ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 121

மேகலா : அதன் பின்னர், தருமபுத்திரர், ‘பெரியவரே! பிராமணர்களில் சிலர், தங்களுக்கு விதிக்கப்படாத வழி முறைகளை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய நிலை என்ன என்று அறிய விரும்புகிறேன்’ என்று கேட்டார்.

பீஷ்மர் சொன்னார், ‘அஹிம்சை, பிறரைப் பற்றிக் கூறாமை, யாகம் செய்வது, வேதம் ஓதுவது, விருந்தாளிகளை வணங்குவது, அடக்கம், உண்மை தவறாமை, தவம் புரிவது, தர்மத்தை மீறாமல் இருப்பது ஆகியவை பிராமணனுக்கு உரிய குணங்கள். இவற்றிலிருந்து விலகுகிற பிராமணன் தேசத்திலிருந்து விரட்டப்படத் தக்கவன்’.

‘திருடர்களால் பயம், மற்ற துன்பங்கள் ஆகியவை பெருகும் போது, க்ஷத்திரியன் அல்லாத மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்த ஒருவன், தீயவர்களை அடக்கி, தர்மப்படி தண்டனை விதித்து, மக்களைப் பாதுகாக்க முனைந்தால், அவன் அரசனாக அங்கீகரிக்கப்படத் தக்கவனா இல்லையா?’ என்று தருமபுத்திரர் கேட்க, பீஷ்மர் சொன்னார், ‘பெருகி வருகிற வெள்ளத்தைத் தடுத்து நிறுத்துகிற அணை போலவும், உதவியே இல்லாத நேரத்தில் உதவியாகவும், பணி புரிகிற மனிதன், பிராமணனானாலும், க்ஷத்திரியனானாலும், வைசியனானாலும், சூத்திரனானாலும், அவன் எல்லா மக்களாலும் பூஜிக்கத் தக்கவனே! மக்களைக் காப்பாற்றுகிறவன், எந்த வர்ணத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவன் அரசனாக அங்கீகரிக்கப்படத் தக்கவனே. மக்களுடைய துக்கத்தை விலக்கக் கூடியவன் எவனோ, அவனால் இவ்வுலகம் காப்பாற்றப்படும். அவனே அரசனாக இருக்க தகுதி படைத்தவன்’.

மேகலா : கிருஷ்ணா! மகாபாரதம் என்னும் இந்த ஐந்தாம் வேதம்; ஏன் வேதங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது என்று இப்போது புரிகிறது. சிறந்த அரசனுடைய ஒவ்வொரு நுணுக்கங்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து, தெளிவாக பீஷ்மர் கூறும் போது, எனக்கு ஆச்சர்யமாயும், அதே நேரத்தில் கொஞ்சம் ஏக்கமாயும் இருக்கிறது….

கிருஷ்ணர் : ஏக்கம் ஏன் மேகலா….?

மேகலா : இப்பல்லாம் அப்படி இல்லையே கிருஷ்ணா!

கிருஷ்ணர் : மேற்கொண்டு, கதையை நீ சொல்கிறாயா….?

மேகலா : நான் தான் சொல்லுவேன்; நான் தான் சொல்லுவேன்…

கிருஷ்ணர் : சரி…., மேலே சொல்லு…..

பீஷ்மரின் உபதேசம் தொடர்கிறது

மேகலா : அடுத்த தன் சந்தேகத்தை தருமர் கேட்கிறார். ‘உதவியே இல்லாமல் ஒரு சிறிய காரியத்தைச் செய்வது கூட மனிதர்களுக்குக் கடினமாக இருக்கிறது. அப்படியிருக்க, பிறர் உதவி இல்லாமல் ஒரு ராஜ்ஜியத்தை நடத்துவது, அரசனால் முடியுமா? எப்படிப்பட்டவர்களை அரசன் நம்பலாம்?’ என்று கேட்டார்.

அதற்கு பீஷ்மர், ’தகப்பன், பாட்டன் காலத்திலிருந்து விசுவாசமாக இருப்பவன், பெரும் நம்பிக்கைக்குரியவன். உன்னுடைய மேன்மையைக் கண்டு எந்த நண்பன் மகிழ்ச்சி அடைகிறானோ, உன்னுடைய வீழ்ச்சியைக் கண்டு எவன் துக்கமடைகிறானோ – அவனை அதிகமாக நம்பலாம். உறவினன் இல்லாத மனிதன், மகிழ்ச்சி இல்லாத மனிதனே. உறவினர்களிடம் குணமும் உண்டு, குறையும் உண்டு. அதனால், அவர்கள் மீது முழு நம்பிக்கையை வைக்கக் கூடாது. இருந்தாலும், நன்மொழிகளாலும், தாராள மனதினாலும் உறவினர்கள் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய மந்திரிகளோ, அதிகாரிகளோ செல்வத்தை அபகரிக்கிறார்கள் என்று யாராவது கூற முயன்றால், அவர்களைப் பலர் முன்னிலையில் விசாரிக்கக் கூடாது. தனியாகத்தான் விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளால் அவர்களுக்கு ஆபத்து நேரலாம்’. இவ்வாறாக பீஷ்மர் தன்னுடைய உபதேசத்தைத் தொடர்ந்தார்.

