தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 4
கிருஷ்ணர் : என்ன சொன்ன….. என்ன சொன்ன….? காலையில் பிள்ளையார்பட்டி தரிசனம், சாயந்திரம் சௌந்திரராஜப் பெருமான் தரிசனம் என்றாயா….? பிள்ளையார்பட்டிக்குச் சென்றதை என்னிடம் சொல்லவேயில்லை. திருக்கோஷ்டியூர் பக்கம் வரவேயில்லையே….?
மேகலா : ஆமாம் கிருஷ்ணா, சொல்ல மறந்தே விட்டேன். எப்பவுமே, ‘அ’னால ஆரம்பிச்சி, ’ஃ’ – ன்னா வரைக்கும் வரிசையாகப் பேசுவேன். இந்த முறை, சௌந்திரராஜப் பெருமான் கோயிலுக்குச் சென்று வந்த உற்சாகம் என்னைத் தலைகீழா ஆட வச்சிருச்சி போல; பிள்ளையார் கூட மகாபாரதம் எழுத ஆரம்பிக்கும் முன், பிள்ளையார் பிடித்து பூஜை பண்ணி விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறார். நான், முதலில் பிள்ளையார்பட்டிக்குப் போய் சாமி கும்பிட்டு வந்தும் கூட, திண்டுக்கல் புராணம் பாட வந்துட்டேன்.
கிருஷ்ணர் : நீ திண்டுக்கல்லுக்குத் தாவி செல்லும் போதே உன்னைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன். நீ Temple City-யில் tiffin சாப்பிட்டது; பிள்ளையார்பட்டியில் பிள்ளையாரை கண்ணு வாங்காம பார்த்தது; வரிசையிலிருந்து வெளியேறி, மறுபடியும், மறுபடியும் பிள்ளையாரை உற்று உற்றுப் பார்த்து பரவசப்பட்டது; உக்கி போட்டு நேர்ச்சையை செலுத்தியது; மருதீசரை, அஜித குஜலாம்பாளைப் பார்த்து பரவசப்பட்டது; மனமில்லாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே கோயிலை விட்டு வெளியேறியது; குளத்துக்கருகில் சென்றது; துள்ளி விளையாடிய மீன் கூட்டத்தை video எடுத்தது; Group photo எடுத்தது; வழக்கம் போல calendar வாங்கியது; Gift keychain வாங்கியது என்று இத்தனையையும், உன்னுடைய ‘லொட லொட’ மொழியில் சொல்வாய் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். அதையும் சொல்லவில்லை; திருக்கோஷ்டியூரும் செல்லவில்லை. ஒரே தாவாக தாவி, திண்டுக்கல்லுக்குச் சென்று விட்டாய்….. சரி, சௌந்திரராஜப் பெருமான் உன்னைக் கவர்ந்திழுத்து விட்டார் என்று நினைத்துக் கொள்கிறேன்…. சரி…, கதையை மேலே சொல்லு…..
மேகலா : நான் சொல்லும் ‘லொட லொட’ மொழியைக் கேட்க ஆவலாய் இருந்தாயா கிருஷ்ணா? இதை விட வேறு எனக்கு என்ன பாக்கியம் வேணும்… நெசம்மாவே, ஒரு ஆர்வக் கோளாறுல தான் தாடிக்கொம்பு கோயிலுக்குச் சென்றதை விவரிக்க ஆரம்பித்து விட்டேன். அந்தக் கோயிலின் முதல் சன்னிதி இரட்டைப் பிள்ளையார் சன்னதியாகிப் போனதால், இரட்டைப் பிள்ளையாரைக் கும்பிட்ட செய்தியே பிள்ளையார்பட்டியாக நினைச்சுட்டேன் போல….!
கிருஷ்ணர் : சரி; அங்கு தாயார் சன்னதிக்குச் செல்லும் வழி என்ற board மாட்டியிருந்ததே. அதைப் பார்த்தாயா…. பார்க்கலியா….?
மேகலா : பார்த்தோம் கிருஷ்ணா… சௌந்திரராஜப் பெருமானை கும்பிட்ட திருப்தியோடு, தாயார் சன்னதிக்குத் தான் நுழைய ஆரம்பித்தோம். கோயிலுக்குள் திரை போடப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒருவர், திரை விலகுவதற்கு இன்னும் 1/2 மணி நேரம் ஆகும் என்றார். அப்பொழுது, இன்பக்கா, ‘இங்கு ஸ்வர்ண பைரவர் ரொம்ப விசேஷமானவர், அந்த சன்னிதானம் எங்கிருக்கு’ என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். வலது கை மூலையில், பைரவர் சன்னிதானத்தைப் பார்த்து ஓடிச் சென்று வழிபட்டோம் கிருஷ்ணா. நானும், ’தாயார் சன்னதி திரை போடப்பட்டிருக்கிறது; எப்ப திறப்பாங்களோ தெரியவில்லை…., கிளம்புவோம்’ என்று நினைத்தேன்.
