ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 113

மேகலா : காந்தாரி, ஸ்ரீ கிருஷ்ணரின் வம்சம் அழிய சாபம் கொடுத்தாள் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம்.

இவ்வாறு காந்தாரி மிகவும் கோபமுற்றுத் தன்னை சபித்த போது, கிருஷ்ணர் புன்சிரிப்புடன் அதற்குப் பதில் சொன்னார். ‘க்ஷத்திரியப் பெண்மணியே! நீ சொன்னது போல் நிகழ்ச்சிகள் நடந்தேறப் போகின்றன என்று எனக்கும் தெரிந்துதான் இருக்கிறது. என்னுடைய குலமாகிய விருஷ்ணி குலம் அழியத்தான் போகிறது. அதில் சந்தேகமில்லை. என்னைத் தவிர அந்தக் கூட்டத்தை அழிப்பவன் ஒருவன் இல்லை. ஆகையால், அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டே அழிவார்கள்.

கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார், ‘காந்தாரி! சோகத்தில் உன் மனதை ஆழ்த்தி விடாதே. பெரியவர்களின் வார்த்தைக்குச் சற்றும் மதிப்புத் தராமல் அழிவை விரும்பியே செயல்பட்ட துரியோதனனின் நடத்தையைச் சற்று நினைத்துப் பார். தடுக்காதது உன் குற்றம் அல்லவா? அப்படிப் பார்த்தால் உன்னுடைய குற்றத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் நாசமடைந்தார்கள் என்றல்லவா ஆகிறது? நீ செய்த அந்தத் தவறை என் மீது போடுவது என்ன நியாயம்? இறந்தவன், தன்னை விட்டு ஓடி விட்டவன், காணாமல் போய் விட்டவன் ஆகியோரை நினைத்து ஒருவன் துக்கமடைந்தால், அவன் துக்கத்தோடு துக்கத்தைச் சேர்த்துக் கொள்கிறான். இரட்டிப்புத் துக்கத்தை விவேகம் உடையவர்கள் உண்டாக்கிக் கொள்ள மாட்டார்கள். ஆகையால், இந்த யுத்தத்தில் உயிர் நீத்த க்ஷத்திரியர்களை நினைத்து உன் மனதை வருத்திக் கொள்ளாதே’.

கண் கலங்கியவளாக, கிருஷ்ணர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காந்தாரி, மறுமொழி ஏதும் சொல்லவில்லை. அப்போது, திருதராஷ்டிரன், ‘மரணமடைந்தவர்கள் எந்த உலகை அடைவார்கள்’ என்று கேட்டான். அதற்கு யுதிஷ்டிரர், ‘சற்றும் மனத்தளர்ச்சி இல்லாமல், எவர்கள் தங்கள் கடமை என்று நினைத்து இந்த யுத்தத்தில் போரிட்டார்களோ, அவர்கள் எல்லாம் இந்திரனின் உலகத்துக்குச் சமமான உலகங்களை அடைந்தார்கள். எவர்கள் மனதில் மகிழ்ச்சி இல்லாமலேயே போரில் ஈடுபட்டார்களோ, அவர்கள் கந்தர்வர்களோடு கலந்தார்கள். எவர்கள் பின்வாங்கினார்களோ, அல்லது எவர்கள் உயிர்ப்பிச்சை கேட்கும் சமயத்தில் கொல்லப்பட்டார்களோ, அவர்கள் யக்ஷர்களின் உலகை அடைந்தார்கள்’ என்று விடை அளித்தார்.

அதன் பின்னர் தௌமியர், விதுரர், யுயுத்ஸு ஆகியோரை அழைத்து யுதிஷ்டிரர், ’ஆதரவற்றதாக ஒரு உடல் கூட இங்கே விட்டு விடப்படக் கூடாது. எல்லோருக்கும் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்ய வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டார். அந்த யுத்த களத்தில் இருந்த உடல்கள் எல்லாம் முறையாகத் தகனம் செய்யப்பட்டன. மன்னர்களுக்கெல்லாம் செய்யப்பட வேண்டிய இறுதிச் சடங்குகளும் முறையாகச் செய்யப்பட்டன. கங்கை நதியில் முறையாகத் தர்ப்பணங்கள் செய்யப்பட்டன.

அப்போது குந்திதேவி, துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டே, தன்னுடைய மகன்களைப் பார்த்துப் பேசினாள். ‘தேரில் நின்று போர் புரியும் வீரர்களில் சிறந்தவன் என்று புகழப்பட்ட எந்த வீரன், இந்த யுத்தத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்டானோ; எவன் எந்த யுத்த களத்திலும், சூரியன் போல் ஒளி வீசி நின்றானோ; வெற்றிக்காக எவனைத் துரியோதனன் நம்பினானோ; எவன் எந்த யுத்தத்திலும் பின்வாங்காதவனோ; எவனைத் தேரோட்டி மகன் என்று எல்லோரும் கருதினார்களோ, அந்தக் கர்ணன் உங்கள் ஐவருக்கும் மூத்தவன்! உங்களுடைய அண்ணன்! கவச குண்டலங்களுடன் சூரியனிடம் அவனைப் பெற்றது நான் தான்!’.

