நீங்க..., நல்லவரா..., கெட்டவரா....? - பகுதி 2

மேகலா : M. G. R. – சுவாரஸ்யமான ’கதாபாத்திரம்’, கிருஷ்ணா. நாணயத்தின் ஒரு பக்கம்; மறு பக்கம்; எப்பக்கம் திருப்பினாலும், overall-ஆ ’நல்லவர்’. சமுதாயத்தில் எல்லோராலும் அறியப்பட்டவராக இருப்பவர்களுக்கு, தங்களுக்கென்று ஒரு வழிமுறை இருப்பதாக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தனக்கு எது ‘சரி’ என்று படுகிறதோ, அதையே தன் மனம் கவர்ந்தவரும் ’ஏற்றுக் கொள்வார்’; ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த விருப்பம் மாறுபடும் போது, ‘நல்லவர்’ என்ற வடிவினைத்தான் மாற்றிக் கொள்கிறார்கள். M. G. R – ஐப் போல ஒருவரை, ‘நல்லவரா’, ’கெட்டவரா’ என்று வரையறுப்பதற்கு பல views தேவைப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில், அவர் பொய் சொல்லுவாரா, மது அருந்துபவரா, தர்மத்தின் பாதையில் செல்லுபவரா, நேர்மையானவரா என்ற விவரத்தையெல்லாம், அவருடைய சமுதாய நடவடிக்கைகள் மூலமாக ஒரு சிறிதளவு தெரிந்து கொள்ளலாம் என்றாலும், எனக்கு ஒரு சின்ன தெளிவு கிடைக்கிறது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : என்ன தெளிவு…? கொஞ்சம் விவரமாய்ச் சொல்லு….

மேகலா : கிருஷ்ணா…., M. G. R. தேசபக்தி கொண்டவர்; அதைத் திரைப்படங்களில் வெளிப்படுத்துவார். ‘மது அருந்துவது’ எவ்வளவு பாவம் என்பதை எடுத்துச் சொல்லுவது மட்டுமல்ல கிருஷ்ணா…. தன் சொந்த வாழ்க்கையிலும் மதுவை அறவே ஒழித்தவர். திரைப்படங்களில், வசனத்தைக் கூட positive வார்த்தைகளே வருமாறு பார்த்துக் கொள்வாராம். அதைப் பற்றிக் கேட்டால், படம் பார்க்கும் ரசிகர்கள், தவறான வார்த்தைகளைக் கேட்டு, தானும் அதனைப் பழகக் கூடாது என்ற எண்ணம் தான் என்று சொல்வாராம். எனக்கு, கீதையில் நீ சொன்ன உபதேசம் தான் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா. ‘நான் இந்த உலகத்தில் செய்ய வேண்டுவது ஒன்றும் கிடையாது. ஆனாலும், நான் வேலை செய்யாமல் இருப்பது கிடையாது. நான் வேலை செய்யாமல் இருந்தால், என்னைப் பின்பற்றுபவர்களுக்கு, அது தவறான முன்னுதாரணமாகி விடும்’ – என்றாயல்லவா….. M. G. R. கீதை வாசித்தாரோ இல்லையோ…, எனக்குத் தெரியாது. ஆனாலும், தன்னை ரசிப்பவர்களை தவறான பாதையில் கொண்டு செல்லக் கூடாது என்பதில் மிக கவனமாக செயல்படுவார். இன்னும் ஒண்ணு சொல்கிறேன் கிருஷ்ணா…. எனக்குக் கொஞ்சம் தேசபக்தி இருக்கு என்றால், அது M. G. R பட பாட்டுக்களைக் கேட்டுத்தான் உறுதியானது கிருஷ்ணா. சின்ன வயசுல, நான் M. G. R படப் பாட்டுக்களைக் கேட்டுத்தான் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டேன் கிருஷ்ணா…. நான் ஒருத்தி; ஒருவருடைய உபதேசங்களைப் பார்த்து மனதில் இப்படித்தான் இருக்கணும் என்று நினைக்கிறேன் என்றால், என்னைப் போல் எத்தனை பேர், தங்களுடைய வாழ்வில், மது அருந்தக் கூடாது, நல்ல குடிமகனாய் இருக்க வேண்டும் என்று நினைத்து தங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். பலர் நல்லவர்களாக உருவாக, M. G. R காரணமாக இருந்தார் என்ற அளவில், அவர் நல்லவர்தானே கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…, உன்னை உருவாக்கி விட்டார்…. அதனால் நல்லவர் என்கிறாய்….. Personal-ஆ அவர் எப்படிப்பட்டவர் என்பது ரொம்ப முக்கியம் இல்லையா மேகலா…..?

