ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 94

மேகலா : மடுவில் ஒளிந்து கொண்டிருந்த துரியோதனனை அழைத்து, தருமர், அவனை வெளியே வந்து போரிடுமாறு கூறினார் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். அதற்கு துரியோதனன், தண்ணீரில் இருந்து கொண்டே பதில் சொல்லத் தொடங்கினான். ‘யுதிஷ்டிரனே! நான் பயத்தினால் இங்கு வந்து ஒளிந்து கொள்ளவில்லை. யுத்தத்தை விட்டு ஓடி வந்து விட்டேன் என்று நினைக்காதே. என் ரதத்தை இழந்தேன். என் தேரோட்டியும் கொல்லப்பட்டான். நான், தனி ஒருவனாக, யுத்தத்தில் காயம் பட்டு இளைப்பாற விரும்பினேன். களைப்பைத் தீர்ப்பதற்காகவே இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன். யுதிஷ்டிரா, நீயும், உன்னைச் சேர்ந்தவர்களும் இன்று இரவு இளைப்பாறுங்கள். அதன் பிறகு உங்கள் அனைவரையும் யுத்த களத்தில் நான் மீண்டும் சந்திக்கிறேன்’.

இதற்கு யுதிஷ்டிரர், ‘துரியோதனா! நாங்கள் எல்லோரும் களைப்பு தீர்ந்தவர்களாகவே இருக்கிறோம். ஆகையால், இப்பொழுதே யுத்தம் நடக்கட்டும்’ என்று பதிலுரைத்தார்.

துரியோதனன் சொன்னான், ‘யுதிஷ்டிரா, எனது ஆதரவாளர்கள் அனைவரும் இறந்து போன பிறகு, இந்த பூமியை ஆள நான் விரும்பவில்லை. அதை நீயே அனுபவிப்பாயாக. இந்த சூன்யப் பிரதேசம் உனக்கு உரியதாக ஆகட்டும். உங்கள் அனைவரையும் யுத்தத்தில் வென்று காட்டுவதற்கே இன்னமும் நான் விரும்புகிறேன்’.

இப்படி தன் கர்வத்தை இழக்காமல் துரியோதனன் பேசியதைக் கேட்ட யுதிஷ்டிரர், ‘நீ தானம் செய்வதில் புகழ் பெற்றவனாக இருக்கலாம். ஆனால், உன்னிடமிருந்து பிச்சை பெற நான் விரும்பவில்லை. பூமியை எடுத்துக் கொள் என்று இப்போது கூறுகிறாயே; அன்று கிருஷ்ணர் உனது சபையில் சமாதானம் பேசிய பொழுது, இந்த பூமியை விட்டுக் கொடுக்க நீ ஏன் சம்மதிக்கவில்லை? ஊசி முனை அளவு கூட இடம் கொடுக்க முடியாது என்று அப்போது கூறி விட்டு, இப்பொழுது இந்தப் பூமியையே விட்டுக் கொடுப்பதாகக் கூறுகிறாயே! துரியோதனா! இன்றைய நிலையில் நீ யார் இந்த பூமியை விட்டுக் கொடுக்க? இந்த பூமியை எடுத்துக் கொள்வதற்கோ, விட்டுக் கொடுப்பதற்கோ, உனக்கு என்ன உரிமை இருக்கிறது? அல்லது தகுதி இருக்கிறது? எல்லாவற்றையும் இழந்து இன்று மடுவினுள் அடைக்கலம் புகுந்திருக்கிறாய். நீ கொடுத்து நான் பெற்றுக் கொள்ளும் நிலை இன்று இல்லை. நீ இந்த பூமியையே விட்டு விடுவதாக இருந்தாலும், உன்னை உயிரோடு நான் விடப் போவதில்லை.

எங்களை விஷத்தால் கொன்று விட முயற்சித்தாய்; தீயினால் பொசுக்க முனைந்தாய்; திரௌபதியை அவமானப்படுத்தினாய். அப்படிப்பட்ட உன்னை உயிரோடு விட, நாங்கள் சிறிதும் விரும்பவில்லை. எழுந்து வெளியே வா! யுத்தம் செய்! ஒன்று எங்களைத் தோற்கடித்து விட்டு, நீ இந்த பூமியை ஆள்வாயாக! அல்லது உன்னைக் கொன்று நாங்கள் இந்த பூமிக்கு அதிபதியாகிறோம்’, என்று துரியோதனனுக்கு மீண்டும் அறைகூவல் விடுத்தார்.

இதைக் கேட்ட துரியோதனன், தண்ணீருக்குள் இருந்தபடியே ஆவேசம் கொண்டான். ‘யுதிஷ்டிரா! நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராக என்னை எதிர்க்கத் தயாராக இருந்தால், நானும் யுத்தம் புரிய தயாராகவே இருக்கிறேன். உன்னிடமோ, உன் தம்பிமார்களிடமோ, கிருஷ்ணரிடமோ எனக்கு பயம் என்பது சிறிதும் கிடையாது. உங்கள் அனைவரையும் யுத்தத்தில் தடுக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. உங்களை வீழ்த்திக் கொல்வதற்கும் எனக்குத் திறன் உண்டு. இந்தப் பூமியில், பாண்டவர்கள் என்பவர்கள் யாருமில்லை என்று செய்து காட்ட என்னால் இன்னமும் கூட முடியும். நீங்கள் அனைவரும் என்னுடன் யுத்தம் செய்யுங்கள். ஆனால், ஒவ்வொருவராக என்னை எதிர்க்க நீங்கள் தயாரா?’ என்று கேட்டான்.