இப்படி குந்தி கூறியதைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியுற்றார்கள். அதைத் தொடர்ந்து யுதிஷ்டிரர் பேசினார். ‘எவனுடைய அம்பு எதிர்ப்படும் இடத்தில் அர்ஜுனனைத் தவிர, வேறு எவனும் நிற்க மாட்டானோ; எவன் சூரியனுக்குச் சமமான ஒளி பொருந்தியவனோ; எவனுடைய வீரம் எங்களையெல்லாம் எப்போதும் அச்சுறுத்தியதோ; ஆயுதம் ஏந்தியவர்களில் எவன் சிறந்தவனோ, அவன் எங்களுக்கெல்லாம் அண்ணன்! அந்தக் கர்ணன் எங்களுடைய மூத்த சகோதரன்! எங்களுக்கெல்லாம் முன்பாக அவனை நீ பெற்றாய்! தாயே! இந்த ரகசியத்தை எங்களிடம் நீ மறைத்ததால், பெரும் கொடுமை நிகழ்ந்து விட்டது. அபிமன்யு, திரௌபதியின் மகன்கள், பாஞ்சாலர்கள் அழிந்தது என் மனதைக் கலக்கியது. ஆனால், அந்த எல்லாத் துக்கத்தையும் சேர்த்து, அதை விட நூறு மடங்கு அதிகமான துக்கத்தை இப்போது நான் அடைகிறேன், தாயே! இந்த உண்மையை மறைக்க உனக்கு எப்படி மனம் வந்தது? நீ இந்த ரகசியத்தை மறைத்ததால் அல்லவா இங்கே பெரும் நாசம் விளைந்தது. பெரும் தவறு செய்து விட்டாய். என்னுடைய மூத்த சகோதரன் கொல்லப்பட்டான். இதற்குக் காரணம், நீ உண்மையை என்னிடமிருந்து மறைத்தது தான். ஆகையால், இனி எது ரகசியமோ, அது பெண்களிடம் தங்காமல் போகட்டும்’ என்று விரக்தியோடு கூறினார். அதன் பின்னர், எல்லோரும் கங்கை நதியை விட்டு, அதன் கரையை அடைந்தனர்.

மேகலா : ராஜசூய யாகம் நடந்தது; பொருள் குவிந்தது; வயிறு எரிந்தது; சிசுபாலன் அழிந்தான்; பொறாமை வளர்ந்தது; வஞ்சகம் ஜெயித்தது; சூது நடந்தது; ஏமாந்தவன் தோற்றான்; ஏமாற்றியவன் வெறியாட்டம் தொடர்ந்தது….. பெண்ணை அவமானப்படுத்தியவன் பேரரசரானான். தாத்தா சொன்னார், கேட்கவில்லை. தகப்பன் சொல்லிப் பார்த்தான், கேட்கவில்லை. தாய் சொல்லையும் மதிக்கவில்லை. சித்தப்பாவைக் கேலி பேசினான். வாத்தியார் சொல்லியும் கேட்கவில்லை. ஏமாந்தவனை, பங்காளியை, வயிறு எரியும் படியாக காட்டுக்கு அனுப்பியாச்சு; அங்கும் விட்டு வைக்கவில்லை. கண்டு விடவோ, கொன்று விடவோ உத்தேசித்து அவமானப்படுத்தினான். தண்டனை முடிந்தது; இழந்தது கேட்கப்பட்டது; அவமானம் தான் பதிலாகியது; தூது அனுப்பியாச்சு; போர் தான் முடிவு என்பது பதிலாச்சு; சரி! போராவது நியாயமானதா…..? கிருஷ்ணருடைய படை வேண்டும்; ஆயுதமேந்தாத கிருஷ்ணர் மட்டும் பாண்டவர்களுக்கு; சகதேவனுடைய தாய்மாமன் சல்லியன் தனக்குத்தான் வேண்டும். அவமானப்படுத்திய தாத்தாவும், குருமார்களும் தனக்காக உயிரையே கொடுக்க வேண்டும் என்று இத்தனையும் செய்து போரை வரவழைத்தவன் ஒருவன். அவன் இன்று செத்து விட்டான் என்பதற்காக, ‘கௌரவர்களை நாசம் செய்வதற்கே நீ திட்டம் தீட்டினாய்’ என்று கிருஷ்ணரைப் பார்த்து, இத்தனையையும் கூடவே இருந்து பார்த்த காந்தாரி சொல்வாள்…. அதையும் கேட்டு, இன்னும் இந்தக் கதையை நான் தொடர்ந்து எழுதுகிறேன்…..

கிருஷ்ணர் : மேகலா….. என்ன….., இது….. அவசரப்படுகிறாய். நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து எழுதும் போது, அவரவர் மனநிலையை வெளிப்படுத்துகின்றனர். காந்தாரி, பிள்ளைப் பாசத்தால் சபித்து விட்டாள். நீ கதையைத் தொடர விரும்பவில்லை என்கிறாய்…!

மேகலா : நான் கதையை முடிக்கவில்லை கிருஷ்ணா! இந்தச் சம்பவங்கள் நடக்கும் போது, உடனிருந்த பீஷ்மர், கிருஷ்ணரை ‘விஷ்ணுசகஸ்ரநாமத்தால் அர்ச்சிப்பதை எழுதாமல் விடுவேனா… காந்தாரி பேசுவதை என்னால் தாங்க முடியவில்லை கிருஷ்ணா! அந்தச் சாபம் பலிக்கப் போவதாக நீ சொல்வதும், என்னால் தாங்க முடியவில்லை. என் கிருஷ்ணன், பூவுலகை விட்டு வைகுந்தம் செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அர்ஜுனன் சக்தி இழப்பதை, ஸ்ரீ கிருஷ்ணர் தான் விரும்புவாரா…

கிருஷ்ணர் : சரி…, யுதிஷ்டிரரின் மன நிலையை விளக்கு; அடுத்து எப்படி கதையை முடிப்பது என்று பார்க்கலாம்….

(சாந்தி பர்வத்தில், யுதிஷ்டிரரின் மனக் குழப்பத்தோடு அடுத்த பகுதி ஆரம்பமாகும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2