ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 107
மேகலா : பீமன் புறப்பட்டுச் செல்லும் வேகத்தையும், அவனுடைய கோபத்தையும் கண்ட கிருஷ்ணர், யுதிஷ்டிரரைப் பார்த்துச் சொன்னார், ‘பீமன் பெரும் கோபத்துடன் அஸ்வத்தாமாவைக் கொல்ல நினைத்துத் தனி ஒருவனாகச் செல்கிறான். பெரும் ஆபத்தை நோக்கிச் செல்கிற அவனை நீங்கள் ஏன் தடுக்கவில்லை?
‘யுதிஷ்டிரரே! ‘பிரம்மசிரஸ்’ என்னும் அஸ்திரம் உலகையே எரிக்கக் கூடியது. எல்லா வில்லாளிகளிலும் மேம்பட்டவரான துரோணர், தனது சீடர்களிலேயே சிறந்தவனாகிய அர்ஜுனனுக்கு அதை அளித்தார். அதன் பின்னர், பொறாமை கொண்ட அஸ்வத்தாமா வற்புறுத்தியதால் தான், விருப்பமில்லாமலேயே துரோணர், அவனுக்கு அதை உபதேசித்து, ‘மகனே! யுத்தத்தில் பெரும் ஆபத்தை அடைந்த நிலையில் கூட, இந்த அஸ்திரத்தை மனிதர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது’ என்று கட்டளையிட்டார்.
’அஸ்வத்தாமா இதைக் கேட்டு, மன விரக்தி அடைந்து, துவாரகைக்கு என்னைக் காண வந்தான். நீங்கள் அப்போது காட்டில் இருந்தீர்கள். என்னிடம் அவன், ‘பெரும் பராக்கிரமம் உடைய என் தந்தையிடம், அகஸ்தியரிடத்திலிருந்து பெற்ற ‘பிரம்மசிரஸ்’ என்ற அஸ்திரம் இருப்பது உமக்குத் தெரியும். அதை அவர் எனக்கு உபதேசம் செய்திருக்கிறார். யாதவர்களுள் சிறந்தவரே! என்னிடமிருந்து அந்த அஸ்திரத்தை நீர் பெற்றுக் கொள்ளும். அதற்குப் பதிலாக, பகைவர்களை வீழ்த்தக் கூடிய உமது சக்ராயுதத்தை எனக்குக் கொடும்’ என்று என்னைக் கேட்டான்.
‘இவ்வாறு அவன் கேட்டவுடன், நான், ‘அஸ்வத்தாமா! என்னுடைய வில், என்னுடைய சக்தி ஆயுதம், என்னுடைய சக்ராயுதம், என்னுடைய கதாயுதம் எல்லாம் இதோ இருக்கின்றன. இவற்றில் நீ எந்த அஸ்திரத்தை விரும்புகிறாயோ, அதை உனக்குக் கொடுக்கிறேன். இந்த அஸ்திரத்தில் எந்த அஸ்திரத்தை நீ எடுப்பதற்கும், மற்றவர்கள் மீது ஏவுவதற்கும் உனக்கு சக்தி இருக்கிறதோ, அந்த ஆயுதம் உனதாகட்டும். நீ கொடுப்பதாகக் கூறிய பிரம்மசிரஸைப் பெற்றுக் கொள்ளாமலேயே, இதை உனக்குத் தர நான் தயாராக இருக்கிறேன்’ என்று கூறினேன்.
ஆயிரம் முனைகள் கொண்ட என்னுடைய சக்ராயுதத்தை விரும்புவதாக அஸ்வத்தாமா சொன்னான். அதை எடுத்துக் கொள்ளுமாறு நான் அவனிடம் கூறினேன். உடனே அவன் அலட்சியமாக தன்னுடைய இடக்கையினால் அந்த சக்ராயுதத்தை எடுக்க முயற்சித்தான். அது இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. பிறகு தனது வலக்கையினால் அதை அசைக்க முயற்சித்தான். அப்போதும் அவனால் அதை அசைக்க முடியவில்லை. இரு கைகளாலும் பலமுறை முயற்சித்துப் பார்த்தும் அசையாத அந்த சக்ராயுதம் அவனைக் களைப்படையச் செய்தது. அதனால் மிகவும் ஏமாற்றமடைந்த அஸ்வத்தாமாவை அழைத்து நான் சொன்னேன், ‘இந்த உலகில் எனக்கு மிகவும் பிரியமான அர்ஜுனன் கூட நீ பேசிய மாதிரி இதுவரை என்னிடம் பேசியதில்லை. என்னுடைய மகனாகிய பிரத்யும்னனோ, பலராமரோ, சாம்பனோ கூட என்னிடம் இதைக் கேட்டதில்லை. ஆனால் நீ கேட்டாய்! இந்த சக்ராயுதத்தைக் கேட்பதற்கான காரணம் என்ன? யாரை எதிர்த்து யுத்தம் செய்ய நீ விரும்பினாய்?’
