ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 119

                                                       பீஷ்மரின் உபதேசம்

மேகலா : அடுத்த தினம் பீஷ்மரைக் காணச் செல்வதற்காக தருமபுத்திரர், அர்ஜுனன், பீமன், கிருஷ்ணர், சாத்யகி, நகுலன், சகாதேவன் ஆகியோர் தங்கள் ரதங்களில் ஏறிச் சென்றார்கள். பல மஹரிஷிகளும் கூட, பீஷ்மரின் உபதேசங்களைக் கேட்கும் ஆவலுடன், பாண்டவ சகோதரர்களோடு சேர்ந்து பீஷ்மரைக் காணப் புறப்பட்டார்கள். சூரியன் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்த பீஷ்மரை அடைந்து அனைவரும் தங்களுடைய வணக்கங்களைத் தெரிவித்தார்கள்.

நாரதர், அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, ‘பீஷ்மரிடம் இப்போதே, தெரிந்து கொள்ள வேண்டிய தத்துவங்களை எல்லாம் அறிந்து கொள்ளுங்கள். இவர், இந்த பூத உடலை விட்டு மேலுலகை அடைவதற்கு முன்பாக, அவரிடமிருந்து அறிய வேண்டிய எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

இவ்வாறு நாரதர் கூறிய பின்பும் கூட, பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்க எல்லோரும் தயங்கினார்கள். யுதிஷ்டிரர், கிருஷ்ணரைப் பார்த்துச் சொன்னார், ‘இங்கே பீஷ்மரிடம் கேள்விகள் கேட்க அருகதை உள்ளவர் உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. பீஷ்மரிடம் முதலில் நீங்கள் பேசுங்கள்’.

கிருஷ்ணர், முதலில் பீஷ்மரின் உடல் நலம் பற்றி விசாரித்தார். அதற்கு பீஷ்மர், ‘உம்முடைய அருளினால் என் உடலில் இப்போது தளர்ச்சி இல்லை. என்னுடைய மயக்கமும் விலகி இருக்கிறது. வேதங்களிலும், உபநிஷத்துக்களிலும் கூறியுள்ள தர்மங்கள் யாவும், இப்பொழுது என் மனதில் தெளிவாக நிற்கின்றன. ஆகையால், இப்போது என்னிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டால், நான் விளக்கங்களைக் கூறத் தயாராக இருக்கிறேன். ஆனால், எனக்கே ஒரு சந்தேகம் கேசவரே! உம்முடைய அருளினால் தான் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய என்னால் முடியும். அப்படியிருக்க, நீரே தருமபுத்திரனுக்கு உபதேசம் செய்து விட வேண்டியதுதானே! யுதிஷ்டிரனின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, தர்மத்தின் சூட்சுமத்தை நீரே விளக்கிச் சொல்லாமல், என்னைப் பணிப்பதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணர், ‘உயர்ந்தவை, தாழ்ந்தவை எல்லாமே என்னால் தான் உண்டுபண்ணப்படுகின்றன என்பதும், புகழுக்கும், நற்கதிக்கும் நானே மூல காரணம் என்றும் நீர் அறிவீர். பீஷ்மரே! இனி நான் அடைய வேண்டிய புகழ் என்று ஒன்று கிடையாது. ஆகையால், தர்ம சாத்திரங்களை நன்றாக அறிந்த உம்முடைய புகழ் மேலும் பரவ வேண்டும் என்பதே என் விருப்பம். இப்பொழுது, யுதிஷ்டிரன் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கப் போகும் விளக்கங்கள், வேதத்தின் வார்த்தைகள் போல, உலகத்தில் என்றும் நிலைத்து நிற்கப் போகின்றன. உமது விளக்கங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் மனிதன், பெரும் புண்ணியங்களைப் பெறுவான். பூமியில் ஜீவராசிகள் இருக்கும் வரை, உம்முடைய புகழ் நிலைத்து நிற்கப் போகிறது. அத்தகைய உபதேசங்களை செய்யத் தொடங்குங்கள். எல்லா தர்மங்களையும் அறிந்தவரே! பிறந்தது முதல் ஒரு பாவத்தையும் செய்யாதவரே!, தந்தை மகனுக்கு உபதேசிப்பது போல, இந்த அரசர்களுக்கெல்லாம் நீதியை உபதேசியுங்கள்’ என்று கூறினார்.

