ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 129

மேகலா : இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பாண்டவர்கள் வனவாசம் நிறைவு பெற்று, ஓராண்டு அஞ்ஞாத வாசமும் முடிவுக்கு வருகிறது. துரியோதனன், பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த விராட தேசத்திற்கு போர் புரிய வருகிறான். அப்பொழுது, அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்தி கௌரவர்களுடன் போர் புரிகிறான். பீஷ்மர் உள்ளிட்ட கௌரவர்களைத் தோற்கடித்து, போர் என்று வந்தால், தன்னை ஜெயிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்று செயலால் நிரூபிக்கிறான்.

நியாயமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய ராஜ்ஜியத்தில் ஊசி முனை அளவு கூட கொடுக்க முடியாது என்ற துரியோதனனின் எகத்தாளத்தை நேரில் சந்தித்து, தர்மத்தை எடுத்துரைக்க, பாண்டவர்களின் நியாயத்தை எடுத்துரைக்க, அஸ்தினாபுரத்திற்கு தூதுவனாகச் சென்றார் கிருஷ்ணர். வந்த இடத்தில், கிருஷ்ணரையே கட்டிப் போட்டு விடுவதாக துரியோதனன் முயற்சி செய்கிறான். உலகத்தின் ஒரு மூலையில், ஊசி முனையளவு இடத்தில் இருக்கும் துரியோதனன் எங்கே…., உலகத்தையே தன்னுள் ஓர் அங்கமாக அடக்கியிருக்கும் அந்த ‘பரம் பொருள்’ எங்கே…? தனக்குள்ளே உலகத்தையே அடக்கி விஸ்வரூபம் காட்டினார். அந்தக் காட்சியை திருதராஷ்டிரனும் கண்டான். அந்தக் காட்சியைக் கண்ட பின், உலகில் வேறு எந்தக் காட்சியையும் காண விரும்பவில்லை என்று பரவசத்தில் மகிழ்ந்து போகிறான். உலகத்தையே தனக்குள் காட்டிய அந்த மகாபுருஷனுக்கு, தங்கத் தாம்பாளத்தில், பாலும், பாயாசமும் படைத்தால் மகிழ்ந்து போவான் என்று தப்பாக எடை போடுகிறான் துரியோதனன். ஆனால், கிருஷ்ணரோ விதுரர் வீட்டில் எளிய கஞ்சியை அறுசுவை உணவாக மகிழ்ந்து உண்ணுகிறார். இதுதான் கிருஷ்ணர்! ‘நான் கடவுள்’ என்று செயலால் உணர்த்துகிறார். ’எளிமையைத் தேடி வருவேன். நியாயத்தின் பக்கம் தான் இருப்பேன். தர்மத்தைக் கூறும் சான்றோரிடம் தான் என் மனம் செல்லும்’ என்று கூறாமல் கூறிய தெய்வத் தன்மையை, எளிய அமானுஷ்யத்தை, என் மனம் பிரமிப்பாயும் பார்க்கிறது. கிருஷ்ணர் கை காட்டும் இடத்தில் தான் உண்மை இருக்கிறது என்று அடித்துச் சொல்லத் தோன்றுகிறது.

