ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 102

மேகலா : சஞ்சயனிடம், துரியோதனன் மேலும் சில வார்த்தைகளைப் பேசினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். என்ன பேசினான் என்று இப்போது பார்க்கலாம்.

‘இந்த யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்திருக்கிற வீரர்கள் அனைவரிடமும், துரியோதனன், பீமனால் யுத்த விதிமுறைகளை மீறி தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டான் என்று நீ எடுத்துச் சொல்ல வேண்டும். கர்ணன், பீஷ்மர், துரோணர், பூரிசிரவஸ் ஆகியோரையெல்லாம் குரூரமான முறைகளால் கொலை செய்த பாண்டவர்கள், என்னையும் நிந்திக்கத் தக்க முறையிலேயே வீழ்த்தினார்கள் என்று நீ எல்லோரிடமும் கூறுவாயாக! யுத்த சாஸ்திரத்தை அறிந்த எவன் ஏற்கப் போகிறான், பீமனுடைய செயலை?

‘சஞ்சயா! நீ சென்று என் தாயிடமும், தந்தையிடமும், துரியோதனன் யுத்த பூமியில் அநியாயமான முறையில் வீழ்த்தப்பட்டானே தவிர, வெல்லப்படவில்லை என்ற செய்தியைத் தெரிவிக்க வேண்டும்.

‘சஞ்சயா! எடுத்த காரியத்தை முடிக்கிற கிருதவர்மாவுக்கும், புண்ணியாத்மா கிருபருக்கும், பெரும் பாக்கியம் பெற்ற அஸ்வத்தாமாவுக்கும் நான் சொன்னதாக ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். பாண்டவர்களை நம்ப வேண்டாம். யுத்த தர்மம் முழுவதையும் மீறி நடந்து கொண்ட அவர்கள் உங்கள் நம்பிக்கையைப் பெறுவதற்கு அருகதை அற்றவர்கள் என்று சொல்லி அவர்களை எச்சரிப்பாயாக. சஞ்யனிடம் சொல்லி அனுப்பிய செய்தியை, அங்கிருந்த தூதர்களிடமும் சொல்லி, எல்லோருக்கும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள்’ என்று கூறினான்.

தன்னுடைய சகோதரியான துச்சலையிடம், ஜயத்ரதன் மாண்டதையும், அவள் தமையன்மார்கள் மாண்டதையும் எவ்வாறு எடுத்துக் கூறப் போகிறீர்கள். என் மனைவி, தன் மகன் இறந்த துக்கத்தை எப்படி தாங்கப் போகிறாள். என் நன்பனாகிய சார்வாகனிடம் யுத்த களத்துச் செய்திகளை எடுத்துச் சொல்லுங்கள்’ என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினான். அவர்கள் இதனைக் கேட்டு கண்ணீர் சிந்தினார்கள். அதன் பிறகு, மேலே கூறிய செய்திகளை, விரிவாக அஸ்வத்தாமாவிடம் எடுத்துக் கூறினார்கள்.

துரியோதனன் கூறி அனுப்பிய செய்திகளைக் கேட்டு மிகவும் மனவருத்தம் கொண்ட கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் விரைவாகச் சென்று, துரியோதனனை அடைந்தார்கள். அவனுடைய நிலை அவர்களைக் கலங்க வைத்தது.

அஸ்வத்தாமா துக்கம் தாங்க முடியாமல், ‘இது என்ன கோலம்? உன்னுடைய குடை எங்கே? வெண்சாமரம் எங்கே? புல்லுடன் கூடிய புழுதியில் உன் முகம் கிடப்பதா? இது என்ன காட்சி? இந்திரனையும் மிஞ்சும் செல்வம் படைத்திருந்த நீ, இன்று இந்த நிலையை அடைந்து இருப்பதால், இந்த உலகில் செல்வம் என்பதும், மேன்மை என்பதும் சாஸ்வதமல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொண்டேன்’.

அஸ்வத்தாமா பேசியதைக் கேட்ட துரியோதனன், தனது கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசினான். ‘நான் நேர்மையான முறையில் கொல்லப்படாமல் வஞ்சனையினால் தான் வீழ்த்தப்பட்டேன். என்னுடைய அழிவினால் நீங்கள் மனவருத்தம் அடைய வேண்டாம். க்ஷத்திரியனுக்குரிய மரணத்தை அடைந்திருக்கும் என்னை நினைத்து துக்கமடையக் கூடாது’ என்று சொன்னான். இதைக் கேட்ட மூவரும் பெரும் துன்பத்தை அடைந்தார்கள்.

அஸ்வத்தாமாவுக்குக் கோபம் பொங்கி எழுந்தது. கண்களில் நீர் வழிய அவன் பேசலுற்றான். ‘அரசனே! நமது எதிரிகளால் என் தந்தை மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். ஆனால், இப்பொழுது உன்னைப் பார்க்கும் பொழுது வரும் வருத்தம், என் தந்தையை நினைத்தும் கூட எனக்கு ஏற்படவில்லை. அரசே! நான் இப்பொழுது சத்தியமாகச் சொல்லுகிற வார்த்தைகளைக் கேள்! மன்னனே! தானத்தினாலும், சேவையினாலும், தர்மத்தினாலும், புண்ணிய காரியங்களினாலும் நான் ஏதாவது பலனை அடைந்திருக்கிறேன் என்றால், இன்றிரவு எல்லாப் பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் அழிக்க அந்தப் பலன் உதவட்டும். மன்னா! எனக்கு அனுமதி கொடு! இந்த எதிரிக் கூட்டத்தை இன்றிரவு மிச்சம் மீதியில்லாமல் நான் நாசம் செய்கிறேன். இந்த நிலைக்கு, பழிக்குப் பழி வாங்காமல் என் மனம் ஆறாது’.

