ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 101

 தளபதி அஸ்வத்தாமா

மேகலா : திருதராஷ்டிர மன்னனின் அரண்மனையை அடைந்த கிருஷ்ணர், அங்கே இருந்த வியாசரையும், காந்தாரியையும், திருதராஷ்டிரரையும் நமஸ்கரித்து, திருதராஷ்டிரரின் கைகளைப் பிடித்து அழுது, பிறகு பேசலுற்றார். ‘அரசே! நடந்தது அனைத்தையும் நீர் அறிவீர். இன்னும் நடக்கப் போவதையும் நீர் அறிவீர். பாண்டவர்கள் உங்கள் மனதுக்கு இதமானதையே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். க்ஷத்திரிய குலத்திற்கு எந்த நாசமும் வந்து விடக் கூடாது என்று பெரும் முயற்சி எடுத்தார்கள் என்பதை நீரும் அறிவீர்.

‘அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பகுதி ராஜ்ஜியத்தை வைத்துக் கொண்டு அமைதியாக வாழ அவர்களை அனுமதித்திருக்கலாம். அதை விடுத்து, உமது மகனால் சூதாட்டத்திற்கு அழைக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, காட்டிற்கும் விரட்டப்பட்டார்கள். அதன் பிறகு, வனத்திலும் நிம்மதியின்றி துன்பங்களை அனுபவித்தார்கள். தலைமறைவு வாழ்வு முடிந்த பிறகாவது, அவர்களுக்கான ராஜ்ஜியத்தை அளித்திருக்கலாம். நானே நேரில் வந்து, ஐந்து கிராமங்களையாவது தந்து விடுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டேன். ஆனால், நீரோ உம்முடைய மகன் சொல்லைக் கேட்டு, எனது வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. அதன் விளைவுதான், இத்தனை இழப்புகளுக்கும், க்ஷத்திரியர்களின் அழிவுக்கும் காரணமாகிப் போயிற்று. இதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

‘பீஷ்மர், துரோணர், விதுரர், முதலானோர் எடுத்துச் சொல்லியும் நீர் அதனை செவி மடுக்கவில்லை. காலத்தின் சக்தியை விட, வேறு எதை இதற்குக் காரணமாகக் காட்டுவது? இந்த யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு இப்பொழுது நீர் பாண்டவர்கள் மீது பழி சுமத்தக் கூடாது. நீர், பாண்டவர்கள் பால் அன்பு காட்ட வேண்டும். உங்கள் வம்சம் வாழையடி வாழையாகத் தொடர வேண்டும். உங்களுக்குப் பின், உங்களுக்குப் பிதுர் காரியங்களைச் செய்வது கூட பாண்டவர்களைப் பொறுத்துத்தான் இருக்கின்றன. ஆகையால் பாண்டவர்கள் மீது நீங்கள் கோபம் கொள்ளக் கூடாது.

‘தருமபுத்திரருக்கு, உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. தனக்கு தீங்கிழைத்தவர்களுடன் தான் அவர் யுத்தம் புரிந்தார். யுத்தத்தில் ஜெயித்து விட்டோம் என்ற சந்தோஷம் அவருக்கில்லை. மாறாக, தன்னால் இத்தனை நாசம் நேர்ந்து விட்டதே என்ற கவலை தான் அவருக்கு இருக்கிறது. உம்மையும், காந்தாரியையும் நினைத்து அவர் மனம் பெரிதும் வேதனைப்படுகிறது. அப்படிப்பட்ட மனிதர் மேல் உமக்கு எந்த விதமான குரோத உணர்வும் உண்டாகாமல் இருப்பது தான் நியாயம்’.

– என்று திருதராஷ்டிர மன்னனிடம் கூறிய கிருஷ்ணர், காந்தாரியைப் பார்த்து, சில வார்த்தைகள் சொன்னார். ‘கடுமையான விரதங்களை முறையாகக் கடைப்பிடித்து வரும் பெண்மணியே! இவ்வுலகில் உனக்கு நிகரான வேறு ஒரு பெண்மணி இல்லை என்பது என் கருத்து. அன்று சபையில் பெரும் வஞ்சனை நடந்த போது, இரு தரப்பினருக்கும் எது நியாயமோ அதைத் தயங்காமல் நீ பேசினாய்.

அன்று உன்னுடைய உபதேசங்களை துரியோதனன் கேட்கவில்லை. அப்போது, அவனைப் பார்த்து நீ, ‘மூட மகனே! எங்கு தர்மம் இருக்கிறதோ, அங்கு தான் வெற்றி கிட்டும்’ என்று எச்சரித்தாய். அந்த எச்சரிக்கை தான் இன்று மெய்யாகி இருக்கிறது. ஆகையால், உன் மனதை சோகத்தில் ஆழ்த்துவது தகாது. பாண்டவர்கள் மேல் கோபம் கொள்வது, உன் பெருமைக்குகந்த செயல்கள் அல்ல. நீ கோபம் கொண்டால், பூமியே கூட, உன் பார்வையால் எரிக்கப்பட்டு விடும். பாண்டவர்கள் எம்மாத்திரம்? அவர்கள் மீதான உன் கோபத்தை தணித்து விடு. உன் மகன் செய்த அநீதிகளை நினைத்துப் பார்த்து, பாண்டவர்கள் பக்கமே நியாயம் இருந்தது என்பதை உணர்ந்து, அவர்கள் மேல் நீ அன்பையும், பாசத்தையும் பொழிய வேண்டும்’.

