ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 111

 (பாண்டவர்கள் காந்தாரியின் இடத்தை அடைந்து, அவளைச் சந்திக்கிறார்கள்)

மேகலா : அந்த நிலையில் காந்தாரி, யுதிஷ்டிரரைச் சபித்து விட எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து, வியாசர் அங்கே வந்தார். ‘காந்தாரி! ஒரு விஷயத்தை நினைத்துப் பார். யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, துரியோதனன் உன்னை அணுகி, உன்னுடைய ஆசியை வேண்டி நின்றான். ‘எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்று ஆசி கூறுவாயாக’ என்று துரியோதனன் கேட்ட போது, நீ என்ன கூறினாய் என்பதை சற்று எண்ணிப் பார். ‘எங்கே தர்மம் இருக்கிறதோ, அங்கே வெற்றி’ என்று தான் நீ சொன்னாய். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. புண்ணியவதியாகிய நீ சொன்ன மாதிரியே தர்மத்திற்கே வெற்றி கிட்டியிருக்கிறது. ஆகையால், பாண்டவர்கள் விஷயத்தில் நீ கோபம் பாராட்டுவது தகாது’ என்று வியாசர் கூறினார்.

காந்தாரி சொன்னாள், ‘புத்திர சோகத்தின் காரணமாக என் மனம் நிலை தடுமாறுவது உண்மை தான். ஆனால், பாண்டவர்கள் அழிந்து போக வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பாண்டவர்கள் எவ்வாறு குந்தியினால் பாதுகாக்கப்படத் தக்கவர்களோ, அவ்வாறே என்னாலும் பாதுகாக்கப்படத் தக்கவர்களே. துச்சாசனன், சகுனி, கர்ணன், துரியோதனன் ஆகியோரால் தான் இந்தப் பெரிய நாசம் ஏற்பட்டிருக்கிறது. இதில் யார் மீதும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், பீமன் செய்த செயல் எவ்விதம் சரியானதாகும்? துரியோதனன், ‘கதை’ யுத்தத்தில் தன்னை மிஞ்சியவன் என்று அறிந்து, அவனுடைய இடுப்புக்குக் கீழே அடித்து, அவனைப் பீமன் கொன்றது மட்டும் தான் எனக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யுத்த தர்மத்தை இவ்வளவு அநியாயமாக மீறுவது முறையாகுமா’?

காந்தாரி கூறியதைக் கேட்ட பீமன், அவளைப் பார்த்துச் சொன்னான், ‘என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் செய்த அந்தச் செயலை நீங்கள் தயவுசெய்து பொறுத்துக் கொள்ள வேண்டும். ‘கதை’ யுத்தத்தில் உங்களுடைய மகன் எவராலும் வெல்ல முடியாதவன். அதனால், நான் அநியாயமான காரியத்தைச் செய்தேன். ஆனால், துரியோதனன் எங்களுக்கு இழைத்த தீங்கையெல்லாம் சற்று நினைத்துப் பாருங்கள். சபை நடுவில், பலர் முன்னிலையில், திரௌபதியை அவன் நடத்திய விதத்தையும் நினைத்துப் பாருங்கள். அன்றே அவன் என்னால் கொல்லப்படத் தக்கவனாகி விட்டான். பல தீய செயல்களின் மூலமாக அவன் எங்களுக்குச் செய்த கொடுமைகளையெல்லாம் நினைத்துத்தான், நான் அவனைக் கொன்றேன்’.

இப்படிப் பேசிய பீமனைப் பார்த்து காந்தாரி, ‘திருதராஷ்டிர மன்னனின் நூறு பிள்ளைகளையும் பாண்டவர்களாகிய நீங்கள் கொன்று விட்டீர்கள். வயது முதிர்ந்த காலத்தில் எங்கள் இருவருக்கும் ஊன்றுகோலாக இருப்பதற்காகவாவது, ஒரு மகனையாவது நீங்கள் விட்டு வைத்திருக்கலாம். அப்படி ஒரு மகன் இருந்திருந்தால் கூட இப்போது என்னுடைய துக்கம் தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்’ என்று கூறி விட்டு, ‘யுதிஷ்டிரன் எங்கே?’ என்று கேட்டாள்.

