ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 123
பீஷ்மரின் உபதேசம் மேலும் தொடர்கிறது
மேகலா : பீஷ்மர் தொடர்ந்து தருமபுத்திரருக்கு, ‘லட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்வாள், எங்கெல்லாம் இருக்க மாட்டாள்’ என்று உபதேசம் செய்தார். ‘பெரியவர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஊக்கமுள்ளவர்கள்; நல்ல மனம் கொண்டவர்கள்; பொறுமையும், முயற்சியும், திறமையும் உடையவர்களிடம் லட்சுமி வாசம் செய்வாள் என்றும், நன்றி கெட்டவன்; தொழில் செய்வதில் முயற்சி இல்லாதவன்; ஒழுக்கம் தவறியவன்; கொடும் செய்கைகள் உடையவன் ஆகியோரிடம் லட்சுமி வாசம் செய்வதில்லை என்று விளக்கம் கூறிய பீஷ்மர், விஷ்ணு, பரமசிவன் ஆகியோரின் மகிமைகளைக் கூறுகிறார்.
விஷ்ணு, கருடனுக்கு அபயம் அளித்து, தன்னுடைய மகிமைகளை கருடனுக்கு உபதேசித்து அருளினார். ‘எல்லா ஜீவராசிகளுக்கும் நானே காரணமாகிறேன். எல்லாப் பொருள்களும் என்னிடமிருந்தே உண்டாகின்றன. இரவும் பகலும் என்னாலேயே தாங்கப்படுகின்றன. பிரளயம் வரும் பொழுது, என்னாலேயே எல்லாம் அவற்றின் முடிவை அடைகின்றன. தர்மத்துக்குப் பெரும் ஆபத்து நேரிடும் போதெல்லாம், அதைக் காப்பாற்றுவதற்காக நான் அவதாரம் செய்வேன். எந்த ஜீவராசிக்கும் தீங்கு செய்யாமல், வஞ்சகம் புரியாமல் எவன் இருக்கிறானோ, அவன் என்னை அடைவான்’ – என்று விஷ்ணு கருடனுக்கு செய்த உபதேசத்தை பீஷ்மர், தருமபுத்திரனுக்கு எடுத்துரைத்தார்.
பரமேஸ்வரரின் மகிமைகளை விவரிக்குமாறு கிருஷ்ணரைக் கேட்டுக் கொள்ள, ‘பரமேஸ்வரரின் உண்மையான சொரூபத்தை நேரில் காணும் பாக்கியத்தை நான் பெற்றேன்’ என்று தொடங்கி, அவரின் மகிமைகளை கிருஷ்ணர் விவரித்தார். பிரம்மரிஷியால் அறியப் பெற்ற, சிவசஹஸ்ரநாமத்தை கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு எடுத்துரைத்தார். அந்த ஆயிரம் நாமங்கள் மனதைச் சுத்தம் செய்து பாவங்களை அழித்து விடும் என்றும், சொர்க்கத்தைக் கொடுக்கும் என்றும் கிருஷ்ணர் எடுத்துரைத்தார்.
பீஷ்மர், சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் எவரெவர் செல்வார்கள் என்பது பற்றி விளக்கினார். ‘தன்னுடைய குருவின் சார்பாகவோ, ஒருவனைக் காப்பாற்ற வேண்டியோ பொய் சொல்கிறவனைத் தவிர பொய் சொல்கிறவன், நரகம் போவார்கள்; பிறன் மனைவியை நாடுகிறவன்; பிறர் சொத்தை நாடுபவன்; நண்பர்களுக்கிடையில் பிளவை உண்டாக்குபவன் நரகம் செல்வான்.
’செய்நன்றி மறந்தவன்; மோசடி செய்தவன்; உறவினருக்கு உணவளிக்காமல் தானே உண்பவன்; ஆயுதங்களை விற்பவன்; மக்களிடம் வரி வசூலித்து, அவர்களைக் காப்பாற்றத் தவறியவன்; செல்வம் இருந்தும் தானம் கொடாமல் இருப்பவர்கள் ஆகியோர் நரகம் போவார்கள்.
‘சத்தியம் தவறாதவன்; பொறுமையும் உறுதியும் உடையவன்; பிறன் மனைவி மீது நாட்டம் கொள்ளாதவன்; தாய் தந்தையர்க்குப் பணிவிடை செய்பவன்; குற்றவாளிகளிடத்திலும் கூட அன்பு காட்டுகிறவன்; பசித்தவனுக்குச் சோறு போடுபவன்; கோபத்தை ஜெயித்தவன் ஆகியோர் சொர்க்கம் செல்கிறார்கள்’ என்று பீஷ்மர் விளக்கினார்.
