ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 125
பரமசிவனாருக்கும் உமையவளுக்குமிடையேயான உரையாடல் தொடர்கிறது
மேகலா : உமையவள் இல்லறத்தில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்னென்ன என்று கேட்கவும், பரமசிவனார் விளக்கத் தொடங்கினார். ‘நல்லொழுக்கம் என்பதே, இல்லறத்தில் உள்ளவர்களால் காப்பாற்றப்படுவதுதான். அப்படிப்பட்டவர்களைக் காப்பாற்றுவது ஆட்சியாளரின் பொறுப்பு. உமையே! எல்லா மனிதர்களும் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டிய பயிற்சியே கல்வி தான். செயல்களின் தன்மையை அறிவதற்குக் கல்வி பயன்படுவது போல் வேறு எதுவும் பயன்படுவதில்லை. கல்வியினால், ஒருவனுடைய அறிவு விரிவடைகிறது. அறிவு விரிவடைவதால், அவனுக்கு உண்மை புலப்படுகிறது. உண்மையை அறிவதால், மனம் தூய்மை அடைகிறது. எல்லா மனிதர்களும், முதலில் கல்வி என்னும் தகுதியைப் பெற வேண்டும். கல்வி கற்றவன் தான், இந்த உலகில், தன் வாழ்க்கையைச் செவ்வனே நடத்த முடியும்.
முதலில், பணிவிடை செய்து, குருவினிடம் கல்வி கற்க வேண்டும். அதன் பின் வாழ்க்கையில் அனுபவத்தின் மூலமாகக் கற்க வேண்டும். பெரியோர் கூறியவற்றைப் படிப்பதாலும், மனிதன் தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி அறிவை வளர்த்துக் கொள்பவன், அதர்மத்தின் வழியில் செல்ல மாட்டான்.
கல்வி கற்றவன், வாழ்க்கையில் எந்தத் தொழில் செய்தாலும், அதில் நியாயமாக நடந்து கொண்டு செல்வம் பெற நினைக்க வேண்டும். பொருளில்லாதவனுக்கு இம்மையும் இல்லை; மறுமையும் இல்லை. தர்மத்திலிருந்து தவறாமல் பொருள் தேடிக் கொண்டும், தொழில் செய்து கொண்டும் இல்லற வாழ்க்கையை நடத்துபவன் மேன்மையுறுவான். தெய்வங்களைப் பூஜிப்பது, தன் மனைவியிடம் தவறில்லாமல் நடந்து கொள்வது, தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்குமாறு செய்வது, தன் முயற்சியினால் தன் குலத்திற்கே பெருமையை ஏற்படுத்துவது, பெரியோரை மதித்து நடத்துவது – ஆகியவை இல்லறத்தானின் தர்மங்கள். அவன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் இவைதான் என்று இல்லற தர்மத்தை, மகேஸ்வரர் உமையவளிடம் விளக்கிக் கூறினார்.
மேகலா : கிருஷ்ணா! இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி, பரமசிவனார் உபதேசத்தைப் பேசுவோமா…?
கிருஷ்ணர் : நிச்சயமாக மேகலா.
மேகலா : கிருஷ்ணா! மனிதர்கள், கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை எவ்வளவு அழுத்தமாகக் கூறுகிறார் பார்த்தாயா கிருஷ்ணா…?
கிருஷ்ணர் : உனக்கும் அந்தப் பகுதி ரொம்பப் பிடித்து விட்டதா மேகலா? நாரதர், என்னிடம் கூறும் போது, கல்வியின் அவசியத்தை எப்படி வலியுறுத்தியிருக்கிறார் என்று எனக்கும் பிரமிப்பாக இருந்தது.
மேகலா : கல்வி கற்பவனுக்குத்தான் அறிவு வரும். அந்தக் கல்வியினால் தான் அறிவு விரிவடையும்; அதனால் உண்மை புலப்படும்; மனமும் தூய்மை அடையும் என்று, அறிவு வேண்டுமென்றால், ஒழுங்காகப் படி என்று ‘நச்’சென்று சொல்லியிருக்கிறார். இல்லற ஒழுக்கத்திற்கு அடிப்படை தேவையே கல்வி தான் என்று சொல்லி முடிப்பதே சிறப்பு கிருஷ்ணா!
