நீங்க..., நல்லவரா..., கெட்டவரா...? - பகுதி 5
கிருஷ்ணர் : மேகலா….. ஏதாவது ஒரு கதை சொல்லேன்…
மேகலா : கிருஷ்ணா…., நாம, ‘நல்லவர்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரமாய் ஆராய்ந்து வருகிறோமே…. இப்ப எப்படி….?
கிருஷ்ணர் : உன்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையைச் சொல்லு…. அப்புறம் பார்க்கலாம்….
மேகலா : கிருஷ்ணா! ஒரு முறை சத்தியலோகத்தில், படைக்கும் கடவுள் பிரம்மா முன்பாக, கூடை கூடையாக ரோஜாப்பூக்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள். பன்னீரும் குடம் குடமாய்க் கொண்டு வரப்படுகிறது. அப்பொழுதுதான் பிழிந்தெடுத்த மலைத் தேனும் கொண்டு வந்து இறக்கி வைக்கிறார்கள். ‘எல்லாம் கொண்டு வரப்பட்டதா’ என்று சரிபார்த்த பிரம்மனும், தான் பிடிக்க வேண்டிய மண்ணையும் எடுத்து வைத்து, மனித உருவம் படைக்க அமர்கிறார்.
வழக்கமாய் இல்லாமல், இன்று special கவனத்துடன் பிரம்மன், படைக்கும் வேலையைச் செய்கிறாரே என்று எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு, ‘என்ன, ஏது’ என்று அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதனால், பிரம்ம லோகம் வந்து, பிரம்மன் மண்ணைக் குழைத்து உருவம் செய்வதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிரம்மனும், சரஸ்வதியும் அங்கிருக்க, கவனம் சிதறாமல், தன் வேலையை ஜரூராகச் செய்து கொண்டிருந்தார். அருகில், தங்கத்தைப் பொடி செய்து வைத்திருந்தனர். அதைக் கொஞ்சம் தூவினார். விரல்களால் தட்டிப் பார்த்தார். சதங்கையின் சப்தம் மிருதுவாய்க் கேட்டது. மின்னலின் வேர்களை நரம்புகளாக்கி இழுத்துப் பார்த்தார். இசையின் ஸ்வரங்கள் சிரிப்பது போல் கேட்டது. திருப்தியுற்றார். கழுத்துப் பகுதியைச் செதுக்கும் பொழுது, ரோஜாப்பூக்களின் இதழ்களை, பன்னீரில் நனைத்துக் குழைத்தார். அவருக்கு இன்னும் திருப்தி ஆகவில்லை. பக்கத்தில் இருந்த மலைத்தேனை முழுதும் ஊற்றவும், குழைத்த கலவை பதமாயிற்று. அதை எடுத்து தொண்டைப் பகுதியை, மிகக் கவனமாக குழைத்து உருவாக்கினார். இன்னும் கொஞ்சம் தேனைச் சேர்த்து, கழுத்துப் பகுதியை பிரமாதமாகச் செதுக்கினார்.
எம்பெருமான் நாராயணனும், புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார். இத்தனை கவனம் செலுத்தி உடம்பினைப் படைத்த பிரமன், தலைப்பகுதிக்கு வரும் பொழுது கொஞ்சம் யோசித்தார். இவ்வளவு கவனமாகப் படைக்கப்பட்ட மனிதன் தலையை வடிவமைக்க சற்றே நிதானமாய் யோசித்தார். அப்பொழுது, கனம் தெரியாத பறவைகளின் சிறகுகள் பறந்து வந்து, அவர் காலடியில் குவிந்தன. ஒவ்வொன்றாய் சேர்த்துக் கட்டி, தலைக்கு வடிவம் கொடுத்தார். என்ன ஆச்சர்யம்…, கனமே இல்லாத தலைப்பகுதி, கன கச்சிதமாய் அந்த மனிதனை உருவமாக்கியது. ஆர்வ மிகுதியால், ஸ்ரீமன் நாராயணன், ‘பிரம்ம தேவரே’ என்று அழைத்தார். கண்களை செதுக்கிக் கொண்டிருந்த பிரம்ம தேவர், கவனம் சிதறி, ஏறிட்டுப் பார்த்தார்.
