ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 126

மேகலா : பெண்களின் தர்மத்தைப் பற்றிப் பார்வதி பேசலுற்றாள். ‘தந்தை, தாயால் மணமுடிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், தானாக விரும்பி ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொண்ட பெண்ணானாலும் சரி, திருமணமான பெண் எந்த ஒரு விதத்திலும் கணவனுக்குப் பிடிக்காததைச் செய்யக் கூடாது. கணவனின் விருப்பப்படி நடந்து கொண்டு, அவனுக்கு உதவியாக இருப்பதுதான் பெண்களின் தர்மம்.

ஆண்கள், தவம் முதலிய உடலை வருத்துகிற செயல்களினால் அடைகிற புண்ணியங்களையெல்லாம் பெண்ணானவள், கணவனைத் தெய்வமாக மதித்து நடப்பதால், மிகவும் எளிதில் அடைவார்கள். இதற்கு மாறாக, கோபம், பொறாமை, பொருளாசை கொண்டு இருப்பவர்கள், மரணமடைந்த பின் நரகத்திற்குச் செல்வார்கள்’.

இவ்வாறு பெண்களின் தர்மத்தை எடுத்துரைத்த பிறகு, அங்கு கூடியிருந்த ரிஷிகள், மகேஸ்வரரைப் பார்த்து, விஷ்ணுவின் மகிமையை அவரிடமிருந்து கேட்க விரும்புவதாகச் சொல்ல, மகேஸ்வரர், விஷ்ணுவின் பெருமைகளை எடுத்துக் கூறத் தொடங்கினார்.

‘ஹரி எனப்படும் விஷ்ணு, பிரம்மாவிற்கும் மேம்பட்டவர்; கிருஷ்ணரும் அவரே. பெரும் சக்தியையும், மகிமையையும் உடையவர்; எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படுகிறவர். இந்த விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்ம தேவர் உண்டானார். விஷ்ணுவின் நெற்றியிலிருந்து உண்டானவன் நான். கிரகங்கள், நடசத்திரங்கள், தேவர்கள், அசுரர்கள், ரிஷிகள், அழியாத உலகங்கள் – என்று எல்லாமே அவருடைய உடலிலிருந்து உண்டானவையே. உலகங்களைப் படைத்தவர் அவரே; எல்லாப் பொருள்களையும் அழிப்பவரும் அவரே; மூவுலகங்களுக்கும் ஈஸ்வரரும் அவரே; எங்கும் பரவி இருப்பவர் அவர்; எல்லாவற்றிலும் இருப்பவர் அவர்; மகேஸ்வரர் அவர்; மூவுலகங்களிலும் அவரை விட மேற்பட்டது என்று ஒரு பொருள் கிடையாது.

’என்னையும், பிரம்மனையும் பார்க்க விரும்புகிறவன், கிருஷ்ண பகவானைப் பார்க்க வேண்டும். அவர் பார்க்கப்பட்டால், நானும், பிரம்ம தேவரும் பார்க்கப்பட்டவர்களாவோம். மானிட உலகில், கிருஷ்ணனை அடைபவன், வெற்றியையும், புகழையும் அடைவான்; அவனுக்குச் சொர்க்கமும் கிட்டும். தனக்குப் பணிவிடை செய்பவர்களுக்கு, அவர் பணிவிடை செய்வார். தன்னைக் கொண்டாடுபவர்களை, அவர் கொண்டாடுவார். தன்னை வணங்குபவர்களை, அவர் வணங்குவார். எல்லாவற்றிற்கும் மேலானவர் அவரே!’

பீஷ்மர் சொன்னார், ‘யுதிஷ்டிரா! ரிஷிகளின் முன்னிலையில், மகேஸ்வரருக்கும், உமையவளுக்கும் இடையே நடந்த உரையாடலை நாரதர் கூறியபடி சொன்னேன். மேன்மையை விரும்புகிறவன், பரிசுத்தமான மனதோடு இதைக் கேட்டு, ஈஸ்வரனைப் பூஜிக்க வேண்டும். மகேஸ்வரராலேயே புகழப்படுகிற கிருஷ்ணரின் உதவியும் அருளும் உனக்குக் கிட்டியதால், உன்னை விட மேன்மையானவன் எவனும் இல்லை’.

இப்படி பீஷ்மர் கூறிய பிறகு, தருமபுத்திரர், ‘மனிதர்கள் யாரைத் துதித்து, செல்வத்தையும், முக்தியையும் அடைவார்கள்? மனிதப் பிறவியினால் ஏற்படும் எல்லாத் துன்பங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கக் கூடிய ஜெபம் எது?’ என்று கேட்டார்.