அடுத்து, பீஷ்மர், ராஜ்ஜியத்தை நடத்துவதற்கான பல வழிமுறைகளை தருமபுத்திரருக்கு எடுத்துரைத்தார். எப்பேர்ப்பட்டவர்களை நண்பர்களாகக் கொள்ளலாம்; யார் யாரை படைத் தலைவர்களாக நியமிக்கலாம்; மந்திரிகள் எத்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும்; எத்தனை மந்திரிகளை வைத்துக் கொள்ள வேண்டும்; நகர அமைப்பு எப்படி இருக்க வேண்டும்; அரசுக்கு வேண்டிய வருமானத்தை நாடும் முறைகள்; வரி வசூல் செய்யும் முறைகள்; யுத்தம் செய்ய வேண்டிய முறைகள்; அதற்கான காலமும் இடமும்; பகைவனை வெல்வதற்கு கையாளப்படக்கூடிய தந்திர வழி முறைகள்; வெற்றியை நாடும் வழி முறைகள் போன்ற பல விஷயங்களைப் பற்றி பீஷ்மர், தருமபுத்திரருக்கு விளக்கங்களை அளித்தார். நல்லவர்கள் தீயவர்களைப் போலவும், தீயவர்கள் நல்லவர்களைப் போலவும் காட்சி அளிக்கும் நேரங்களில், அவர்களுடைய தன்மைகளை அறிந்து கொள்ளும் வழி முறைகளையும் விளக்கிக் கூறினார்.

’அறிவுள்ள மனிதன் ஒரு சபையில், ஒரு மூடனால் நிந்திக்கப்பட்டால், அப்போது அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?’ என்று தருமபுத்திரர் கேட்டார். ‘சபையில் மட்டுமல்ல, எப்போதுமே அறிவுள்ள மனிதன் மூடனின் ஏச்சுக்களைப் பொறுத்துக் கொள்ளப் பழக வேண்டும். அதே போல், அற்ப புத்தி படைத்தவனுடைய ஏச்சுக்களை, அறிவுள்ளவன் ஒதுக்க வேண்டும்’ என்று பீஷ்மர் கூறினார்.

அடுத்து தருமபுத்திரர், ‘முறையான உதவி இல்லாமல் எந்த அரசனும் ஆட்சியை நடத்த முடியாது என்னும் போது, எப்படிப்பட்டவர்களை ஒரு அரசன் தனக்கு உதவியாக நியமித்துக் கொள்ள வேண்டும்?’ என்று கேட்டார். பீஷ்மர் சொன்னார், ‘ஆட்சி நடத்துவதை மட்டுமல்ல, உதவி இல்லாமல் எந்தக் காரியத்தையும் மனிதனால் சாதிக்க முடியாது. நல்ல குடிப் பிறப்பு, அறிவு, கல்வி, நம்பிக்கைக்குரிய தன்மை, காலத்தை அறிந்து செயலாற்றும் திறன், நடந்ததை நினைத்து மனம் வருந்தாது இருத்தல், நேர்மை, தர்மம் தவறாத குணம், அரசனுடைய தாழ்வை, தன்னுடைய வீழ்ச்சியாக நினைக்கும் மனப்போக்கு உடையோரை உதவியாக நியமித்துக் கொள்ள வேண்டும். அரசன் தன்னுடைய ஆலோசனைகளை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அரசன் இனிமையான பேச்சு உடையவனாகவும், பார்ப்போரைக் கவரும் நடை உள்ளவனாகவும் இருக்க வேண்டும். வருவாய் வரக் கூடிய வழிகளை அரசன் விரும்ப வேண்டும். வரும் முன் காப்பவனாயும், வந்த பின் காப்பவன் என்ற இரண்டு வழி முறைகளையும் அந்தந்த சமயங்களில் கையாள வேண்டும். வருவதற்கு முன்னமேயே ஆபத்தை உணர்வது சிறப்பு; வந்த பிறகாவது அதை உணர்ந்து கொள்வது நலம்; வந்த பின்னும் உணராமல் நடந்து கொள்வது நாசத்திற்கு வழி’.

என்று, ராஜ்ஜியத்தை வழி நடத்தும் முறைகளை எடுத்துக் கூறிக் கொண்டே வருகிறார் பிஷ்மர்.

மேகலா : கிருஷ்ணா! இது அரசனுக்காக மட்டுமல்ல; சிறந்த ‘நிர்வாகம்’; ‘எந்த தரப்பாக இருந்தாலும்’, அதற்குமே இது சிறப்பாகப் பொருந்தும் கிருஷ்ணா! இன்று கூட…., அது பொருந்தும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இன்று மட்டுமல்ல மேகலா…, நாளையும்; ஏன்…. என்றும் இது பொருந்தக் கூடிய ஆலோசனைகள் தான்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2