கிருஷ்ணர் : சரி! பீஷ்மரின் அறிவுரையை தொடர்ந்து சொல்லு மேகலா…
பீஷ்மரின் உபதேசம் தொடர்கிறது
முன்வினைப் பயன்
மேகலா : இல்லற தர்மத்தையும், ஒழுக்கத்தையும் விவரித்த பரமசிவனாரிடம், உமையவள், ‘முயற்சியினால் பலன் பெறுகிறவர்கள், முயற்சி இல்லாமலேயே பலன் பெறுகிறவர்கள், முயற்சி செய்து பலன் எதுவும் பெறாதவர்கள்’ – என்று வெவ்வேறு நிலையில் மனிதர்கள் காணப்படுவதற்கான காரணத்தைப் பார்வதி கேட்ட பொழுது அதற்கு விளக்கமளிக்கத் தொடங்கினார், மகேஸ்வரன்.
‘நல்ல மனிதர்களின் தேவைகளை, அவர்கள் சொல்லாமலேயே, தானாகவே உணர்ந்து, அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்கிற வகையில் தான தர்மம் செய்கிற மனிதன், தன்னுடைய மறு ஜென்மத்தில் எந்த வித முயற்சியும் இல்லாமலே பெரும் பலன்களைப் பெறுகிறான். தன்னிடம் உதவியை நாடி வந்து, தானத்தை எதிர்பார்த்து நிற்கும் மனிதர்களுக்கு, அவர்கள் கேட்டவுடன் தானம் செய்கிற மனிதன், தனது அடுத்த பிறவியில் முயற்சி செய்து, வசதிகளைப் பெறுபவன் ஆகிறான். நன் மக்கள் தன்னிடம் வந்து உதவியை நாடி நின்ற போதும் கூட, அவர்களை அலட்சியம் செய்து, கர்வத்தின் காரணமாகத் தானம் செய்யாமல் விடுகிறவன், தனது அடுத்த பிறவியில் எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட எந்த வித வசதியையும் பெற முடியாதவனாகிறான்.
மனிதனுடைய இந்த ஜென்மத்துப் பலன்களுக்கு, பூர்வ ஜென்மத்து வினையே காரணமாகிறது என்ற விளக்கத்தைக் கொடுத்த மகேஸ்வரன், இந்த ஜென்மத்தில், மனிதன் மேலோனாகும் முயற்சியில் ஈடுபடுவதனால், இந்த ஜென்மத்தின் துன்பத்தைத் தாங்கும் வலிமையும் அவனுக்குக் கிடைக்கிறது. மறுமையில் நல்ல பலன் கிடைப்பதற்கான வழியாகவும் அமைகிறது என்று நம்மை அறிவுறுத்துவது போல இருக்கிறது.
இவற்றைத் தொடர்ந்து மகேஸ்வரர், தான தர்மங்கள் செய்வதினால் கிட்டும் புண்ணியத்தை எடுத்துக் கூறினார். ’பற்று நீங்கி வைராக்கியம் பெறுவதால், மனிதன் அடையும் மேன்மையையும் மகேஸ்வரர் விளக்கினார். ஆசையை அடக்க வேண்டும்; நல்ல காரியம் என்று நாம் நினைப்பதை ‘நாளை’ என்று தள்ளிப் போடாமல், இன்றே செய்து முடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனித உடம்பை விட்டு உயிர் போகும் போது, மனிதன் எடுத்துச் செல்வது, உறவோ, செல்வமோ, சுற்றமோ என்று எதுவுமில்லை என்று உணருபவன் மேன்மையடைகிறான்’ – என்ற விளக்கங்களை அளித்த பரமேசுவரரின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லுமாறு அன்னையான மஹாசக்தி கேட்டுக் கொள்ள, முக்கண்ணரும், உலகங்களைக் காப்பவரும், சர்வ வல்லமை படைத்த பரமேசுவரர் சொன்னார்.
‘அண்ட சராசரங்களும் என்னால் படைக்கப்பட்டவை. நான் அழிவில்லாதவன். நான் தொடக்கமோ, முடிவோ இல்லாதவன். எப்போதும் என்னை நினைத்துக் கொண்டும், புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டும் இருக்கும் என் பக்தர்கள், என்னையே அடைவார்கள்’ என்று கூறிய பரமேசுவரர், ‘உலகத்தையே தாங்கும் மஹாசக்தியே, எல்லோருக்கும் அன்னையான உமா, பெண்களின் தர்மத்தைப் பற்றி எடுத்துக் கூறுவாயாக’ என்று கேட்டுக் கொண்டார்.
பெண்களின் தர்மத்தைப் பற்றிப் பார்வதி தேவியார் விளக்குவதிலிருந்து அடுத்த பகுதி தொடங்கும்.
(தொடரும்)
Comments
Post a Comment