ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 130
மேகலா : நம்முடைய வாழ்க்கையில் கூட, அப்படித்தானே…. அம்மா, குழந்தைகளைக் கல்வி கற்க வைக்கும் போது, home work எழுதச் செய்வாள்; exam-க்குத் தயார்ப் படுத்துவாள்; சோர்வுற்றிருக்கும் போது, உற்சாகப்படுத்துவாள்; களைப்பாகும் போது விசிறி விடுவாள். இப்படியெல்லாம் குழந்தைகளை, பரீட்சை எழுதவும், கல்வியை அறியவும் உதவுவாளே தவிர, தான் போய் பரீட்சை எழுத மாட்டாள். அப்படித்தானே கடவுளும்; தாயுமாகி, யாதுமாகியவன் கடவுள். தன் நண்பன் என்று, தானே படைத் தளபதியாகவில்லை; ஆயுதம் ஏந்தவில்லை. ஆனாலும், எதிரிகளைப் பந்தாடச் செய்ததில் கிருஷ்ணரின் பங்குதான் பாண்டவர்களை வெற்றியின் சமீபத்திற்கு அழைத்துச் சென்றது. இவ்வளவு ஏன்? அர்ஜுனன், தன் தயக்கத்தை உதறி யுத்தம் செய்ததே கிருஷ்ணரின் ஊக்கத்தினால் மட்டுமே. பூரிசிரவஸை வலுவிழக்கச் செய்ததாகட்டும், ஜயத்ரதன் வதத்தில் தந்திரத்தைக் கையாண்டதாகட்டும், துரோணருக்கு எதிராக தருமனை பொய் சொல்லத் தூண்டியதாகட்டும், கர்ணன் எய்த அஸ்திரம், அர்ஜுனனை நோக்கி வரும் பொழுது, தன் கட்டை விரலால் தேரை அழுத்தி, பூமியில் பதியச் செய்த ராஜ தந்திரமாகட்டும், ஒரு தேர்ந்த ராஜதந்திரியாகவும், கம்பீரமான தலைவராகவும், நேர்த்தியான கர்மவீரராகவும் தான் என்னால் கிருஷ்ணரைப் பார்க்க முடிகிறது.
என்றோ நடந்த மகாபாரத யுத்தத்தின் முறைகளை, இன்று யோசிக்கும் போது கூட, என் வாழ்க்கையிலும் கிருஷ்ணரே தேரோட்டியாக இருக்க வேண்டும்; அப்படி கிருஷ்ணர் தேரோட்டினால், என் வாழ்க்கையும் சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது.
கிருஷ்ணர், மனிதன் என்றால், அவர் செய்த வேலைகள் அனைத்தும் சாதனைகளே. கிருஷ்ணர், தெய்வம் என்றால்,
‘எப்பொழுதெல்லாம் தர்மம் மலிந்து போய்,
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்பொழுதெல்லாம் என்னை நான்
பிறப்பித்துக் கொள்கிறேன்’
’நல்லாரைக் காப்பதற்கும்
தீயவரை ஒடுக்குவதற்கும்
தர்மத்தை நிலைநாட்டுவதற்கும்
யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்’ —
என்ற இந்த கிருஷ்ணரின் வார்த்தைகள் சத்தியமானது. கடவுள் நிச்சயம் நம்மைக் காப்பார் என்ற உத்தரவாதத்தைத் தரக் கூடியது. என்னைப் போன்ற, கடவுளைத் தவிர வேறு கதியில்லை என்றிருப்போருக்கு நம்பிக்கை தரக்கூடியது.
என்று கிருஷ்ணரின் மகிமையை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் விட, கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில், அவரை பரம் பொருளாய் அனுபவித்தவர்கள் உண்டு; நண்பனாய், உறவினனாய் அனுபவித்தவர்கள் உண்டு; எதிரியாய் பார்த்தவர்களும் உண்டு. இவர்கள் வாய்மொழிகளைக் கேட்ட பின்னும், கிருஷ்ணரின் பெருமைகளை உணராமல் இருந்தால், உண்மையின் மீதே நம்பிக்கை இல்லாதவர்களாவோம். தர்மம் எது என்று தெரியாமல் போகும்; தெய்வத் தன்மை என்பதே நமக்குள் ஏற்படாமல் போகும்.
