ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 100

 மேகலா : காந்தாரியின் குரோத உணர்வைக் குறைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி, யுதிஷ்டிரர், கிருஷ்ணரிடம் மேலும் என்ன கூறினார் என்று இப்போது பார்ப்போம். ‘கிருஷ்ணரே! ஜனார்த்தனரே! எவராலும் அடைய முடியாத வெற்றி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உம்முடைய உதவி இல்லாமல், துரியோதனன் சேனை என்ற சமுத்திரத்தை எங்களால் கடந்திருக்க முடியாது. எங்களுக்காக இந்த யுத்தத்தில், எவ்வளவோ அடிகளையும் தாங்கிக் கொண்டு, இந்த மாபெரும் வெற்றியையும் கிடைக்க உதவி செய்துள்ளீர். அந்த வெற்றி வீணாகப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நீரே.

‘கிருஷ்ணரே! தன் மகன் கொல்லப்பட்ட விதத்தை நினைத்து, காந்தாரி மிகவும் கோபம் கொண்டிருப்பாள். உங்கள் ஒருவரால் தான் அவளுடைய மனதை சமாதானப்படுத்த முடியும். காந்தாரி, சிறந்த புண்ணியவதி; பெரும் தவங்களைப் புரிந்தவள். அவள் பார்வை ஒன்று போதும்; எங்களையெல்லாம், எரித்து சாம்பலாக்கி விட. எங்களுக்கு, அவளைப் பார்ப்பதற்கும் கூட சக்தியில்லை. எங்கள் நன்மையை விரும்புகின்ற நீர், முதலில் சென்று, காந்தாரியிடம் பேசி, அவளை சமாதானப் படுத்தி, அவள் மனதில் எரியும் கோபத் தீயை அணைத்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வியாசரும் அங்கு இருப்பார். நீங்கள் தான், இந்தச் சிக்கலிலிருந்தும் எங்களைக் காப்பாற்ற வேண்டும்’.

தருமனின் வேண்டுகோளை ஏற்ற கிருஷ்ணர், தனது தேரில் ஏறிப் புறப்பட்டுச் சென்று, திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்தார்.

மேகலா : கிருஷ்ணா….. தர்மயுத்தம்…., தர்மயுத்தம் என்று துரியோதனன், திருப்பித் திருப்பிச் சொல்கிறானே…… ‘தர்மம்’ என்ற வார்த்தையையே உச்சரிக்கத் தகுதி இல்லாதவன். தன் பக்கம் 100 சகோதரர்கள், பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சகுனி, கர்ணன், திருதராஷ்டிரன், விதுரன் என்று ஏகப்பட்ட ஆட்களை கையில் வைத்துக் கொண்டு, ‘பஞ்ச பாண்டவர்’ என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு, பஞ்சத்தில் வாழ்ந்த பாண்டவர்கள் என்ற வெறும் ஐந்து பேரை மட்டும் எதிர்ப்பது எந்த வகையில் தர்மம்….? இங்கு, அடித்தளத்திலேயே தர்மத்தைக் காணோம். அடுத்து, பாண்டவர்கள், சிரிக்கக் கூடாது; பாண்டவர்கள் விளையாடக் கூடாது; சாப்பிடக் கூடாது; ஏன், உயிரோடேயே இருக்கக் கூடாது என்று விரட்டி…., விரட்டி, அவர்களை பதை பதைக்கச் செய்தவன். இன்று, தர்மயுத்தத்தைப் பற்றிப் பேசுகிறானே. கிருஷ்ணரின் தந்திரத்தால் மட்டுமே ஜெயித்தார்கள்; நேர்மையான யுத்தம் புரிந்தால், என்னையும் வீழ்த்தியிருக்க முடியாது என்கிறானே. பின் எதற்காக சூதாட்டம் ஆடி கவிழ்த்தினான். ‘இவன் பேசுவான்’; ‘தேவர்கள் பூமாரி பொழிவார்கள்’. என்னால் சகிக்கவே முடியவில்லை, கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வசனம் நல்லாயிருந்திச்சி என்று clap பண்ணினார்கள். சில திரைப்படங்களில் வில்லன்கள் பேசும் ‘டயலாக்’ பெரிதும் பேசப்படுமே…. ‘செல்லம்….. கூடாது……கூடாது…., நீ ஏன் பயப்படுற’ – என்று பிரகாஷ்ராஜ் சொல்லும் போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள் இல்லையா; அது போல் தான் இதுவும்….!

