ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 133

மேகலா : ’மகாபாரதம்’ என்னும் இந்த மாபெரும் இதிகாசத்தில், ‘வாழ்க்கை இதுதான்’, ‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று ஒவ்வொருவரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ‘இவர்கள் வாழ்க்கையைப் பார்’. ‘இதிலிருந்து, பாவ புண்ணியத்தை அறிந்து கொள்’ என்ற தத்துவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. இவர்கள் கூடவே கிருஷ்ணர் வாழ்ந்திருக்கிறார். சிலரோடு உணவு உண்டிருக்கிறார். சிலரைக் கட்டிப் பிடிக்கிறார். சிலரை நக்கலடிக்கிறார். ‘பிச்சை எடுப்பதற்கென்றே பிறந்தவர்களடா நீங்கள்’ என்று பாண்டவர்களைப் பார்த்து ஆதங்கப்படுகிறார். கேலி பேசும் கர்ணனிடமும், அகங்காரப்படும் துரியோதனனிடமும், அவர்கள் செய்த தவறை நினைவுறுத்துகிறார். இப்படி மனிதரோடு மனிதராய் வாழ்ந்தும் கூட, பாண்டவர்களுக்கு லட்டு மாதிரி வெற்றியைத் தூக்கிக் கொடுக்கவில்லை. எந்த நேரத்திலும்,

’நல்லவரைக் காப்பதற்கும்,

தீயவரை ஒடுக்குவதற்கும்,

தர்மத்தை நிலைநாட்டுவதற்கும்,

யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்’ –

என்ற வார்த்தையின் அர்த்தமாகவே வாழ்ந்திருக்கிறார். இதில் காந்தாரி என்ன…., யார் சாபம் கொடுத்தாலும், இதையெல்லாம், ‘ஒரு புன்முறுவல்’, அது மட்டுமே பரிசாக தரும் அந்த தெய்வத் தன்மை, அதுதான், அந்த அழகுதான், என்னைக் காந்தமாய் கட்டியிழுக்கிறது. இந்த style தான் பீஷ்மருக்குக் கூட பிடித்தது போல…

அர்ஜுனன் எய்த அஸ்திரங்களே படுக்கையாகி, அந்த முள்படுக்கை கொடுக்கும் வேதனையைக் கூட பொறுத்துக் கொண்டு, எதிரில் வந்த கிருஷ்ணரை, விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் போற்றித் தொழுவது, அவரிடமே, தன்னை அஸ்திரங்களின் வலியிலிருந்து விடுவிக்கச் சொல்லிக் கேட்கும் போது, ‘மரண காலத்தில் என்னை நினைத்தால் கூட, அர்ஜுனா, அவர்களை பாவத்திலிருந்து விடுவிப்பேன்’ என்று கீதையில் கூறிய வாக்கியம் ஞாபகத்திற்கு வருகிறது. எப்பொழுதும் கிருஷ்ணரை நினைத்துக் கொள்வோம் என்று எனக்கும் தோன்றுகிறது. மனதில் தோன்றும் ரசனைகளை, வம்பளக்கும் விஷயங்களை, நம்பிக்கையை, பயத்தைக் கூட, கிருஷ்ணரிடம் பேசிப் பேசி கிருஷ்ணரை நண்பராக்கிக் கொள்வோம் என்று தோன்றுகிறது.

என்ன கிருஷ்ணா! நான் சொல்வது சரிதானே….?

கிருஷ்ணர் : ம்…..ம்….. என்ன….. ஏதாவது சொன்னாயா….?

மேகலா : என்ன கிருஷ்ணா! நான் இத்தனை நேரம் பேசியத நீ கேட்கவேயில்லையா…?

கிருஷ்ணர் : நீளமா….கப்…. பேசினாயா….? அதான் கொஞ்சம் ஜலதோஷம் பிடித்து விட்டது. காதும் கொஞ்சம் ‘ஞொய்’ என்றதால், அப்படிக் கேட்டேன். சரி! இப்ப விஷயத்திற்கு வருவோம். உனக்கு, அடியேன் கிருஷ்ணனைப் பிடிக்கும்; அதுதானே…; சரி…. இனி, கிருஷ்ணர் உத்தங்கருடன் பேசுவது; வைகுந்தம் செல்வது; பாண்டவர்கள் பரீக்ஷித்துக்கு முடி சூட்டுவது; சொர்க்கத்தை நோக்கிச் செல்வது; என்று இதையெல்லாம் எழுதப் போவதில்லை. பீஷ்மர் கூறிய ‘விஷ்ணு சஹஸ்ரநாமத்துடன் முடிக்கப் போகிறாய்; அப்படித்தானே…. சரி! இதுவும் நல்லாத்தான் இருக்குது.

