம் ஏந்தாமலேயே, கைகலப்பில் ஈடுபட்டனர். முதலில் வந்த செய்தி, 20 இந்திய வீரர்கள் பலியாகினர் என்பதுதான்.... மறுநாளிலிருந்து, காட்சிகள் வேகமாக மாறுகின்றன. சீனப்படையில் 45 பேர் வரைக்கும் பலியாகினர் என்ற செய்தி வருகிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர், போர்விமானம் வாங்குவதற்காக ரஷ்யா செல்கிறார். ஜப்பான் ஆதரவுக்குரல் கொடுக்கிறது. இந்த பரபரப்பு நிகழ்ச்சி நடைபெறும் பொழுது, பல நாடுகள், சீனா தங்கள் நிலப்பரப்பை ஆக்ரமிப்பு செய்ததாக புகார் கூறுகின்றன. இதில் முக்கியமான நாடு ஜப்பான். ஆஸ்திரேலியா, சீனப் பொருட்களை நம்பி இருக்கும் நாடு. அது தன் ஆதரவை இந்தியாவிற்கு அளித்து, சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், நம்முடைய பாரதத்தின் இணையற்ற பிரதமர், முக்கியமான ஒரு தீர்மானத்தை வெளியிடுகிறார். இந்தியாவில் புழக்கத்தில் உள்ள சீனாவின் 59 app-களை (’டிக் டாக்’ உள்பட) அனைத்து செயலிகளையும் தடை செய்வதாக உத்தரவிடுகிறார். மிகக் கடுமையாக அதிர்ச்சியடைந்த ‘சீனா’, தங்களுக்குள் ஒரு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், ‘ஹாங்காங்’கில் என்ன நடந்தது தெரியுமா, கிருஷ்ணா?

கிருஷ்ணர் : அதையும் நீயே சொல்லு...

மேகலா : ஹாங்காங் முழுக்க முழுக்க சீன அதிகாரத்திற்கு உட்பட்ட நாடு. இதை அந்த நாடு விரும்பவில்லை. மோடியின் தீர்மானம், ஹாங்காங் நாட்டுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அவர்கள் சீனாவை எதிர்க்க இந்தியாவுடன் கைகோர்க்க விரும்புகிறார்கள். ‘தைவான்’ என்ற நாட்டின் நிலையும் இதுதான். அப்பொழுது, தைவான் நாட்டின் மீது, போர் விமானத்தைப் பறக்க விட்டு, சீனா பயம் காட்டியது. அந்த சமயத்தில், தைவானில், ஒரு ‘இலச்சினை’ trending ஆகி, இந்தியர்களே நினைத்துப் பார்க்காத ஒரு செயலாக ‘வைரலாகியது’. என்ன தெரியுமா, கிருஷ்ணா? ராமர் வில்லை வளைத்து, காற்றில் பறந்து, சுழன்று ஒரு அம்பை விடுக்கிறார். அது சீனத்து ‘டிராகனை’ குத்தி நிற்கிறது.... இந்த இலச்சினை ஹாங்காங்கிலும், தைவானிலும் பரவி, இந்தியர்களை பெருமையின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

கிருஷ்ணர் : வாவ்..... உன் பரவசத்திற்கு காரணம் தெரிந்து கொண்டேன் மேகலா.... உலக மக்கள் அனைவரும், இந்தியரான ராமர்தான், டிராகனை அடக்க வல்லவர் என்று நினைக்கிறார்கள் போலயே....

மேகலா : கிருஷ்ணா....... அந்த சமயத்தில், இந்தியர்களை விட, தைவான் தேசத்து மக்கள் தான், ராமரின் பெருமையை நன்றாக உணர்ந்தவர்கள் என்ற பேச்சு வலம் வந்தது கிருஷ்ணா..... எனக்கு, அந்தப் பேச்சில் சற்று வருத்தம் இருந்தாலும், மோடி வடிவத்தில், ‘ராமர்’ சீனாவை அடக்குகிற காரியத்தைச் செய்து முடிப்பார் என்று நம்பிக்கையாகவும், பெருமையாகவும் இருந்தது.

கிருஷ்ணர் : அதிலென்ன சந்தேகம்....?

மேகலா : என்ன சொன்ன..... என்ன சொன்ன..... மோடி வடிவத்தில் ராமர் சாதிப்பார் என்பதை ‘நீ’ ஆமோதிக்கிறாயா.... நம் நாட்டிற்கு இதை விட பெரிய ஆசிர்வாதம் இருக்க முடியுமா....?

கிருஷ்ணர் : சரி.... ரொம்பப் பேசாத.... பேச்சைக் குறை..... கதையைச் சொல்லு....

மேகலா : அடுத்த பகுதியில், மீதிக் கதையைச் சொல்கிறேன் கிருஷ்ணா....!

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1