ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 122

                                      பீஷ்மரின் உபதேசம் தொடர்கிறது

மேகலா : தருமபுத்திரர், ‘பகைவனோடு நட்பு கொள்ள வேண்டிய நேரம் வந்தால் என்ன செய்வது?’ என்று கேட்டார். பீஷ்மர், பகைவனிடமும் நட்பு கொள்ளும் வகையை விளக்கி விட்டு, அந்த நட்பு நம்பிக்கைப் பூர்வமானதாக இருக்கக் கூடாது என்று விவரித்தார். இதைக் கேட்ட தருமபுத்திரர் குழப்பமடைய, நம்பிக்கை வைத்த இடத்திலேயே கூட, அதை விலக்கிக் கொள்ள வேண்டிய நேரம் வரும். எல்லோரையும் நம்பி விடக் கூடாது; உரியவர்களிடத்தில் தான் நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பிக்க, எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொண்டு, பகைவரிடமும் நம்பிக்கை வைக்கலாம். ஒரு இடத்தில் ஒருவனுக்கு தீங்கு செய்து விட்டு, அவனை நம்பிக் கொண்டு வாழ முயற்சிக்கக் கூடாது.

’கழுகைப் போல பார்வை, கொக்கைப் போல பொறுமை, நாயைப் போல எச்சரிக்கை உணர்வு, சிங்கம் போன்ற பராக்கிரமம், பாம்பு போல நெருங்குவது தெரியாமல் பகைவனை நெருங்கும் தன்மை ஆகியவற்றை உடையவனாக அரசன் இருக்க வேண்டும். மென்மையானவனாகவே இருந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், கொடுமையானவனாகவே இருந்தால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதாலும், அரசன் இந்த இரண்டு குணங்களும் கலந்தவனாகவே இருக்க வேண்டும். ‘சரணம்’ என்று வந்தவனைக் காப்பாற்றுவது என்பது அரசனின் மிகச் சிறந்த தர்மம். சரணம் அடைந்தவனை, எந்தத் தியாகம் செய்தாவது காப்பாற்ற வேண்டும்’ என்று கூறிய பீஷ்மர், நன்றி கொன்றவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

’வேதம் ஓதி, நெறி தவறாமல் நடந்து கொள்ளும் பிராமணர்களைக் கொன்றவர்களுக்குப் பிராயச்சித்தம் உண்டு; குருவின் மனைவியைக் கெடுக்க நினைத்தவனுக்குப் பிராயச்சித்தம் உண்டு. நண்பனுக்குத் துரோகம் இழைத்து, நன்றி கெட்ட முறையில் நடந்து கொள்பவனுக்கு எந்தப் பிராயச்சித்தமும் கிடையாது. அவனுடைய உடல், புல்களுக்கும், பூச்சிகளுக்கும் கூட லாயக்கற்றது.

‘தங்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள விரும்புகிற இருவர், ஒரே விஷயத்தைப் பற்றி, தங்கள் தங்கள் தேவைக்கேற்ப, இரண்டு நீதிகளைக் கூறுவார்கள் என்பதையும், தெய்வத்தின் அருள் இருந்தால், நடக்க முடியாததும் கூட நடக்கும் என்பதையும் பீஷ்மர், தருமருக்கு விளக்கிக் கூறினார்.

‘என்னுடைய பல சந்தேகங்களைத் தீர்த்து வைத்த உங்களிடம், நான் சற்று குதர்க்கமான கேள்வியைக் கேட்கிறேன்’ என்று பீடிகையுடன் ஆரம்பித்த தருமபுத்திரர், தனது அடுத்த சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினார்.

‘வேதத்தில் கூறப்பட்டிருப்பதே தர்மநெறி என்று சொல்லப்படுகிறது. அதே சமயத்தில், பெரியோர்கள் செல்லும் வழி தர்மத்தின் பாதை என்று கூறப்படுகிறது. ஆனால், யார் பெரியோர் என்று அறிவதற்கே, அவர்கள் தர்மத்தின் பாதையில் செல்கிறார்களா, இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க, எது தர்மம் என்று அறிந்தால் அல்லவா எவர் பெரியோர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எவர் பெரியோர் என்பதைப் புரிந்து கொண்டால்தானே, அவர்கள் செல்வதை வைத்து, இது தர்மம் என்று தெரிந்து கொள்ள முடியும். ஒரு நேரத்தில், ஒருவனுக்குச் செல்லுபடியாகக் கூடிய தர்மம், மற்றொரு நேரத்தில் மற்றொருவனுக்குப் பொருந்தாததாக இருக்கிறது. இது பற்றிய விளக்கத்தையும் எனக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’.

பீஷ்மர், தனது விளக்கத்தை ஆரம்பித்தார். ‘ஒரு செயலைப் புரிவதற்கு முன்பாக, ஆழ்ந்து யோசனை செய்து முடிவெடுப்பவன், அதற்குப் பிறகு, தன் செயல் குறித்து வருந்த வேண்டிய அவசியம் இருக்காது. அதே போல, தர்மம், கடமை போன்றவற்றின் உபதேசத்தை நாடி வருபவனிடம் விளக்கங்களைத் தருவதற்கு முன்பாக, நன்றாக யோசித்து, அதன் பிறகே பேச முனைய வேண்டும். பொதுவாகவே நன்கு யோசித்து, அதன் பிறகு செயல்படுபவன் மேன்மை அடைகிறான். எவனைக் கண்டு, எந்த ஒரு ஜீவனும் பயப்பட வேண்டியதில்லையோ, அவன் எதற்கும் அச்சப்பட வேண்டியதில்லை. எவனைக் கண்டு மற்றொரு ஜீவனுக்குப் பயம் இருக்கிறதோ, அவனுக்கு நிம்மதியும் இல்லை, உயர்வும் இல்லை. பெரியவர்கள் சென்ற பாதையில் போகும் போது கூட, அவர்கள் சில தவறுகளைச் செய்திருந்தாலும், அதை விலக்குவது அறிவுள்ளவனின் கடமை.