பீஷ்மர், யுதிஷ்டிரரிடம் சந்தேகங்களைக் கேட்குமாறு கூறியும் கூட, தர்மர் தயங்கி நிற்பதைப் பார்த்து, கிருஷ்ணர், ‘பீஷ்மரே! பூஜிக்கத் தகுந்த பெரியோர்களையும், உறவினர்களையும் யுத்தத்தில் கொன்று விட்ட காரணத்தினால் நீர் கோபம் கொண்டு சபித்து விடுவீர்களோ என்ற தயக்கம் யுதிஷ்டிரருக்கு இருக்கிறது. அதனால் தான் உம்மிடம் நெருங்கி வரத் தயங்குகிறார்’ என்று சொன்னார்.

இதைக் கேட்ட பீஷ்மர், ‘தவமும், தானமும் பிராமணனுக்குத் தர்மமாகின்றன. அதே போல், யுத்தத்தில் மற்றவர்களைக் கொன்று வீழ்த்துவது, க்ஷத்திரியனுக்குத் தர்மமாகிறது. கெட்ட எண்ணத்துடன் யுத்தம் செய்ய வருகின்றவன், ஆச்சார்யனாக இருந்தாலும் சரி, உறவினனாக இருந்தாலும் சரி, அவர்களைக் கொல்வது க்ஷத்திரியனுக்குரிய தர்மமே! கெட்ட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படும் யுத்தத்தில், எதிரிகளைக் கொன்று குவிப்பவன், க்ஷத்திரிய தர்மத்தை நிலைநாட்டுகிறவனேயாவான். யுதிஷ்டிரன் தயங்க வேண்டியதே இல்லை’ என்று கூறி விட்டு, தருமபுத்திரனைப் பார்த்து, ‘சிறிதும் அச்சமில்லாமல், உனது மனதில் எழும் சந்தேகங்களைக் கேள்’ என்று சொன்னார்.

தருமபுத்திரர், இதன் பின்னர் மனதில் தைரியம் பெற்று, பீஷ்மரைப் பார்த்து தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்து விட்டு, சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார். ‘க்ஷத்திரியர்களுடைய தர்மமே மிக உயர்ந்த தர்மம் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த தர்மமோ எனக்கு மிகப் பெரிய சுமையாகத் தெரிகிறது. அறம், பொருள், இன்பம் மூன்றும் ராஜ தர்மத்தில் நிலை பெற்றிருப்பதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள். அங்குசமானது யானையை அடக்குவது போல, ராஜ நீதியானது உலகத்தை அடக்குவதாகவும் கூறுகிறார்கள். அறிவிற் சிறந்தவர் என்று கிருஷ்ணராலேயே போற்றப்படுகிற பீஷ்மரே! பாட்டனாரே! இவ்வளவு உயர்வு பெற்ற ராஜ தர்மத்தை முதலில் எங்களுக்கு விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’.

பீஷ்மர், ‘தர்மத்தை வணங்குகிறேன். உலகிற்கே நாயகனாகிய கிருஷ்ணரை வணங்குகிறேன். இங்குள்ள மஹரிஷிகளை வணங்குகிறேன்’ என்று கூறி விட்டு, ராஜ தர்மத்தைப் பற்றிய விளக்கங்களைக் கூறத் தொடங்கினார். ‘மக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதே அரசனின் முதல் கடமை. செயல் திறன் தான் அரசனுக்கு மிகவும் முக்கியமானது. செயல் திறன் இல்லாத அரசனுக்கு தெய்வத்தினாலும் உதவி செய்ய முடியாது. செயல் திறனும், தெய்வ அருளும் அரசனுக்கு இரண்டு சக்கரங்கள் போல் அமைந்து, அவனை நேராக இட்டுச் செல்லும். விடாமுயற்சியையும், சத்தியத்தின் பாதையையும் அரசன் எப்போதும் தவற விடக் கூடாது.

ரகசியங்கள் தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் அரசன் உண்மையை ஒளிக்காமல் பேச வேண்டும்கடுமை, கருணை என்ற இரண்டும் அரசனிடம் இருக்க வேண்டும். எல்லோரையும் அடக்கத் தக்க க்ஷத்திரியன், வேதம் அறிந்த பிராமணனை விரோதித்துக் கொள்ளக் கூடாது. யுத்தம் செய்யும் பிராமணன், வேதம் தெரிந்தவனாக இருந்தாலும் கொன்று விட வேண்டும். அனைத்து வர்ணங்களைச் சார்ந்த மனிதர்களிடமும் அன்பு செலுத்தி, அவர்களை மகிழ்விப்பது அரசனின் கடமை. அன்பு காட்ட வேண்டியது அரசனின் கடமை என்றாலும், மிகுந்த பொறுமையோடிருக்கும் அரசனை யாரும் மதிக்க மாட்டார்கள். எப்போதும் கோபத்தோடு இருக்கும் அரசனை யாரும் நெருங்க மாட்டார்கள்’.