யுதிஷ்டிரர், காந்தாரியை நெருங்கி, பயத்துடன் பேசினார். ‘தேவி! உங்களுடைய மகன்களைக் கொன்றவனும், கொடூரமான மனம் படைத்தவனுமாகிய யுதிஷ்டிரன் என்கிற நான், உங்களால் சபிக்கப்படத்தக்கவனே. எல்லா நாசத்திற்கும் காரணமாகிய என்னை நீங்கள் சபித்து விடுங்கள். உறவினர்களையெல்லாம் கொன்று விட்டு நான் பெற்றிருக்கும் ராஜ்ஜியத்தினால் எனக்கு இன்பம் நேரிடப் போவதில்லை’.

இப்படிக் கூறித் தன் காலில் விழத் தொடங்கிய அந்த யுதிஷ்டிரரை, தன் கண்களை மறைத்திருந்த பட்டுத் துணியின் கீழிருந்த இடைவெளிகளினால் காந்தாரி நோக்கினாள். அப்போது யுதிஷ்டிரனின் கால் விரல் நகங்களின் மீது காந்தாரியின் பார்வை பட்டது. உடனே அந்த அழகிய நகங்கள் கறுத்துப் போய் விகாரமாகத் தோற்றமளித்தன. இதைக் கண்டு பயந்த அர்ஜுனன், கிருஷ்ணரின் பின் புறத்தில் போய் நின்று கொண்டான். மற்ற சகோதரர்களும், அங்குமிங்குமாக விலகத் தொடங்கினார்கள்.

பிறகு, நடந்ததை அறிந்த காந்தாரி, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி விடை கொடுத்து அனுப்ப, அவர்கள் சென்று குந்தியைச் சந்தித்தார்கள். பெரும் துக்கத்தில் குந்தியும், திரௌபதியும் பாண்டவர்களோடு மீண்டும் காந்தாரி இருக்கும் இடம் வந்தார்கள். அப்போது காந்தாரி, திரௌபதியைத் தேற்றினாள். ‘பெண்ணே! சோகத்தில் ஆழ்ந்து விடாதே! நீயும் பெற்ற மகன்களையெல்லாம் இழந்தாய்; நானும் அந்த நிலையில் தான் இருக்கிறேன். எது நடக்கும் என்று விதுரர் முன்பே சொன்னாரோ, அது நடந்து விட்டது. தடுக்க முடியாத தெய்வத்தின் செயலை நினைத்து நாம் துக்கப்படுவதில் பலன் இல்லை. இந்த நாசம் விதியினால் நேர்ந்தது என்பதை உணர்ந்து, நாமேதான் நம்மைத் தேற்றிக் கொள்ள வேண்டும்’ என்று சமாதானம் கூறினாள்.

அந்த நிலையில், காந்தாரி, வியாசரின் அருளால் தெய்வீகப் பார்வை பெற்றாள். அதன் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே, போர்க்களம் அனைத்தையும் அவள் கண்டாள். தன்னுடைய மகன்களின் உடல்களையும், மற்ற பல வீரர்களின் உடல்களையும், நரிகளும், கழுகுகளும், காக்கைகளும் தின்பதையும் காந்தாரி பார்த்தாள். பல பெண்கள், தாங்கள் இழந்த கணவன்மார்களையும், தந்தைகளையும், மகன்களையும் நினைத்து, ‘ஓ’வென்று அலறும் காட்சியையும் அவள் பார்த்தாள். இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துப் பெரிதும் மனக் கலக்கம் அடைந்த காந்தாரி, கிருஷ்ணரைப் பார்த்துப் பேசலுற்றாள்.

மேகலா : கிருஷ்ணா! எனக்கு சில கேள்விகள் உள்ளன கிருஷ்ணா….

கிருஷ்ணர் : கேள்விகள் இல்லாவிட்டால் தான், நீ சரியாகப் படிக்கவில்லையோ என்று நினைப்பேன்! கேள்….