‘பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதுதான் எல்லாத் தர்மங்களிலும் உயர்ந்த தர்மம். கடும் தவங்கள், பெரும் யாகங்கள், சத்தியம் தவறாமை போன்ற எல்லாவற்றின் மூலம் அடையக் கூடிய மேன்மையை அஹிம்சை ஒன்றினால் மட்டுமே அடைந்து விட முடியும். ஆனால், அதே சமயத்தில், ஒரு பலனைக் கருதி எந்தத் தவத்தையும் கடைப்பிடிப்பவன் மேன்மை அடைவதில்லை. தர்மத்தைக் கடைப்பிடிப்பது கடமை என்ற நினைப்பில் மட்டுமே தர்மத்தின் பாதையில் செல்பவனே மேன்மை அடைகிறான்’.

மேலும் பீஷ்மர் தருமரிடம், ‘இவ்வுலகில் நடக்கிற செயல்களுக்கு யார் காரணம் என்பது மிகவும் நுட்பமான விஷயம். அதை அறிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. செயல்களுக்கு நானே காரணம் என்று நினைப்பது சரியல்ல. விதியை விட நம்மைப் பெரியவர்களாக நினைத்துக் கொண்டால், அது நாம் செய்யும் தவறாகும். புண்ணியம் செய்தவன், தண்ணீரில் ஓடம் மிதப்பது போல, இந்த உலகில் வாழ்கிறான். பாவம் செய்த மனிதன், தாங்க முடியாத சுமையினால் அமிழ்ந்து விடுவது போல் அழிந்து போகிறான். இயற்கையின் இந்த நியதிக்கு நாம் எல்லோரும் கட்டுப்பட்டவர்களே.

‘ஒரு நிகழ்ச்சி நடக்கும் பொழுது, அதற்கு யார் பொறுப்பு என்று அறிய வேண்டுமானால், அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முதற்காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.

‘எல்லா ஜீவராசிகளும் தங்களுடைய கர்மங்களின் பலனைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன’ என்று பீஷ்மர் விளக்க, தருமபுத்திரர், ‘தெய்வம், முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது’ என்று கேட்டார். அதற்கு பீஷ்மர், ‘சரியான நிலத்தைத் தேடிப் பிடித்து, எவ்வகையான விதையை ஒரு மனிதன் விதைக்கிறானோ, அதற்கேற்றபடி பலனை அவன் அடைகிறான். நிலமில்லாமல் ஒரு விதை முளைத்து விடாது. விதை விதைக்கப்படாமல் நிலமும் எந்தப் பயனையும் தராது. நிலம் என்ற மனிதனின் செயலும், விதை என்ற இறைவனின் செயலும் சேரும் போது பலன் கிட்டுகிறது. மனிதனின் முயற்சிக்கு எந்த விதப் பங்குமே கிடையாது என்றால், அதன் பின் இந்த உலகம் முழுவதும், தெய்வத்தின் கருணையையே எதிர்பார்த்துக் கொண்டு, எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் இருந்து விடும். முயற்சி செய்யாத மனிதனுக்குத் தெய்வம் எதையும் தருவது கிடையாது. அதே நேரத்தில் தெய்வத்தின் கருணை இல்லாமல், மனிதனுடைய எந்த முயற்சியும் வெற்றி பெறவும் செய்யாது.

‘மிகச் சிறிய நெருப்பானது காற்றினால் தூண்டப்பட்டுப் பெரும் நெருப்பாக மாறுவது போல, மனித முயற்சி தெய்வத்தின் அருளால் விருத்தி அடைந்து பலனைத் தருகிறது. மனித முயற்சி, தெய்வத்தின் கருணை இல்லாவிட்டால் நிறைவேறாது. முயற்சி இல்லாத இடத்தில், தெய்வத்தின் கருணை கிட்டாது’ என்று பீஷ்மர், தெய்வத்தின் கருணையின் முக்கியத்துவத்தையும், முயற்சியின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

கிருஷ்ணர் : என்ன மேகலா…. பீஷ்மரின் உபதேசத்தை சுருக்கி எழுதப் போகிறேன் என்று சொல்லி விட்டு, நின்று, நிதானமாய் அனுபவித்து எழுதுகிறாயே….

மேகலா : தருமரும், யோசிச்சி, யோசிச்சி கேட்கிறார் கிருஷ்ணா… ஆனாலும், பீஷ்மர், தங்களால் வீழ்த்தப்பட்டவர் என்று பம்மிக் கொண்டு கேட்கிறார். ஆனால், பீஷ்மரோ, கேட்பவன் தன் பேரன் என்ற அக்கறையோடு விளக்குகிறார். நுணுக்கமாய்ச் சொல்லும் பதில்கள், தர்மம் நிறைந்ததாகவும், சத்தியமானதாகவும், உலகியல் வாழ்க்கையின் யதார்த்தமாகவும் இருப்பதால், எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. அதிலும், தருமபுத்திரர் அருகில் அமர்ந்து, பீஷ்மர் கூறும் உபதேசங்களைக் கேட்பவர் யார் தெரியுமா…?

கிருஷ்ணர் : யார்….?

மேகலா : சாட்சாத் எம்பெருமானும், என் மனதிற்கினிய நண்பனுமாகிய ஸ்ரீ கிருஷ்ணர் தான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஓஹோ….சரி! அடுத்து கதையைத் தொடர்க…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2