கிருஷ்ணர் கூறிய அறிவுரையைக் கேட்ட காந்தாரி, ‘கேசவரே! நீர் கூறியது சரிதான். நானும் முதலில் பாண்டவர்கள் மீது கோபம் கொண்டு நிலை தடுமாறித்தான் இருந்தேன். நீர் கூறிய வார்த்தைகளின் நியாயம் என்னை யோசிக்க வைத்து, என் கோபத்தைத் தணித்திருக்கிறது. மகன்களை இழந்து விட்டு தவிக்கும் என் கணவருக்கு இனி நீரே கதி’ என்று கூறி விட்டு, துக்கத்தைத் தாங்க முடியாதவளாகிக் கதறி அழுதாள்.

காந்தாரியையும், திருதராஷ்டிர மன்னனையும் சமாதானப்படுத்திய கிருஷ்ணர் மனதில், அஸ்வத்தாமா அன்றிரவு ஒரு பெரும் தீச்செயலைச் செய்ய திட்டமிட்டிருப்பது தோன்றியது. இந்த எண்ணம் தோன்றியவுடன் கிருஷ்ணர், வியாசரையும், திருதராஷ்டிரரையும் வணங்கி விடை பெற வேண்டிய அவசியம் வந்திருப்பதாகக் கூறினார். அஸ்வத்தாமா மனதில் கெட்ட எண்ணம் தோன்றி, பாண்டவர்கள் அனைவரையும் இரவு நேரத்தில் கொன்று விடுவது என்ற யோசனை ஏற்பட்டிருக்கிறது. அதனால் நான் உடனே செல்ல வேண்டும்; எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணர் வேகமாகச் சென்று, பாண்டவர்களை அடைந்து, நடந்த நிகழ்ச்சிகளை அவர்களிடம் விவரித்தவுடன், அவர்கள் அனைவரும் அன்று இரவை எச்சரிக்கையுடனேயே கழிப்பதென முடிவு செய்தார்கள்.

பாண்டவர்கள் தாங்கள் தங்கியிருந்த நதிக் கரையில் இவ்வாறு முடிவெடுத்த போது, தான் அடிபட்ட இடத்திலேயே வீழ்ந்து கிடந்த துரியோதனனை, சஞ்சயன் மீண்டும் சென்று சந்தித்தான். தொடைகள் முறிக்கப்பட்டிருந்த துரியோதனன், தாங்கொணாத வேதனையைச் சகித்துக் கொண்டு, பூமியை விட்டு எழுந்திருக்கவும் முடியாமல், நான்கு திசைகளையும் நோக்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். கோபத்தின் காரணமாகக் குங்குமம் போல் சிவந்து விட்ட அவனுடைய கண்கள், சஞ்சயனை ஏறிட்டு நோக்கின. தாங்க முடியாத ஆத்திரத்தினால் ஒரு வெறி கொண்ட மதயானை போல, தனது இரு கைகளாலும் பூமியை மீண்டும் மீண்டும் ஓங்கி ஓங்கி அடித்தான். சஞ்சயனிடம், யுதிஷ்டிரரைக் கடுமையாக நிந்தித்து விட்டு, பற்களை நறநறவென கடித்துக் கொண்டு, மேலும் சில வார்த்தைகளைக் கூறத் தொடங்கினான். ’சஞ்சயா! என் நிலையைப் பார்! நமது குலத்திற்கே காவலராகிய சந்தனுவின் மகன் பீஷ்மரிடத்திலும், அஸ்திரம் ஏந்தியவர்களில் சிறந்தவர்களாகிய கர்ணன், துரோணர், அஸ்வத்தாமா, சல்யன், க்ருதவர்மா, ஆகியவர்களிடத்திலும், சிறந்த வீரர்களாகிய கிருபர், சகுனி ஆகியோரிடமும், இந்த யுத்தத்தில் வெற்றியைத் தேடித் தரும் பொறுப்பை ஒப்படைத்த நான், இன்று இந்த நிலையை அடைந்திருக்கின்றேன். அப்பேர்ப்பட்ட வீரர்களால், வெற்றியைத் தேடித் தர முடியவில்லை என்றால், அதற்குக் காலத்தின் கோலத்தைத் தவிர வேறு எதைக் காரனமாகச் சொல்வது? சஞ்சயா! காலத்தைக் கடந்து எவனும் எந்த ஒரு செயலும் புரிய முடியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?’

மேலும் சில வார்த்தைகளை துரியோதனன், சஞ்சயனிடம் கூறுகிறான். அவை என்னவென்று அடுத்த பகுதியில் காண்போம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1