ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 135 (நிறைவுப் பகுதி)
மேகலா : கிருஷ்ணா! என் ஒருவள் கோபத்தை தீர்க்காவிட்டால், உன் தலை வெடித்து விடும் என்று சொல்லி, தனி மனுஷி எனக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறாயே…. இந்த கிருஷ்ணரை…, மகாபாரதம் முழுக்க நான் பார்க்கிறேன். யாரையும் அலட்சியப்படுத்தாதவன்; தன்னை அலட்சியப்படுத்தியவரையும், சிறு புன்சிரிப்பால் ignore பண்ணியவன்; தன்னை வணங்கியவரையும் மதித்து நடந்தவர்; தன்னை இகழ்ந்தவரையும் தனக்குள்ளே ஏற்றுக் கொண்டவர். இன்று என்னுடைய கோபம் என்ன என்று கேட்டு, அதற்கு பதில் சொல்லக் காத்திருக்கிறாய் கிருஷ்ணா….! உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் கிருஷ்ணா! மகாபாரதம் வாசிக்கும் போது, பீஷ்மர், கிருஷ்ணரை புகழும் போதும்; ’கிருஷ்ணரை பழிப்போர் தலையில் என் கால் வைப்பதாக’ என்று சிலிர்த்து எழும் போதும்; விதுரர், கிருஷ்ணரை போற்றும் போதும்; தர்மர், கிருஷ்ணரை நம்பும் பொழுதும்; திரௌபதி, ‘கிருஷ்ணா!’ என்று அழைத்துக் கதறும் போதும்; அர்ஜுனன், கிருஷ்ணரின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, ‘உன் சொல் பேச்சைக் கேட்கிறேன்’ என்று சரணடையும் போதும்…., கிருஷ்ணா, என் கண்களில் நீர் கசிய உருகிப் போவேன்; என் கிருஷ்ணரின் பெருமைகளை நினைத்து புல்லரித்துப் போவேன். மகாபாரதத்தில், எத்தனையோ பேர் கிருஷ்ணரை அவமதித்துக் கூடப் பேசுகிறார்கள். ஜராசந்தன் பேசுவான்; சிசுபாலன் பேசுவான்; ஏன் துரியோதனன் கூட, ‘பாண்டவர்கள் பக்கமே உமக்குப் பிரியம் இருக்கிறது; பாரபட்சம் பார்க்கிறீர்’ என்று ஏளனம் பேசத்தான் செய்வான். ஆனால், அவர்களெல்லாம், உடனே, பீஷ்மர் போன்ற யாரோ ஒருவரிடம், ‘செமையா’ வாங்கிக் கட்டிக்குவாங்க. அப்பொழுது அவர்கள் மீது எனக்கு வந்த கோபம் உடனே விலகிப் போகும். ஆனால், எனக்கு வந்த கோபம், மற்ற கதாபாத்திரங்கள் மீது கிடையாது.
பீஷ்மரை வணங்குகிறேன்; திருதராஷ்டிரன் மீது எரிச்சல் வந்தாலும், சில சமயம் அனுதாபம் வருகிறது. பல சமயங்களில், பிள்ளைகள் வளர்ப்பில் நம்மை திருத்திக் கொள்ளத் தோணுகிறது. விதுரரிடம் கை கட்டி, வாய் பொத்தி பாடம் படிக்கத் தோணுகிறது. அர்ஜுனனிடம் பொறாமை வருகிறது. திரௌபதியின் கோபம் நமக்கும் தொற்றுகிறது. இப்படி ஒவ்வொரு கதாபத்திரத்தையும் ரசித்து வாசிக்கும் போது, காந்தாரி, கிருஷ்ணருக்கு சாபம் கொடுக்கும் போது எழுந்த கோபம் இன்னும் விலகவே மாட்டேன் என்கிறது.
கிருஷ்ணர் : ஏன்….? என்ன கோபம்….?