பிரம்மன் : வாருங்கள் நாராயணரே! இருக்கையில் அமருங்கள்.
நாராயணன் : யாரை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? நான் வந்து நெடு நேரமாகி விட்டது. வந்தது கூடத் தெரியாமல், ரோஜா மலரை, தேனில் குழைத்து, இதமாய், பதமாய் வடிவெடுக்கிறீர்கள். ஒவ்வொரு பிடி மண்ணையும், சரஸ்வதியைக் கையில் எடுத்துத் தரச் சொல்லி வாங்குகிறீர்கள். என்ன விஷயம்….?
பிரம்மன் : சொல்கிறேன் நாராயணா! இந்த மனிதனுக்கு மூச்சுக் காற்றை செலுத்தி விட்டால், உயிர் வந்து விடும். உங்கள் கையில் புல்லாங்குழல் இருந்தால், அதை ஊதி, இக்குழந்தைக்கு ’உயிர்மூச்சு’ கொடுங்கள், ஸ்ரீமன் நாராயணரே’ என்று கேட்க, நாராயணனும், பிரம்மனின் பதிலில் சுவாரஸ்யமானார். ஒரு ஈர்ப்புடன், தன் கையில் இருந்த புல்லாங்குழலை எடுத்து, ஏழு ஸ்வரங்களையும் தன் குழலில் புகுத்தி, மென்மையாய் ஊதி, அக்குழந்தைக்கு உயிர்மூச்சு கொடுத்தார். குழந்தைக்கு உயிர் வந்து நெளிந்து மெல்லச் சிணுங்கியது. ஏழு ஸ்வரங்களும் சிணுங்கின! நாராயணன் ஆச்சரியப்பட்டு, பிரம்மனிடம் கேட்டார், ‘இந்தக் குழந்தை படைப்பில் ஏன் இத்தனை கவனம்? குழந்தை பெரிய பாடகனாக வரப் போகிறானோ? தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்’. பிரம்மனும், தலையசைத்து, அக்குழந்தையின் கதையைச் சொல்லலானார்.
பிரம்மன் : நீங்கள் கேட்பது சரிதான். இக்குழந்தை பெரும் பாடகனாகத்தான் வரப் போகிறான். பல கோடி மக்களின் உள்ளத்தையும் கவரப் போகிறான்.
நாராயணன் : அப்படியா…! இதுவரை எத்தனையோ பாடகர்களை உருவாக்கியிருக்கிறீர்கள். அவர்களையும் கவனமாகத்தான் படைத்துள்ளீர்கள். இருந்தாலும், குழந்தையின் கழுத்துப் பகுதியை, தேர்ந்த நெசவாளர் மாதிரி நெய்திருக்கிறீர்களே…. இக்குழந்தையின் முற்பிறப்பைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
பிரம்மன் : நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இக்குழந்தை, போன பிறவியில், கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு, தன் குரலையே பிரசாதமாகப் படைத்து, தினமும் பாட்டுப் பாடி அர்ச்சனை செய்து வந்தான். அவன் முறைப்படி சங்கீதம் கற்றவனில்லை. அன்னையும், அவன் பாடுவதில் மனம் மகிழ்ந்து கேட்டுக் கொண்டிருப்பாள். ஒருமுறை, பாடகன் பாட்டுப் பாடும் போது, வீணை மீட்டிக் கொண்டிருந்த சரஸ்வதி தேவியும், பாடகனிடம், ‘குழந்தாய்! நீ வேண்டும் வரம் கேள்’ என்றாள். அதற்கு அக்குழந்தையும், ‘தாயே! எனக்கு செல்வமோ, பெரிய பதவியோ தேவையில்லையம்மா; நான் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும், எனக்குப் பாடும் திறன் தந்து, அம்மாவாய் என் மீது பரிவு காட்டுகிறீர்கள். இந்தப் பந்தம் என்றும் எனக்குத் தொடர