ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 127
மேகலா : அடுத்து வந்த உத்தராயணத்தில் தன்னை வணங்கி நின்ற தருமபுத்திரனைப் பார்த்து, ‘நான் இந்த அம்புப் படுக்கையில் படுத்து இன்றோடு 58 தினங்கள் ஆகின்றன. புண்ணிய காலம் இப்போது வந்திருக்கிறது. நான் உயிர் பிரியும் நேரம் வந்து விட்டது’ என்று கூறினார். பின் திருதராஷ்டிரனை அழைத்து, ‘நீ பெற்ற பிள்ளைகளை நினைத்து வருந்தாதே. பெரியோர்களிடம் பக்தி செலுத்தும் தருமபுத்திரர் உன் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பான். உனக்கு ஒரு குறையும் இருக்காது’ என்று கூறினார்.
அதன் பிறகு, கிருஷ்ணரைப் பார்த்து, பீஷ்மர், ‘எக்காலத்திலும் உம்மிடம் பக்தி செலுத்துகிற என்னைக் காப்பாற்றும்! எனக்கு விடை கொடும்! என் தேகத்தை நான் விடப் போகிறேன். எனக்கு நற்கதி கிட்டுமாறு செய்யும்’ என்று கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணர், ‘பீஷ்மரே! அரசர்களுக்கெல்லாம் அரசரே! உமக்கு நான் அனுமதி கொடுக்கிறேன். நீர் முன் போலவே வசுக்களைச் சென்றடைவீர். தந்தையிடம் நீர் வைத்த பக்தியின் காரணமாக, எமன் உமக்குச் சேவகனாக இருந்து உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றான்’ என்று கூறினார்.
இதன் பிறகு, பீஷ்மர் மனதை தியானத்தில் நிறுத்தினார். ஒவ்வொரு அங்கமாக அவர் விட முனைந்த போது, அந்தந்த அங்கங்களிலிருந்து அம்புகள் காணாமற் போயின. இதைக் கண்டு, அங்கு கூடியிருந்த ரிஷிகளும் கூட, பெரும் வியப்பெய்தினர்.
அவருடைய உயிர், தலையைப் பிளந்து கொண்டு வான் நோக்கிச் சென்றது. தேவ வாத்தியங்கள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சித்தர்களும், ரிஷிகளும் வாழ்த்தினர்.
ஒரு பெரும் ஜோதி, பீஷ்மரின் தலையிலிருந்து புறப்பட்டு ஆகாயம் நோக்கிச் சென்று மறைந்தது. பீஷ்மர், வசுக்களைச் சென்று அடைந்தார். திருதராஷ்டிரனின் மகனான யுயுத்சு பீஷ்மருக்குக் குடை பிடித்தான்., தருமனும், திருதராஷ்டிரனும், பட்டுக்களாலும், பூமாலைகளாலும் பீஷ்மரின் உடலைப் போர்த்தினார்கள். பீமனும், அர்ஜுனனும் வெண்சாமரங்கள் வீசினார்கள். நகுல சகாதேவர்கள் அவருக்குக் கிரீடம் சூட்டினார்கள். இறுதிச் சடங்கு நடந்தது. சந்தனக் கட்டைகளில் படுக்க வைக்கப்பட்டு, அவருடை உடல் தீ மூட்டப் பெற்றது.
வியாசர், நாரதர், கிருஷ்ணர் போன்றவர்களுடன் தருமபுத்திரர் கங்கைக்குச் சென்றார். அங்கு உயிர்த்தெழுந்து வந்த கங்காதேவி, தன் மகனின் மறைவு குறித்துப் புலம்பினாள். அதைக் கண்ட கிருஷ்ணர், கங்கையைத் தேற்றினார். ‘நீ துயரப்பட வேண்டிய அவசியமில்லை. பீஷ்மர் மேலான உலகத்திற்குப் போனார். அவரை நினைத்து நீ பெருமை கொள்வாயாக’ என்று கூறினார். கங்காதேவி, துயரம் நீங்கியவளாக மீண்டும் நீரிலேயே மறைந்தாள்.
மேகலா : கிருஷ்ணா! விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் உச்சரித்துக் கொண்டே பீஷ்மர் இந்தப் பூவுலகைத் துறக்கிறார். இந்த உலகத்தை விட்டு நீங்குவதற்கு, உன்னுடைய அனுமதியைக் கேட்கிறார். கடவுளாய் நின்று நீயும் அனுமதி அளிக்கிறாய். பீஷ்மர், வசுக்களைச் சென்றடைகிறார். வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடும் கங்கையும், தாயன்பின் மிகுதியால் கண் கலங்குகிறாள். நீ அவளைத் தேற்றுகிறாய். கண்ணனோட பெருமையை எல்லோரும் பேசுகிறார்கள். கிருஷ்ணா, இதிலேயே என் மனம் நிறைந்து விடுகிறது. பீஷ்மர் மூலமாக தருமர், தன் ஐயங்களைத் துடைத்து எறிகிறார். தன் பயத்தையும் விலக்குகிறார். நாட்டை வழிநடத்தும் நிர்வாக முறைகளையும் கேட்டுத் தெளிவு பெறுகிறார். அரசனுக்குரிய லட்சணங்களை அறிந்து கொள்கிறார். மகாபாரதத்தின் நோக்கம் கூட முழுதாகத் தெரிய வருகிறது. என் மனதிற்கினிய கிருஷ்ணரின் பராக்கிரமச் செயல்கள், அவதார நோக்கம், உபதேசங்கள், தந்திரங்கள், தர்மங்கள், நியாயங்கள் அத்தனையும் எனக்குள் மறுபடியும் மறுபடியும் பிரமிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. கடவுளின் செயல்கள், யாராலும் அளவிட முடியாது என்றாலும், கடவுளை நெருங்குவதற்கு, அன்பும், ஒழுக்கமும், தர்மநியாயமும் இருந்தால் மட்டுமே போதும் என்ற உண்மை என்னை, மகிழ்ச்சியாயும், அத்தோடு நிம்மதியாயும் இருக்க வைக்கிறது. கிருஷ்ணா…., இதோ இப்படி கதை எழுதும் என்னை ஸ்ரீ கிருஷ்ணரே உற்றுப் பார்ப்பதாய் எனக்குத் தோன்றி, என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதற்கு மேல், இந்த மகாபாரதத்தைத் தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் என்ன ஆனார் என்பது வரைக்கும் போவதற்கு எனக்கு விருப்பமில்லை கிருஷ்ணா. ராமாயணம் சொல்பவர்கள், ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகத்தோடு முடிப்பதில்லையா? அது போல, மகாபாரதத்தில், கிருஷ்ணர் எப்போதும் என்னோட நண்பனாக என்னுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வைகுந்தம் அனுப்பி வைக்க எனக்கு விருப்பமில்லை கிருஷ்ணா….!