மேகலா : ஆம் கிருஷ்ணா…. இப்போ இவரை மாதிரி popular personalities-ஐ எப்படிப்பட்டவர் என்று எப்படி அறிந்து கொள்வது…? அவரிடம் பழகியவர்கள், அவரோடு சம்பந்தப்பட்டவர்கள் சொல்வதை வைத்துத்தானே, அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். அவரைப் பற்றிச் சொல்பவர்கள், ‘உலையை வைத்து விட்டு, M. G. R – ஐப் பார்க்கப் போனால், அரிசியோடு திரும்பி வந்து சோறாக்கி வயிறார சாப்பிடலாம்’ என்று சொல்கிறார்கள். அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பலர் நேர்மையாக உருவாகக் காரணமாக இருந்தவர். பல நல்ல கொள்கைகளைக் கடைப்பிடித்தவர். முக்கியமாக, தன் குடும்ப உறுப்பினர்களை அரசியல் வாரிசாகக் கூட நியமிக்காதவர் கிருஷ்ணா…. ஏன், அரசியலுக்குள்ளே கூடக் கொண்டு வராதவர்.

கிருஷ்ணர் : அவருக்கு பிள்ளை குட்டி எதுவும் கிடையாது; அதனாலோ….?

மேகலா : அவர்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம் கிருஷ்ணா. அண்ணன் பிள்ளைகளில் ஒருவர், bank-ல் manager வேலை பார்க்கிறார்….. அரசியலையும், குடும்பத்தையும் ஒன்றாகக் கலக்கவில்லை என்பது ஒன்று போதும்…., அவரை ‘நல்லவர்’ என்று சொல்லலாம்.

கிருஷ்ணர் : ஆக, அவரை ‘நல்லவர்’ என்பதற்குக் காரணமும் சொல்லி விட்டாய்….. அவருக்கு எதிர்மறை குணங்கள் கிடையாதா மேகலா….?

மேகலா : தன்னுடைய துறையில் ‘ஆளுமை’ நிறைந்தவர் கிருஷ்ணா. ஆளுமை இருக்கும் போது, ‘எதிர்ப்புகளும்’ இருக்கத்தானே செய்யும். அதைத் தொடர்ந்த மனக்கசப்பும் உண்டு. ஆனால், அவரால் ‘வாழ்க்கை இழந்தவர்கள்’ என்று யாரும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம். தன்னிடம் யாராவது ‘அடைக்கலம்’ என்று வந்தால், ‘தாதா’வாக மாறி, underground வேலை பார்த்துனாலும் அவரைக் காப்பாற்றுவார். அதற்கு வெளியில் சொல்ல முடியாத உதாரணங்கள் நிறைய இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ… நியாயமான விஷயத்தில், கட்டப் பஞ்சாயத்தா…. அநியாயமான விஷயத்திற்கா….?

மேகலா : நியாயமான விஷயத்தில், அவர் style-ல் கட்டப் பஞ்சாயத்து. இப்படி ஒரு விஷயம் நடந்தது என்று யாரும் முணுமுணுக்கக் கூட முடியாது. ‘பஞ்ச்’ டயலாக் எல்லாம் பேசி அலப்பரையைக் கூட்ட மாட்டார். சம்பவம் முடிந்து பல நாட்கள் கழித்து மெள்ள வதந்தியாக வெளியே வரும்.

கிருஷ்ணர் : ஓ! அதனால் தான் M. G. R – ஐ ‘நல்லவர்’ என்று இத்தனை நாளும் ‘பரப்புரை’ பண்ணினாயா… வாஸ்தவம் தான் மேகலா… மனிதனிடம், திரைமறைவு negative குணங்கள் இருந்தால் கூட, அடுத்தவரைக் கை தூக்கி விடுதல், அல்லது சரணடைந்தவர்களைக் காப்பாற்றுதல் என்பது போன்ற நல்ல குணங்கள், மனிதனுக்கு மிகப் பெரிய பலமாக மாறி, அந்த மனிதனைப் பிரம்மாண்டமாக மாற்றி விடும்…. சரி… நல்லவங்களை இன்னும் வேறு கோணத்தில் பார்க்கலாம்……

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2