ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 93
மேகலா : மிகவும் காயமுற்ற நிலையில் இருந்த துரியோதனன், பாதுகாப்பிற்காக, ஒரு மடுவில் நீரைக் கட்டி, ஒளிந்து கொண்டான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இங்கே இவ்வாறு நடக்கையில், யுத்த களம் சூன்யமாகியது. துரியோதனன் மடுவில் ஒளிந்தபடி இருந்தான். சூரியன், அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். யுத்த களத்தில் மட்டுமல்லாமல், பாசறைகளில் கூட, கௌரவர்கள் யாருமே இருக்கவில்லை. துரியோதனன் தரப்பு, பெரும் தோல்வியைக் கண்டது.
திருதராஷ்டிரனின், வைசிய குலத்து மனைவிக்குப் பிறந்த ‘யுயுத்சு’ தான், துரியோதனனின் சகோதரர்களில் எஞ்சியவன். மகாரதர்களான கிருபர், அஸ்வத்தாமா, கிருதவர்மா மூவரும், சஞ்சயனிடமிருந்து துரியோதனன் இருக்குமிடத்தை அறிந்து, அவனைக் காண விரும்பினார்கள்.
சஞ்சயன், தான் அறிந்ததையும், பார்த்ததையும், விதுரனிடம் விவரித்தார். அவர் பெரும் துக்கத்திற்குள்ளானார். யுயுத்சுவைப் பார்த்து, ‘திருதராஷ்டிரனுக்கு நீ தான் இனி எல்லாம். நீ தான் அவனுக்கு இனி ஊன்றுகோல்’ என்று அறிவுரை கூறினார்.
மேகலா : ஸம்சப்தர்கள், பாஞ்சால வீரர்கள், பாண்டவர்கள், கௌரவர்கள், யானைகள், ரதங்கள், தேரோட்டி, குதிரை, கர்ஜனை, கோபாவேசம், அஸ்திரங்கள், மகாரதர்கள், வியூகம்..... எத்தனை சொற்கள்....! அத்தனையும் போர்.... போர்.... என்றே கூறுகிறது; தர்மத்தைக் கூறுகிறது; விதியை மீறுகிறது; சரணாகதியை நினைவூட்டுகிறது. யுத்தத்தில் கூட தெய்வத்தைக் காட்டுகிறது. வீரன், பயப்படுகிறான்; பயந்தவன், சாதிக்கிறான், வெற்றி கொள்கிறான். எத்தனை ஆணவம், அகம்பாவம், ஆர்ப்பரிப்பு....! எத்தனை பேர் எடுத்துச் சொன்னாலும், ‘சமாதானம்’ என்ற சொல்லையே தூக்கி எறிந்த ’பேராசை’... கற்ற சாஸ்திரங்கள், வித்தைகள் அனைத்தும்...., இதோ மடுவுக்குள் ஒளிந்து கொண்டது....!
கிருஷ்ணர் : என்ன மேகலா....! யுத்த களத்தைப் பார்த்து, பயந்து போனாயா....? பொறாமையின் முடிவு....., பேராசையின் பலன்...., யாரையும் மதிக்காததன் விளைவு...., பகையை வளர்த்ததால் வரும் கேடு..... சமாதானத்தையும் மறந்ததால், கடவுளுக்கே வெறி பிடித்து விடும், மேகலா.....! நன்றாகப் புரிந்து கொள். உலகத்துக்குப் பயன்படாத பகையும், வெறுப்பும், உனக்கும் பயன்படாது; கடவுளையும் நெருங்க விடாது. சரி...., அடுத்து துரியோதனன் என்ன ஆகிறான் பார்ப்போம்.....
துரியோதனன் வெளியே வந்தான்
மேகலா : காலியாகி விட்ட தங்களுடைய பாசறைகளை நினைத்தும், பெரும் மகிழ்ச்சியில் பாண்டவர்கள் எழுப்பிக் கொண்டிருந்த கோஷங்களைக் கேட்டும், மனம் நொந்து போயிருந்த கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர், துரியோதனன் ஒளிந்திருந்த மடுவை அடைந்தார்கள்.
துரியோதனன் ஒளிந்திருந்த மடுவை நோக்கி, ’அரசனே! மடுவிலிருந்து எழுந்து வா! நாம் நால்வரும் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்துப் போர் செய்வோம். நாம் வென்றால், நீ பூமியை அனுபவிப்பாய். கொல்லப்பட்டால், சொர்க்கத்தை அடையப் போகிறோம். இப்பொழுது நீ போர் புரிந்தாலும், அதைச் சகிப்பதற்கு பாண்டவர்கள் சக்தியற்றவர்களே! எழுந்து வெளியே வா!’ என்று கூவி அழைத்தார்கள்.
மடுவின் உள்ளே இருந்து கொண்டே துரியோதனன், ‘வீரத்தில் சிறந்தவர்களே! நாம் எல்லோரும் இப்போது சற்று இளைப்பாறுவோம். பிறகு நமது களைப்பை நீக்கி மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவோம். நாம் மிகவும் காயப்படுத்தப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் யுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை’.
துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமா, ‘வேந்தனே! மடுவில் இருந்து வெளியே வருவாயாக! பிரபுவே! யாரும் கண்டிராத, கேட்டிராத அழிவை உண்டாக்காமல், நான் அணிந்திருக்கும் கவசத்தைக் கழற்றப் போவதில்லை. வேந்தனே! யுத்தம் புரிவோம் வா! உனக்கு மங்களம் உண்டாகட்டும்’.
