ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 118

மேகலா : குருக்ஷேத்திரம் செல்லும் வழியில் கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு, பரசுராமர், 21 முறை க்ஷத்திரியர்களைக் கொன்று தீர்த்த கதையை சொல்லிக் கொண்டே வந்தார்.

தருமபுத்திரர், மிகவும் வியப்படைந்து ’21 முறை பரசுராமரால் அழிக்கப்பட்ட க்ஷத்திரிய குலம், மீண்டும் எப்படி வளர்ச்சி அடைந்தது’ என்று கேட்டார்.

பரசுராமரின் சரித்திரத்தைத் தருமபுத்திரருக்கு கிருஷ்ணர் விவரித்தார். ‘ஜமதக்கினி என்ற மஹரிஷியின் புதல்வராகிய பரசுராமர், தன்னுடைய தவத்தினால் பரமசிவனை மகிழச் செய்து, அவரிடமிருந்து ஒளி வீசும் கோடரி ஒன்றையும், பல அஸ்திரங்களையும் பெற்றார். ‘கார்த்தவீர்யார்ஜுனன்’ என்ற மன்னனின் மகன்கள், பரசுராமரின் தந்தையாகிய ஜமதக்கினியைக் கொன்று விட்டார்கள். இதனால் பெரும் கோபம் கொண்ட பரசுராமர், ‘இந்தப் பூமியை க்ஷத்திரிய குலம் இல்லாததாகச் செய்து காட்டுகிறேன்’ என்று சபதம் செய்து, கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்கள் மீது போர் தொடுத்தார். போரில் அவர்கள் எல்லோரும் அழிந்தார்கள். அதன் பின்னர், அந்த ராஜ்ஜியத்திலேயே க்ஷத்திரிய இனத்தைச் சார்ந்தவர்களை எல்லாம் அவர் அழித்தார். சபதத்தை நிறைவேற்றிய திருப்தியோடு, கோபம் தணிந்தவராகிப் பரசுராமர் தவம் செய்வதற்காக வனம் சென்றார். அங்கே ‘பராவசு’ என்பவர், பரசுராமரைப் பார்த்து, ‘நீ செய்தது பொய்யான சபதம். யயாதபவனம் என்ற புண்ணிய ஸ்தலத்தில் ஒரு யாகம் நடக்கிறது. அங்கே பெரும் க்ஷத்திரியக் கூட்டமே வருகிறது. க்ஷத்திரியர்களே இல்லாததாகச் செய்வேன் என்று சபதம் செய்த நீர், இதற்கு என்ன சொல்கிறீர்’ என்று பரிகாசம் செய்தார்.

இதைக் கேட்ட பரசுராமர், மிகவும் கோபம் கொண்டு, முன்பு கொல்லாது விட்ட க்ஷத்திரியர்களையும், தப்பி ஓடியவர்களையும் மீண்டும் அழித்தார். க்ஷத்திரியப் பெண்களின் கர்ப்பங்களில் இருந்த குழந்தைகள் வளர்ந்த பின் உருவான க்ஷத்திரிய குலத்தையும் அழித்தார். இவ்வாறாக, 21 முறைகள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது, ‘காஷியபர்’ என்ற ரிஷி, க்ஷத்திரியர்களைக் காக்க முனைந்தார். பரசுராமர் செய்த ஒரு யாகத்தில், அவரிடமிருந்து காஷியபர், பூமியைத் தானமாகக் கேட்க, பரசுராமரும் பூமியைத் தானமாகக் கொடுத்தார். அப்படி பூமியைத் தானமாகப் பெற்றுக் கொண்ட காஷியபர், பரசுராமரைப் பார்த்து, ‘இது என்னுடைய தேசம். இதில் நீர் வசிப்பது நியாயமல்ல. ஆகையால், இதனுடைய தென்கோடியில் உள்ள கடற்கரைக்குச் சென்று விடும்’ என்று கூறினார். பரசுராமரும் அவ்வாறே தென்கோடியை நோக்கிச் சென்றார்.