கிருஷ்ணர் : ஏன்…? திரை விலகும் வரை உனக்கு பொறுமையில்லையா…? பார்ப்பதற்கே ‘பிராப்தம்’ இருக்கணும் என்று சிலாக்கியமாகச் சொல்லப்படும் கோயிலை, இருந்து வழிபட்டு வருவதுதானே முறை…..
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நான் தான் கிளம்பலாம் என்று நினைத்தேன். ஆனால், அந்தத் தாயாருக்கு என்னைப் பார்ப்பதற்கு விருப்பம் இருந்தது போலும். ராணிமா அங்கிருந்த பிரசாதக் கடைக்குச் சென்று, ‘புளியோதரை வாங்குவமா’ என்றாளா….
கிருஷ்ணர் : நீ, மசால் தோசை சாப்பிடும் ஆசையில், புளியோதரையை வேண்டாம் என்று சொல்லி விட்டாய்…. அப்படித்தானே….
மேகலா : ஹி….ஹி…. நான்… புளியோதரை வேண்டாண்ணு நினக்கல கிருஷ்ணா… ரொம்ப நாள் கழிச்சு வெளியேறி வந்திருக்கோம்…., ஒரு தோசை சாப்பிடலாம்….ணு நினச்சிட்டேன். ஒரு பொட்டலம் புளியோதரை வாங்கி, ஆளுக்கு ஒரு வாய் பிரசாதம் சாப்பிட்டிருக்கலாம்.
கிருஷ்ணர் : Diet என்று சொல்லி கோயில் பிரசாதத்தைத் தட்டிக் கழிச்சுட்ட…. அப்படித்தானே…. சரி, தாயாருக்காக காத்திருந்த நேரத்தில் என்ன தான் செய்தாய்…?
மேகலா : அந்த நேரம் பார்த்து driver வெளிப் பிரகாரம் சுற்றி வந்திருக்கான் போல…, ‘அம்மா, வெளிப் பிரகாரம் சுற்றி வாங்க…. ரொம்ப நல்லாயிருக்கு’ என்று மட்டும் தான் சொன்னான் கிருஷ்ணா…. நாங்க அவன் வார்த்தையையே வேத வாக்காக நினைத்து, வெளிப் பிரகாரம் சுற்றி வரலாம் என்று நினைத்து, கோயிலுக்கு வெளியே வந்தோம். உள்ளே வரும் போது, மங்கிய மாலை வெளிச்சத்தில் இருந்த வானம், நல்ல அடர்த்தியான இருளில், அமைதியான கோயில் வளாகம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கில், கண் வெளிச்சம் தெரியும் மட்டிலும் வெளிச்சம் கொடுத்து நின்றது. நான் கூட கோயில் வளாகத்தை சுற்றி வர பயந்தேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அடடா….டா….டா…. என்னம்மா, எதுக்கெடுத்தாலும் பயம்….. உன் சோம்பேறித்தனத்துக்கு எத்தனை பெயர் சொல்லுற…. நீ…. சரி…. அந்த driver-அ கூட கூட்டிச் செல்லலாமில்ல….
மேகலா : யாரோ ஒருத்தர், சக்கரத்தாழ்வார் கோயில் இருக்கும் திசையைக் கை காட்டிக் கூடவே வந்தார் கிருஷ்ணா… இரவு நேரம் என்பதாலும், minimum வெளிச்சத்தில், ட்யூப் லைட்டும் சுமாராக எரிந்ததாலும், போகும் பாதையும் ரொம்பப் பிரமாதமாக ஒன்றும் இல்லை கிருஷ்ணா. சுற்றுப் பிரகாரத்தில், சக்கரத்தாழ்வார் சன்னதி தவிர, வேற சன்னிதானம் ஒன்றும் இல்லை கிருஷ்ணா! சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரு பூசாரி, தீபம் காட்டி, தன் கடமையைச் செய்தார். நாங்களும் வழிபாடு முடிந்து, தாயார் சன்னதியில் அலங்காரம் முடிந்திருக்குமா… இல்லை, இன்னும் காத்திருக்க வேண்டி வருமா என்று யோசித்துக் கொண்டே மெதுவாக நடந்து வந்தோம்…. அம்மன் சன்னதியின் முன் மண்டபத்தில் கொஞ்ச நேரம் உட்காருவோம் என்று நினைத்து உட்கார்ந்தோம். அப்பப்ப, திரை விலகுகிறதா என்று எட்டிப் பார்க்க…., எண்ணி தலையைத் தூக்கிப் பார்த்து…., அப்பா…., திரை விலகியது கிருஷ்ணா…..
(தொடரும்)
Comments
Post a Comment