இப்படி இவர்கள் மடுவின் கரையிலிருந்து பேசிக் கொண்டிருந்ததை, சில வேடர்கள் கேட்டு விட்டார்கள். பீமனுக்கு மாமிசங்களைச் சேகரித்துக் கொடுக்கும் வேடர்கள், அங்கே நடந்து கொண்டிருந்த உரையாடலை முழுமையாகக் கேட்டார்கள். துரியோதனன், களைப்பு மிகுதியால் இளைப்பாற விரும்பியதையும், மற்ற மூவரும், தொடர்ந்து யுத்தத்தை நடத்த விரும்பியதையும் அவர்கள் அறிந்தார்கள்.
இந்த நிலையில், பாண்டவர்களில், தருமபுத்திரன், தனது தம்பிமார்களிடமும், கிருஷ்ணரிடமும், ‘நமது பகைவர்களுள் முக்கியமானவன் இன்னும் உயிரோடு இருக்கிறான். அப்படியிருக்க, நாம் வெற்றி அடைந்து விட்டோம் என்று எப்படி நினைப்பது?’ என்று கூறிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வேடர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள், பீமனைச் சந்தித்து, தாங்கள் அறிந்த தகவலை அவனிடம் தெரிவித்தார்கள். மிக்க மகிழ்ச்சி எய்திய அவன், அவர்களுக்குப் பெரும் செல்வத்தை வாரிக் கொடுத்தான்.
பீமன், தருமனிடமும், மற்றவர்களிடமும் இத்தகவலைச் சொன்னான். துரியோதனன் மறைந்திருக்கும் இடம் தெரிந்து விட்டதால், அர்ஜுனன், பீமன், நகுல-சகதேவர்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, உதாமன்யு, சாத்யகி மற்றும் வீரர்கள் புடைசூழ, பெரும் கோஷத்துடன் ஒலி எழுப்பிக் கொண்டு, கிருஷ்ணருடன் தருமன், துரியோதனன் ஒளிந்திருக்கும் மடுவை நோக்கிச் சென்றான்.
இப்படி ஒரு கூட்டம் பூமி அதிர வந்து கொண்டிருந்த போது, மடுவினுள் ஒளிந்து கொண்டிருந்த துரியோதனன், அந்த சப்தத்தைக் கேட்டான். அதே போல், கரையில் நின்று கொண்டிருந்த கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா மூவரும் பாண்டவர்கள் அங்கு வருவதை உணர்ந்து, அந்த இடத்திலிருந்து அகன்று, அருகிலிருந்த ஆலமரத்தை அடைந்து, ’துரியோதனன் இருக்குமிடத்தை அறிந்து கொள்வார்களா’ என்ற கவலையுடன் அமர்ந்தார்கள்.
இதற்கிடையில், பாண்டவர்கள் மடுவை வந்தடைந்தனர். தருமன், கிருஷ்ணரைப் பார்த்து, ‘கேசவரே! துரியோதனன் தனது மாயையைப் பயன்படுத்தி இந்த மடுவினுள் நுழைந்திருக்கிறான். இதுவே வஞ்சனை தானே’ என்று கூறினார்.
அதற்கு கிருஷ்ணர் சொன்னார், ‘மாயையை மாயையினால் தான் வெல்ல வேண்டும். துரியோதனன் மாயாவிதான். ஆகையால், துரியோதனனைப் போன்றவர்களைக் கொல்ல, உபாயங்கள், தந்திரங்கள், மாயை எதை உபயோகப்படுத்தினாலும், எந்தப் பிழையும் வருவதில்லை. ஆகையால், நீரும் துரியோதனன் மடுவினுள் இருக்கும் போதே, அவனைக் கொன்று விட வேண்டும்’.
இவ்வாறு கிருஷ்ணர் கூறியவுடன், தருமர், மடுவை நோக்கிப் பேசலுற்றார், ‘துரியோதனா! உன்னைச் சுற்றியிருந்தவர்களை எல்லாம் அழித்து விட்டு, நீ இப்பொழுது தண்ணீரில் ஒளிந்திருப்பதற்கு என்ன காரணம்? உன் உயிர் மீது உனக்கு அத்தனை ஆசையா....? உன் கர்வம் எங்கே...? உன் கௌரவம் எங்கே....? உன்னுடைய வீரம் எங்கே....? யுத்தத்தில் உனக்கிருந்த உற்சாகம் எங்கே...? ஆயுத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றாயே; அந்தத் திறமை எங்கே...? இங்கே தண்ணீருக்குள் ஒளிந்திருக்கிறாயே....., உன் உயிர் மீது உனக்கு அத்தனை ஆசையா....? இது க்ஷத்திரிய தர்மமா....? வெளியே வா! எங்களுடன் போர் புரி..... ஒன்று, எங்களை வென்று இந்தப் பூமியை அடைவாய்... அல்லது, வீர சொர்க்கம் அடைவாய்.... தண்ணீரை விட்டு வெளியே வந்து, எங்களுடன் யுத்தம் செய்வாய்’.
அதற்கு, துரியோதனன் ’என்ன பதில் கூறினான்; உடனே அவர்களுக்கிடையே போர் நடந்ததா’ என்ற விவரங்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம்.....
Comments
Post a Comment