மேகலா : பாண்டவர்களும், கிருஷ்ணரும் வெட்கித் தலை குனிந்தார்கள் என்று சொல்கிறார்களே!

கிருஷ்ணர் : என்னதான் பாண்டவர் படை, சிறந்த படை; திறமையான வீரர்கள் என்றாலும், பிதாமகர் பீஷ்மரையும், ‘சிறந்த வீரர்’, ‘ஆச்சாரியார் துரோணரையும்’, கர்ணனையும் முறையற்ற முறையில் தானே வென்றார்கள். அதை நினைக்கும் போது, சற்றே வருத்தம் வந்தது. இந்த நிகழ்ச்சி நடந்து வெகு காலம் ஆனதால், கோபத்தோடு நிறுத்திக் கொள்கிறாய். தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையில் நடந்த போர் என்று வாசகர்கள் பார்ப்பதாலும், உன் மனதிற்கினிய தோழன் கிருஷ்ணனை நீ, ‘ஹீரோ’வாகப் பார்ப்பதாலும், இவ்வளவு கோபப்படுகிறாய். வேறு வழியில்லை. இப்படித்தான் அவர்களை முடிக்க முடியும். பாண்டவர்கள், நான் ஆலோசனை சொல்வதை எந்த நேரத்திலும் நிபந்தனையின்றி கேட்பார்கள்.

அடுத்து, என் ஒருவன் உதவியை மட்டும் நம்பியே என்னிடம் சரண் புகுந்தார்கள். கௌரவர் தரப்பில், பிதாமகர் உட்பட இத்தனை வீரர்கள் இருந்தும், சமாதானத்திற்கான வழிகளை எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும், துரியோதனன் ஒருவனின் பொறாமை, பாலில் துளி விஷம் போல, அவர்கள் தரப்பு திறமையனைத்தையும் நாசம் செய்து விட்டது. நானே சென்று எடுத்துச் சொல்லியும், சொன்னவர்களை அவமானப்படுத்தும் துரியோதனனின் தர்மம் இதுதான். ‘தினை விதைத்தவன் தான், தினையை அறுவடை செய்வான்; வினையை விதைத்து விட்டு, பலனை அள்ள வந்த இடத்தில் தர்மம் பேசுவது, தேவர்களிடம் ‘அப்ளாஸ்’ வாங்குவதற்குத்தான் பயன்படும். விதி அப்படி அல்ல. வாழ்க்கையில் தர்மம் தவறியவன்; செயல்களைச் செய்யும் போது, தர்மம் தவறியவன், செயலின் பயனை பெறும் போது மட்டும் தர்மம் பேசுவது கேலிக்குரியது. மறக்காமல் ஒன்றை நினைவில் கொள் மேகலா; தர்மம் தவறாதவர்களுக்கு, தெய்வம் துணை நிற்கும்; உன் வாழ்க்கையானாலும் சரி; அரசியல் போர்க்களம் என்றாலும் சரி! கவலையை விடு, கோபத்தை விடு; நானிருக்கிறேன்.

மேகலா : கிருஷ்ணா! கிருஷ்ணா! எனக்கு இது போதும், கிருஷ்ணா. என் எத்தனையோ கேள்விகளுக்கு, ‘நானிருக்கிறேன்’ என்ற இந்த ஒற்றைச் சொல் விடையளிக்கிறது கிருஷ்ணா….!

(அஸ்வத்தாமா தளபதியாகும் தருணத்துடன் அடுத்த பகுதி தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1