ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 108
மேகலா : கிருஷ்ணா! ஒரு அஸ்திரம், பாண்டவர்களே இல்லாமற் போகக் கடவது என்று ஏவப்படுகிறது. அதைத் தணிப்பதற்கு ஏவப்படும் அஸ்திரமோ, அஸ்வத்தாமாவையும் சேர்த்து இந்த உலகத்தையே காப்பாற்ற வேண்டும் என்று ஏவப்படுகிறது. ஒருவன், கிருஷ்ணரை சரணம் என்கிறான். கிருஷ்ணர் சொல்லும் ஆலோசனைகள், அறிவுரைகள் அனைத்தையும் கேட்கிறான். இன்னொருவனோ, கிருஷ்ணரையே வீழ்த்தும் ஆயுதத்தை கிருஷ்ணரிடமே கேட்கிறான். ஏன் கிருஷ்ணா….? பிறப்பில் கோளாறா…., வளர்ப்பில் கோளாறா….? இன்னும் ‘அஸ்வத்தாமா’வைப் போல பணம் கொடுத்தவனுக்கு விசுவாசமாக வன்முறையில் இறங்குபவர்களை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். ஆனால், இது புதுசு…. கிருஷ்ணா…., கிருஷ்ணரின் சக்ராயுதம் நம்மிடம் வந்து விட்டால், ‘கடவுள் பதவி’ நமக்கு கிடைத்து விடும் என்ற இந்தக் கணக்கு புதுசு…. துரோணர் இப்படி இல்லையே கிருஷ்ணா! இவன் எப்படி அவருக்கு மகனாகப் பிறந்தான்…?
கிருஷ்ணர் : செம்மறியாட்டுக் கூட்டத்தில் குள்ளநரி…. உடம்பெல்லாம் விஷம். யார் முகத்தையும் பார்க்கவும் திராணியற்றுப் போவான் பார்.
மேகலா : உன்னிடம் சக்ராயுதம் கேட்டானே…., அன்றே அவன் கதையை முடிச்சிருக்கணும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : கிருஷ்ணன் அன்று கதையை முடித்திருந்தால், ‘இப்பேர்ப்பட்ட பாதகர்கள் உலகில் உள்ளனர்; பார்த்துப் பழக வேண்டும்’ என்று நீ எப்படி தெரிந்து கொள்வாய்? மேலும், என்னிடம், ‘பிரம்மசிரஸ்’ அஸ்திரம் தருகிறேன்; நீர் சக்ராயுதம் தர வேண்டும் என்று பண்டமாற்றாகத் தான் கேட்டான். சக்ராயுதம் அவனிடம் போக மறுத்து விட்டது. சும்மா, ஆயுதம் கேட்டவனையெல்லாம் முடிப்பதல்ல ‘இறை தர்மம்’. ஆட விட்டுத்தான் அடக்க வேண்டும்.
பாசுபதா அஸ்திரம் பெற வேண்டி, பரமசிவனாரை நோக்கி அர்ஜுனன் தவம் செய்தான். அவனுடைய தவமும், பணிவும் பரமசிவனாரை மகிழ்வித்தது. இவன் எந்த நேரத்திலும் ஆயுதத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டான் என்று அவனுடைய நடவடிக்கை காட்டியது. அர்ஜுனனை ஆலிங்கனம் செய்து கொண்டார். மெய் சிலிர்த்துப் போனான், அர்ஜுனன். இவனோ, ‘உம்மை எதிர்க்கவே சக்ராயுதம் கேட்டேன்; உம்மை வீழ்த்தி யாராலும் வெல்லப்பட முடியாதவன்’ என்ற புகழை அடைய நினைத்தேன் என்கிறான். பக்தனுக்கும், மற்றவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் மேகலா….
பக்தன், எளிமையானவன், பணிவானவன், கடவுளுக்குப் பிரியமானவன். அஸ்வத்தாமா, இதற்கு எதிர்மறையானவன். மேலே நடப்பதை நீ சொல்லு….
அஸ்வத்தாமா வெல்லப்பட்டான்
மேகலா : இரு பிரம்மசிரஸ் அஸ்திரங்கள் மோத இருந்த நிலையில், பெரும் அழிவு ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்த மகரிஷிகளான நாரதரும், வியாசரும் அப்போது அங்கே வந்தார்கள். எந்த சக்தியாலும் அழிக்க முடியாதவர்களாகிய அந்த இரண்டு மகரிஷிகளும், உலக நன்மையைக் கருதி அஸ்வத்தாமா, அர்ஜுனன் ஆகியோரால் ஏவப்பட்ட அந்த இரண்டு அஸ்திரங்களுக்கும் நடுவில் நின்று கொண்டார்கள். அந்த இரண்டு ரிஷிகளும், நெருப்பைக் கக்குகிற அந்த இரண்டு அஸ்திரங்களின் வீரியத்தையும் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றார்கள்.