மேகலா : பின் என்ன கிருஷ்ணா…! ரொம்ப நல்ல பிள்ளையைப் பெற்றவள் மாதிரி….. துரியோதனன் செய்த அக்கிரமங்களைப் பார்த்தவள்…. இதோ கிருஷ்ணருக்கு சாபம் கொடுத்தது போல, துரியோதனனுக்கும் சாபம் கொடுத்து, அவனை ஓய்த்திருக்கலாமே…. தன்னை பதிவிரதை என்று கூறிக் கொண்டு, ‘அந்த பதிவிரதா சக்தியின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்….. நீயும், உன் சந்ததியும் நாசமாகப் போவீர்கள்’ என்கிறாளே…. அதற்கு, அங்கிருந்த எல்லோரும் அவளை ஒன்றும் சொல்லவில்லையே….. கிருஷ்ணரும், சாபத்தை ஏற்றுக் கொண்டு, துரியோதனனைப் பற்றி, ‘just’ விளக்குகிறார்.
கிருஷ்ணர் : சரி…. வேறென்ன செய்ய வேண்டும்…?
மேகலா : கிருஷ்ணா! நீ கடவுள்…. உனக்குத் தான் கொடுக்கவும் தெரியும்…. எடுக்கவும் தெரியும். காந்தாரியை என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது…. ஆனால், அவள் கிருஷ்ணனுக்கு சாபம் கொடுத்ததுதான் எனக்குக் கோபம்…
கிருஷ்ணர் : மேகலா! வயது முதிர்ந்தவள். தனக்கு பிதுர்க்கடன் செய்யக் கூட ஆளில்லையே என்று வருந்துபவள். கண் தெரியாத கணவனுக்காக தானும், கண்களைக் கட்டிக் கொண்டவள். இப்போ…. சாதாரண மனிதர்களை எடுத்துக் கொள். தன் வாழ்க்கைப் போராட்டத்தில், மிதமிஞ்சிய மனத்தளர்ச்சியில், யாரையும் எதிர்க்கத் தெம்பில்லாத போது, யாரைத் திட்டுவார்கள்…?
மேகலா : Of course, கடவுளைத்தான் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஒரு குழந்தை கோபத்தில் அழுது அடம் பிடிக்கும் பொழுது, அது யாருடன் சண்டை போடும்?
மேகலா : அம்மாவுடன் தான்….
கிருஷ்ணர் : அர்ஜுனனுக்கும், மேகலாவுக்கும் மட்டும் நான் நெருக்கமானவன் கிடையாது. துரியோதனனுக்கும், காந்தாரிக்கும் நான் நெருக்கமானவனே. ஊன்றுகோலைத் தொலைத்த முதியவரின் தடுமாற்றம் காந்தாரியுடையது. யாரையும் குற்றம் சொல்லத் தெம்பில்லாது தவிக்கிறாள். மகன்களை இழந்தாள்; செல்வத்தை இழந்தாள்; நாட்டையும் இழந்தாள்; கண் தெரியாத கணவனுடன், திக்கு திசை தெரியாமல், தன் மருமகள்களைக் காப்பாற்றும் வழி தெரியாமல், தாயும் ஆன கிருஷ்ணரை சபிக்கிறாள். கையாலாகாததனம் என்று சொல்லலாமா….? அப்படித்தான். எனக்கு, அவள் மீது பரிதாபப்படத்தான் முடிந்தது. அவள் சாபம் பலித்ததா? கொஞ்சம் இப்படிப் பார்ப்போம். விருஷ்ணி குலத்தோருக்கு அகம்பாவம் தலைக்கேறியது; அடித்துக் கொண்டு செத்தார்கள். கிருஷ்ணர் வைகுந்தம் போக வேண்டாமா? வந்த காரியம் முடிந்தது; வைகுந்தம் செல்ல முடிவெடுத்தார். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்து விட்டது! காந்தாரி சாபம் கொடுத்தாள்; கிருஷ்ணர் வைகுந்தம் புறப்பட்டார்…
மேகலா : கிருஷ்ணா! பேச்சுக்காகக் கூட வைகுந்தம் புறப்பட்டார் என்று சொல்லாதே… மக்களாகிய எங்களூடே, காற்றாய் பரவி நிற்கிறார். பூமியாய் என்னைத் தாங்குகிறார். என் நண்பனாய் என்னிடம் உரையாடுகிறார் என்று சொல் கிருஷ்ணா!
கிருஷ்ணர் : அப்படியே வைத்துக் கொள்வோம், சரிதானா…!
(இத்துடன், ‘ஸ்ரீ கிருஷ்ணரும், மேகலாவாகிய நானும் – மகாபாரதம்’ தொடர் நிறைவு பெற்றது)
Comments
Post a Comment