பீஷ்மர் சொன்னார், ‘அளவிட முடியாத பெருமைகளைக் கொண்டவரும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாகிய நாராயணரை, ஆயிரம் பெயர்களினால் துதி செய்வது, எல்லாத் துன்பங்களிலிருந்தும் மனிதனுக்கு விடுதலை அளிக்கும். விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் – எல்லாப் பாவங்களையும் வேரோடு அறுக்கும் வல்லமை பெற்றவை. தூய்மையான மனதுடன் விஷ்ணுவையே சரணம் என்று கருதி, இந்த ஆயிரம் நாமங்களை ஜெபம் செய்கிறவன், புகழ், செல்வம், துயரமின்மை எல்லாவற்றையும் பெறுகிறான்’. இவ்வாறு கூறிய பீஷ்மர், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை எடுத்துக் கூறினார்.

மேகலா : இந்த இடத்தில், மேகலாவாகிய நான், பீஷ்மர் கூறிய ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை’ மனதில் வைத்து, ஒரு பக்தனாக, விஷ்ணு திருநாமங்களைச் சொல்லட்டுமா…..

கிருஷ்ணர் : என்ன சொல்லப் போகிறாய்?

மேகலா : ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ; முகுந்தா; கேசவா; நாராயணா; நரசிம்ஹா; மதுசூதனா; கார்மேகவண்ணா; ஜகந்நாதா; ஜகந்நிவாஸா; ஸ்ரீநிவாஸா; குழல் மொழியானே; வேதமே; வேதத்தின் உட்பொருளே; ஆதியே; முடிவில்லாதவனே; என் தமிழே; என் உயிரே; என் குடை நிழலே; நம்பிக்கையே; பார்த்தசாரதியே; வடபத்ரசயனப் பெருமாளே; குருவாயூரப்பா; நீல மேக வண்ணா; தாமோதரா; மதுராவின் மைந்தனே; யாதவ குலத் தென்றலே; வாமனனே; சக்ராயுதனே; கோவிந்தா; கோபாலா; நந்தகோபாலா; கண்ணா; கோபியர் கொஞ்சும் ரமணா; இடையனே….

கிருஷ்ணர் : சரி! நிறுத்து…. நிறுத்து….., பீஷ்மர் சொல்வதைக் கேட்போம்….

மேகலா : விஷ்ணுவின் சகஸ்ர நாமத்தைக் கண்டறிந்தவர் வியாசர் என்று பீஷ்மர் குறிப்பிடுகிறார். இந்த சகஸ்ர நாமத்தை பீஷ்மர் கூறும் போது, காற்றிலே பறந்து வந்த துளசி இலையானது, கிருஷ்ணரின் திருவடியைச் சேர்ந்து, கிருஷ்ணரைத் துதித்தது. பீஷ்மரின் வேதனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. பீஷ்மர் சொன்னார், ‘இதைத் தினந்தோறும் பக்தியுடன் கூறுபவன், புகழ், செல்வம், மோட்சம் ஆகியவற்றை அடைவான் என்று பீஷ்மர் குறிப்பிடுகிறார். இந்த ஆயிரம் நாமங்களைப் பக்தியுடன் ஓதுபவனுக்கு எந்த இடத்திலும் பயம் கிடையாது. அவன் பெரும் உற்சாகத்தையும், சக்தியையும் பெறுவான். அவனுக்கு நோயற்ற தன்மை கிட்டும். சிரத்தையுடனும், பக்தியுடனும் இந்த ஆயிரம் நாமங்களை ஓதுபவன், பொறுமை, செல்வம், தைரியம், ஞாபக சக்தி, புகழ், புண்ணியம் எல்லாவற்றையும் அடைவான். அவனுக்குப் பகை இருக்காது’ என்று பீஷ்மர், தருமபுத்திரருக்கு எடுத்துரைக்கிறார்.

அதன் பிறகு பீஷ்மர், கிருஷ்ணரின் பெருமைகளை மீண்டும் ஒரு முறை தருமபுத்திரருக்கு எடுத்துரைத்தார். கிருஷ்ணர், யுதிஷ்டிரரிடம், ‘சிவனை வணங்கி நான் புகழடைந்தேன்’ என்று ஆரம்பித்து, சிவனின் பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்னார்.

இதையடுத்து, தர்மர், பீஷ்மரிடம், ‘ஒரு விஷயத்தில் தர்மம் எது என்று நிச்சயிப்பதற்குச் சரியான வழி எது?’ என்று கேட்டார். பீஷ்மர் சொன்னார், ‘வேதங்கள், கண்ணுக்கு எதிரே நிச்சயமாகத் தெரிபவை, ஒழுக்கமான வாழ்க்கை நெறி – ஆகிய மூன்றுமே தர்மத்தை அறிவதற்கு வழிகள் தான். வெறும் தர்க்க வாதத்தினால், தர்மத்தை அறிய முடியாது’ என்று விளக்கமளித்தார்.

பீஷ்மர், யுதிஷ்டிரரைப் பார்த்து,’அரசனே! உன்னுடைய நகரத்திற்குச் செல். மனதை தர்மத்திலிருந்து விலகாமல் நிலை நிறுத்து. யாகங்களைச் செய். மக்களையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு எல்லா முயற்சிகளையும் செய். அதுதான் அரசனின் முதல் கடமை’ என்று கூறி தர்மருக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2