அவர்கள், ‘நடந்த யுத்தத்தில் பங்கு பெற்ற வீரர்களில், பல அஸ்திரங்களையும் அறிந்த மிகப் பெரியவர்கள் இருந்தார்கள். அவர்கள் யாரும் இது போன்ற அஸ்திரத்தை மனிதர்கள் மீது ஏவவில்லை. அப்படியிருக்க, நீங்கள் இருவரும் இப்படி ஓர் கொடூரமான காரியத்தைச் செய்யலாமா?’ என்று கேட்டனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த உடனேயே அர்ஜுனன் மிகவும் பணிவுடன், ‘அஸ்வத்தாமாவின் அஸ்திரத்தினுடைய வீரியத்தைத் தணிப்பதற்காகவே, நான் என்னுடைய அஸ்திரத்தை ஏவ நேர்ந்தது. இப்பொழுது நான் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டால், அஸ்வத்தாமா ஏவிய பிரம்மசிரஸ் எல்லோரையும் அழித்து விடும். என்னுடைய அஸ்திரத்தை நான் திரும்பப் பெற்றுக் கொண்டு விடுகிறேன். அஸ்வத்தாமாவின் அஸ்திரத்தினால் அழிவு ஏற்படா வண்ணம் நீங்கள் தான் அனைவரையும் காக்க வேண்டும் என்று கூறி, தன்னுடைய அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டான். அது தணிந்தது. (பிரம்மசிரஸ் என்ற அஸ்திரத்தை ஏவுவதை விட, திரும்பப் பெறுவது மிகவும் கடினம். பெரும் மனோவலிமை உள்ளவர்களும், இறை அருள் உள்ளவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். அர்ஜுனன் அதைச் செய்தான்).
ஆனால், அஸ்வத்தாமாவினால், தான் விடுத்த அஸ்திரத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. பிரம்மசிரஸைத் திரும்பப் பெறும் சக்தியற்றவனாகி, இரண்டு மகரிஷிகளையும் பார்த்து, ‘பெரும் ஆபத்து நெருங்கியதால், என்னைக் காப்பற்றிக் கொள்ள நான் இந்த அஸ்திரத்தை ஏவினேன். நான் ஏவிய இந்த அஸ்திரத்தை என்னால் திரும்பப் பெற முடியாது. அதற்கு என்னிடம் சக்தியில்லை’ என்று கூறி விட்டான்.
அப்போது வியாசர், ‘அஸ்வத்தாமா, தர்மத்தின் பாதையை அர்ஜுனன் அறிந்திருப்பதால், பிரம்மசிரஸை, உன்னுடைய அஸ்திரத்தைத் தணிப்பதற்காகவே அவன் ஏவினான். அதைத் திரும்பப் பெற்று விட்டான். எந்த ஒரு பிரதேசத்தில் பிரம்மசிரஸ் அஸ்திரம் ஏவப்பட்டு, அதே அஸ்திரத்தினால் தணிக்கப்படுகிறதோ, அந்தப் பிரதேசத்தில் பன்னிரெண்டு வருட காலம் வானம் பொய்த்து விடும்; பெரும் வறட்சி உண்டாகும். இதை நினைத்துத்தான் அர்ஜுனன், உன் அஸ்திரத்துடன் தான் ஏவிய அஸ்திரம் மோதுவதற்கு முன்பாகவே அதை விலக்கிக் கொண்டான். ஜீவ ராசிகளின் நன்மையைக் கருதி, அர்ஜுனன் நடந்து கொண்டதைப் போலவே நீயும் நடந்து கொள்வாயாக! உன்னுடைய கோபத்தைத் தணித்துக் கொள். உன்னுடைய அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள். உன்னுடைய தலையில் இருக்கும் மணியை பாண்டவர்களிடம் கொடுத்து விடு. உன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு போய் விடு’ என்று சொன்னார்.
இப்படி வியாசர் கூறியவுடன், அஸ்வத்தாமா சொன்னான், ‘என் தலையில் இருக்கும் இந்த ரத்தினம் மேன்மை பெற்றது. இதை அணிபவனுக்கு நோய் வராது; பசி ஏற்படாது; ஆயுதங்களினால் அவனுக்கு ஆபத்து வராது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மணி என்னால் இழக்கத் தக்கது அல்ல. ஆனால் உங்கள் மீதிருக்கும் மரியாதை காரணமாக உங்கள் சொல்லை நான் ஏற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறி, தன் தலையில் இருக்கும் ரத்தினத்தை எடுத்துக் கொடுத்தான்.
ஆனாலும், தான் ஏவிய அஸ்திரத்தைத் திரும்பப் பெறும் சக்தி இல்லாததாலும், கோபம் தணியாததாலும் அஸ்வத்தாமா, ’நான் ஏவிய அஸ்திரம் ஏதாவது இலக்கை அடைந்து தான் தீர வேண்டும். ஆகையால் அது பாண்டவர்களுடைய வம்சத்தினர் உதிக்கக் கூடிய கர்ப்பங்களில் விழப் போகிறது. அவ்வாறே அது உத்தரையின் கர்ப்பத்திலும் விழும்’ என்று சொன்னான்.
இதைக் கேட்ட கிருஷ்ணர், இந்த நிலைமையை எப்படி சமாளித்தார் என்று அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment