ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 97

மேகலா : துரியோதனனின் இரு தொடைகளும் முறிந்து, அவன் பூமியில் சாய்ந்தான். அப்போது பீமன், கீழே விழுந்து கிடந்த துரியோதனனை அணுகினான். ‘மதி கெட்டவனே! சபையில் திரௌபதியை அவமானப்படுத்தியதன் பலனை இப்போது அனுபவிப்பாயாக!’ என்று சொல்லி விட்டு, துரியோதனனின் தலையை, தனது காலால் உதைத்தான். அதிலும் திருப்தியுறாமல், மீண்டும் மீண்டும் துரியோதனன் தலையைத் தனது காலால் புரட்டிப் புரட்டித் தள்ளினான். வெற்றிக் களிப்பில் கூத்தாடினான்.

பீமனின் கோரதாண்டவத்தைக் கண்ட யுதிஷ்டிரர், அவனைப் பார்த்து, ‘பீமா, உன் சபதம் நிறைவேறி விட்டது. இப்போது அவன் தலையை உன் காலால் உதைப்பது தர்மம் அல்ல. துரியோதனன் அரசன். நமக்கு உறவினன். அடிபட்டு வீழ்ந்திருக்கிறான். நீ அவனைக் காலால் உதைப்பது, தகாத செயல். அதைச் செய்யாதே!’ என்று கூறினான்.

இப்படி பீமனுக்கு அறிவுரை சொல்லி விட்டு, துரியோதனனைப் பார்த்து சொன்னார், ‘துரியோதனா! பீமனின் செயலைக் கண்டு கோபமடையாதே. எங்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் உனக்கு வந்தது. உன்னைக் கொன்று விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. இது தெய்வம் நமக்கு விதித்து விட்ட நிலை. உன் பேராசையினால் இந்த நிலையை நீ அடைந்திருக்கிறாய். நீயும் சரி, நாங்களும் சரி, விதியை மீற முடியாதது என்று உணர்ந்து, மனக்கலக்கமடையாமல் இருப்பாயாக’.
- என்று யுதிஷ்டிரர் கூறிக் கொண்டிருந்த போது, பலராமர் பெரும் கோபம் கொண்டவரானார்.

அவர் பீமனைப் பார்த்து, பீமா! சீ....! தூ....!’ என்று கடிந்து கொண்டு, ‘’கதை’ யுத்தத்தில், இடுப்புக்குக் கீழே அடிப்பது என்பது மிகவும் நிந்திக்கத் தக்கது. பீமன் செய்த இழிசெயல், இதுவரை யாரும் பார்த்திராதது. இடுப்புக்குக் கீழே அடிக்கக் கூடாது என்ற யுத்த விதியை மீறி இவன் நடந்து கொண்டது மிகவும் கேவலமான செயல்’.

இவ்வாறு மிகவும் கோபத்துடன் கூறிய பலராமர், தன்னுடைய ஆயுதமாகிய கலப்பையைக் கையில் ஏந்திக் கொண்டு, பீமனைக் கொன்று விடுவதற்காக அவனை நோக்கிப் பாய்ந்தார்.

இதைக் கண்ட கிருஷ்ணர், அவரைத் தன் இரு கைகளாலும் அணைத்துப் பிடித்துத் தடுத்தார். அவரை சமாதானப்படுத்தும் வகையில், கிருஷ்ணர் பேசத் தொடங்கினார். ‘தன்னுடைய வளர்ச்சி, நண்பர்களுடைய வளர்ச்சி, நண்பர்களுடைய தாழ்வு, இந்த நிலைகளில் மாறான நிலைகள் தோன்றினால், ஆபத்து நேரக் கூடும் என்பதை உணர்ந்து, அந்த ஆபத்தைத் தவிர்க்க முற்பட வேண்டும். பாண்டவர்கள் நமக்கு நன்பர்கள்; உறவினர்கள். அவர்கள், பகைவர்களால் பெரிதும் துன்பப்படுத்தப்பட்டார்கள். நமது நண்பர்களின் கை தாழ்ந்து போவது நமக்கு உயர்வல்ல. அந்த நிலையைச் சரி செய்வதுதான் நமது கடமை.

இது ஒரு புறமிருக்க, துரியோதனனின் இரு தொடைகளையும் பிளந்து அவனை மாய்ப்பதாக, பீமன் சபையில் சபதம் செய்து விட்டான். அதை நிறைவேற்றுவதுதான் க்ஷத்திரியர்களின் லட்சணம். அதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிற போது, அந்த வாய்ப்பை நாம் கெடுத்து விடக் கூடாது. மேலும், இரு தொடைகள் பிளக்கப்பட்டு அவன் உயிர் போகும் என்ற சாபத்தை மைத்ரேய ரிஷியிடமிருந்து, துரியோதனன் பெற்று விட்டான். இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும் பொழுது, இங்கு நடந்ததில் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை. நீங்களும் இதை பொறுத்தருள வேண்டும்’.