கதையைச் சொல்லும் போது, சின்னச் சின்ன கிளைக் கதைகளைத் தவிர்த்திருக்கிறாய். கொஞ்சம் ‘சுருக்கித்தான்’ சொல்லியிருக்கிறாய். இருப்பினும், முக்கியமான சம்பவங்களை, ஒன்றையும் விடாமல் தெளிவாய்த்தான் சொல்லியிருக்கிறாய். அடியேன் கிருஷ்ணன் பேசும் வசனங்களை ரசித்து சொல்லியிருக்கிறாய். பாவம், அர்ஜுனன் மீது கொஞ்சம் பொறாமைப் பட்டிருக்கிறாய்! அப்படியான இடங்களில், கொஞ்சம் உனக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. மற்றப்படி, ‘good attempt’. இறுதியாக, அடியேன் கிருஷ்ணனின் ஒரு வார்த்தை…. ‘உலகில் நடக்கும் பல செயல்களுக்கும், செயல்முறை என்று ஒன்று உண்டு. அந்த செயலுக்கான காரணம் என்றும் ஒன்று இருக்கும். அந்த செயலுக்கான பலனைப் பார்த்து, அந்தச் செயலைச் செய்தவர்கள், துன்பமாக இருந்தால், ஏதோ இப்பொழுதுதான் அந்தச் செயல் நடந்தது மாதிரியும், தனக்கும் அந்தச் செயலுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரியும், பேசுவதும், ஆர்ப்பாட்டம் பண்ணுவதும் தவறு. பலன் நன்மையாக இருந்தால், தானே அதற்குக் காரணம் என்று, மிதமிஞ்சி தன்னை பிரகடனப்படுத்துவதும் தவறு. எல்லாச் செயல்களின் பலனையும் லேசாக எடுத்துக் கொண்டு, இதெல்லாம் தெய்வச் செயல் என்று நினைப்பவர்களால் மட்டுமே, அடுத்த செயலுக்கு தம்மைத் தயார் படுத்த முடியும். இன்னும் ஒரு விஷயம்…;

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளப் பயப்படும் மனிதர்களுக்கு ஒரு வார்த்தை; ‘தொட்டதற்கெல்லாம் பயம்; வாழ்க்கையை வாழ பயம்; பேச பயம்; ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு பயம்; இப்படி பயமே வாழ்க்கையாய் இருப்பவர்களுக்கு, உலகம் இனிமையானதாக எப்படி இருக்க முடியும்…? பயத்தை விலக்கத் தெம்பில்லாதவர்கள், வாழ்க்கையை எப்படி வாழ்வார்கள்? இவர்கள் பயம், பக்தியாய் மாற வேண்டும்; தெய்வ நம்பிக்கை தைரியத்தைக் கொடுக்கும். கடவுள் நம்பிக்கை, மனிதனுக்கு, பயத்தை விலக்கி ஆற்றலைக் கொடுக்கும் என்று நான் உத்தரவாதமாகவே கூறுகிறேன்.

கிருத யுகமாக இருந்தாலும் சரி, திரேதா யுகமாக இருந்தாலும் சரி, கலி யுகமாக இருந்தாலும் சரி, மனிதனுக்கு தைரியமும், முயற்சியுமே கை கொடுக்கும்; சத்தியமே வெல்லும், நேர்மையே தலை நிமிர்ந்து வாழ வைக்கும். தர்மம் இருக்கும் இடத்தில் தான் கடவுள் இருப்பார். நீங்கள் கேட்கலாம்; ஊரை ஏமாற்றுகிறான், பணத்தால் உலகையே ஆட்டிப் படைக்கிறான், ஒரே நாளில் பலரும் மலைத்துப் போகும் அளவுக்கு, பெரும் புகழைத்தானே தேடுகிறான்; இவர்கள் தர்மத்தின் வழியிலா செல்கிறார்கள்; நேர்மையாகவா இவர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் தலை நிமிர்ந்துதானே இருக்கிறார்கள்! இன்னும் சொல்லப் போனால், தான் சொல்வதுதான் ‘உண்மை’ என்றுதானே பேசுகிறார்கள் என்று கேட்கலாம்.

அவர்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை – எத்தனை மனிதர்கள் செல்வந்தராய் வாழ்ந்து, அகம்பாவத்துடன் செயல் புரிந்திருந்தாலும், அஹிம்சையையே போதித்து, அதனையே உயிர் மூச்சாகக் கொண்டு, நேர்மையாக வாழ்ந்த மகாத்மா காந்தி மட்டுமே, ‘மகான்’, ‘மகாத்மா’ என்று போற்றப்படுகிறார். அதே போல, எத்தனையோ பேர், கெட்டிக்காரத்தனமாக , உலகத்தையே தன் காலடிக்குக் கீழே கொண்டு வர நினைத்திருந்தாலும் கூட, அவர்கள் மத்தியில், மன வலிமையையும், புத்திக் கூர்மையையும் தன்னுடைய ஆயுதமாகக் கொண்டு, அந்த ஆயுதமும், தன் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவே என்ற எண்ணத்துடன், நமது கொள்கை, ‘அஹிம்சை’யாக இருந்தாலும், வலிமை மட்டும் தான் வலிமையை எதிர்கொள்ள முடியும்; நாம் வலிமையுடன் இருந்தாக வேண்டும் என்று உறுதிபடச் சொல்லிய அந்த ஞானச் சுடர் டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களல்லவா, ‘கெட்டிக்காரன்’. இவர்களுடைய வாழ்க்கையில் நேர்மை இருந்தது. அதனால், உலகத்தை அவர்களால் ஜெயிக்க முடிந்தது. இவர்கள் அறிவில் தெளிவு இருந்தது; அகம்பாவம் கிடையாது. அதனால், அவர்களால் சாதனை புரிய முடிந்தது. இவர்களுடைய பேச்சில், நடத்தையில் உண்மை இருந்தது…. அதனால், அவர்களிடம் உலகம் நம்பிக்கை கொண்டது. இவர்களால் மட்டுமே ஜெயிக்கவும் முடியும். உலகம் நேர்படவும், சீர்படவும் முடியும்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2