அஸ்வத்தாமாவின் கோபத்தைக் கண்டு துரியோதனனுக்கு மனத்திருப்தி ஏற்பட்டது. கிருபரைப் பார்த்து, ‘பெரியவரே! துரோணரின் மகனாகிய அஸ்வத்தாமாவை இப்பொழுது நான் சேனாதிபதியாக அமர்த்துகிறேன். அவனுக்கு அபிஷேகம் செய்யுங்கள். அவன் நினைக்கிற காரியத்தைச் செய்து முடிக்கட்டும்’ என்று கூறினான்.

கிருபர், துரியோதனன் விரும்பியபடியே அஸ்வத்தாமாவிற்கு அபிஷேகம் செய்வித்தார்.

அஸ்வத்தாமா, துரியோதனனைக் கட்டிக் கொண்டு, பெரும் கர்ஜனை புரிந்து, பீறிட்டு வரும் கோபத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றான். மற்ற இருவரும் அவனைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட துரியோதனன், தன்னந்தனியே மீண்டும் அந்தக் கானகத்தில் விடப்பட்டான்.

மேகலா : என்ன கிருஷ்ணா, இது….?

கிருஷ்ணர் : என்ன….? ஆரம்பத்திலிருந்து துரியோதனன் செய்த அட்டூழியங்கள் என்னென்ன…. இவன், வர்றவன், போறவனிடையே எல்லாம், திரும்பத் திரும்ப பீமன், தொடையில் அடிச்சுட்டாண்ணு புலம்பறானேண்ணு பார்க்குறியா, மேகலா…? இவன் இப்படித்தான்; எதுவென்றாலும் extreme-ஆப் புலம்பறதுதான் துரியோதனன் style…. ராஜசூய யாகம் நடந்த போதும் பார்த்தாயல்லவா? ஏதோ பரிசுப் பொருளையே…. பார்க்காத ‘பக்கி’ மாதிரி சகுனியிடம் புலம்புவான். வெட்கம் கெட்டுப் போய், திருதராஷ்டிரனிடம், அந்த செல்வமனைத்தும் எனதாக வேண்டும் என்பான். செல்வமே இவன் பார்த்தறியாதவனா? இன்று 11 அக்ஷௌஹிணிக்குத் தலைவன், இந்திரன் போல் வலம் வந்தவன் என்று புலம்புகிறான். இப்பொழுதுதான் இவனுக்கு ஞாபகம் வருகிறதா….? ‘இந்திர சபையில், தேவேந்திரன் மாதிரி வீற்றிருந்தோம்’ என்று. பீஷ்மரிலிருந்து எல்லோரும் இவனுக்கு செல்வம் கொடுத்தார்கள். இன்று தன் பெருமையைப் பேசி, பாண்டவர்கள் வேண்டுமென்றே இவனை முறையற்ற முறையில் யுத்தம் புரிந்ததாக பரப்பி, பரிதாபத்தைத் தேடுகிறான். திரௌபதியின் மீது கை வைத்த போதே இவனுக்கு முடிவு எழுதப்பட்டு விட்டது. ஒரு மஹரிஷி என்ற மட்டு மரியாதை இல்லாமல், மைத்ரேயரிடம் தன் தொடையைக் காட்டினானே. இந்த தேவகுமாரன், பண்பில் சிறந்தவன், இன்று வேதம் படித்தேன், அத்யயனம் பண்ணினேன் என்கிறான். அவன் தொடையிரண்டும் முறிக்கப்பட்டு விட்டது.

‘அல்லற்பட்டு ஆற்றாது ஏழை அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை’

– என்று தெய்வப் புலவர் எழுதியிருக்கிறார். ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள். பீஷ்மரும் துரோணரும் என்ன செய்தார்கள்? அவர்கள் ஏன் அநியாயமாகக் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கலாம். திரௌபதி, சபையில் அவமானப்படுத்தப்பட்ட போதே துரியோதனன் கொல்லப்பட வேண்டியவனே என்று நாம் எப்படி தீர்மானிக்கிறோமோ, அதே போல, அந்தச் செயல் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருந்தவர்களும், தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

நேர்மையான முறையில் யுத்தம் புரிந்தால், கிருஷ்ணன் கூட என்னை ஜெயிக்க முடியாது என்று ‘பம்மாத்து’ பேசுகிறான். நேர்மையான முறையில் வாழ்ந்தேன். என்னை இப்படி வீழ்த்தினாயே என்று நேருக்கு நேர் என் கண் பார்த்து பேசுவானா? எப்படி வேண்டுமானாலும் நான் வாழ்வேன்; என்னை நீ ஜெயிக்கவே கூடாது; நீ தோற்பதற்கே பிறந்தவன் என்ற நீதியில் பேசுகிறான். சொல்லட்டும்; ஊரைக் கூட்டிப் பேசட்டும். அஸ்வத்தாமா என்ற விஷப் பாம்பை வளர்க்கட்டும். ‘விஷத்துக்கு விஷம் தான் முறிவு’. உன் கண்களில் கொப்பளிக்கும் கோபம், ‘கிருஷ்ணன் தான் சகலமும்’ என்று காட்டுகிறது.

மேகலா : காந்தாரியையும், திருதராஷ்டிரனையும் கூட கிருஷ்ணன் சென்று தான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது.

கிருஷ்ணர் : சரி! அவர்களுக்கு இருப்பது புத்திர சோகம். நம் பக்கம், தப்பே இல்லாமல் இல்லை. சரி! அஸ்வத்தாமா என்ன செய்யப் போகிறான் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1