கிருஷ்ணர் கூறிய சமாதானத்தை பலராமர் ஏற்க மறுத்தார். ‘கிருஷ்ணா! அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் மனிதனுக்கு விதிக்கப்பட்ட தர்மங்கள். மூன்றையும், ஒன்றுக்கொன்று பாதிப்பில்லாமல், மனிதன் கடைப்பிடிக்க வேண்டும். இங்கோ பீமன், அறத்தைக் கொன்று விட்டான். இது இழிசெயல். இதை என்னால், சகித்துக் கொள்ள முடியவில்லை’.

இவ்வாறு தன்னை மறுத்துப் பேசிய பலராமரை நோக்கிக் கிருஷ்ணர் சொன்னார், ‘நீங்கள் கோபமில்லாதவர் என்றும், எல்லோரிடமும் அன்பு காட்டுகிறவர் என்றும் உலகத்தில் புகழ் பெற்றிருக்கிறீர்கள். ஆகையால், உங்கள் கோபத்தை தணித்துக் கொண்டு விடுங்கள். வஞ்சகத்தைக் கடைப்பிடிப்பவர்களை, வஞ்சகத்தினால் வீழ்த்துவதில் தவறில்லை. இந்த துரியோதனனால் தூண்டப்பட்ட கர்ணன், அபிமன்யுவின் வில்லை, பின்புறத்திலிருந்து வெட்டித் தள்ளினான். அதன் பின்னர் தான், அபிமன்யுவைப் பலர் சூழ்ந்து கொன்றனர். இப்படி வஞ்சக யுத்தம் புரிந்த துரியோதனனை வஞ்சகத்தினால் வீழ்த்துவதில் என்ன தவறு காண்கிறீர்? பீமனை வீழ்த்துவதற்காகத் துரியோதனன் மேலே எழும்பிய போதுதான், பீமன் அவன் தொடைகளை அடித்தான். பூமியில் நின்று யுத்தம் செய்த போது அவன் தொடைகளை பீமன் தாக்கவில்லை. துரியோதனன் வஞ்சகத்தினால் தான் வீழ்த்தப்பட்டான் என்று நீங்கள் நினைத்தாலும் கூட, பிறந்தது முதல் பாண்டவர்களுக்கு அவன் செய்து வந்திருக்கும் வஞ்சகங்களை எல்லாம் நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்டவனை, இப்படி வீழ்த்தியதில் தவறு காணாதீர்கள்’ என்று கூறினார்.

கிருஷ்ணரின் இந்த சாதுர்யமான பேச்சையும், கபடமான நியாயத்தையும் பலராமர் ஏற்க மறுத்தார். ‘கிருஷ்ணா! அதர்மமான யுத்தம் செய்தவன் என்ற பெயரை பீமன் உலகத்தில் இனி அடைவான். அவனுடைய புகழ் இன்றோடு மங்கியது. துரியோதனன், தர்மாத்மா! அவன் முறையாக யுத்தம் நடத்தினான். பீமனை இவ்வுலகம் இகழப் போகிறது’ - இவ்வாறு வெறுப்புடன் கூறி விட்டு, பலராமர் ரதத்தில் ஏறி துவாரகையை நோக்கிச் சென்றார்.
பலராமரின் பேச்சைக் கேட்டு பாண்டவர்கள் மிகவும் மனக்கவலை அடைந்தனர். ஆனால், பீமன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டவனாக தருமபுத்திரரைப் பார்த்து, ‘இனி இந்தப் பூமி உம்முடையதாயிற்று! நமக்குப் பல தீங்குகளை இழைத்த துரியோதனன் பூமியில் வீழ்ந்து கிடக்கிறான். உயர்ந்த செல்வங்களுடன் கூடிய இந்த பூமி உம்மால் ஆளத்தக்கது’ என்று சந்தோஷத்துடன் கூறினான்.

யுதிஷ்டிரர், ‘பீமா! உன்னுடைய பகை முடிந்து விட்டது. யாராலும் அவமதிக்க முடியாதவனே, நீ வெற்றி அடைந்தாய்; பகைவன் கொல்லப்பட்டான்’ என்று கூறினார்.

பாண்டவர் தரப்பு வீரர்களெல்லாம், பீமனைப் புகழ்ந்தும், துரியோதனனை இகழ்ந்தும் பேசினர். அப்போது கிருஷ்ணர், ‘மன்னர்களே! வீழ்த்தப்பட்டிருக்கிற பகைவனை இனி நாம் சொற்களால் தாக்கக் கூடாது. மந்த புத்தியுள்ள துரியோதனன் வீழ்த்தப்பட்டான். இவனை இனிமேலும் துன்பப்படுத்துவதில் அர்த்தமில்லை’ என்று கூறினார்.

அப்பொழுது துரியோதனன், மிகவும் சிரமப்பட்டுத் தனது இரு கைகளால், தன் உடலைத் தாங்கிக் கொண்டு, சற்றே மேலே எழும்பி, கிருஷ்ணரை ஏறிட்டுப் பார்த்து, கடுமையான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான்.

அவன் என்ன பேசப் போகிறான் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2