மேகலா : கிருஷ்ணா! திருதராஷ்டிரனுக்கு, பீமன் மீது கட்டுக்கடங்காமல் கோபம் வருகிறதல்லவா….? பீஷ்மர் இறந்ததற்காகவோ, துரோணர் கொல்லப்பட்டதற்காகவோ, கர்ணன் கொல்லப்பட்டதற்கோ கோபம் வரவில்லை. துரியோதனன் கொல்லப்பட்ட விதம், இறந்து விட்டான் என்ற அதிர்ச்சி, அதனால் மட்டும் தான் கோபமா…? அப்படியென்றால், அந்தக் கோபத்திற்கு அர்த்தமேயில்லையே. இவ்வளவு நாசத்திற்கும், ஏன் துரியோதனன் கொல்லப்பட்டதற்குக் கூட, துரியோதனனும், திருதராஷ்டிரனும் மட்டுமே காரணம் என்னும்போது, இவ்வளவு கோபமும் எதற்காக? அதிலும், இரும்பினால் செய்யப்பட்ட உருவம் நொறுங்குமளவுக்கு இறுக்கினான் என்றால்……; பீமனுக்கு விஷம் வைத்துக் கொல்ல நினைத்த போதும், துரியோதனனையும் இப்படிச் செய்திருக்கலாமே…..?

கிருஷ்ணர் : சரி! இந்தக் கேல்விக்குப் பதில் சொல்லி விடுகிறேன். ‘பதிலுக்குப் பதில்’ என்று துரியோதனனுக்கு விஷம் வைக்க பாண்டு உயிரோடு இல்லை. பீஷ்மர், துரோணர், கர்ணன் கொல்லப்பட்டது, துரியோதனனுக்கு பாதுகாப்பு குறைந்து போனது என்ற வகையில் வருத்தமே ஒழிய, துரியோதனன் மட்டுமே திருதராஷ்டிரனின் பேரன்புக்குக் காரணமானவன். அவன் கொல்லப்பட்டான் என்றவுடன், ஏற்கனவே பலர் எடுத்துச் சொல்லியும் எவர் பேச்சையும் கேட்காததன் பலனை துரியோதனன் அடைந்தான் என்ற யதார்த்தத்தைப் புரிந்திருந்தாலும், தன் மகனுடைய இழப்பினை திருதராஷ்டிரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனை சமாதானப்படுத்த முடியாத தந்தையாக இருந்தாலும், துரியோதனனின் பேராசை செயல்வடிவமாக வேண்டும் என்பதில் தான் திருதராஷ்டிரன் ஆர்வம் கொண்டிருந்தான். இவை யாவும் நடக்கவில்லை. இறுதியில் விதுரர் சொன்னது தான் நடந்திருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல், துரியோதனன் முடிவுக்கு, பீமனை காரணமாக்கி, அவன் மீது தேவையில்லாத வெறுப்பை உருவாக்கிக் கொண்டான். பீமனும், தகப்பன் இல்லாதவன் தானே. பீமனுக்காக ‘வக்காலத்து’ வாங்க, கிருஷ்ணரைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள். அதனால் தான், பீமனை கட்டிப் பிடித்து இறுக்கி அணைத்து, கொன்று விட மனதார நினைக்கிறான்.

இவன் மட்டுமல்ல மேகலா….. அடுத்து காந்தாரி பேச இருப்பதைக் கவனி….. தவத்தில் சிறந்தவள்; சிறந்த பதிவிரதை; தர்மம் தெரிந்தவள்; அரச சபையில், தர்மம் ஜெயிக்க, துரியோதனனிடம் நியாயம் பேசியவள்…. இறுதியில் அவளும் பாசத்திற்குக் கட்டுப்பட்டு, தன் கண்பார்வையால், தருமனின் நகக் கண்ணை எரித்து விட்டாள்! இதுதான் உலகம்! பாண்டவர்கள் செத்தால் என்ன? திரௌபதி மானபங்கப்பட்டால் என்ன? தன் மகன் உயிரோடு இருக்க வேண்டும்; அதுவும் மகாராஜாவாக….; நினைத்ததை சாதிப்பவனாக இருக்க வேண்டும்….. இன்னும் காந்தாரி பேசுவதைக் கேட்போம்……

(அடுத்த பகுதியில் பார்க்கலாம்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1