உலகம் இப்படித்தான்; கிருஷ்ணரே தூதாய் வந்தாலும், உலகம் கடவுளை, ‘உண்மையாய்’ பார்ப்பதில்லை. தன் பிடிவாதமே நியாயமானது என்று அடம் பிடிக்கும். இப்படிப்பட்ட உலகத்தில், யார் கடவுள் பக்கம் நிற்கின்றனரோ, அவர்களுக்காக களமிறங்குவார் கடவுள் என்பது மகாபாரதத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அர்ஜுனன் கேட்டதிற்கிணங்க, அவனுக்கு தேரோட்ட ஒத்துக் கொண்ட கிருஷ்ணர், துரியோதனன் கேட்டுக் கொண்டதனால், ஆயுதம் ஏந்தாமல், ‘சும்மா’ இருக்கிறேன் என்று சொன்ன போதே, துரியோதனன் புரிந்திருக்க வேண்டும். போர்க்களத்தில் சும்மா நிற்கவா அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேரோட்டியாக வருவதற்கு ஒப்புக் கொண்டார்? எங்கெங்கு loophole இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே, அர்ஜுனனை இயக்கவல்லவா செய்கிறார். பீஷ்மர், உத்வேகத்தோடு போர் புரிகிறார். அர்ஜுனன், தயங்கித் தயங்கி போர் புரிகிறான். பொறுக்கவில்லை கிருஷ்ணருக்கு; தானே களம் இறங்கி சக்ராயுதத்தால் பீஷ்மரைத் தாக்கப் போவதாக ‘பாவ்லா’ காட்டுகிறார். சுத்த வீரன் அர்ஜுனனை ‘உசுப்பி’ விடுகிறார். கிருஷ்ணர் ‘பரம் பொருள்’ என்று அறிந்த பீஷ்மரோ, கிருஷ்ணரின் திருக்கரத்தால் மடிவதை, ஆசையோடு வரவேற்கிறார். ஓடி வந்து, கிருஷ்ணரின் கால்களைக் கட்டிக் கொண்ட அர்ஜுனன், உத்வேகத்தோடு போர் புரிவதாக வாக்குக் கொடுக்கிறான்.

எதிரில் இருப்பவர், நம் தாத்தா, நம் குரு, நம் உறவினர் என்று தயங்கிய அர்ஜுனனுக்கு, தாயன்போடும், தகப்பனின் பரிவோடும், தயக்கத்தைப் போக்கி, மனத்தளர்ச்சியை விலக்கி, போரில் ஈடுபடுத்த வேண்டும் என்று என்ன இருக்கிறது…? அப்பொழுதே, பாண்டவர்களை விலக்கி வைத்து, தான் ஒருவனாகவே சூரியன் போல் ஜொலித்து நின்று, சக்ராயுதத்தை ஏவி, அத்தனை பேரையும் பொசுக்கி இருக்க முடியும். ஆனால், இந்த மாதிரி magic வேலை செய்வதல்ல கடவுளின் கடமை.

ஒரு செயலைச் செய்வதற்கு, மனிதனின் முயற்சி வேண்டும். அதைச் செய்வதற்கு அவனுக்குத் திறமை இருக்க வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது. பொறுமையும், விவேகமும் இருக்க வேண்டும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும். ‘தான்’ என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. ‘முனைப்பு’ம், தீவிரமும் காரியத்தின் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இத்தனைக்கும் பிறகுதான், ‘தெய்வ அருள்’ என்பது இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்கிறார். ’கர்மத்தின் பலனை எதிர்பாராது, பிறருக்கு நன்மை பயக்கும் காரியத்தை நீ செய்தால், அதற்கு நான் துணையிருப்பேன்’ என்று சொன்ன அந்த ‘கோவாக்கியம், கீதா வாக்கியமாக, வேத வாக்கியமாக’ எனக்குள் ஊடுருவி, ‘இதுதான் கடவுள்’ என்று என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

உழைப்பிற்கும், உண்மைக்கும், தியாகத்துக்கும் கிருஷ்ணர் கொடுக்கும் மரியாதை…., அடேயப்பா, என்னை அவருக்கு அடிமையாக்குகிறது.

கிருஷ்ணர், தன்னையே கதியென்று நினைத்து, ‘வேறொன்றறியேன் பராபரமே’ என்று சரணடைவோருக்கு களமிறங்கி, காரியத்தைச் செய்து கொடுப்பார்’ என்ற இந்த வாக்கியத்தை எத்தனை முறை சொன்னாலும், என் மனது தித்திக்கிறது. பதினெட்டு நாள் நடந்த யுத்தத்தில், மனித முயற்சியும், திறமையும், செயல்பாடுகளும் மட்டுமல்ல, ஸ்ரீ கிருஷ்ணரின் தந்திரங்களும், உபாயங்களும் பாண்டவர்களை வெற்றியின் மேடைக்கு அழைத்துச் செல்கிறது.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2