’மேலும், தன்னைச் சரணடைந்தவர்களுக்குப் பாதுகாப்பை அளிப்பவன், மேன்மையுறுகிறான். தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பாற்றி, எல்லா ஜீவராசிகளிடமும் கருணை காட்டுகிறவன் நற்கதியை அடைகிறான்.
நம்மிடம் யார் உதவியை நாடி வந்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நம்மை நம்பி இருப்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் அந்த உதவியைச் செய்ய வேண்டும்.
தருமபுத்திரருக்கு தர்மத்தைப் பற்றி உபதேசம் செய்து வந்த பீஷ்மர், பெண்களைப் பற்றியும் கூறுகிறார். ‘கற்புள்ள பெண்கள், மேன்மையான குணம் படைத்த பெண்கள், உலகிற்கே தாய் போன்றவர்கள். கடல்களும், காடுகளும், மலைகளும், மனிதர்களும் நிரம்பிய இந்தப் பூமியைத் தாங்குவது அப்படிப்பட்ட பெண்கள் தான். உலகம் அவர்களால் தான் வாழ்கிறது.
பெண்களின் மேன்மையைப் பற்றி கூறிய பீஷ்மர், பாவ காரியங்கள் எவை எவை என்பது பற்றியும் விளக்குகிறார். நல்ல பழக்க வழக்கங்களின் விவரத்தையும் எடுத்துக் கூறுகிறார்.
நல்லொழுக்கத்தினால் மனிதனுக்கு ஆயுள் நீள்கிறது. நல்ல பழக்கத்தினால் நற்பெயரும் கிட்டுகிறது. நல்ல பழக்க வழக்கங்களை மனிதன் ஒரு போதும் விடக் கூடாது. கோபம், பொறாமை ஆகியவற்றை மனிதன் விட்டு விட வேண்டும். இன்சொல் ஒரு மனிதனை திருப்தி செய்வது போல் வேறு எதுவும் செய்வதில்லை’ என்று விவரமாகக் கூறுகிறார்.
இவற்றை அறிந்து கொண்ட யுதிஷ்டிரர், ‘மனிதன் செய்யத் தகுந்த காரியங்கள் என்ன? செய்யத் தகாத காரியங்கள் என்ன?’ என்று கேட்டார்.
ஜமதக்னி முனிவர் கூறிய தர்மத்தை பீஷ்மர் தருமருக்கு விளக்கினார். ‘உள்ளத்தில் தூய்மை இல்லாத மனிதன், எவ்வளவு பெரிய யாகங்களை எத்தனை முறை செய்தாலும், தலைகீழாகத் தொங்கி தவம் புரிந்தாலும், அவன் நரகத்தையே அடைவான். கற்றறிந்து வேதம் ஓதுகிற பிராமணனுக்கு, ஒரு பிடி மாவை மனதாரத் தானம் செய்வதால் ஒருவன் சொர்க்கம் செல்வதற்கு வழி பிறக்கும். ‘லோமசர்’ சொன்னதென்று பீஷ்மர் சொல்லிய ‘பிறன் மனைவியை நாடாமல் இருப்பது’ சிறந்த தர்மம்.
இவ்வாறு நல்ல பழக்க வழக்கங்கள், சிறந்த தர்மங்கள் இன்னும் பல நல்ல பழக்க வழக்கங்களை எடுத்துச் சொன்னார்.
மேகலா : இவ்வாறு பல உபதேசங்களைக் கூறும் பீஷ்மர், அமாவாசையில் மரத்தை வெட்டக் கூடாது; அழுக்கு நிறைந்த பாத்திரங்களை கண்ட கண்ட இடங்களில் போடக் கூடாது, என்று சுத்தம் சம்பந்தப்பட்ட உபதேசங்களையும் சொல்கிறார் கிருஷ்ணா. நான், அவற்றிலிருந்து, மனிதனுக்கு அடிப்படை தர்மங்களாக பீஷ்மர் போதிப்பதைப் பொறுக்கி எடுத்துக் கூறியிருக்கிறேன் கிருஷ்ணா…!
கிருஷ்ணர் : நகம் கடிக்கக் கூடாது, வீட்டிற்குள் மரம் முளைக்க விடக் கூடாது என்றெல்லாம் சொல்லத்தான் செய்கிறார். பொதுவாக, மனிதனுக்கு அகச் சுத்தம், புறச் சுத்தம் வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்களுடைய விருப்பம். அதைத்தான் பீஷ்மரும் சொல்கிறார் மேகலா.
அடுத்து கதையைத் தொடர்ந்து சொல் மேகலா….
(தொடரும்)
Comments
Post a Comment