கொரோனா படுத்தும் பாடு - பாகம் 1
கிருஷ்ணர் : ஹாய் மேகலா! என்ன இவ்வளவு தூரம்….., நேற்றுத்தானே வாகனங்களைப் பற்றிப் பேசிப் பேசி ‘சிக்கு புக்கு ரயிலே’ என்று பாட்டுப் பாடி ஓய்ந்திருக்கிறாய்….. அதற்குள் என்ன news வாசித்து விட்டாய்…. இத்தனை அவசரமாய் அரட்டையப் போட வந்ததன் காரணம் என்ன….?
மேகலா : கிருஷ்ணா….. நீ அறியாதது ஒன்றும் இல்லை. இந்த கொரோனா ‘பீரியடை’ கடக்கும் முன், எத்தனை பேரை இது தாக்கப் போகிறதோ என்று பயந்து கொண்டிருந்தோமா….. தாக்கி விட்டது கிருஷ்ணா…. நல்ல மனமுடையோரையெல்லாம் அசைத்துப் பார்க்கிறது…..
கிருஷ்ணர் : நீ இவ்வளவு புலம்பும்படிக்கு யாரைத் தாக்கி விட்டது…?
மேகலா : யார் குரலைக் கேட்டால், ஆயர்பாடிக் கண்ணன் கூடத் தூங்குவானோ…, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்டால்….., புல்லாங்குழலில் புகுந்து வரும் காற்று கூட பம்மிப் போகுமோ;…., அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்டால்….., இலையின் சலசலப்பு கூட மென்மையாகிப் போகுமோ…., அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்டால்….., நதியின் நீர்ச்சுழல் கூட பேச்சு மூச்சு இல்லாமல் போகுமோ….., அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்; யார் குரலைக் கேட்டால்…., கோவில் மணி ஓசை கூட சிணுங்கி ஒலிக்குமோ…., அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். கொலுசு சப்தம் கூட, இவர் குரலைக் கேட்டால், சிரித்துத்தான் பேசும்…… பலத்த மழையின் போது கேட்கும் இடியோசை கூட, இவர் குரலுடன் ரிதமாய்த்தான் ஒத்துப் போகும்….. இவர் சிரித்தால், இளையராஜாவின் பியானோவும் சிரிக்கும்; காதலில் குழைந்தால், குன்னக்குடியாரின் வயலினும் கொஞ்சிப் பேசும் கிருஷ்ணா….. ‘சர்வோதயா’ rose milk குடிக்கும் போது, straw-வில் உறியும் பால் அப்படியே தொண்டையைக் குளிர்வித்து இதமாய் நெஞ்சுக்குள் பரவுமே…. அது மாதிரி இவர் பாடலைக் கேட்கும் போது, காதுக்குள் புகுந்து, அப்படியே உடல் முழுவதும் பரவும் இதமிருக்கிறதே…., அந்த சுகத்தை அனுபவித்தால் தான் புரியும் கிருஷ்ணா…. அப்பேர்ப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரருக்கு, கொரோனா தொற்று தாக்கி, இன்னும் I.C.U-விலிருந்து வெளியில் வர முடியாமல் இருக்கிறார் கிருஷ்ணா…. (இன்றைய தேதியில் அவர் உயிரோடு இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே).
கிருஷ்ணர் : S. P. பாலசுப்ரமணியத்தைச் சொல்லுகிறாயா, மேகலா…. உலகமே அவருக்காக பிரார்த்தனை பண்ணும் போது, கொரோனாவெல்லாம் ஓட்டமாய் ஓடி விடும்….. ஆமாம், அவர் பாடினால், உனக்கு இவ்வளவு பிடிக்குமா….?
மேகலா : பிடிக்கும்…..மாவா…..? கிருஷ்ணா….. ‘இயற்கையென்னும் இளைய கன்னி….’ பாட்ட நீ கேட்டிருக்கியா….?
கிருஷ்ணர் : ம்…… என்ன….. பாட்டு….?
மேகலா : ‘ஆயிரம்…. நிலவே…..வா….. ஓராயிரம் நிலவே வா…..’
கிருஷ்ணர் : இதெல்லாம் எந்த வருஷத்து பாட்டு….?
மேகலா : ஏன் கிருஷ்ணா….. என் கல்லூரி பருவத்து பாட்டு….
கிருஷ்ணர் : அட….. உன் ‘டீன் ஏஜ்’ காலத்துப் பாட்டுக்கள். அதனால் தான் உனக்கு S. P. B – யின் குரல் பிடிக்கிறது….
மேகலா : சரி, ஒரு challenge ஆகக் கூடச் சொல்கிறேன் கிருஷ்ணா…. நீ புல்லாங்குழலை எடுத்து வாசி….. பக்கத்தில் S. P. B – யை ‘ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக…., செவ்வாய் கோவைப் பழமாக’ – என்று பாடச் சொல்….. நீயே அவர் குரலில் ‘ஞாயிறு’ பாட்டைக் கேட்டு, புல்லாங்குழலை இசைக்க மறந்து, மயங்கிப் போவாய்…..
கிருஷ்ணர் : நீ ரொம்பத்தான் ஓவராய் பீலா வுடுகிறாய்….. அவர் குரல் எனக்கும் பிடிக்கத்தான் செய்யும்….. ஆமாம்…., ‘ஞாயிறு என்பது கண்ணாக’ T. M. S. பாடிய பாட்டல்லவா…..
மேகலா : கிருஷ்ணா! ‘காதலன்’ படத்தில், இந்தப் பாடலை S. P. B. பாடியிருப்பார் கிருஷ்ணா….. அப்படியே…., நம்மைக் கரைய வைத்து விடுவார்….
கிருஷ்ணர் : அந்தப் புல்லாங்குழலின் இனிமையை, குற்றால சாரலின் இதமான குளிர்வினை, உயிரையே வருடிக் கொடுக்கும் பட்டுத்துகிலின் மென்மையை, வயல் வரப்பில், நெல் நாற்றுக்களிடையே தவழ்ந்து வரும் சுகமான காற்றை, சாரலாய்த் தெறிக்கும் இதமான மழையின் துளியை, நேசிக்கும் ரசிகனின் மனதில் உருகும் ‘ஐஸ்க்ரீமை’, கடவுள் இன்னும் கொஞ்சம் பாடச் சொல்லிக் கேட்கிறார். இன்னும் பாடுவார்….. அந்தக் குயிலின் கானத்தை நாம் கேட்கலாம் மேகலா….
மேகலா : கிருஷ்ணா…. நீ ஏதோ கவிதை சொல்லுகிறாய் என்று நினைத்தேன். S. P. B – யைப் பற்றித்தான் இத்தனை ஆனந்தமாய் சொன்னாயா…. நீ இது மாதிரி ரசனையாய் கவிதை சொல்லும் போது தான் அவரைப் படைத்திருக்கிறாய் போலும் கிருஷ்ணா…. அதுவும், தேன் கூட்டுத் தேனை எடுத்த கையோடு அவரைப் படைத்திருக்கிறாய். அதான், அவர் குரலில் அத்தனை இனிமை….
கிருஷ்ணர் : நீ சொன்னது சரிதான்….. S. P. B. என்னோட special படைப்புதான்….. சரி, அவருக்காக நீயும் prayer பண்ணு….. Complete-ஆ recover ஆகட்டும்……
(இந்தப் பதிவை S. P. B – யின் நினைவாக பதிவிடுகிறேன்)
(தொடரும்….)
Comments
Post a Comment