யுதிஷ்டிரர் சொன்னார், ‘துரியோதனா! உன் மனதில் இன்னமும் க்ஷத்திரிய தர்மம் நிலைத்திருக்கிறது. அது பற்றி எனக்கு மகிழ்ச்சியே. இந்த நிலையில், எங்களில் யாரோடு நீ யுத்தம் செய்ய விரும்புகிறாயோ, அவனைத் தேர்ந்தெடுத்துக் கொள். அதே போல, எந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு போர் புரிய விரும்புகிறாயோ, அந்த ஆயுதத்தையும் நீயே தேர்ந்தெடுத்துக்  கொள். நீ யாரைத் தேர்ந்தெடுக்கிறாயோ, அவனும் அதே ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வான். அந்தப் போரில் நீ வென்று விட்டால், நீயே இந்த ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள். அல்லது அவனால் கொல்லப்பட்டு, வீரனுக்குரிய சொர்க்கத்தை அடைவாயாக!’

துரியோதனன் சொன்னான், ‘என்னிடம் இருக்கும் ’கதை’யை ஆயுதமாகத் தேர்ந்தெடுக்கிறேன். என்னுடன் ‘கதை’ யுத்தம் செய்யத் தகுதியுடையவன் என்று, உன் சகோதரர்களுள் எவன் நினைக்கிறானோ, அவன் என்னுடன் போர் புரியட்டும். இந்த ‘கதை’யைக் கொண்டே, உன்னையும், உன்னைச் சார்ந்திருப்பவர்களையும் வெல்வேன். ‘கதை’ யுத்தத்தில், இந்திரனும் கூட எனக்கு நிகராக மாட்டான். ‘கதை’ யுத்தம் நடக்கட்டும்’.
துரியோதனன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரர், ‘நீயும் ஆண்பிள்ளைதானே; பேசுவதை விட்டு விட்டு, மடுவை விட்டு வெளியே வா!’ என்று கூறினார்.

இதைக் கேட்ட துரியோதனன், கோபத்தோடு, தண்ணீரைக் கலக்கிக் கொண்டே, தன் கையிலிருந்த ‘கதை’யுடன், கொடிய பாம்பு போலச் சீறிக் கொண்டே, மடுவிலிருந்து வெளியே வந்தான். அவன் கொல்லப்பட்டான் என்று நினைத்த பாண்டவர் தரப்பினர், பெரிதும் மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள். அவர்கள் பரிகாசம் செய்கிறார்கள் என்று நினைத்து, கோபம் கொண்ட துரியோதனன், ’பாண்டவர்களே! இந்தப் பரிகாசத்தின் பலனை அனுபவிக்கத்தான் போகிறீர்கள்’ என்று கூறினான்.

‘கதை’யைத் தூக்கிக் கொண்டு, கோபத்தில் உறுமிய துரியோதனனைப் பார்த்த பாண்டவர் தரப்பு வீரர்கள், எமனைப் பார்ப்பது போலவே நினைத்தார்கள். ‘யுதிஷ்டிரா! உங்களில் ஒவ்வொருவராக என்னை எதிர்த்து வாருங்கள். எல்லோரும் சேர்ந்து வருவது யுத்த தர்மம் அல்ல’ என்று மீண்டும் கூறினான்.

இதைக் கேட்டுக் கோபமுற்ற யுதிஷ்டிரர், ‘யுத்த தர்மம் பற்றி இப்போதாவது உனக்கு நினைவு வந்தது பெரிய விஷயம். அபிமன்யுவை எல்லோரும் சேர்ந்து கொன்றீர்களே! அப்பொழுது உனக்கு யுத்த தர்மம் பற்றிய நினைப்பு வரவில்லையா? ஆனாலும், யுத்த தர்மத்தில் இருந்து நழுவிட நான் விரும்பவில்லை. துரியோதனா! கவசத்தை அணிந்து கொள். எங்கள் ஐவரில், நீ யாருடன் போர் புரிய விரும்புகிறாயோ, அவனுடன் போர் புரியலாம். அவன் ஒருவனை நீ வென்று விட்டால், இந்தப் பூமி உனதாகட்டும். அவனால் கொல்லப்பட்டால், நீ வீர சொர்க்கத்தை அடைவாயாக. யுத்தத்தில் உன்னுடைய உயிரைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் உனக்குத் தர நான் தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்.

துரியோதனன், ‘யுதிஷ்டிரா! என்னுடைய ஆயுதமாக ‘கதை’யை நான் தேர்ந்தெடுக்கிறேன். உங்களில் யார் என்னோடு ‘கதா’ யுத்தம் செய்ய முடியும் என்று நினைக்கிறானோ, அவன் என்னுடன் போர் புரியட்டும். என்னுடைய பகையின் முடிவை நான் இப்போதே அடைவேன். ‘கதா’ யுத்தத்தில் எனக்கு நிகரானவன் இவ்வுலகில் எவனும் கிடையாது. எவன் தயாரோ, என்னை எதிர்த்து வரட்டும்’ என்று வீர முழக்கம் இட்டான்.

அதன் பின் நடந்த நிகழ்ச்சிகளை அடுத்த பகுதியில் காண்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2