ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 106

 மேகலா : ஏன் கிருஷ்ணா! இவர்கள் நடத்திய யுத்தம்…., ஒரு யுத்தம்….! அதை இவர்களுடைய அரசனிடம் சொல்லிப் பெருமை வேறு படுகிறார்கள்? துரியோதனனுக்கு, மிச்சம் மீதியில்லாமல் பகைவர்கள் அழிந்தார்கள்; அந்தவரைக்கும் சந்தோஷம். ஐயோ…. நெஞ்சு கொதிக்குது கிருஷ்ணா… எனக்கு அஸ்வத்தாமாவைப் பிடிக்கவேயில்லை கிருஷ்ணா…. ஆச்சாரியர் துரோணரின் மகனா இவன்….?

கிருஷ்ணர் : என்ன செய்வது மேகலா….? அவன் தான் புலம்பும் போது சொல்கிறானே…. ‘உன்னுடைய தயாள குணத்தில் என்னுடைய தந்தை, நான், கிருபர் ஆகியோர் பெரும் செல்வத்துடன் வாழ்ந்தோம். எங்களுக்குப் பணியாட்களை நீ அமர்த்தினாய். உன்னுடைய தயையினால் நாங்கள் கற்றறிந்தவர்களுக்குச் சன்மானங்களை அளித்து, சிறந்த யாகங்களை நடத்தினோம் – இந்த வார்த்தைகளைக் கவனித்தாயா?

துரியோதனனிடம் எத்தனைதான் பொறாமை, பெரியோர்களை உதாசீனப்படுத்துதல் போன்ற குணங்கள் இருந்தாலும், வில் பயிற்சியில் சிறந்தவர்களை சிறந்த முறையில் கவனிக்கவும் செய்திருக்கிறான். அந்த விசுவாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

மேகலா : தர்மம் எது என்பதை மறக்குமளவுக்கா…? தூக்கத்தில் ஆழ்ந்தவன் தலையை அறுக்குமளவுக்கா…?

கிருஷ்ணர் : இந்த அஸ்வத்தாமாவின் நிஜ தரிசனத்தை இன்னும் வரும் சம்பவங்களில் நீ புரிந்து கொள்வாய் மேகலா…… மேகலா, நீ மேலே கதையைச் சொல்லு….

பாண்டவர்களே இல்லாமல் போக...

மேகலா : அஸ்வத்தாமாவின் இரவு நேரத் தாக்குதல் நடந்து முடிந்தது. பொழுது விடிந்தவுடன், திருஷ்டத்யும்னனின் தேரோட்டி, பாண்டவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றான். அங்கே அவர்களைப் பார்த்து, அஸ்வத்தாமா செய்த கொடூரச் செயலை அவன் விளக்கினான்.

‘அரசர்களே! இரவில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, எச்சரிக்கை இல்லாமல் இருந்த திரௌபதியின் புதல்வர்களும், துருபத ராஜனுடைய புதல்வர்களும் கொல்லப்பட்டார்கள். யானைகள், குதிரைகள், வீரர்கள் யாருமே மிச்சமில்லாத இடமாக பாசறை ஆக்கப்பட்டது. அங்கிருந்தவர்களில் தப்பிப் பிழைத்தவன் நான் ஒருவன் மட்டுமே. மிகுந்த முயற்சியின் பேரில் ஒரு வழியாகத் தப்பி நான் இங்கு ஓடி வந்தேன்’.

இந்தச் செய்தியைக் கேள்வியுற்றவுடன், யுதிஷ்டிரர், தன் நிலை தடுமாறி மயங்கியவராகத் தரையில் சாய்ந்தார். அவரை சாத்யகியும், பீமன், அர்ஜுனனும் தாங்கிப் பிடித்தார்கள். மூர்ச்சை தெளிந்த யுதிஷ்டிரர் துயரம் தாங்காதவராகப் புலம்பலுற்றார். ‘மனித வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் யாராலும் அறிந்து கொள்ள முடியாதவை. தோல்வியுற்றவர்கள் இப்போது வெற்றி பெற்றவர்களாகி விட்டார்கள். வெற்றி பெற்ற நாம் இப்போது தோல்வியடைந்தவர்களானோம். யாருக்காக இந்தப் பூமியையே நாம் வென்றோமோ, அவர்களையெல்லாம் இழந்து, படு தோல்வியைத் தழுவியவர்களானோம். கர்ணனிடமிருந்து மீண்டவர்கள் நாம். துரோணரையே கடந்தவர்கள் இந்த வீரர்கள். பீஷ்மரின் தாக்குதலுக்கே அழியாமல் தப்பியவர்கள் இந்த வீரர்கள். இன்று எச்சரிக்கையின்மையினால் கொல்லப்பட்டார்கள். திரௌபதி இந்தத் துக்கத்தை எப்படி தாங்கப் போகிறாளோ? அவளுடைய மகன்கள் கொல்லப்பட்டார்கள் என்ற சேதியைக் கேட்டு திரௌபதி நெருப்பினால் பொசுக்கப்பட்டவள் போல் ஆகி விடுவாள்’.