கிருஷ்ணர் : ஏன் மேகலா? துரியோதனன் மாதிரி நீயும் என்னைக் கட்டிப் போடப் போகிறாயா…?
மேகலா : அன்பால் உன்னைக் கட்டிப் போடுவேன் கிருஷ்ணா! வைகுந்தம் போகாவிட்டால் என்ன கிருஷ்ணா! நீ கடவுள் அல்லவா… எங்கும் இருப்பாய்…. தனியாக, வைகுந்தம் போக வேண்டுமா கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : அப்ப…., மகாபாரதத்தை முடித்து விட்டாய்! உத்தங்கருடன் பேசுவதையெல்லாம் சொல்லப் போவதில்லையா… பாண்டவர்கள், பரீக்ஷித்துக்குப் பட்டம் சூட்டப் போவதை சொல்லப் போவதில்லையா மேகலா…?
மேகலா : கிருஷ்ணா! மகாபாரதம் கதையை முடிக்கத்தான் போகிறேன். பாண்டவர்கள் நாட்டை ஆளப் போகிறார்கள். திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன் ஆகியோருடன் வனவாசம் மேற்கொள்ளப் போகிறார்கள். பாண்டவர்கள் சொர்க்கம் நோக்கிச் செல்லப் போகிறார்கள். இந்தக் கதையெல்லாம் வேண்டாம் கிருஷ்ணா…. எனக்கு, மகாபாரதத்தினைப் பற்றின சில கருத்துக்கள், சில கோபங்கள் இருக்கின்றன. இவற்றை உன்னிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! பேசலாம் மேகலா! உன்னுடைய opinion-ஐ சொல்லலாம் மேகலா! நீ என்ன சொல்லப் போகிறாய்? ஏதாவது சந்தேகம் இருக்கிறதா மேகலா….?
மேகலா : ’சந்தேகம்’ என்று சொல்ல முடியாது கிருஷ்ணா! எனக்கு மகாபாரதத்தில் மிகவும் பிடித்த character, ஸ்ரீ கிருஷ்ணர் தான். ஏன் அவரைப் பிடிக்கும் என்பதற்கு சிறு விளக்கம் உண்டு கிருஷ்ணா! இன்றைய காலக் கட்டத்தில் ஒரு மனிதனைப் பிடிப்பதற்கு, அந்த மனிதனுடைய சாதனையைக் காரணம் சொல்லுவோம். அவரே, அவருடைய வாழ்க்கையில் நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தால், அந்த சாதனையாளர் நம் கண்களுக்கு மாமனிதராகத் தென்படுகிறார். அவரே நேர்மையாளராகவும் இருந்து விட்டால், ‘மகாத்மா’வாக அவரைப் போற்றுகிறோம்.
அப்படித்தான், கிருஷ்ணருடைய பிறப்பும், வளர்ப்பும் மிகவும் பிடித்துப் போய், குழந்தையான கிருஷ்ணரின் சேஷ்டிதங்கள் குறும்புத்தனமாக இருந்தால் கூட, அவரின் நடவடிக்கைகள், தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதிலும், காப்பதிலும், அவர்களுக்கு நன்மை செய்வதிலுமே கழிகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் பங்கு என்பது, பாண்டவர்கள் வளர்ந்து, இன்னல்களை சந்திக்க ஆரம்பித்ததிலிருந்து துவங்குகிறது. கௌரவர்கள், பாண்டவர்கள் இருவரும் கிருஷ்ணருக்கு உறவினர்கள் தான் என்றாலும், பாண்டவர்கள் துன்பத்தைச் சந்திக்கும் போதும், ஆதரவைத் தேடும் போதும், அவர்களுக்குத் தாயின் பரிவோடும், ஒரு தோழனின் உரிமையோடும், கரிசனத்தோடும் ஆறுதலைக் கூறி உதவி செய்யும் பொழுது, எனக்குத் தோன்றும், ‘கிருஷ்ணர் கடவுள் தானே… கோவர்த்தனத்தைக் குடையாய் பிடித்தவரல்லவா…. காளிங்கன் என்னுன் நாகப் பாம்பினை அடக்கியவரல்லவா…., பாண்டவர்களைத் துன்பமே நேராமல் காக்கலாமே’ என்று நினைப்பேன்.
(தொடரும்)
Comments
Post a Comment