வேண்டும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், நம்மிருவருக்கும் உள்ள இந்தப் பந்தம் தொடர வேண்டும். என் பாட்டால் உங்களை மகிழ்விக்க வேண்டும்’ என்று தான் அடுத்த பிறவியிலும் பாடகனாகவே பிறக்கப் போகிறோம் என்று நினைத்து அப்பாவியாகக் கூறினான். அன்னையும், ‘நீ என்னை மட்டுமல்ல, இந்த உலகத்தையே உன் குரலால் மயக்கப் போகிறாய். எல்லோருக்கும் சங்கீதம் என்பது, முறைப்படி கற்றுத் தேர்வது; ஆனால், உனக்கோ, பூர்வ ஜென்மத் தொடர்பு. காதல், அன்பு, பாசம், சிரிப்பு, சிணுங்கல், கொஞ்சல் என்று எந்த உணர்வையும், இசையால் சிணுங்கி, சிரித்து வெளிப்படுத்துவாய். பாடகர்கள் எல்லோருடைய நாக்கிலும், வாக்காய் நான் குடியிருப்பேன். ஆனால், உன்னோடு, இரத்தத்தில், ஜலதரங்கமாய், உயிர் அணுக்களில், ஸ்வரங்களாய், நரம்புகளில், வீணை நரம்புகளாய், உயிர் மூச்சே, புல்லாங்குழலாய், உன் வாக்கில், மொழிச் சுத்தமாய், உன் குரலின் குழைவாய், என்றும் பணிவாய், எல்லோர் மனதிலும் நிறைந்து போகும் தேன்குடமாய் என்றும் உன்னோடு குடியிருப்பேன். நான் உன்னுடன் இருப்பதால், முறைப்படி சங்கீதம் உனக்குத் தேவையில்லை; மகிழ்ச்சிதானே’ என்று கேட்டாள். அந்த அப்பாவியும், ‘ரொம்ப சந்தோஷம் அம்மா’ என்று சொன்னான். இவன் சரஸ்வதி தேவியின் special குழந்தை. ஒவ்வொரு அங்கத்திலும், நான் உன்னோடு இருப்பேன் என்று சொன்ன வாக்கு தான், இத்தனை கவனமாக அவனைப் படைப்பதற்குக் காரணம், எம்பெருமானே!’ என்றவுடன், நாராயணனும், அவன் பிறப்பதற்கு நாள் குறித்து, இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். அவர்தான் கிருஷ்ணா, S. P. பாலசுப்ரமணியம்.
கிருஷ்ணர் : கதை நன்றாக இருந்தது. சிலர், ‘நல்லவர்களாக’ இருப்பதற்கு இது ஒரு route. நீ கற்பனையாகச் சொன்னாலும், அதாவது, பூர்வஜென்மத்தில் தான் வாங்கி வந்த வரமும் ஒரு காரணம். S. P. B – யோட வாழ்க்கை ஓட்டத்தைப் பார்த்து, அவர் பாடலைக் கேட்டால், உண்மையாக இருக்கும் என்று தோணுது இல்லையா…. எத்தனையோ பாட்டு; எத்தனையோ பேரோட வாழ்க்கையின் காதலோடு, பாசத்தோடு, அழுகையில் கூட சம்பந்தப்பட்டிருக்கிறது. பல கோடிப் பேரின் மனங்களை வசியம் பண்ணியவர். சிறந்த நட்புக்கு மரியாதை கொடுத்தவர். எல்லாவற்றுக்கும் மேலே, கடவுள் பக்தி கொண்டவர்… இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்… இவரை, ‘நல்லவர்’ என்று சொல்லலாமா….?
மேகலா : ஐயோ கிருஷ்ணா….! படைத்தவன் நீ சொல்லும் போது, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் கிருஷ்ணா…. என்னை ஒரு கதை சொல்லச் சொன்னாய். நானும் ஏதோ கதை விட்டேன்! அழகாய் அந்தக் கதையை முடித்து வைத்து விட்டாய்….
கிருஷ்ணர் : நாளைக்கு, இன்னொரு ‘ஆங்கிளில்’, ‘நல்லவர்களை’ ஆராயலாம்….
(தொடரும்)
Comments
Post a Comment