காஷியபர் தானமாகப் பெற்ற பூமியை, தன் சிஷ்யர்களாகிய பிராமணர்களிடம் அளித்து விட்டு வனம் நோக்கிச் சென்றார். பிராமணர்களால் ஆளப்பட்ட பூமியில், பலம் உள்ளவர்கள், பலம் குறைந்தவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். பலாத்காரம், வன்முறை மூலம் பொருட்களைக் கவர்வது போன்றவை பெருகின. ஒவ்வொரு வர்ணத்தைச் சார்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் அழிக்கத் தலைப்பட்டனர். இதனால் வருத்தமடைந்த பூமாதேவி, காஷியபரை அழைத்து, நிலைமையை விளக்கி, தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக, ‘இந்தப் பூமியை க்ஷத்திரியர்களிடமே மீண்டும் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாள். காஷியபரும், பல வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த க்ஷத்திரியர்களை அழைத்து, க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்வித்தார். அவர்கள் வம்சங்கள் வளர்ச்சியடைந்து, இன்று உலகமெங்கும் க்ஷத்திரிய குலம் வியாபித்திருக்கிறது’.

பரசுராமரின் வரலாற்றைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்த கிருஷ்ணரும், மற்ற்வர்களும், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் இடத்தை அடைந்தார்கள். முனிவர்களால் சூழப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்த பீஷ்மரைச் சுற்றி அனைவரும் அமர்ந்தார்கள். பீஷ்மரைப் பார்த்து மனவருத்தத்துடன் கிருஷ்ணர் பேசத் தொடங்கினார். ‘அம்புகளினால் அடிபட்ட உமது உடல், பெரும் துன்பத்தைத் தராமல் இருக்கிறதா? நீர் விரும்பிய போது தான் மரணம் உம்மை அணுகும் என்ற வரம் பெற்றவராக இருந்தாலும் கூட, உடல் வேதனையை விலக்க முடியாதே’. இவ்வாறு பீஷ்மர் படும் துன்பம் தன்னையும் வாட்டுகிறது என்பதை உணர்த்தினார். மேலும் சொன்னார், ‘சத்தியத்திலும், தவத்திலும், வேதத்திலும், யாகத்திலும், அஸ்திர வித்தையிலும், யுத்த தந்திரத்திலும் உமக்கு நிகரான ஒருவரை இந்த உலகம் கண்டதில்லை. நீர் தேவர்களுக்கு நிகரானவர். நீர் அறியாத தர்மம் இந்த உலகில் இல்லை. ஆகையால், ராஜ்ஜிய பாரத்தை ஏற்றிருக்கும் இந்த தருமபுத்திரருக்கு, நீர்தான் தர்மங்களைப் பற்றிய சூட்சுமங்களை எடுத்துரைக்க வேண்டும். யுதிஷ்டிரன் மனதில் ஞானம் என்ற விளக்கை நீர்தான் ஏற்றி வைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

பீஷ்மர், கிருஷ்ணரைப் பார்த்துக் கைகூப்பியபடியே, அவரை பலவிதமாக துதித்து விட்டு, ‘உமது கருணையினால் உமது திவ்ய உருவத்தையே நான் காண்கிறேன்’ என்று மனம் நெகிழ்ந்து சொன்னார். அதற்கு கிருஷ்ணர், ‘மனிதர்களில் சிறந்தவரே! என் மீது உமக்கு முழுமையான பக்தி இருப்பதால்தான், என் திவ்ய உருவம் உமக்குக் காண்பிக்கப்பட்டது. மனிதர்களில் மேம்பட்டவரே! அழிவற்ற உலகங்களை அடையப் போகிறவரே! பீஷ்மரே! நீர் இந்த உலகத்தை விட்டுச் சென்ற பிறகு, இந்த உலகில் அறிவு குறைவுள்ளதாகி விடும். அந்தக் காரணத்தினால், இப்பொழுதே நீர் தருமபுத்திரருக்கு, அறம், பொருள், இன்பம் பற்றிய தர்மங்கள் அனைத்தையும் விளக்கமாக உபதேசம் செய்யுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

பெரும் உடல் வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்த பீஷ்மர், ‘என்னுடைய அங்கங்கள் மிகவும் துன்பத்தை அனுபவிப்பதால், மனதிலும் கூடத் தெளிவு குறைகிறது; வார்த்தைகள் தடைபடுகின்றன. தருமபுத்திரனுக்கு உபதேசம் செய்யும் அளவுக்கு எங்கிருந்து சக்தியைப் பெறுவேன்? அதுவுமன்றி, உமது எதிரில் தர்மத்தைப் பற்றிப் பேசும் தைரியம் பிரகஸ்பதிக்கே கூட வராது. ஆகையால், நீர் இருக்கும் போது, தர்மத்தைப் பற்றி விரிவுரை செய்ய நான் யார்? குருவின் எதிரே சிஷ்யன் பேசுவது தகாது. உம் எதிரில் நான் பேசக் கூடாது’ என்று சொன்னார்.