இவ்வாறு நான் கேட்ட போது, துரோணரின் மகன் என்னைப் பார்த்துச் சொன்னான், ‘கேசவரே, உம்மை எதிர்க்கவே நான் விரும்பினேன். உம்மை வீழ்த்தி யாராலும் ஜெயிக்கப்படாதவன் என்ற புகழை அடைய வேண்டும் என்பதே என் எண்ணம். அதனால் தான், சக்ராயுதத்தைப் பெற்று விட வேண்டும் என்று உம்மிடம் கேட்டு, அதைப் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தேன். எனக்கு நல்லது உண்டாகுமாறு என்னை ஆசிர்வதியும்’ என்று கூறி, எனது ஆசியையும், பலவிதமான செல்வங்களையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு சென்றான்.
’அஸ்வத்தாமா கோபத்தை அடக்கத் தெரியாதவன். தீய எண்ணம் கொண்டவன். குரூரமான மனம் கொண்டவன். உலகையே எரிக்கக் கூடிய ‘பிரம்மசிரஸ்’ என்ற அஸ்திரமோ அவனிடம் இருக்கிறது. அவனிடமிருந்து இப்போது பீமனைக் காப்பாற்றுவது நமது கடமை’.
இவ்வாறு கூறிய கிருஷ்ணர், தன் ரதத்தில் ஏற, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் அவரோடு ரதத்தில் ஏறி அமர்ந்தனர். பாகீரதி நதிக் கரையில், அஸ்வத்தாமா இருக்கும் செய்தியை ஏற்கனவே பாண்டவர்கள் அறிந்திருந்தார்கள். அங்கே வியாஸர், வேறு சில ரிஷிகளோடு அமர்ந்திருந்த ஒரு இடத்தில், அஸ்வத்தாமாவும், உடம்பெல்லாம் புழுதி படிந்தவனாக அமர்ந்திருந்தான். அந்த இடத்திற்கு பீமசேனன் வந்து சேர்ந்தான். வில்லிலே நாணேற்றி அவனை யுத்தத்திற்கு அழைத்தான்.
வில்லுடன் நிற்கும் பீமனையும், அவனுக்குப் பின்னால் கிருஷ்ணர், யுதிஷ்டிரர், அர்ஜுனன் ஆகியோர் ரதத்தில் அமர்ந்திருப்பதையும் கண்ட அஸ்வத்தாமாவின் மனம் அச்சமுற்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில், தனது அச்சத்திலிருந்து விடுபட்டான். துரோணர் உபதேசித்த ‘பிரம்மசிரஸ்’ நினைவுக்கு வர, பூமியிலிருந்து ஒரு புல்லை அலட்சியமாகப் பிடுங்கி, உரிய மந்திரங்களைத் தியானித்து, அந்தப் புல்லையே ‘பிரம்மசிரஸ்’ என்னும் அஸ்திரமாக அவன் மாற்றினான். பாண்டவர்களைப் பார்க்கவும் கூட பொறுக்காத அஸ்வத்தாமா, ‘பாண்டவர்களே இல்லாமல் போவதற்காக’ என்று கூறி, உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்யக் கூடிய அந்த அஸ்திரத்தை ஏவினான்.
மூவுலகையும் நாசம் செய்யக் கூடிய சக்தியோ என்று தோற்றம் ஏற்படுத்துகிற ஒரு தீ, அந்த அஸ்திரத்தில் அப்போது உண்டாகியது. யுக முடிவு ஏற்பட்டு விட்டது போல தோன்றியது. இதைக் கண்டவுடன் கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, ‘துரோணர் உனக்கு உபதேசித்த பிரம்மசிரஸை ஏவும் தருணம் வந்து விட்டது. உன்னையும், உன் சகோதரர்களையும் இந்த உலகையும் காப்பற்றுவதற்காக அந்த அஸ்திரத்தை இப்போது ஏவி, அஸ்வத்தாமா ஏவிய பிரம்மசிரஸை தணியச் செய்வாயாக’ என்று கூறினார்.
இதைக் கேட்ட அர்ஜுனன் மனதில், ‘அஸ்வத்தாமாவிற்கும், எனக்கும், என் சகோதரர்களுக்கும், உலகத்தோருக்கும் நன்மை உண்டாக வேண்டும்’ என்று எண்ணி, இறைவனை வேண்டிக் கொண்டு, ‘அஸ்வத்தாமாவின் அஸ்திரத்தை இது தணியச் செய்வதாக’ என்று கூறி, ‘பிரம்மசிரஸை’ ஏவினான். அதிலிருந்தும், உலகத்தை அழிக்கும் வல்லமை படைத்தது போன்ற நெருப்பு உண்டாகியது. இரு அஸ்திரங்களும் ஒன்றை ஒன்று நோக்கி வந்தன. இரண்டும் நெருப்பைக் கக்கிக் கொண்டு பாய்ந்து முன்னேறின. வானமெங்கும் இடியோசை கேட்டது. மலைகள், ஆறுகள், நிலப்பரப்புகள், மரங்கள் என்று எல்லாவற்றோடும் பூமியே நடுங்கியது.
(தொடரும்……)
Comments
Post a Comment