இவ்வாறெல்லாம் கூறி, தனது துன்பத்தை வெளிப்படுத்திய யுதிஷ்டிரர், நகுலனிடம் திரௌபதியை அழைத்து வருமாறு கூறினார்.

அவன் சென்ற பிறகு, எல்லோரும் பாசறைகளை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு அறுக்கப்பட்ட தலைகளையும், கைகளையும், கால்களையும் பார்த்து யுதிஷ்டிரர் தாங்க முடியாதவராக அலறித் தரையில் வீழ்ந்தார். மற்றவர்கள் அவருடைய மயக்கத்தைத் தெளிவித்து, அவரைத் தேற்றினர். அந்த நேரத்தில், நகுலனுடன் திரௌபதி அங்கு வந்து சேர்ந்தாள்.

நடந்த செய்தியை நகுலன் மூலமாக அறிந்த திரௌபதி, தனது மக்கள் எல்லோரும் பறிபோனதால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்க முடியாதவளாகி அழுது கொண்டே யுதிஷ்டிரரைப் பார்த்துச் சொன்னாள், ‘அரசே! க்ஷத்திரிய தர்மம் என்ற பெயரில், மகன்களையெல்லாம் எமனிடம் அனுப்பி விட்டு, இந்த அகண்ட பூமியை நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள். அரச பதவியை அடையப் போகும் நீர், பெரும் வீரர்களாகிய மகன்கள் கொல்லப்பட்டார்களே என்பதை எண்ணி வருந்தப் போவதில்லை. ஆனால், துரோணரின் மகன் செய்த இழிசெயலின் பலனை அவன் அனுபவிக்காமல் போவானேயானால், நான் இந்த இடத்திலேயே உயிர் நீப்பேன். இது உறுதி’.

இப்படி உரைத்து விட்டுத் தரை மீது அமர்ந்த திரௌபதியைப் பார்த்து, யுதிஷ்டிரர் சொன்னார், ‘நீ தர்மங்களை அறிந்தவள். உன்னுடைய புத்திரர்களும், மற்ற வீரர்களும் க்ஷத்திரிய தர்மத்தினால் தான் உயிர் விட்டார்கள். அவர்களைப் பற்றித் துக்கிப்பது தகாது. அஸ்வத்தாமா இந்த இடத்தை விட்டு வெகு தூரத்திலுள்ள காட்டிற்குப் போய் விட்டான் என்று அறிகிறோம். அவனோடு எப்படி யுத்தம் செய்வது?’

தருமபுத்திரர் இப்படிக் கேட்டவுடன் திரௌபதி, ‘அஸ்வத்தாமாவின் தலையில், அவன் பிறக்கும் போதே அவனுடன் சேர்ந்து பிறந்த உயர்ந்த ரத்தினம் ஒன்று இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பாவியை யுத்தத்தில் கொன்று, அவன் தலையில் இருந்து அந்த ரத்தினத்தை அறுத்து எடுத்து வர வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும்’ என்று கூறிய திரௌபதி, பீமனைப் பார்த்துச் சொன்னாள், ‘வீரத்திலும், பலத்திலும் உமக்கு நிகரானவர் உலகில் இல்லை. மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்தவரே! அஸ்வத்தாமாவைக் கொல்லும் சாதனையையும் செய்து எனக்கு இன்பத்தை அளிப்பீராக’ என்று கூறினாள்.

அவளுடைய நிலையையும், புலம்பலையும் பீமனால் பொறுக்க முடியவில்லை. அவளுக்குப் பதில் கூறாமல், தன் வில்லை எடுத்துக் கொண்டு, தன்னுடைய ரதத்தின் மீது ஏறினான். நகுலன் அவனுக்குச் சாரதியாக அமர்ந்தான். அஸ்வத்தாமாவைக் கொல்லாமல் விடுவதில்லை என்ற உறுதியுடன், அங்கிருந்து விரைவாக நகர்ந்தான்.

(தொடரும்…..)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2