கிருஷ்ணர் சொன்னார், ‘மேலான நிலை பெற்ற நீர், உமக்குத் தகுந்த வார்த்தைகளைத் தான் பேசினீர். உமக்கு நான் வரம் தருகிறேன். உமது சரீரத்தில் இருக்கும் தொல்லைகள் உம்மை வாட்டாது. உமது சோர்வு நீங்கும். பசி, தாகம் ஆகியவை ஏற்படாமல் இருக்கும். உமது மனதில் சிறிதும் களைப்பு ஏற்படாமல் இருக்கும். ஞானம் என்னும் தெய்வீகக் கண்ணுடன், அறம், பொருள், இன்பத்தைப் பற்றிப் பேசும் தகுதி உமக்கு நிச்சயமாக உண்டு. ஆகையால், மனதிலும் உடம்பிலும் சக்தி பெற்று தருமபுத்திரனுக்கு அவற்றை உபதேசம் செய்வீராக’.

இப்படிக் கிருஷ்ணர் கூறியவுடன், வானத்திலிருந்து கிருஷ்ணர் மீதும், பீஷ்மர் மீதும் பூமாரி பொழிந்தது. நல்ல மணமுள்ள காற்று வீசியது. திக்குகள் ஒளிமயமாகத் தெரிந்தன. அங்கு இருந்த மகரிஷிகள், பீஷ்மரை வாழ்த்தி, அவரிடமும், கிருஷ்ணரிடமும் விடை பெற்றார்கள். கிருஷ்ணரும், பாண்டவர்களும் ‘நாளை மீண்டும் வருகிறோம்’ என்று பீஷ்மரிடம் கூறி விடை பெற்றுச் சென்றார்கள்.

மேகலா : ஏன் கிருஷ்ணா! தருமபுத்திரர் எவ்வளவு கொடுத்து வைத்தவர்…..

கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?

மேகலா : இல்லை….., பாஞ்சாலி முதல், அர்ஜுனன், பீமன், நாரதர், வியாசர், கிருஷ்ணர்….., இதோ, இப்ப பீஷ்மர் வரைக்கும் எல்லோரும் அரசனுக்குரிய மரியாதையைக் கொடுக்கின்றனர். ராஜ்ஜிய பரிபாலனத்தை ஏற்றுக் கொள் என்று கிட்டத்தட்ட கெஞ்சுகிறார்கள். அவரோ, ‘பிகு’ செய்கிறார். ஒரு மாதிரி இறங்கி வந்து, ‘சரி’ என்று சொன்னதும், பீமன் குடை பிடிக்கிறான்; அர்ஜுனன் சாமரம் வீசுகிறான்; ரதத்தை ஓட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலே நான் உயிராக மதிக்கும், என் நம்பிக்கையாக வைத்திருக்கும் என் ஸ்ரீ கிருஷ்ணரே தன் பாஞ்சஜன்யத்தால் அபிஷேகம் செய்கிறார். பீஷ்மரிடம் அழைத்துச் சென்று, தர்ம சாஸ்திரத்தை உபதேசம் கேட்கச் செய்கிறார். இத்தனை உபசரிப்புக்கும் அவர் தகுதியானவர் தானா….?

கிருஷ்ணர் : ஏன் அப்படிக் கேட்கிறாய் மேகலா……? தகுதியெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. அவருடைய நேர்மை, பணிவு, திறமை….., எல்லாவற்றையும் விட அவர் பயம் அல்லது குழப்பம் தான் அவருக்கு முதலில் நிற்கிறது. அது அவருடைய தகுதியைக் குறைத்துக் காட்டுகிறது போல… சரி…., அவர் மூத்தவராய்ப் பிறந்து விட்டார். அதனால், அவர் தான் ‘ராஜா’….. பீஷ்மர் உபதேசத்தைக் கேட்கலாம்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1