பீஷ்மரின் விளக்கவுரை தொடர்ந்தது. ‘எதிரிகளின் ராஜ்ஜியத்தில் என்ன நடக்கிறது என்று ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். யுதிஷ்டிரா! மக்களைக் காப்பது, ஒற்றர்களை நியமிப்பது, அவர்களுக்கு நேரத்தில் கூலியையும் சன்மானத்தையும் கொடுப்பது, யாரையும் கொடுமைப்படுத்தாமல் வரி வசூலிப்பது, வீரத்தை வளர்ப்பது, நேர்மையானவர்களை பணியில் அமர்த்துவது, எதிரியின் பலத்தை அலட்சியப்படுத்தாமல் இருப்பது, இவையெல்லாம் ஒரு அரசனுக்குரிய தர்மமாகிறது. ராஜ்ய நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த வேண்டுமானால், அரசன், குரூரம், பொறுமை இரண்டையும் ஒருங்கே படைத்தவனாக இருக்க வேண்டும். குடிமக்களின் நன்மை கருதியே செயல்படும் அரசன் தனது முயற்சிகளில் தோல்வியுற்றாலும் கூட மேன்மை பெறுகிறான்’.

இவ்வாறெல்லாம் கூறிய பீஷ்மர், ‘யுதிஷ்டிரா, ராஜ்யதர்மத்தின் ஒரு பகுதியை நான் உனக்கு விளக்கினேன். மேலும் ஏதாவது கேட்க விரும்பினால், கேட்பாயாக!’ என்று கூறினார். கிருஷ்ணரும், வியாசரும், கிருபரும், சஞ்சயனும் அவரைப் பெரிதும் பாராட்டினார்கள். சூரியன் அஸ்தமனமாகத் தொடங்கியதால், நாளை மீண்டும் வருவதாகக் கூறி விடைபெற்று அரண்மனை திரும்பினர்.

கிருஷ்ணர் : என்ன மேகலா! சுருக்கமாக எழுதப் போகிறேன் என்று சொன்னாய்! ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து எழுவது போலத் தெரிகிறதே….

மேகலா : ஆம் கிருஷ்ணா! ராஜ தர்மத்தில் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று பீஷ்மர் கூறக் கூற, நான் அசந்துதான் போனேன். Super-ஆ இருக்கு கிருஷ்ணா! கிருஷ்ணரே அருகில் இருந்து கேட்ட இந்த ராஜ தர்மத்தை ஆவலோடு எழுதிப் பார்க்கிறேன் கிருஷ்ணா. பீஷ்மர்…, பிதாமகர்…., போரில் இந்திரனுக்கே அச்சத்தைக் கொடுக்கக் கூடியவர்…., கிருஷ்ணரைப் பார்த்து, ‘உமது அருளினால் தளர்ச்சி நீங்கப் பெற்றேன் என்ற வார்த்தையில் ஒவ்வொரு எழுத்தையும் அனுபவித்து எழுதுகிறேன் கிருஷ்ணா! ‘உமது அருளினால் வேதங்கள், தர்மங்கள் அனைத்தும் தெளிவாக மனதில் நிற்கின்றன’ என்று பீஷ்மர் சொல்லும் போது, எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி நெஞ்சு நிறைய நிரம்புகிறது. ஏண்ணா! எனக்கும் அப்படித்தான் கிருஷ்ணா! எழுதுவதற்கு பேனா எடுப்பதுதான் தெரியும். உனது அருள் மட்டும் தான் என்னை வழிநடத்துகிறது என்பதை அறிகிறேன். Same வார்த்தையை பீஷ்மர் சொல்லும் போது, பீஷ்மர் எனக்கும் தத்தாவாகத் தெரிகிறார். அவர் அறிவுரையை நானும் கேட்டு தெளிவடையப் போகிறேன்.

கிருஷ்ணர் : ஓ…..ஹ்….ஹோ. சரி! கேள். அடுத்து நடப்பதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2