தர்மன் ராஜசூய யாகம் நடத்தினான். அதற்கு, முதல் மரியாதை யாருக்குக் கொடுக்கலாம் என்ற ஒரு விவாதம் எழுந்தது. அனைவரும், தங்கள் குலத்தின் மூத்தவரும், பல அனுபவங்களைக் கண்ட பிதாமகருமான பீஷ்மரிடம் கேட்டனர். பீஷ்மர், ‘கிருஷ்ணரைத் தவிர இந்த முதல் மரியாதைக்குத் தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்’ என்று கிருஷ்ணரின் பெயரை முன் மொழிந்தார். சிசுபாலன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான். ’இந்த சபையில், வயதில் பெரியவர் ’பீஷ்மர்’ இருக்கிறார்; அவருக்கு முதல் மரியாதை தரலாம். அஸ்திரங்களின் ரகசியம் அறிந்தவரும், வில்வித்தையில் பரசுராமருக்கு இணையான திறமையும், பயிற்சியும் பெற்ற ‘துரோணர்’ இருக்கிறார்; அவருக்கு முதல் மரியாதை தரலாம். வேதங்களைத் தொகுத்தவர், யாகங்களை நடத்துபவர் ‘வியாசர்’ இருக்கிறார்; அவருக்கு முதல் மரியாதை தரலாம். இப்படிப் பலர் இருக்கும் சபையில், இடையர் குலத்தில் பிறந்த கிருஷ்ணருக்கு ஏன் முதல் மரியாதை?’ என்று ஏளனம் செய்கிறான்.
அதற்கு பீஷ்மர், ‘அந்த நாராயணனே நம் மீது கருணை கொண்டு, கிருஷ்ணராக அவதரித்து இங்கு நம்முடன் வாழ்கிறார். அவரை இழிசொல்லால் பேசுகிறவர்களின் தலை மீது என் கால் வைக்கப்படுவதாக’ என்று ஆணித்தரமாகப் பேசி, அங்குள்ளவர்களைப் போருக்கு அழைக்கிறார்.
இதே பீஷ்மர், யுத்த களத்தில் பாண்டவர்களுக்கு எதிராக போர் செய்யும் சூழல் ஏற்படும் போது, கிருஷ்ணர், பாண்டவர்கள் அணியில் ஆயுதம் ஏந்தாமல் நிற்கிறார். ஒரு சமயம், பீஷ்மரை வீழ்த்தும் வகை தெரியாமல் அர்ஜுனன் திணறும் போது, தன்னுடைய சக்ராயுதத்தை ஏந்திக் கொண்டு, பீஷ்மரைத் தானே வதம் செய்யப் போவதாக இறங்கி வருகிறார் கிருஷ்ணர். அப்பொழுது பீஷ்மர், ‘வா கிருஷ்ணா! பரம் பொருளாகிய உன்னுடைய சக்ராயுதத்தால் நான் வீழ்வதற்கு எத்தனை புண்ணியம் செய்திருப்பேன்’ என்று தன் இன்னுயிரைத் தரத் தயாராகிறார். கிருஷ்ணரின் அவதார ரகசியத்தை அறிந்தவர் பீஷ்மர். அவரைக் கடவுளாகவே பார்த்து அனுபவித்தவர்.
அர்ஜுனன் இன்னும் கொடுத்து வைத்தவன்; புண்ணியம் செய்தவன். கிருஷ்ணரை நண்பனாய் அனுபவித்தவன். போர்க் களத்தில் கிருஷ்ணரின் கால்களைக் கட்டிக் கொண்டு கெஞ்சும் பாக்கியம் பெற்றவன்.
அஸ்தினாபுரம் சென்று, துரியோதனனிடம் தூதுவனாகச் சென்று அவனை ஆழம் பார்த்து வந்த கிருஷ்ணர், ‘சமாதான உடன்படிக்கைக்கு துரியோதனன் ஒத்து வரவில்லை. இனி ‘போர் தான்’ உரிமையைத் தீர்மானிக்கும் என்று பாண்டவர்களிடம் கூறி விட்டு, துவாரகை சென்று விட்டார். இரு பக்கங்களிலும், அவரவர்க்கு ஆதரவாக, அரசர்களைத் திரட்டினர். அப்படித் திரட்டும் போது, யாதவ படையைக் கேட்டு துரியோதனன் துவாரகை சென்றான்; அங்கு அர்ஜுனனும் வந்திருந்தான். இருவரும், கிருஷ்ணரிடம் அவருடைய சகாயத்தைக் கேட்க, கிருஷ்ணரோ, ‘கணக்கில்லாமல் பரவிக் கிடக்கும் யாதவப் படை வேண்டுமா? கையில் ஆயுதம் ஏந்தாமல் தேரோட்டும் வேலையை மட்டுமே செய்யும் தான் வேண்டுமா?’ என்று கேட்டார்.
(தொடரும்)
Comments
Post a Comment